Pages

Sunday, November 26, 2023

மிர்தாதின் புத்தகம் - புனித மும்மையும் சரியான சமநிலையும் - பகுதி -1 // சிவ.கதிரவன்


புனித மும்மையும் சரியான சமநிலையும்

      மிர்தாத் போன்றதொரு புத்தகத்தை விரிவாக அறிமுகம் செய்வதென்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

ஒரு மலைச்சரிவு கதை வழியாக ஒரு தேடல் உள்ள மனிதனை அறிமுகம் செய்து அந்த மனிதன் கையில் கிடைக்கிற புத்தகமும் அதன் உள்ளடக்கமும் அது குறித்தான விரிவாக்கமும் என்று விரிகிற ஒரு மெய்யியல் கோட்பாடாக மிர்தாத் இருக்கிறது. மெய்யியல் தேடுபவர்களுக்கு, ஆன்மீகம் தேடுபவர்களுக்கு, தத்துவார்த்தத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிர்தாத் என்கிற புத்தகம் பெரும் பலமாக வழிகாட்டும் திசை வழியாக தன்னைப் பொறுத்துக் கொள்ளும்.

மிர்தாத் வெளிப்பாடு என்று மிர்தாதை படித்தவர்கள் கூறுவதுண்டு. மிர்தாத் சிறந்த படைப்பு என்று மிர்தாதை படித்தவர்கள் கூறுவதுண்டு. எல்லா வகைகளிலும் ஒரு தேடல் உள்ள தத்துவார்த்த பார்வை கொண்ட, தத்துவார்த்த உள்ளடக்கம் கொண்ட ஒரு இலக்கியமாக, படைப்பாக, புத்தகமாக மிர்தாத் தொடர்ந்து வந்து  கொண்டே இருக்கிறது. மிர்தாதின் புத்தகத்தை வாசிப்பது என்பது நம்மை ஒரு முறை சீர்தூக்கி பார்ப்பதும் நம் பலகீனங்களை தேடலின் எல்லையை செம்மைப்படுத்திக் கொள்வதும் என்கிற வகையில் அமைந்து விடும்.

மிர்தாத் ‘ புனித மும்மையும் சரியான சமநிலையும் என்கிற உள்ளடக்கத்தில் துறவிகளோடு பேசுகிறார். நம் மனதிற்கு புனிதம் என்பதின் மீது எப்போதும் சிலாகிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. நம்முன் இருக்கிற எல்லாவற்றையும் புனிதம் என்கிற அளவிலேயே நாம் எடுத்துக் கொள்கிறோம். இணைத்துக் கொள்கிறோம். அவற்றோடு நம்மை பொருத்தியும் கொள்கிறோம். புனிதம் என்கிற வார்த்தை மேன்மையான, சிறப்பான, சரியான, வாகான என்கிற பல்வேறு கிளைப் பொருட்களை உள்ளடக்கிய சொல் அது. மிர்தாத் சொல்கிற புனிதம் என்கிற வார்த்தைக்கும் புனிதம் என்கிற சொல் உள்ளடக்கத்திற்கும் நாம் சமூகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற புனிதம் என்கிற பயன்பாட்டு நெறிமுறைக்கும் உள்ள வேறுபாடை புரிந்து கொள்வதன் வழியாக, புனிதம் என்கிற சொல்லை மும்மைக்கு உரியதான சொல்லாக பயன்படுத்துவதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

சமூகத்தில் புனிதம் என்பதற்கு உள்ளபடியே மேன்மையான சரியான பொருத்தமான என்கிற வெவ்வேறு கிளைச் சொற்கள் அமைந்திருக்கின்றன. இந்த அமைவின் வழியாக புனிதம் என்பது எனக்கு தோன்றுகிற சரியான ஒன்றாக இருக்கிறது. எனக்கு இசைவான ஒன்றாக இருக்கிறது. ஒரு தனி நபருக்கு உரிய, தனிநபரினுடைய திருப்திக்குரிய ஒன்றாக இருக்கிற உள்ளடக்கம் புனிதமாக நெறிப்படுத்தப்படுகிறது. நான் அல்லது நீங்கள் ஒரு தனி மனிதன் எது அவர் சரி என்று விரும்புகிறாரோ, எந்த ஒன்றை அவர் இசைவானது என்று விரும்புகிறாரோ அவற்றோடு தன்னை இணைத்துக் கொள்வார்.

ஆயிரக்கணக்கான ஆடைகள் இருந்தாலும் தனக்கு இசைவான ஒன்றை தேர்வு செய்து கொள்கிற மனம் அந்த ஒன்றை தனக்கு சரியானது என்று எடுத்துக்கொள்ளும். வகை வகையான இயந்திரங்கள் கிடைத்தாலும் தனமக்குத் தேவையான, தமக்கு சரியான என்கிற   அளவுகோலில் ஒரு இயந்திரத்தை ஒரு தொழில் அதிபர் தேர்வு செய்து கொள்வார். ஒரு தனி மனிதனினுடைய தேவையும் ஆர்வமும் கற்பனையும் தேர்வை தீர்மானிக்கின்றன. அந்தத் தேர்வு அந்த தனி மனிதன் எதை சரி என்று விரும்புகிறாரோ, எதை புனிதம் என்று விரும்புகிறாரோ, எதை மேன்மை என்று கருதுகிறாரோ அந்த அடிப்படையில் தொடர்ந்து அமைந்து கொண்டே இருக்கிறது. எல்லா புனிதங்களும் இந்த தேர்வின் வகைப்பட்டவையே  அல்லது எல்லா தேர்வு வகைமைகளும் இந்த புனிதத்தினுடைய சாராம்சமே. இது வாழ்வியல் சமகால நெறிமுறை, ஒரு நடைமுறை.

இந்த புனிதம் அல்லது இந்தத் தேர்வு என்பது தனி மனிதனின் தன்முனைப்போடு தொடர்புடையது. தனி மனிதன் இந்த பிரபஞ்சத்திலிருந்து தன்னை எந்த வகைகளில் வேறுபடுத்தி நிறுத்தியிருக்கிறானோ அதற்குப் பெயர் தன்முனைப்பு என்று வைத்துக் கொள்ளலாம். உளவியலில் தன்முனைப்பை தனி மனிதனினுடைய தனித்தன்மை, தனித்த செயல்பாட்டு வடிவம் என்று வகைப்படுத்துகிறார்கள். தன்முனைப்பு என்பது மற்ற, தன்னை சாராத எல்லாவற்றிலிருந்தும் இந்த உலகில் தம்மை சூழ்ந்து இருக்கிற எல்லாவற்றிலிருந்தும் நான் ஒரு வகையில் அல்லது ஏதாவது ஒரு வகையில் வேறுபட்டு இருக்கிறேன், மேம்பட்டிருக்கிறேன் என்கிற  கருதுகோல். உங்களிலிருந்து நான் வேறுபட்டவன். வானத்திலிருந்து நான் வேறுபட்டவன். நீரிலிருந்து நான் வேறுபட்டவன். பயன்பாட்டு பொருள்களில் இருந்து நான் வேறுபட்டவன். செல்லப்பிராணிகளிலிருந்து நான் வேறுபட்டவன் என்கிற எல்லா பொருள்களிலிருந்தும் எல்லா நபர்களிலிருந்தும் எல்லா இயங்கும் முறைகளிலிருந்தும் பிரபஞ்சத்திற்குள் இருக்கிற எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டவன் என்கிற தனிமனித உணர்வு தன்முனைப்பு சார்ந்தது. இந்த தன்முனைப்பு உள்ளடக்கமாக இருக்கிற தனிமனித உணர்விற்கு தனித்தனியான கற்பனைகளும் தனித்தனியான விருப்பங்களும் தனித்தனியான இயங்கு முறைகளும் அகத்தே இருந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய அகஇயங்கு முறையில், இத்தகைய செயல்பாட்டு முறையில் தன்முனைப்பு தன்னை தக்க வைத்துக் கொண்டு இயக்கமாக மாற்றிக்கொண்டே இருக்கிறது என்பது உளவியல் மருத்துவம் சார்ந்த ஒரு கோட்பாடு, உண்மையும் கூட.

ஒரு தனி மனிதன் தன் முனைப்போடு இருக்கிறான். தன்முனைப்போடு இருக்கிறவன்  தனிமனிதனாக இருக்கிறான். இந்த தன்முனைப்பிற்கு அதற்கே உரிய விருப்பங்களும் கற்பனைகளும் இயங்கும் முறைகளும் நெறிப்படுத்தும் கோட்பாடுகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. இது மனிதனினுடைய நிஜமான அக உணர்வு அல்ல. இது மனிதன் ஆழமாக பயணிக்காத முகம் கொண்டு அவன் மீது படர்ந்து இருக்கிற ஒரு படர்வு.

தன்முனைப்பு என்பது நிஜமான மனிதன் அல்ல. தன்முனைப்பு என்பது ஒரு ஒளியின் மீது கவிழ்ந்திருக்கிற கறி பூச்சு போல. கறி பூச்சு சுத்தம் செய்கிற போது ஒளி வெளிப்படுவது எவ்வாறு இயல்பானதோ அதேபோலவே தன்முனைப்பு கரைந்து போகிற போது மனிதனினுடைய அக ஒளி வெளிப்படும் என்பது மெய்யியல் வரையறை. அந்த வகையில் தன்முனைப்பு ஒரு மனிதனை மற்ற பொருள்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிற, வேறுபடுத்தி வைத்திருக்கிற, வேறுபடுத்தி இயங்கச் செய்கிற ஒரு அகவுணர்வு நிலை. இந்த அகவுணர்வு நிலைக்கு தனித்தனியான கற்பனைகளும் விருப்பங்களும் இருந்து கொண்டே இருக்கின்றன என்பது தெளிவானது. இந்த தன்முனைப்பின் கற்பனைகளும் தன்முனைப்பின் செயல்பாட்டு முறையும் தன்முனைப்பின் விருப்பமும் ஒரு மனிதனின் இசைவிற்கு தகுந்தார் போல், விருப்பத்திற்கு தகுந்தாற்போல், செயல்முறைக்கு தகுந்தாற்போல் இருக்கிற ஒன்றை தன்னோடு இணைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறது. அந்த ஒன்றை அது புனிதம் என்று கருதுகிறது. அந்த ஒன்றை அது சரி என்று கருதுகிறது. அந்து ஒன்றை அது மேன்மை என்று கருதுகிறது.

ஒவ்வொரு தன்முனைப்பிற்கும் ஒரு மேன்மையான பார்வை உண்டு. இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு தன் முனைப்பிற்கும் தனித்தனியான மேன்மை குறித்த பார்வை உண்டு. எல்லா தன்முனைப்பும் ஒன்றை மேன்மையாக கருதுவதில்லை. ஒவ்வொரு தன்முனைப்பும் தனித்தனியான ஒன்றை புனிதமாகவோ, மேன்மையாகவோ, இசைவாகவோ கருதிக் கொள்ளும். தன்முனைப்பின் வழியே புனிதம் தீர்மானிக்கப்படுகிறது அதன் இசைவினைக் கொண்டு. தன்முனைப்பின் வழியே சரி தீர்மானிக்கப்படுகிறது அதன் இயங்கும் முறையை கொண்டு. தன்முனைப்பின் வழியே உயர்ந்த ஒன்று தீர்மானிக்கப்படுகிறது அதன் உள்ளடக்கத்தை கொண்டு. எனவே தன்முனைப்பு நிறைந்திருக்கிறபோது பொதுவான புனிதம், பொதுவான உயர்வு, பொதுவான மேன்மை, பொதுவான இசைவுத்தன்மை சாத்தியமில்லை. தன்முனைப்பு கரைய துவங்குகிற போது, தன்முனைப்பு தன் அழுக்குகளை நீக்கி கொள்கிற போது, உள் ஒளியை தரிசிக்கிற வாய்ப்பு உருவாகிற போது பொதுவான ஒன்று, பொதுவான இசைவு, பொதுவான மேன்மை வெளிப்படுவதற்கு கண்டு கொள்வதற்கு வாகாக அமைந்து விடுகிறது. உருவாக வாய்ப்பிருக்கிறது. இந்த பொதுவான ஒன்று, இந்த பொதுவான மேன்மை, இந்த பொதுவான சமநிலை, பொதுவான இறைநிலை புனிதம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே நிஜமான புனிதம்.

தன்முனைப்பு கரைய துவங்குகிற நபர்கள், தன்முனைப்பை கரைத்துக் கொள்ள முயற்சிக்கிற நபர்கள் துறவிகளாக இருக்கிறார்கள். துறவிகள் தன்முனைப்பை கரைத்துக் கொள்வதற்கு ஆயத்தமாக இருப்பவர்கள். தன்முனைப்பை விட்டுவிட்டு செல்வதற்கு தமக்குள் ஆயத்தமாக இருப்பவர்கள் துறவிகளாக இருக்கிறார்கள். அவர்கள் புனிதம் பற்றி, தன்முனைப்பு வகைப்படுத்தாத புனிதம் பற்றி ஒன்றை கண்டு கொள்ள முடியும். அவர்கள் மட்டுமே தன்முனைப்பு கடந்த மேன்மை பற்றி, சரி பற்றி, ஒன்றை பார்க்க முடியும். தன்முனைப்பு என்பது மிகுந்த இடைவெளியை பொது புனிதத்திற்கும் பொது மேன்மைக்கும் இடையே ஏற்படுத்தி விடுகிறது. தன்முனைப்பு கரைகிற போது, தன்முனைப்பு விலகுகிற போது, பொதுவான மேன்மை, உயிர் வெளிச்சத்திற்கான மேன்மை, உயிர் துடிப்பிற்கான மேன்மை தன்முனைப்பு இல்லாத வெளிச்சம் புனிதமாக மாறுகிறது. இப்படியான பொது புனிதம் குறித்து துறவிகளுக்கு ஆர்வம் இருக்கிற வகையிலேயே மிர்தாத் உரையாற்றுகிறார். மிர்தாதின் உரையாடல் எல்லோருக்கும் இசைவாய் இருக்கிற இசைவை பற்றியது. மிர்தாதின் உரையாடல் எல்லோருக்கும் மேன்மையாய் இருக்கிற மேன்மை பற்றியது. மிர்தாதின் உரையாடல் எல்லோருக்கும் புனிதமாய் இருக்கிற புனிதம் பற்றியது. யாவரும் சூரியனை பார்ப்பது போல், வெளிச்சத்தை தரிசிப்பது போல் யாவரும் புனிதத்தையும் மேன்மையையும் பார்க்கவும் தரிசிக்கவும் பரவசமாய் ஆராதிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment