Pages

Saturday, December 23, 2023

திருக்குறள் வாழ்வியல் // கடவுள் – கடவுள் தன்மை // பகுதி 1 // சிவ.கதிரவன்

 

கடவுள் – கடவுள் தன்மை

www.swasthammadurai.com


நம்முடைய திருக்குறள் தொடர் வகுப்பில், இந்த தொடர் உரையாடலில் திருக்குறளினுடைய வாழ்வியல், திருக்குறள் வழிகாட்டுகிற வாழ்வியல் அம்சங்கள் என்கிற தன்மையில் உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும் என்று முன்னமே நாம் பார்த்திருந்தோம்.  வாழ்வு குறித்து நமக்கு இருக்கிற கற்பனைகள், வாழ்வு குறித்தான விசாலமான பார்வை என்கிற தன்மையில் இருந்து நம் வாழ்க்கையை வாழ்ந்து விட வாய்ப்பில்லை. வாழ்க்கை என்பது இன்னும் மேன்மையானது. நாம் வாழ்கிறோம் என்கிற உணர்வை உள்ளடக்கமாகக் கொண்டது என்பதை நாம் ஏற்கனவே உங்களோடு பேசியிருந்தோம். அந்த வகையிலேயே திருக்குறளை வாழ்விற்குரிய நூல் என்கிற அடிப்படையில் தொடர்ந்து பார்க்கிறோம். திருக்குறளை பின்பற்றி ஏன் வாழ வேண்டும் என்று கேள்வி வரலாம். இன்றைக்கு இருக்கிற உளவியல் சிந்தனையாளர்கள், மேற்கத்திய ஆய்வாளர்கள் போன்றோருடைய ஆய்வுக் குறிப்புகளை நாம் படிப்பதற்கு, வாசிப்பதற்கு, உரையாடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அவர்களினுடைய உரையாடலை நாம் படிக்கும் போது, கேட்கும் போது அந்த உரையாடலில் பங்கேற்கும் போது எல்லாவற்றையும் தற்க அணுகுமுறையோடு பார்ப்பதற்கு, தற்கமாக புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்கிறோம். அப்படி ஒரு பழக்கத்தை உண்டாக்குவதற்கு எளிமையாக வாய்ப்பிருக்கிறது. அப்படி என்றால் அந்த காரண காரிய அறிவோடு நாம் சிந்திக்கிற போது திருக்குறளை பின்பற்றுவதற்கு என்ன காரணம் என்று ஒரு கேள்வி உண்டு. கேள்வி வரவேண்டும்.

படித்த அறிவாளிகளும் அறிவாளர்களும் சிந்தனையாளர்களும் நிரம்பி இருக்கிற சமூகத்தில் ஒன்றை சொன்னவுடன் அப்படியே ஏற்றுக் கொள்ளலாகாது என்பது அந்த சமூகத்தினுடைய அறிவிற்கு அழகு. அந்த வகையிலேயே நாம் வாழ்வை செம்மையாக வாழ்வதற்கு திருக்குறளை ஏன் பின்பற்ற வேண்டும் அல்லது திருக்குறளை பின்பற்றினால் தான் வாழ்வை செம்மையாக வாழ முடியுமா என்ற  கேள்வியை நாம் எழுப்புவது சிந்தனைக்குரியது.  சிந்திப்பதற்கு உகந்தது தான். ஒன்று சரி என்று எப்படி புரிந்து கொள்வது. நாம் ஒன்றை பின்பற்றுகிறோம். ஒன்றை செய்கிறோம் அல்லது ஒன்றில் ஈடுபடுகிறோம். நாம் செய்வது சரிதானா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது. இப்படி ஒன்று சரிதானா என்று கண்டுபிடிப்பதற்கு எத்தகைய கருவி இருக்கிறது.  நீங்கள் இப்போது ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள். அந்த வேலையில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்வது சரிதானா என்பதை எதை வைத்து முடிவு செய்வீர்கள். அதனுடைய விளைவை வைத்து முடிவு செய்யலாம். ஒரு பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த பாடம் உங்களுக்கு சரியானது தானா என்று எப்படி தீர்மானிப்பது. என் தந்தையாரின் கட்டாயத்தின் பெயரில் சேர்ந்து விட்டேன். என் தாயாரினுடைய கட்டாயத்தின் பெயரில் இந்த பாடத்தை எடுத்து விட்டேன். இது எனக்கு சரிதானா என்று  தெரியவில்லை என்றெல்லாம் மாணவர்கள் சொல்வதுண்டு.

ஒரு வேலையை நாம் செய்கிற போது இந்த வேலையை நாம் சரியாக தான் செய்து  கொண்டிருக்கிறோமா என்று அளந்து பார்ப்பதற்கு ஏதாவது கருவிகள் உண்டா. ஒரு கருத்தை பேசிக் கொண்டிருக்கிற போது அந்தக் கருத்து சரியானதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கு ஏதேனும் வழி உண்டா என்று சிந்தித்துப் பார்த்து நாம் முடிவு செய்ய வேண்டும். எப்படி ஒன்று  சரியாக இருக்கிறது என்பதை நாம் காண்பது என்று நாம் சிந்தித்தோம் என்றால் நமக்கு உடலில் அவையங்கள் இருக்கின்றன. அவை உணர்வுப்பூர்வமாக இருக்கின்றன. நீங்கள் சரியானதாக இருக்கிறதா என்பதை மெய்யியல் கோட்பாடுகளின் வழியாக அல்லது உங்கள் அனுபவங்கள் ஏதும் இல்லாமல் க்ற்றுக்கொள்ள வேண்டும் எனறால் இயற்கையாக இருப்பது சரியானது, உணர்வுப்பூர்வமாக இருப்பது சரியானது என்று பதில் அளித்துக் கொள்ள முடியும்.

இயற்கையாக இருப்பது என்றால் என்ன என்று அடுத்த கேள்வி உங்கள் சிந்தனையில் எழும்புவது உங்கள் சிந்தனையை இன்னும் விரிவாக்க செய்யும். உணர்வுப்பூர்வமாக இருப்பது என்றால் என்ன என்ற கேள்வி மீண்டும் எழும்புமானால் அதற்கும் நீங்கள் பதில் தேட வேண்டும். அந்த வகையில் சரியானதாக இருக்கிறது என்பதை எவ்வாறு காண்பது. ஒன்று சரியானதாக இருக்கிறது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதற்கு ஒரு வழி இருக்கிறது.

நம் உடலில் உறுப்புகள் இருக்கின்றன. உடல் உறுப்புகளுக்கு உணர்வுகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் அப்படி வாய்ப்பு இருக்கிறது. இவற்றை பயன்படுத்தி நாம் ஒன்றை  கண்டுபிடிப்பது என்று ஒரு துவக்கமாக வைத்துக் கொள்வோம். கண்களின் வழியாக பார்த்து ஒன்று சரியானதாக இருக்கிறதா, பொருத்தமானதாக இருக்கிறதா என்று பார்க்க முடியும். ஒரு வீட்டை பார்க்கிறீர்கள். இந்த வீடு நான் தங்குவதற்கு உகந்ததாக இருக்கிறதா என்று உங்கள் கண்களை வைத்து முடிவு செய்ய முடியும். அந்த வீட்டிற்குள் இருந்து, நடந்து பார்க்கிற போது அந்த வீடு உங்களுக்கு அமைதியான அல்லது இரைச்சலான சத்தங்களை தருகிறது, சுற்றி நடக்கிற இரைச்சலில் இருந்து உங்களை பாதுகாக்கிறது என்று உங்கள் காதுகளை வைத்து கண்டுபிடிக்க முடியும். இப்படி உங்கள் உடல் அவயங்களை வைத்து ஒன்றை காண்பது, அதன் வழியாக சரியானதை தேர்வு செய்ய முடியும் என்பது ஒரு தர்க்கம். ஒரு உரையாடி கண்டுபிடிக்க கூடிய முறை. இதனை தமிழ் தர்க்க நூல்களில் பிரமாணங்கள் என்று  சொல்வதுண்டு. சைவ சித்தாந்தங்கள் படிப்பவர்கள் இவற்றை மேலாக சொல்வதுண்டு. தமிழ் தர்க்க நூல்களில் இதற்கான குறிப்புகள் இருக்கின்றன. சிந்தனையாளர்கள் பலரும் இதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். தமிழ் அறிஞர்கள் பலரும் இதைப் பற்றி பேசி இருக்கிறார்கள். எழுதி வைத்திருக்கிறார்கள். முன்பு இதைப் பற்றி பெரிய உரையாடல்கள் எல்லாம் நடந்திருக்கிறது என்று நாம் படிக்கும்போது தெரிகிறது.

சமூகத்தின் மீது அறிவின் மீது நம்பிக்கையும் அக்கறையும் விருப்பமும் கொண்ட பலரும் இவற்றை செய்திருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவற்றை எல்லாம் நாம் படிக்க வேண்டி இருக்கிறது. தர்க்க சாஸ்திரங்கள் அல்லது தர்க்க வரையறைகள், நெறிமுறைகள் பற்றி இன்றைய சமூகத்திற்கு கிடைப்பது அரிதாக இருக்கிறது. அப்படியான  ஒரு உரையாடல் உயர்கல்விகளில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. தேடுகிற ஒருவர் உயர்கல்விகளில் தர்க்க நூல்களை, தர்க்க நெறிமுறைகளை பார்க்க முடியும். அந்த தர்க்க நெறிமுறை குறிப்புகளில் முதலாவதாக நீங்கள்  கண்டதின் வழியாக, கேட்டதின் வழியாக, உணர்ந்ததின் வழியாக, சுவைத்ததின் வழியாக, நுகர்ந்ததின் வழியாக ஒன்றைக் கண்டு கொள்ள முடியும். இதன் வழியாக ஒன்று சரியாக இருக்கிறது. பிழையாக இருக்கிறது. எனக்கு பொருத்தமாக இருக்கிறது. எனக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கிறது என்று பார்க்க முடியும். இது முதல் துவக்கம். இப்படியான ஒரு அணுகுமுறை.

இரண்டாவது அணுகுமுறை உங்கள் அனுபவத்திலிருந்து ஒன்றை யூகம்  செய்ய முடியும். இதுவும் தர்க்க சாஸ்திரத்தில், தர்க்க நெறிமுறைகளில் காண்கிற குறிப்புகளில் இருக்கிறது. இது பிரமாணங்கள் என்று வடமொழியில் சொல்வார்கள். அணுகுமுறை அல்லது ஒன்றை காண்பதற்கான முயற்சி என்கிற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. ஆக, காட்சியின் வழியாக பார்ப்பது. காட்சி என்பது நீங்கள் புலன் வழியாக உணர்கிற எல்லாமும் காட்சி பிரமாணங்கள் தான் என்று தர்க்க சிந்தனையாளர்கள், தர்க்க அறிவாளிகள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இந்த வகையில் பார்க்கிற ஒன்று. 

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment