மகிழ்ச்சி எனும் பொருளில்…
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்றைக்கு நல்ல வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளக்கூடிய
நாளாக, நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிற
நாளாக அமைந்திருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை நாம் எல்லா நாட்களையும் நல்ல நாட்களாகவே
பார்க்கிறோம்.
எல்லோருக்கும் எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.
அந்த வகையில் இன்றைய நாள் மிகுந்த மதிப்பிற்குரிய, நன்மைக்குரிய நாள் என்பதில் எவ்விதத்திலும்
மாற்று கருத்து இல்லை.
ஒரு நல்ல உரையாடலை நாம் அமர்ந்து இருந்து உரையாட
வேண்டும் என்கிற நோக்கத்தில் மகிழ்ச்சி என்கிற பொருளில் உரையாட பணிக்கப்பட்டிருக்கிறது.
மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியாக இருப்பது,
மகிழ்ச்சியாக இருப்பது என்பது என்ன?
எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது?
என்று நிறைய பேசியிருப்போம்.
நீங்களும் பேசியிருப்பீர்கள். எல்லோருமே கடந்து வராத தலைப்போ, கருத்தோ இல்லை. மகிழ்ச்சி
குறித்து எல்லோருக்கும் விருப்பமும் நம்பிக்கையும் உரையாடலில் பங்கேற்ற, உரையாடிய அனுபவமும் இருக்கத்தான்
செய்கிறது.
இருக்கும்.
இருக்க வேண்டும்.
நாம் இன்று மகிழ்ச்சி குறித்து தெளிவுபடுத்த
நினைக்கிற ஒரு வரிக் கருத்து நான் முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஏனென்றால் பொதுவாக
நமது உரையாடலில் பேசி முடிக்கிற போது கூடுதலாக செய்திகளை தவிர்த்து ஒரு வரி செய்தியாக
நீங்கள் சொன்னால் போதும் என்கிற விளையாட்டுத்தனங்கள் நான் பார்த்திருக்கிறேன். அந்த
வகையில் முதலிலேயே மகிழ்ச்சி குறித்து நமது கருத்தை ஒரு வரியில் சொல்லி விட விரும்புகிறேன்.
மகிழ்ச்சி என்பது இன்று நீங்கள் பார்க்கிற கேளிக்கை அல்ல. கேளிக்கை என்பதற்கும் மகிழ்ச்சி என்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சியாக இருப்பது என்று நினைத்துக் கொண்டு நாம் பெரும்பாலும் கேளிக்கைகளில் மகிழ்ச்சியை தேடுகிறோம். மகிழ்ச்சிக்குரிய நல்ல தருணங்களை கேளிக்கைகளில் செலவிடுகிறோம். இது செலவிடுகிறோம் என்பதை விடவும் மகிழ்ச்சிக்குரிய நல்ல தருணங்களை கேளிக்கைகளில் நாம் தொலைத்து விடுகிறோம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே நாம் இந்த தலைப்பில் பேசுவதற்கு பணிக்கப்பட்டவுடன் நாம் சொல்ல வேண்டும் என்று கருதிய கருத்து இதுதான்.
நாம் நினைக்கிற மகிழ்ச்சி என்பது இன்று கேளிக்கையாக இருக்கிறது. கொண்டாட்டம் என்பது கேளிக்கையாக இருக்கிறது. எனவே மகிழ்ச்சி என்பது வேறு. இன்று கண் முன்னால் நிகழ்த்தப்படுகிற கொண்டாட்டங்கள் என்பது வேறு. நீங்கள் கொண்டாட்டத்தின் போது மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதும் கேளிக்கைகளில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பதும் நிஜமான மகிழ்ச்சிக்குரியது அல்ல. நிஜமான மகிழ்ச்சி என்பது நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் உட்பட்டதல்ல. இவை இரண்டும் வேறுவேறு. இவற்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இந்த உரையாடல் கூட ஒரு வகுப்பு போல ஏற்புடையதாக இல்லாமல், ஒரு வகுப்பு போல உறக்கம் வர வைக்கிற அல்லது மகிழ்ச்சியை தராத ஒன்றாக கூட இருக்கும் என்று நீங்கள் கருதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மகிழ்ச்சியை இப்படித்தான் பேச முடிகிறது. மகிழ்ச்சி குறித்த உரையாடலை கேட்கிற நிலையிலும் பேசுகிற நிலையிலும் இந்த உரையாடல் அமையப் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மகிழ்ச்சி குறித்து மெய்யாகவே மகிழ்ச்சி என்ன என்பது குறித்து விரும்புகிறவர்கள் மட்டுமே
மகிழ்ச்சி குறித்து கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்க யார்
தான் விரும்ப மாட்டார்கள் என்று நமக்கு ஒரு கேள்வி எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு விரும்புவார்கள்
என்றால் விரும்புவார்கள் தான்.
ஆனால் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒவ்வொருவரும் கேளிக்கை சார்ந்த ஒரு காரணத்தை ஒரு அடையாள
குறியீடை வைத்திருப்பார்கள் என்றால் அது
மகிழ்ச்சிக்கு இட்டு செல்லாது.
அது மகிழ்ச்சியாக அமைந்து விடாது. எனவே நீங்கள் மகிழ்ச்சியை அடிப்படையில் புரிந்து
கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சியாக இருப்பது என்பதற்கும் கேளிக்கையாக இருப்பது என்பதற்கும் காட்சியில் ஒன்று
போல், தோற்றத்தில் ஒன்று போல்
இருக்கக்கூடும்.
ஆனால் இரண்டிற்கும் அடிப்படையில் நேர் எதிரான வேறுபாடுகள் இருக்கின்றன. மகிழ்ச்சி என்பது
வேறு. இன்று நீங்கள் மகிழ்ச்சி என்று கொண்டாட்டம்
என்று வேடிக்கைகளாகவும் கேளிக்கைகளாகவும்
செய்து கொண்டிருக்கிற செயல்பாடுகள் என்பது வேறு.
மகிழ்ச்சி குறித்து நிறைய ஆன்றோர்கள், சான்றோர்கள், ஆன்மீகப் பெரியோர்கள் நிறைய
உரையாடல்களை சமூகம்
முழுவதும் காலங்காலமாக
செய்திருக்கிறார்கள். நிறையவே செய்திருக்கிறார்கள். அவர்களின் மேற்கோள்களை
காட்டி அவர்களினுடைய வழிகாட்டுதலை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுதல் என்பது எனக்கு பெருமை தான் என்றாலும்
என் பார்வையில் இருக்கிற சில கருத்துகளை உங்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
மகிழ்ச்சி குறித்து நாம் சிந்திக்கிற போது, மகிழ்ச்சியாக இருப்பது குறித்து
நாம் சிந்திக்கிற போது நமக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி என்பது என்ன என்று தெரியவில்லை.
ஆனால் வாரத்தில் ஏழு நாட்கள் வேலைக்கு செல்கிற ஒருவர் ஏழாவது நாள் மாலை நேரத்தையோ அல்லது ஆறாவது நாள் மாலை நேரம் தொடங்கி
ஏழாவது நாள் மாலை வரை கிடைக்கிற ஒரு நாள் பொழுதை கொண்டாட்டத்திற்குரிய பொழுதாக புரிந்து கொள்கிறார். ஏழு நாளில் ஆறு நாட்கள்
வேலையும் ஒரு நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாகவும் அவர் நினைத்து கொள்கிறார். ஏழு நாட்கள் வாய்த்திருக்கிற போது ஆறு நாட்கள் மன அளவில் நீங்கள்
இறுக்கமாக வேலை செய்வீர்கள் என்றால் ஏழாவது நாள் உங்களுக்கு கேளிக்கைக்குரிய நாளாக தேவைப்படும். இன்று
விழாக்களும் கொண்டாட்டத்திற்குரிய காரணங்களும் வாழ்த்துக்குரிய நாட்களும் வருகிற போது
நீங்கள் கொண்டாடுகிறீர்கள்.
வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறீர்கள்.
அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாட்டத்திற்குரிய நாளாக நினைத்துக்
கொண்டு கேளிக்கையோடு அந்த நாளை கழிக்கிறீர்கள்.
அந்த நாளை பயனுள்ள நாளாக பயன்படுத்துகிறோமா என்று நீங்கள் பார்ப்பதே இல்லை என்பதை நான்
உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
ஏன் நீங்கள் இந்த நாட்களை பயனுள்ளதாக மகிழ்ச்சிக்குரியதாக
கடக்கவில்லை என்று நான் சொல்வது உங்களுக்கு புதிராக தோன்றும். ஏன் அவ்வாறு நான் சொல்ல
வேண்டும் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும்.
நீங்கள் உண்மையிலேயே கொண்டாட்டமான
நாளை, மகிழ்ச்சியான நாளை நீங்கள்
உண்மையிலேயே கொண்டாடியிருந்தால், மகிழ்ச்சியாக கடந்து இருந்தால்
அடுத்த நாள் உங்களுக்கு சோர்வான நாளாக இருக்காது. ஐந்து நாட்கள், ஆறு நாட்கள் இறுக்கமான வேலையில்
நீங்கள் ஈடுபட்டுக் கொண்டு ஏழாவது நாள் முழு நாளையும் கேளிக்கையில் நீங்கள் கழித்து
விட்டு மீண்டும் அடுத்த வாரத்தில் முதல் நாள் பணிக்கு செல்கிறபோதோ ஒரு ஆண்டு முழுவதும்
வேலை செய்துவிட்டு நான்கு ஐந்து நாட்கள் ஒரு திருவிழாவில் உங்கள் நாட்களையும் பொழுதுகளையும்
கழித்து விட்டு நீங்கள் மீண்டும் வேலைக்கு திரும்புகிற போது உங்கள் முகத்தை பார்க்கிற
போது என்னவெல்லாம் கவலைகள் சூழ்ந்திருக்கின்றனவோ என்கிற குறிப்பை காணமுடிகிறது.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று சொன்னால்
மகிழ்ச்சி முடிந்தவுடன் இப்படியான கலக்கம் உங்களுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.
கேளிக்கை முடிந்தவுடன் நீங்கள் களைத்துப் போவீர்கள். இன்னும்
நுட்பமான குறிப்பை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மகிழ்ச்சி
குறித்த உரையாடல் பேசுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. முதன்மையான காரணம் இருக்கிறது.
இது உங்கள் கொண்டாட்டங்களை விமர்சிக்கிற நோக்கில் உரையாடப்படுவது அல்ல. மகிழ்ச்சி என்கிற தலைப்பில், ஒரு பொருளில் சில கருத்துக்களை
பகிர்ந்து கொள்வதற்கு நடப்பில் இருக்கிற கொண்டாட்டமான சூழலை விமர்சிக்கிற நோக்கில்
நான் இந்த பொருளில் என் கருத்துக்களை உங்களோடு
பகிர்ந்து கொள்வதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாம்.
நடப்பில் இருக்கிற இந்த கொண்டாட்டங்களுக்குள்
நீங்கள் ஈடுபடுகிற போது மேன்மையான,
மிக மேன்மையான உங்களின் படைப்புத்திறன் என்னவாகிறது. இறுக்கமான சூழலுக்குள் செல்வதற்காகவே
நீங்கள் இந்த கொண்டாட்டங்களை கேளிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்களோ என்கிற அச்சம். இவ்வாறான மனபாரங்களின் பொருட்டே
அக்கறையின் பொருட்டே மகிழ்ச்சி குறித்து ஒரு புதிய நிலைப்பாட்டை நினைவூட்டலை உங்களுக்கு
தர வேண்டும் என்கிற தன்மையில் நாம் இத்தகைய உரையாடலை செய்கிறோம். எனவே மிக நுட்பமான
செய்தி என்று நான் சொல்ல விரும்புவது இறுக்கமான
ஒரு பெரும் காலத்தை இறுக்கத்தோடு இருந்து கடந்து அவற்றை சகிக்க முடியாமல் சகித்து, அது முடிந்த உடன் நான்கு
ஐந்து நாட்கள் தேக்கி வைத்த எல்லா கோபதாபங்களையும் சங்கடங்களையும் கொட்டித் தீர்க்கிற நாளாக உங்கள்
திருவிழாக்களை மாற்றிக் கொள்ளக் கூடாது.
அப்படி மாற்றிக் கொள்வது மகிழ்ச்சியாகாது என்று நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
உங்கள் மகிழ்ச்சி என்பது நீங்கள் சேர்த்து
வைத்த, அடக்கி வைத்த கொந்தளிப்புகளை
மனக்குமுறல்களை வெளிப்படுத்திக் கொள்கிற கேளிக்கைத்தனம் அல்ல. உங்களது படைப்புத்திறன்
உங்களது ஆழ்ந்த மௌனம் உங்களது தியானிப்பு நிலை உங்களது ஆற்றல் மேம்பாடு இவை எல்லாமும்
பொங்கி வழிகிற போது அவை உங்கள் வேலையிலும் வேலை இல்லாத காலங்களிலும் ஒன்றாகவே வெளிப்படும்.
நீங்கள் வேலை பார்க்கிற போது முழு ஈடுபாடோடு வேலை பார்ப்பீர்கள் என்றாலும் நீங்கள்
ஓய்வாக இருக்கிறபோதும் முழு ஈடுபாடோடு ஓய்வாக இருப்பீர்கள் என்றாலும் நீங்கள் மகிழ்ச்சியாக
அல்லது மகிழ்ச்சியை புரிந்து கொண்டவர்களாக இருக்கிற போது இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிற
கண்ணுள்ளவர்களாக மாறிப் போவீர்கள்.
நான் நுட்பமாக சொல்வதற்குரிய செய்தி என்று
இவற்றை குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு
உரிய எல்லா தகுதிகளையும் கொண்டவர்களாக இருக்கிறீர்கள் என்பது முதல் காரணம். இந்த நுட்பமான செய்திக்குள்
இருக்கிற இன்னொரு கருத்து மகிழ்ச்சி என்பது முழுமையான உங்களது தேடலும் மற்றும் விருப்பமும்
சம்பந்தப்பட்டது. உங்கள் தேடலும் விருப்பமும் ஒன்றாக இருக்கிறபோது நீங்கள் மகிழ்ச்சியை
கண்டடைய முடியும் அல்லது நீங்கள் மகிழ்ச்சிக்குள்ளேயே இருக்கிறீர்கள் என்பதை புரிந்து
கொள்ள உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் மகிழ்ச்சிக்குள்ளேயே இருக்கிறீர்கள் என்பதை
புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் அவகாசம் கிடைக்காத அளவிற்கு புறச் சூழலின் ,பொருளாதார நெருக்கடிகளின், தகவல் தொழில்நுட்ப இரைச்சலின்
வழியாக நீங்கள் காலம் கடந்து சென்று கொண்டே இருக்கிறீர்கள் என்பதை நான் உங்களுக்கு
நினைவூட்ட விரும்புகிறேன். இந்த நினைவூட்டல் உங்களினுடைய மகிழ்ச்சியை உங்களுக்குள்
இருக்கிற மகிழ்ச்சியை உங்களைச் சுற்றி இருக்கிற மகிழ்ச்சியை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்று விரும்புகிறேன். நம்புகிறேன்.
நண்பர்களே, அந்த வகையில் மகிழ்ச்சி என்பது ஒரு பேசு பொருளாக
நாம் எடுத்துக் கொள்வதற்கு மிகுந்த முக்கியத்துவமும் காலத்தின் தேவையும் இருக்கிறது
என்று எனக்கு தோன்றுகிறது. உங்கள் திருவிழாக்கள் மேன்மையானவை. உங்களுடைய கொண்டாட்டங்கள்
புனிதமானவைகள்.
உங்களை சுற்றி உங்கள் சமூகம் வைத்திருக்கிற எல்லா வகையான மரபார்ந்த செயல்பாடுகளுக்குப் பின்னும் மரபார்ந்த
குறியீடுகளுக்கு பின்னும் உங்களை வார்த்தெடுக்கிற, வளர்த்தெடுக்கிற உங்களை மகிழ்ச்சிப்படுத்துகிற ஒன்று இருந்து
கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் காணத்தான் வேண்டும்.
நீங்கள் இயற்கையோடு பின்னி இருக்கிற போது இந்த
கொண்டாட்டங்களும் இந்த கொண்டாட்டங்களுக்கு பின்னால் இருக்கிற குறியீடுகளும் அர்த்தம்
நிறைந்தவையாக உங்களுக்கு காணக் கிடைக்கும். நீங்கள் இயற்கையின் பார்பட்டு தள்ளி நிற்கிற
போது இந்த கொண்டாட்டங்கள் உங்கள் மகிழ்ச்சியை பறித்துக் கொண்டு கேளிக்கைகளை
கையில் கொடுத்து விடுகின்றன. எனவே கொண்டாட்டங்களுக்கு பின்னால் இருக்கிற மகிழ்ச்சியை, மகிழ்ச்சிக்குரிய தேடலை, விருப்பத்தை கொண்டவர்களாக
நீங்கள் மாறுகிறபோது கொண்டாட்டங்களின் வழியாக மகிழ்ச்சியை பற்றிக்கொள்ள முடியும். உங்களுக்குள்
நிரம்பி வழிகிற மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்கு அல்லது கொண்டாட்டங்களின் வழியாக இன்னும்
சொல்லப்போனால் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்டு உங்களை அழைத்துச் சென்று நகர்த்திக்
கொண்டே இருக்கும் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.
நான் முதலில் துவங்கிய போது கூறிய மெய்யியல்
நிலைப்பாடாக நான் புரிந்து கொண்ட கருத்தை மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அந்தக் கருத்து ஒன்றே ஒன்றுதான். மகிழ்ச்சி என்பது உங்களுக்குள்
இருக்கின்ற உங்கள் உயிர் அவதானிக்கின்ற ஒரு பெரும் உணர்வான நிலை. மகிழ்ச்சி என்பது
நீங்கள் சுற்றித் திரிகிறபோது உங்கள் நெருக்கடிகளை ஒரு புறம் வைத்துவிட்டு யாருக்கும்
தெரியாமல் தப்பித்து விடலாம் என்று நீங்கள் தப்பித்து நகர்கிறபோது அதற்காக பயன்படுத்துகிற
கேளிக்கைகள் அல்ல. மகிழ்ச்சியும் கேளிக்கையும் காட்சியில் ஒன்றாக இருந்தாலும் இரண்டும்
வேறுவேறானவை என்கிற மெய்யியல் புரிதலை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான்
விரும்புகிறேன். கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் உங்கள் மன இறுக்கத்திற்கு தரப்படுகிற
வடிகால் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் நீண்ட காலம்
நீங்கள் கொதித்துப் போய் இருக்கிற மன உணர்வை பெற்று இருக்கிறபோது அவற்றை வடித்துச் செல்கிற ஒரு தற்காலிக நிவாரணம்
என்கிற நிலையை சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உங்கள்
மகிழ்ச்சி என்பது ஈடுபாடோடு செய்யப்படுகிற வேலையின் வழியாக நீங்கள் புரிந்து கொள்ள
முடியும். ஈடுபாடாக இருக்கிற இருத்தலின்
வழியாக நீங்கள் புரிந்து கொள்ள முடியும். உங்கள் மகிழ்ச்சி என்பதை நீங்கள் இயல்பாகவே
இயற்கையாகவே இருக்கிறபோது எவ்வாறு இருக்கிறீர்களோ அவ்வாறு ஏற்றுக் கொள்ளவும் உணர்ந்து
கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியும். இப்படி ஒரு புறம் இருக்கிறது என்பதை நீங்கள்
ஒருமுறை பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் அல்லது மகிழ்ச்சியும்
கேளிக்கையும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பவை அல்ல.
இந்த வேறுபாடை நீங்கள் புரிந்து கொண்டு இந்த வேறுபாட்டிற்குள் இருக்கிற நிலைப்பாடுகளில்
நாம் எங்கு இருக்கிறோம் எவ்வாறு இருக்கிறோம்
என்பதை பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நீங்கள் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு நாம் கேளிக்கைகளுக்குள் சுற்றி
சுற்றி வருவதை பார்க்க முடிகிறது. நாம் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறோம் என்று
நினைத்துக் கொண்டு,
வெளிச்சத்தை நோக்கி நகர்கிறோம் என்று நினைத்துக் கொண்டு விளக்கிற்குள் விழுகிற பூச்சிகள்
போல் நாம் மாறிவிடக்கூடாது.
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது என்பது நிஜமானால்
நீங்கள் மகிழ்ச்சி கடந்தவுடன் மகிழ்ச்சிக்குரிய தருணங்கள் நிறைவு பெற்றவுடன் அடுத்த
நாள் கவலைக்குரிய நாளாகவோ துயரத்திற்குரிய நாளாகவோ இருக்கிறதா என்பதை நீங்கள் மதிப்பீடு
செய்து பாருங்கள். இன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறோம். நாளை நாம் என்ன செய்யப்
போகிறோம் என்பது மலைப்பாகவும் கவலையாகவும் கேள்விக்குறி போன்றும் தெரியுமானால் நீங்கள்
இன்று மகிழ்ச்சியாக இருக்கவில்லை.
கேளிக்கையாக கடந்திருக்கிறீர்கள் என்று பொருள். எனவே மகிழ்ச்சி என்பது கேளிக்கையை விடவும்
தரம் மிகுந்தது. நீங்கள் எப்படி கேளிக்கைகளை
மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டிய நல்ல தருணம் இது. ஏனென்றால்
நீங்கள் இப்போது கேளிக்கைகளுக்குள் நின்று கொண்டிருக்கிறீர்கள். கேளிக்கைகளை மகிழ்ச்சி என்று கருதிக் கொண்டிருக்கிறீர்கள். கேளிக்கைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியை நோக்கி நகர்வதற்குரிய
விருப்பத்தோடு நீங்கள் அடி எடுத்து வைக்க நினைத்தீர்கள் என்றாலும் கூட மகிழ்ச்சி உங்களை
சூழ்ந்து இருக்கிறது என்பதை உணர துவங்குவீர்கள்.
நாளைய பொழுது கவலைக்குரியதாக இருப்பதை சந்திக்க
முடியாமல் தடுமாற்றத்தோடு நீங்கள் கேளிக்கைகளுக்குள் ஒளிந்திருப்பதை ஒருமுறை பார்த்து
விட்டால் அதுதான் மகிழ்ச்சிக்குரிய துவக்க புள்ளி. மகிழ்ச்சியோடு இருக்கிறீர்கள் என்பதை காண்பதற்குரிய
துணிவு.
…தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment