Pages

Friday, June 21, 2024

நீத்தார் பெருமை - பகுதி 2 - சிவ.கதிரவன்

 

                                                     நீத்தார் பெருமை



நான் இன்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட புண்ணிய தளத்திற்கு செல்கிறேன். அங்கு புண்ணிய  நீராடி முடித்தவுடன் நான் இந்த உணவை துறந்து விடுகிறேன். இன்றிலிருந்து இந்த உணவை நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். இந்த உணவை பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிற துறவு சொற்கள் சமூகத்தில் உண்டு. குறிப்பாக காசியில், இராமேஸ்வரத்தில் சென்று இன்றிலிருந்து உருளைக்கிழங்கை சாப்பிட மாட்டேன். பாகற்காயை சாப்பிட மாட்டேன். நான் அவற்றைத் துறந்து விட்டேன் என்று துறக்கிற துறவு என்பது துறவாகுமா? இந்த துறவை பற்றி தான் நீத்தார் பெருமையில் வள்ளுவர் பேசுகிறாரா என்றெல்லாம் பேசிp பார்ப்பதற்காக இந்த உரையாடலை செய்து கொண்டிருக்கிறோம்.

இன்னும் சமூகத்தில் நோன்பு நோற்று இருக்கிற இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகிற நம்பிக்கையாளர்கள் நோன்பு துறப்பு என்கிற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். நோன்பு காலங்களில் நோன்பு துறக்கிற நேரம் என்று ஒரு நேரத்தை துறப்பு நேரமாக வைத்திருக்கிறார்கள். நோன்பு நோற்று இருக்கிற அந்தக் குறிப்பிட்ட நேரத்தை நிறைவு செய்யும் முகமாக அவர்கள் நோன்பை துறந்து, உணவை எடுத்துக்கொள்கிற நேரமாக குறிப்பிடும் வண்ணம் நோன்பு துறப்பு என்று ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள். இத்தகைய செயல்பாடு துறப்பு ஆகுமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த வகையிலேயே துறப்பு, துறவு, துறவி என்கிற சொல்லிற்கு பின்னால் இருக்கிற மெய்யான பொருள் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆக, துறவு என்பது நான் மேற்சொன்ன வகையிலேயே அமைந்திருக்கிறதா என்றால் அவ்வளவுதான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் துறவு என்பது அப்படியானது அல்ல. வள்ளுவரினுடைய அறிமுகத்தில் வள்ளுவர் துறவியர் பற்றி அறிமுகம் செய்கிற போது அவர்களுக்கு வணக்கம் சொல்கிற முகமாகவும் அவர்களுக்கு புகழ் செலுத்தும் முகமாகவும் அவர்களை போற்றும் முகமாகவும் பாடல்களை வடிவமைக்கிறார்.


துல்லியமாக துறவு என்பது என்ன? துறவியர் என்பவர் யார்?  என்று பின்னாளில் பாடல்கள் அமைக்கிறார். துறவு என்று தனியாக பாடம் சொல்கிற முகம் பின்னாளில் இருக்கிறது. ஆனால் நீத்தார் பெருமையை பேசுகிற போது  ஒன்றை மட்டும் துல்லியமாக, குறிப்பாக வள்ளுவர் சொல்கிற இலக்கணமாக பார்க்க முடிகிறது. ஒன்றே ஒன்று.

துறவிகள் யார் என்று அவர் குறிப்பிடுகிறார். உலகில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவர் துறவி. மிக முக்கியமான துறவியினுடைய இலக்கணமாக, குறியீடாக துறவியர் என்பது யார் என்று நாம் கண்டுபிடிப்பதற்கு இலகுவாக ஒரு குறிப்பு சொல்கிறார். துறவி என்பவர் யார்? எல்லா உயிர்க்கும் எந்த உயிருக்கும் அருள் செய்யும் குணமுள்ளவர் துறவி.

ஆக, எல்லா உயிருக்கும் அருள் செய்பவர் யார் என்பது இப்போது துறவுக்கான  இலக்கணத்திலிருந்து நாம் கண்டுபிடிக்க வேண்டிய வினாவாக மாறிப் போகிறது. இன்னொரு குறிப்பை சொல்கிறார். துறவியைப் பற்றி சொல்கிறபோது துறவிகளின் வசம் உலகம் இருக்கிறது என்று நாம் நம்புகிறது போல வள்ளுவர் துறவிகள் வசம் உலகம் இருக்கிறது என்றால் துறவிகள் எவ்வாறு இருப்பார் என்று குறிக்கும் முகமாக ஒன்றை சொல்கிறார்.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, மனம் இந்த ஐந்து உபயங்களினுடைய செயல்பாடுகளை அறிந்தவன் வசமே இந்த உலகம் இருக்கும். இருக்கிறது என்று ஒரு பாடலில் குறிப்பை சொல்கிறார். ஆக ஒரு நல்ல துறவி என்று ஒரு உதாரண நபரை குறிப்பிடும் போது ஐந்தும் அடக்கியவன் இந்த உலகிற்கு தலைவனாக இருக்கிற ஒருவன் என்று துறவை குறிப்பிடுகிறார். துறவியை குறிப்பிடுகிறார். அப்படி அருள் செய்கிற ஒருவர் தனது ஐந்து வகையான வாய்மை, கண், காது, மூக்கு என்கிற  அவையங்களினுடைய உணர்வுகளை வென்ற ஒருவர் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு இந்த உலகிற்கே சான்றாக இருக்கிற ஒருவர் என்று துறவியைப் பற்றி உதாரணங்களையும் இலக்கணங்களையும் வள்ளுவர் வகுத்து வைக்கிறார். இந்த வகையில் இருப்பவர்கள் துறவிகளாக கருதிக் கொள்ள முடியுமா என்றால் யார் ஒருவரும் பயிற்சியின் மூலமாக இவற்றை செய்து துறவியாக முடியும் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பயிற்சி செய்கிற ஒருவர், பயிற்சியின் மூலமாக தொடர்ந்து கண், காது, மூக்குகளுக்கு அவையங்களுக்கு பயிற்சி கொடுத்து அவற்றை செயல்படாமல் இருப்பதற்குரிய, கடந்து போவதற்கு முயற்சிகளை செய்து பயிற்சியின் வழியாக அவற்றினுடைய செயல்பாட்டை சுருக்கிக் கொண்டு வாழ்வார் என்றால் அவர் துறவி என்றும் அருளாளர் என்றும் கருதிக் கொள்ள முடியுமா என்று பல கேள்விகளை நாம் புரிந்து கொண்டால் மட்டுமே  துறவு என்பது என்ன? துறவியரின் இலக்கணம் என்ன? என்று நாம் விரிவாக பேச முடியும். ஏனென்றால் வாழ்வியல் என்கிற அடிப்படையில் வள்ளுவத்தை நாம் படிக்கிற போது நீங்கள் அன்றாடம் செய்து பார்க்கிற ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அன்றாடம் நீங்கள் பணிக்கு செல்கிற போது, பணியில் இருக்கிறபோது உங்கள் பணி முடிந்து திரும்புகிறபோது உங்கள் வாழ்விடத்தில் நீங்கள் இருக்கிறபோது மற்றவர்களோடு உறவு பாராட்டுகிற போது நீங்கள் இந்த வாழ்க்கையை நிறைவாக வாழ வேண்டும் என்று கருதுகிற போது நீங்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு செயல்பாட்டிற்குள்ளும் அணுகுகிற ஒவ்வொரு  அணுகுமுறைக்குள்ளும் நீங்கள் வினையாற்றுகிற ஒவ்வொரு வினைக்குள்ளும் வள்ளுவரினுடைய வழிகாட்டுதல் இருக்கிறது, இருக்கும் என்கிற அடிப்படையில் நாம் வள்ளுவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

வள்ளுவர் எல்லாவற்றிலும் வழிகாட்டுகிறார் என்பதை நமக்கு தெரிவிக்கிறார். சொல்லித் தருகிறார் என்கிற அடிப்படையில் இவற்றை நாம் படிக்க வேண்டும் என்று கருதுகிறேன். இந்த பொருத்தப்பாடுகளுக்குள் பொருந்துகிற போது மட்டும் தான் நாம் அதை வாழ்வியலாக நாம் கருதிக் கொள்ள முடியும். இந்த பொருத்தபாட்டிற்குள் பொருந்துகிற ஒன்றாக வள்ளுவம் இருக்கிறது. திருக்குறள் இருக்கிறது என்கிற செய்தியை நாம் பார்க்கிறோம். அந்த வகையிலேயே துறவு என்று நாம் ஒரு வாழ்வியல் நோக்கில் பார்க்கிற போது துறவு எப்படி பொருந்துகிறது துறவு எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது? யார் துறவை கடைப்பிடிக்கிறார்கள் என்று நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது என்பதாலே துறவைப் பற்றி முதலில் ஒரு அறிமுகத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எல்லாம் இருக்கட்டும் துறவு என்றால் என்ன என்று சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நான் பீடிகை போட்டு பேசுவதாக நீங்கள் கருதி கொள்ள வேண்டாம். துறவை பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியாத அவசரத்தில் இருக்கிறோம் என்பதனாலேயே துறவினுடைய  முக்கியத்துவம் குறித்து கொஞ்சம் விரிவாக நான் சொல்ல விரும்புகிறேன்.

துறவு என்பது நீங்கள் கைவிடுவது அல்ல; நீங்கள் மறுப்பது அல்ல. ஒரு தனி மனிதன் ஒரு பொருளையோ  ஒரு உணர்வையோ மறுக்கிறார் என்றால் அது துறவாகாது. அது புறக்கணிப்பு அல்லது மறுப்பு.

 துறவு என்பது உங்களை விட்டு நீங்குவது. ஒரு புரிதல் ஏற்பட்டு உங்களிடம் இருந்து ஒரு பொருள் செல்வதே துறவு. உங்களிடமிருந்து ஒரு உணர்வு செல்வதே துறவு. துறவு என்பது அத்தகைய ஒன்று தான் துறவினுடைய இலக்கணமாக தான்  நான் பார்க்கிறேன்.

...தொடர்ந்து  பேசுவோம்...

No comments:

Post a Comment