நீத்தார் பெருமை
துறவை மேற்க்கொள்கிற தரமிக்க மனிதர்களை துறவிகள்
என்று, நீத்தார் என்று பெருமை செய்கிறார். நூல்கள் எல்லாமும் இப்படிப்பட்ட
துறவிகளை பெருமையாக பேசுகின்றன என்று தம் செய்யுளில் சொல்கிறார்.
உலகில் இருக்கிற மனிதர்களினுடைய பெருமை,
உலகில் இருக்கிற மனிதர்களினுடைய இறப்பு என்று ஒரு ஆய்வு குறிப்பு அல்லது ஒரு
பட்டியல் தயார் செய்தோம் என்றால் இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து எவ்வளவு
மனிதர்கள் பிறந்து இறந்திருப்பார்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தோம்
என்றால் அந்த எண்ணிக்கை எவ்வளவு இருக்குமோ
அவ்வளவு பெருமைகளை துறவிகள் கொண்டிருப்பர் என்று அதன் மதிப்பை அவ்வளவு உயர்வாக
சொல்கிறார். இதில் ஒரு அழகான உவமை இருக்கிறது. துறவிகளினுடைய பெருமையை
இறந்தவர்களினுடைய எண்ணிக்கைக்கு ஒப்பாக வள்ளுவர் சொல்கிறார். நீத்தார் பெருமை
என்கிற அதிகாரத்தில் "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை
எண்ணிக்கொண் டற்று" என்று ஒரு
செய்யுள் இருக்கிறது. இந்த செய்யுளில் வள்ளுவர் கூறுகிற உவமை மிக முக்கியமானது.
துறந்தாரின் பெருமையை இறந்தார் கொண்டு வள்ளுவர் கூறுவதற்கு காரணம் இந்த மனம்
வாழ்வதிலேயே, கொண்டாட்டமாக கழிவதிலேயே பெருமையாக, உற்சாகமாக வாழ்ந்து
கொண்டிருக்கும். இந்த மனம் என்று நான் சொல்கிற பொருள் அவசரம் நிறைந்த காரண காரிய
அறிவு இல்லாத பரபரப்பான மேலோட்டமான மனநிலை. இந்த மேலோட்டமான மனநிலைக்கு வாழ்வது
என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்வது, வாழ்வது என்று திரும்பத் திரும்ப சொல்லிக்
கொண்டிருக்கும் அப்படி ஒரு குணம் உண்டு.
தத்துவவாதிகள் மனதை மனம் என்றும் புத்தி
என்றும் பிரித்து சொல்வார்கள். புத்தி என்பது அடிப்படையாக இருப்பது. மனம் என்பது
அலைபாய்த்து கொண்டிருப்பது. ஆக, அலைபாய்ந்து கொண்டிருக்கிற மனம் வாழ்வது என்பது
என்னவென்று தெரியாமலேயே வாழ்வது வாழ்வது என்று அலை பாய்ந்து கொண்டிருக்கிற சூழலில்
மனதிற்கு பதற்றம் தரும் வகையாக மனதினுடைய அறியாமையை அதிர்ச்சிக்குள்ளாக்கும்
முறையாக, மன அதிர்ச்சியின் பொருட்டு துறந்தாரினுடைய பெருமையை இறந்தாரின் எண்ணிக்கை
கொண்டு வள்ளுவர் முன் வைக்கிறார். இறப்பு என்பதை, மரணம் என்பதை, நிலையாமை என்பதை
மனித மனதால் கொள்ள முடியாது. முன்பே சொன்னது போல மேலோட்டமான மனம், அவசரமான மனம்
மரணம் குறித்து ஒன்று சந்திக்க நேர்ந்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகும். பெரும்
பரபரப்பிற்குள்ளாகும். இந்த பரபரப்பின் பொருட்டு, மரணம் குறித்து எந்த ஒன்றையும்
பார்க்கவோ, படிக்கவோ, ஆய்வு செய்யவோ இந்த மனதால் முடியாது. மனம் அஞ்சிய ஒரு பேசும்
பொருள் மரணம். ஆக இந்த வாழ்வு என்றால்
என்னவென்று தெரியாத இந்த மேலோட்டமான மனதின் அவசரத்திற்கு இறந்தாரின் எண்ணிக்கையைக்
கொண்டு அல்லது அப்படி ஒரு உவமையைக் கொண்டு துறந்தாரின் பெருமையை சொல்வதின் வழியாக
வள்ளுவர் பாடம் புகட்டுகிறார். அது என்ன பாடம் என்றால் மரணம் என்றவுடன் மனதிற்கு
பதட்டம் வருகிறது. ஆனால் துறந்தாருக்கு, துறவிகளுக்கு அவர்கள் உயிரை பின்பற்றி
நடப்பவர்கள். அவர்கள் என்ற ஒன்றையும் பற்றி கொள்ளாதவர்கள். தன் உடல்கள் உட்பட, உடைமைகள்
உட்பட, உறவுகள் உட்பட எவற்றையும் பற்றி கொள்ளாத
நிலைப்பாடு உள்ளவர்கள். அவர்களுக்கு உயிர் மட்டுமே கவனத்திற்குரியது.
அவர்களது கோட்பாடுகளில் உயிர்களுக்கு மரணம் இல்லை. உயிர்களுக்கு பிறப்பும் இல்லை.
உயிர் என்பது நித்தியமானது. மற்ற எல்லாமும் மாறக்கூடியது.
ஆக, இந்த உலகில் மாற்றங்கள் எவ்வளவு
இருக்கிறது என்று கணக்கெடுத்தோம் என்றால், மாற்றம் என்றால் இறப்பு. ஒரு பொருள்
மாறுகிறது என்றால் ஒரு பொருள் தன் நிலையில் இருந்து இறக்கிறது. ஒரு நபர்
மாறுகிறார் தன் நிலையில் இருந்து இறக்கிறார். இப்படி எந்த மாற்றமும் மரணத்தின்
குறியீடாகவே கருதிக் கொள்ள முடியும் என்கிற ஒப்புமையை வைத்துக் கொண்டு மாற்றத்தை
ஏற்றுக் கொள்ளாமல் அறியாத மனம் எல்லாவற்றையும் நிரந்தரப்படுத்தி விட வேண்டும் என்கிற
ஆர்வத்தை கோடிட்டு காட்டுமுகமாக துறந்தாரின் பெருமை என்பது மாற்றம் தான். எவ்வளவு
மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இந்த உலகில்
வந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் அவ்வளவு பெருமை
துறந்தாருக்கு இருக்கிறது என்று நேர் எதிரான அறியாமை கொண்ட மனதிற்கு பதட்டத்திற்குரிய
ஒரு உவமையைச் சொல்லி துறந்தாரின் பெருமையை நீத்தார் பெருமையில் வள்ளுவர்
கூறுகிறார். இப்படி நீத்தார் பெருமையினுடைய வகையில் அதிகாரத்தில் தொடர்ந்து நீத்தாரின் பெருமை குறித்து
வள்ளுவர் சொல்கிறபோது நான் முன்பே சொன்னது போல பெருமைக்குரிய, புகழுக்குரிய பல
செய்திகளை பாடலாக வைத்திருக்கிறார்.
நீத்தார் துறவியாக இருப்பவர். ஐம்பொறிகளை
அடக்கி மேலான நிலத்திற்கு ஒரு வித்து போல இருப்பவர் என்று குறிப்பிடுகிறார். துறவியர் என்பவர் இந்த
சமூகத்திற்கு முன்மாதிரியாக இருப்பவர் என்று வள்ளுவர் கூறுகிறார். ஒரு விதை போல
இயேசு கிறிஸ்துவிடம் உங்கள் ராஜ்யம் எப்படி இருக்கிறது? எப்படி இருக்கும் என்று
சீடர்கள் கேட்டார்கள் என்று ஒரு கதை உண்டு.
இயேசு கிறிஸ்துவோடு பயணிக்கிற சீடர்கள் அவரிடம் பொதுவாக கேள்விகள்
கேட்பதுண்டு. அப்போது இயேசு கிறிஸ்து பரலோக ராஜ்யம் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டு
வருகிறார். எதற்கு ஒப்பானது உங்களது பரலோக ராஜ்ஜியம் என்று கேட்கப்படுகிறபோது, இயேசு கிறிஸ்து கடுகு விதைக்கு ஒப்பானது என்று
ஒரு சொல்லை குறிப்பிட்டு சொல்கிறார். இப்படி விதைக்கு ஒப்பான ஒன்றாக பரலோக
ராஜ்யத்தை குறிப்பிடுகிற இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தையில் ஒரு துறவையினுடைய
இலக்கணம் ஒளிந்து இருக்கிறது.
நல்ல துறவி இந்த சமூகத்தில் மேலான
பூவுலகில் ஒரு விதை போல் இருந்து இந்த உலகிற்கு வழிகாட்டும் வல்லமை உள்ளவர்.
அவரிலிருந்து ஆயிரம் ஆயிரம் கிளைகளும் மலர்களும் கனிகளும் விதைகளும்
உருவாவதற்குரிய அறிவு அவருக்கு இருக்கிறது. அறிவு போல் கொண்டு அறிவைக் கொண்டு
ஐம்பொறிகளை அடக்கி இருக்கிற துறவி ஒரு வித்துப் போல, ஒரு விதை போல மேலான உலகில்
மேலான நிலத்திற்கு இருக்கிறார் என்பது வள்ளுவர் துறந்தாரின் பெருமை பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிற குறிப்பு.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment