Pages

Monday, June 24, 2024

நீத்தார் பெருமை - பகுதி 5 - சிவ.கதிரவன்

                                             நீத்தார் பெருமை



துறந்தார் இந்திரனாக இருக்கிறரே ஒருவர் அவர் தான் துறந்தாருக்கு சான்று என்று இந்திரனை குறிப்பிடுகிறார். இந்திரன் கதை குறித்து நாம் வேறொரு பகுதியில் விரிவாக பேசலாம். ஐந்தும் அடக்கியவன், ஆற்றலுக்கு தலைவன் என்று இந்திரனை சொல்கிற போது சொல்கிறார். ஐந்து என்பது என்ன? ஐந்தையும் அடக்குவது என்பது என்ன? என்பது ஒரு தனி விவாதம். அவற்றை நாம் பின்னால் பேசுகிற போது விரிவாக பேசலாம்.

துறவிகள் பற்றி அவர் சொல்கிற போது, "செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலா கார்"  என்று சொல்கிறார். அரிய செயல்களை துறவியர் செய்வர். அத்தகைய அரிய செயல்களை எளிமையானவர், சாதாரணமானவர் செய்ய மாட்டார். ஏனென்றால் அரிய செயல்களை ஏன் துறவியால் செய்ய முடிகிறது என்று பார்க்கிற போது துறவிகள் எதுவும் செய்வதில்லை.  உண்மையிலேயே துறவிகள் எதுவும் செய்வதில்லை. வெறுமனே காத்திருப்பதும் பண்பாக, அருளாக ஒன்றை அணுகுவது மட்டுமே துறவிகளினுடைய செயல்பாட்டு நிலை. ஆக இவர்களை சொல்கிறபோது அரிய செயல்களை செயல்களை செய்பவர் என்று வள்ளுவர் கூறுவது கவனத்திற்குரியது.

துறவிகள் அமைதியாகவும் வழக்கு மொழியில் சொல்வதென்றால் சும்மா இருப்பது. சும்மா இருப்பது அரிய செயல்களாக சமூகத்திற்கு பார்க்கப்படுகிறது. நீத்தார் பெருமையை நாம் படிக்கிற போது சமூகத்தில் இருக்கிற வழக்கத்தை நேர் எதிரான திசையில் வள்ளுவர் அணுகுகிறார் என்கிற புரிதலோடு படிக்க வேண்டி இருக்கிறது. அரிய செயல்களை துறவியர் செய்வர் என்றவுடன் அவர் தண்ணீரில் நடப்பார். தீயில் உள்ளே சென்று வெளியில் வருவார் என்கிற கதைகள் எல்லாம் பொருள் கொள்வதற்கு இல்லை.


பரபரப்பான மன இயங்கு முறைக்கு எது அரிய செயல் என்றால் நிதானமாக இருப்பது அரிய செயல்.  மென்மையாக இருப்பது அறிய செயல். அமைதியாக இருப்பது அரிய செயல். ஏதும் செய்யாமல் இருப்பது அரிய செயல். இவையெல்லாம் அரிய செயல்கள். பரபரப்பாக இருக்கிற, சிறியோரின் செயல்பாடாக இருக்கிற பரபரப்பும் வேகமும் அரிய செயலாக இருக்கிறது. எளிய செயலாக இருக்குறது. சிறியோரின் பரபரப்பும் வேகமும் எளிய செயலாக இருக்கிறது. இவர்களுக்கு அமைதியாக இருப்பதென்பது அரிது. பொறுமையாக இருப்பதென்பது அரிது. நிதானமாக இருப்பதென்பது அரிது.  இத்தகைய அமைதியும் பொறுமையும் நிதானமும் சும்மா இருக்கிற ஒருவருக்கு வாய்க்கப் பட்டிருக்கிறது. அவர் ஏன் சும்மா இருக்கிறார் என்றால் அவர் அனுபவத்தில் உயர்ந்தவர். அதன் பொருட்டு அறிவு பெற்றவர். அறிவின் பொருட்டு அவருக்கு நிதானம் விளைந்திருக்கிறது. எனவே அவர் அமைதியாக இருக்கிறார். சும்மா இருக்கிறார். அவரது அமர்வு இவர்களுக்கு அரிதாகப்படுகிறது. எனவே அவற்றை அரிய செயல் என்று கருதுகிறார்கள்.

அரிய செயல் செய்பவர் பெரியவர் என்று வள்ளுவர் கூறுகிறார். எவ்வாறு இவர் அரிய செயல் செய்வதற்கு தகுதியானவராக மாறியிருக்கிறார் என்றால் இந்த உலகை அவர் வசப்படுத்தி வைத்திருக்கிறார். பரபரப்பின் பாற்பட்டு உடல் அவையங்களை அவர் இயக்குவதில்லை. மன வேகத்தின் பாற்பட்டு உடலை அவர் துன்புறுத்துவதில்லை. சுவை,ஒளி, ஊறு, ஓசை, மனம் என்று ஐவகையான அவைய இயக்கங்களை அவர் அறிந்திருக்கிறார். அவற்றை தன் கட்டில் வைத்திருக்கிறார். எனவே அவரால் அரிய செயல் செய்ய முடிகிறது. அவர் வசம் இந்த உலகம் இருக்கிறது.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்று மரபு பாடல் ஒன்று இருக்கிறது. அது அண்டத்தில் இருக்கிற எல்லாமும் பிண்டத்தில் இருக்கிறது. பிண்டத்தில் உள்ள எல்லாமும் அண்டத்தில் இருக்கிறது என்கிற பொருளில் அந்த பாடல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த பிண்டத்தில் இருக்கிற எல்லாவற்றையும் நீங்கள் கண்டு கடந்து நிற்க முடியும் என்றால் உங்களால் அண்டத்தில் இருக்கிற எல்லாவற்றையும் கண்டு கடந்து  நிற்பதற்கு வல்லமை வந்துவிடும் என்பது அதற்குள் ஒளிந்திருக்கிற கருத்து.

ஆக, உலகை அறிந்தவன் சுவை,ஒளி, ஊறு, ஓசை, மனம் என்கிற ஐவகை அவைய இயக்கங்களை அறிந்தவன் இந்த உலகை அறிந்தவனாக மாறிவிடுகிறான். துறவிக்கு அது வாய்த்து விடுகிறது என்று வள்ளுவர் கூறுகிறார். இத்தகைய செயல்பாடு எப்படி இருக்கிறது, எவ்வாறு  இருக்கிறது என்று நீங்கள் ஒரு துறவியோடு உரையாடுகிற போது அவர் சொல்வார் உங்களுக்கு அல்லது  துறவியை எவ்வாறு கண்டுபிப்பது என்று நீங்கள் தேடுகிற போது யார் ஒருவர் உண்மையை சொல்கிறாரோ, யார் ஒருவர் வெளிப்படையாக இருக்கிறாரோ அவர் துறவி என்பதை கண்டுகொள்ள முடியும் என்று ஒரு துறவியினுடைய அடையாள குறிப்பாக, பண்பு குறிப்பாக ஒன்றை வள்ளுவர் கூறுகிறார்.

 "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்" என்று ஒரு குறளில் குறிப்பிடுகிறார். நிறைமொழி மாந்தர் பெருமை - நிறைமொழியின் மாந்தரினுடைய பெருமை என்ன என்றால் இந்த உலகில் இதுவரை வந்திருக்கிற தத்துவங்கள்,  சித்தாந்தங்கள், வழிகாட்டும் வழிமுறைகள், நெறிமுறைகள், மறை நூல்கள் எல்லாமும் நிறைமொழி மாந்தரின் பொருட்டே வந்தவை. அவர்களே இந்த உலகிற்கு தாம் கண்ட உண்மையை பறைசாற்றி, தாம்  கண்ட உண்மையை வெளியில் சொல்லி இந்த உலகிற்கு வழிகாட்டுகின்றனர் என்பதை நாம் பார்க்கிறோம். நாம் பொதுவாக வாசிக்கிறபோது ஒரு நூலை வாசிக்கிற போது சித்தாந்தங்களை வாசிக்கிற போது வாழ்க்கை முறையை வாசிக்கிற போது அவர்கள் சொல்கிற விளக்கங்களும் இலக்கணங்களும் ஒரு மனிதன் நிறைவாக வாழ்வதற்கு உதவி செய்கின்றன என்பதை உணர்கிறபோது அந்த உணர்வு எவ்வாறு நமக்கு கிடைக்கிறது என்றால் அதில் ஒளிந்திருக்கிற உண்மையின் வழியாக கிடைக்கிறது. எவ்வாறு அவை உண்மையாக வெளிப்பட்டிருக்கின்றன என்று பார்க்கிற போது அவை துறவிகளின் வழியாக அனுபவம் பெற்ற அறிவாளிகளின் வழியாக நமக்கு சொல்லப்பட்டவை.

தத்துவங்கள் எல்லாமும் அனுபவம் பெற்ற அறிவாளிகளின் வழியாக துறவிகளின் வழியாக சொல்லப்பட்டதால் அவை உண்மையாக இருக்கின்றன. இந்த உண்மையின் வழியாக அவர்களினுடைய பெருமையை நாம் அறிய  முடிகிறது என்று அவர்களின் பெருமையை நீத்தார் பெருமையில் வள்ளுவர் தொகுக்கிறார். ஆக, துறவியின் பெருமை என்பது இந்த உலகில் ஒரு நல்ல வாழ்க்கை முறையை எவ்வாறு வாழ வேண்டும் என்று  பார்ப்பதற்கும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பார்ப்பதற்கும் எவ்வாறு வாழ்ந்திருக்கிறோம் என்று பார்ப்பதற்கும் அளவுகோலாக ஒரு துறவையினுடைய வாழ்க்கை முறை அமைகிறது.

ஒரு மனிதன் நிறைவாக வாழ வேண்டும் என்பதற்கு நமது வாழ்க்கை முறை அல்லது ஒரு உயர்வாக கருதப்படுகிற தமிழ் இலக்கிய உலகம் பரிந்துரைக்கிற அறம், பொருள், இன்பம், வீடு என்கிற வரிசையில் அமைந்திருக்கிற வாழ்க்கை முறை ஒரு உயர்வான வாழ்க்கை முறையாக இருக்கிறது. இந்த உயர்வான வாழ்க்கை முறை உள்ளப்படிக்கே அந்த வகையில் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நமக்கு அளவுகோலாக இருப்பது எது என்பது கேள்வியாகிறது. எந்த எல்லையை இலக்காக வைத்துக்கொண்டு நாம் உயர்வாக வாழ்கிறோம் என்பதை மதிக்க முடியும் என்று நாம்  பார்த்தோம் என்றால் எல்லோரிடமும் அன்பாகவும் எல்லா உயிர்களிடத்திலும் அருளாகவும் நம் எப்போது மாறுகிறோமோ அப்போது நாம் உயர்வான வாழ்க்கைக்கு நகர்ந்திருக்கிறோம் என்று பொருள் கொள்ள முடியும்.

மகிழ்வாக நன்றாக ஒருவர் வாழ்கிறார் என்று ஒருவரை நீங்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அவருக்கு நீங்கள் வைத்திருக்கிற தகுதி எப்போதும்  இன்முகமாக பேசக் கூடியவர். எல்லா நேரத்திலும் உதவி செய்யக் கூடியவர். எல்லோரிடத்திலும் அன்பாக இருக்கக் கூடியவர். யாரிடமும் பேதம் பாராட்டாதவர். எல்லோரையும் சமமாக நடத்துபவர். எல்லோரிடத்திலும் சமமாக நடந்து கொள்பவர். என்ற சில பட்டியலை நாம் வைத்திருக்கிறோம்.  இந்த பட்டியலில் இருப்பவர் இந்த பட்டியலுக்கு இலக்கணமாக இருப்பவர் நிச்சயமாக வாழ்வை நலமாக வாழ்ந்திருக்கிறார் என்று பெருமைக்குரியவராக இருக்கிறார். இப்படி வாழ்வை நலமாக வாழ்வதற்குரிய பெருமைப்பட்டியலில் இருக்கிற எல்லாமும் யாருக்கு அமைய பெற்றிருக்கிறது என்று வள்ளுவர் வரையறுக்கிறார் என்றால் துறவிக்கு அவரது அனுபவத்தின் காரணமாக, அது தந்த அறிவின் காரணமாக, அதன் வழிபட்ட விளைச்சலாய் வந்திருக்கிற பொறுமையும் அன்பும் அருளும் வாய்க்கப் பெற்று இருக்கிறது  என்பதை  வள்ளுவருடைய வார்த்தையில் நெறிமுறையாக நாம் பார்க்கிறோம்.

நீத்தார் பெருமை என்பது  துறவியினுடைய பெருமை என்று நாம் தற்போதைய பொருளில் சுருக்கி விடாமல் வாழ்வினுடைய வாழ்வு இலக்கணத்தை செம்மைத் தன்மையை, செழுமையை  நாம் புரிந்து கொள்வதற்கு, நாம் அதை நோக்கி நகர்ந்து செல்வதற்கு எல்லை கோடாக வைத்துக் கொண்டு நகர்கிறபோது ஒரு நிறைவான அருளாளராக வாழ்வோம் என்பதில் எந்த ஐயமும் நமக்கு இல்லை.  நீத்தார் பெருமை என்பது முன்னோரை புகழ்வது மட்டுமல்ல. அவர் வழி நின்று வாழ்வதற்குரிய பாதையாக, வழிகாட்டும்  நெறிமுறையாக நாம் எடுத்துக்கொண்டு பயணிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment