எண்ணங்கள் பற்றி...
வணக்கம்,
இன்றைக்கு மனம், எண்ணம்,
எதிர்மறை எண்ணம், நேர்மறை எண்ணம் என்று நாம் பேசுகிற, கேட்கிற பல செய்திகளை
விளக்கிப் பேசிப் பார்க்கலாம் என்கிற
நோக்கத்தில் இந்த உரையாடலை பேசிப் பார்க்கிறோம். இதுவரையிலும் ஆகச்சிறப்பாக எண்ணங்கள்,
மனம், அதனுடைய செயல்பாடுகள் பற்றி அது எப்படி இயங்குகிறது? எப்படி
நடைமுறைப்படுத்துவது? எப்படி புரிந்து
கொள்வது? என்று அதை ஒட்டி பேசுபவர்கள்
என்று பார்த்தால் மிகச் சிறப்பாக யாரையும் பார்க்க முடிவதில்லை.
எண்ணத்தின் வலிமை, எண்ணத்தினுடைய
செயல்பாடு, எண்ணத்தினுடைய வெளிப்பாடு என்று பல தலைப்புகளில் பல புத்தகங்கள்
வந்திருக்கின்றன. பல விதமான உரையாடல்கள் நடைபெற்று இருக்கின்றன. அது எவ்வளவு
பயன்படுகிறது என்பதும் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால் அது அப்படி ஒரு பயன்படும்
தன்மையில் இருப்பதாகவும் புலப்படுவதில்லை. சிறிய அளவில் ஆங்காங்கே புரிந்து கொண்ட
செய்திகளை புத்தகங்களாகவும் இது போன்ற உரையாடல்களாகவும் தன்முனைப்பு செயல்பாடுகளாகவும்
வெளிப்படுத்துகிறார்கள் என்கிற அளவில் தான் இருக்கிறது.
மிக நேர்மையாக அதிக பொறுப்புடன் மனம்
பற்றி, எண்ணங்கள் பற்றி பேசிய
எழுதியவர்கள் என்றால் மெய்யியல் புரிந்து வேலை செய்த மதிப்பிற்குரிய ஓஷோ
அவர்களை கூறலாம். மதிப்பிற்குரிய ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கூறலாம். அவர்களுடைய
எழுத்துக்களும் நடைமுறையும் பேச்சும் மனிதர்களுக்குள் தோன்றி மனிதனை இயக்குகிற,
உறவாட செய்கிற எண்ணங்கள் பற்றி மிக விரிவாகப் பேசி இருக்கிறார்கள். மிக ஆழமாக
பேசியிருக்கிறார்கள். சமகாலத்தில் அப்படி பேசியவர்கள் எழுதியவர்கள் என்றால்
மதிப்பிற்குரிய அய்யா.ஞானமூர்த்தி அவர்களினுடைய
உரை. ஒரு மெய்யியல் நூலினுடைய
அடிப்படையில் விளக்கி பேசுவதும் அது
பற்றிய உரையாடல் செய்வதையும் பார்க்க முடிகிறது. அது மிகுந்த மதிப்பிற்குரியதாகவும்
இருக்கிறது. அதனுடன் ஐயா செந்தமிழன் அவர்களினுடைய
மனம் குறித்த உரையாடல்கள் மதிப்பிற்குரியதாக இருக்கிறது. இப்படி சில
குறிப்பிடத்தகுந்த மதிப்பு மிக்க உரையாடல்களும் நூல்களும் குறைவாகத்தான்
இருக்கிறது.