Sunday, November 26, 2023

மிர்தாதின் புத்தகம் - புனித மும்மையும் சரியான சமநிலையும் - பகுதி -2 // சிவ.கதிரவன்

                                  புனித மும்மையும் சரியான சமநிலையும்

மனிதர்கள், மனித மனம் எல்லா நேரங்களிலும் தன்முனைப்போடு இயங்குகிறது என்றாலும் தன் அனுபவத்திற்கு அல்லது சேகரிக்கப்பட்ட செய்திகளுக்கு அப்பாற்பட்ட அதிர்வு ஏற்படும் போது அதன் தன் முனைப்பு வேலை செய்வதில்லை. இதுவரை ஒரு சிக்கலை தீர்ப்பதற்கு நீங்கள் ஒரு பாதையில் பயணித்து வந்து அதன் வழி ஏற்பட்டிருக்கிற அனுபவத்தின் வழியாக சிக்கலுக்கு விடைகான முயற்சிக்க கூடும். அதில் வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் இத்தகைய சிக்கலை தீர்ப்பதற்கு முயற்சிக்கிறபோது இதுவரை நீங்கள் சேகரித்து  வைத்த அறிவின் பாற்பட்டு சிக்கல் தீர்வதற்கான வாய்ப்பு இல்லை என்றால் உங்கள் தன்முனைப்பு  அதிர்ச்சிக்குள்ளாகிறது. உங்கள் தன்முனைப்பு ஏதும் இல்லாததாக மாறுகிறது. அந்நேரத்தில் நீங்கள் மெய்யான புனிதத்தோடு மையம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் தன்முனைப்பிற்கு அதிர்வு ஏற்படுகிற போதெல்லாம் நீங்கள் மெய்யான புனிதத்தோடு மையம் கொண்டிருப்பீர்கள். அதிர்வு நீங்கியவுடன் நீங்கள் வழக்கமான தன்முனைப்பிற்கு வந்து விடுவீர்கள். தொடர்ந்து உங்களை மறந்து வெடுத்து சிரிக்கிற போது மெய்யான புனிதத்தோடு மையம் கொண்டிருப்பீர்கள். நீங்கள் உங்கள் காதலில் அன்பை பகிர்ந்து கொள்கிறபோது மெய்யான புனிதத்தில் மையம் கொண்டிருக்கிறீர்கள். இதுவரை சேகரிக்கப்பட்ட அறிவு அதிர்ச்சிக்குள்ளாகும்போது மெய்யான புனிதத்தோடு மையம் கொண்டிருப்பீர்கள். எப்போதும் நீங்கள் தன்முனைப்பிலும் மெய்யான புனித மையத்திலும் மாறிமாறி பயணிக்கிற பயணி போல இருக்கத்தான் செய்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக தன் கற்பனையிலும் விருப்பத்திலும் பயணித்தாலும் கூட அதிர்ச்சிக்குள்ளாகும்போது அன்பு பொழியும்போது சிரித்து வெடிக்கும் போது நீங்கள் மெய்யான புனிதத்திற்குள் வந்து போகிற ஒரு நிகழ்வு இயற்கையாகவே இருக்கிறது. அந்த மெய்யான மையம் நோக்கி நகர்வதற்கு முன்பு தன்முனைப்பின் கேள்விகள் ஏராளமாக எழுகின்றன. இவை சரியா, பாதுகாப்பானதா, உதவிகரமானதா என்றெல்லாம் நமக்கு கேள்விகள் எழுகின்றன. இந்த தன்முனைப்பின் கேள்விகள் தொடர்ந்து மெய்யான புனிதத்திற்குள் மையம் கொள்ள தடையாக இருக்கின்றது. இந்த நிலை விடுபடும் போது இந்த நிலையிலிருந்து நாம் கடந்து செல்கிற போது இந்த வகைப்பட்ட தொடர் நிகழ்வில் அனுபவங்கள் தனித்தனியாக பெறுவதன் வழியாக ஒரு தனிமனிதன் ஒன்றை கண்டுகொள்ள முடிகிறது. இந்த மெய்யான புனிதம் என்பது இறை, மெய், இருத்தல்.

ஒரு மனிதனுக்குள் நான் என்கிற உள்ளடக்கமாக அவனது உள்ஒளி இருப்பது போல மெய்யான புனிதம் ஒரு பிரம்மாண்டமான நானாக இருக்கிறது. அதற்கு துவக்கமும் இல்லை. இறுதியும் இல்லை. அது தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் நான் என்று எளிமையாக சொல்வார் என்றால் அதற்குள் அவரது தலைமுடியும் அடங்கும்,  கால் நகமும் அடங்கும். இரண்டு கைகளும் தட்டிக் கொள்கின்றன எனும்போது நான் நானோடு தட்டுகிறது என்றே பொருள். நாக்கும் பல்லும் கடித்துக் கொள்கிறது, நாக்கினை பற்கள் கடிக்கின்றன என்றாலும் கூட அந்த தனி மனிதனை பொறுத்த அளவில் நான் நானை கடிக்கிறது. உள்ளுறுப்பில் நுரையீரல் காற்றை பயன்படுத்தி இரத்தத்தை சுத்திகரிக்கிறது என்றால் நான் என்கிற நுரையீரல் நான் என்கிற இரத்தத்தை சுத்திகரிக்கிறது. ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு பாகமும் இணைவதும் முரண்படுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு நான் என்கிற தனிமனிதனுக்குள், நான் அவனளவில் இருக்கிற இன்னொரு நானோடு இசைவாகவோ முரணாகவோ பயணித்துக் கொண்டே இருக்கிறது. தனிமனிதனுக்கு இதை ஒப்பிட்டுப் பார்க்க முடியும். உங்கள் கண்களால் உங்கள் முதுகை காணாதபோது காண முடியாத போது உங்கள்  நானால் உங்கள் இன்னொரு நானின் பகுதியை  காண முடியவில்லை என்று பொருள். உங்கள் கண்கள் கொண்டு உங்கள் கைகளை காண முடியும் என்றால் உங்கள் நான் கொண்டு உங்கள் நானை காண்கிறீர்கள் என்று பொருள்.

நான் என்றால் மொத்தமும் ஒரு தனி மனிதனின் எல்லா அம்சங்களும் உள்ளடக்கமாக இருக்கிறது. உங்கள் மீது படர்கிற ஒரு தூசியை, உங்கள் கன்னத்தில் படர்கிற ஒரு தூசியை உங்கள் கை விலக்குகிறது என்றால் உங்கள் நான்மீது படர்கிற தூசியை உங்கள் நான் கொண்டே விலக்குகிறீர்கள். உங்கள் மேனியில் படர்ந்து இருக்கிற வியர்வையை துவட்டுகிறீர்கள் என்றால் உங்கள் நான் மீது படர்கிற வியர்வையை உங்கள் நான் கொண்டே  துவட்டுகிறீர்கள். இப்படி ஒரு தனிமனித அளவில் நான் இருப்பதை புரிந்து கொண்டோம் என்றால் இறை நிலையில், விரிவான பிரபஞ்ச நிலையில் நான் என்பது நான் மட்டுமே.

நான்தான் இயங்குகிறது. நான்தான் முரண்படுகிறது. வெப்பமும் நான்தான். குளிர்ச்சியும் நான்தான். ஒரு நேரத்தில் ஒரு முறை ஒரு பக்கம் நான் வெப்பமாக இருக்கிறது. அதே நேரத்தில் அதே முறையில் இன்னொரு பக்கம் நான் அதிகுளிர்ச்சியாக இருக்கிறது. நான்தான் வெப்பமாகவும் நான்தான் குளிர்ச்சியாகவும் நான்தான் மகிழ்வாகவும் நான்தான் தளர்வாகவும் நான்தான் கொண்டாட்டமாகவும் நான்தான் தெளிவாகவும் நான் முழுமையாக நானாகவே இருக்கிறது.

மிக நுட்பமான பார்வையோடு இவற்றை பார்த்தால் ஒழிய  மிர்தாதின்  வார்த்தைகள் நமக்கு புரிவதற்கு வாய்ப்பில்லை. நான் என்பது முழுமை. எல்லா முரணும் அதற்குள்ளேயே. எல்லா இசைவும் அதற்குள்ளேயே. அவற்றிற்கு மனிதர்கள் தாம் கடவுள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மனிதர்கள் தாம் மெய்யியல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மனிதர்கள்தாம் யின்யாங் பெயர் வைத்திருக்கிறார்கள். மனிதர்கள் தான் மும்மை கோட்பாடு என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் என்றாலும் அதன் அளவில் இருக்கிற பிரம்மாண்டத்திற்கு நுண்ணியத்திற்கும் நுணுக்கமான செயல்பாட்டிற்கும் இவர்கள் வைத்திருக்கிற பெயர் எப்போதும் பொருந்தாது.

நான் என்பது நான் என்பதை தவிர வேறொன்றும் இல்லை. முழுமையான புரிதலோடு பார்க்கிற போது நான் என்பது நான் மட்டுமே. அதுவே பேசுகிறது. அதுவே கேட்கிறது. அதுவே விதிகளை தீர்மானிக்கிறது. அதுவே வெற்றியை தீர்மானிக்கிறது. அதுவே புனிதமாகவும் இருக்கிறது. அதுவே தீட்டாகவும் வெளிப்படுகிறது. அதுவே யின். அதுவே யாங். அதுவே கரு. அதுவே உருவம். அதுவே எல்லாமும். எல்லா பொருள்களுக்குள்ளும் அதன் செல்வாக்கு இருக்கிறது. எல்லா செல்வாக்கிலும் அது உள்ளடக்கமாக இருக்கிறது.  இப்படித்தான் நான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இந்த நான் பற்றி புரிந்து கொள்வதற்கான அதிர்வில் ஏற்படுகிற உள்ளுணர்வு, புரிந்து கொள்வதற்கான முனைப்பு, அந்த உயிர்ப்பு நிலை இதை மூன்றும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பதை மிர்தாத் விளக்குகிறார். இங்கு இருக்கிற எல்லாமும் இந்த பிரம்மாண்டமான புனிதத்தின் வெளிப்பாடு, படைப்பு. இந்த உலகில் இருக்கிற எல்லாமும் புனிதத்தின் வழிகாட்டலிலேயே  நிகழ்கிறது, நடக்கிறது. இப்படியான தொடர்பை பிரம்மாண்டத்திற்கும் தன்முனைப்பு மேவி இருக்கிற மனிதனுக்கும் உள்ள நிலையை விளங்கிக் கொள்வதன் வழியாக எவ்வளவு நெருக்கம் புனிதத்திற்கும் மனிதனுக்கும் இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும்.

தமிழ் இலக்கியங்களில் அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம் என்கிற ஒரு விளக்கச் செய்யுள் இருக்கிறது. பிரம்மாண்டமும் தனிமனிதனும் அல்லது தனி மனிதனும் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமும் ஒன்று என்று அந்தச் செய்யுள் விரிவாக விளக்குகிறது. இந்தச் செய்யுளின் ஆழமான பொருளிலேயே மிர்தாத் பேசுகிறார். மனிதனும் இறைவனும் மனிதனும் மெய்யுணர்வும் மனிதனும் பிரபஞ்சமும் அண்டமும் பிண்டமும் ஒன்றாகவே இருக்கிறது. அண்டத்தைப் போல பிண்டமும் பிரபஞ்சத்தைப் போல மனிதனும் இறைவனைப் போல இங்கு இருக்கிற எல்லாமும் ஒன்றாகவே இருக்கின்றன என்பதை மிர்தாத் விளக்குகிறார். அந்த வகையில் பிரபஞ்சம் எவ்வாறு படைக்கிறதோ அதைபோலவே மனிதனும் படைப்பதற்கு சாத்தியமுள்ளவர்.

அதிர்வு நிலையில் அன்பு பொழிகையில் வெடித்து சிரிக்கையில் அவர் அந்த படைப்புத்திறனை இறைநிலையை உணர முடியும். தான் அல்லாத, தன்முனைப்பல்லாத வெடி சிரிப்பு நான். தான் அல்லாத தன்முனைப்பல்லாத நிரம்பி வழியும் பேரன்பு நான்.  நான் அல்லாத, தான் அல்லாத சேகரிக்கப்பட்ட அறிவுக்கு உட்படாத அதிர்வு நிலையில் தெரிகிற ஒளி நான். இந்த மனிதன் எல்லா வகையிலும் அண்டத்தோடு பிண்டமாக, பிண்டத்திலிருந்து பறக்கிற அண்டமாக இருந்தாலும் கூட இந்த அண்டமும் பிண்டமும் இணைந்தே இருந்தாலும் கூட ஒன்றாக அண்டம் போல் சமநிலை தவறாமல் இருக்க முடியவில்லை என்ற கேள்வியோடு மிர்தாத் துறவிகள் முன் கடவுள் குறித்தும் மனிதன் குறித்தும் விளக்கி நிற்கிறார். எல்லா மனிதனுக்கும் அப்படி வாய்ப்பு இருக்கிறது. எல்லா மனிதனும் கடவுளைப் போல, அண்டத்தைப் போல ஆற்றல் மிக்க படைப்பாளி தான்.

இலக்கியம் சொல்வது போல் அண்டமும் பிண்டமும் வெவ்வேறானவை அல்ல எல்லாமும் ஒன்றுதான். இந்த அண்டமும் பிண்டமும் ஒன்றாக இருந்தாலும் கூட மனிதனும் பிரபஞ்சமும் ஒன்றாக இருந்தாலும் கூட மனிதனுக்கு பிரிவு எங்கிருந்து தொடங்குகிறது. மனிதன் பிரபஞ்சத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார். ஏன் வேறுபடுகிறார். மிர்தாத் தொடர்ந்து பேசுகிறார், நாமும் தொடர்ந்து பேசுவோம்.

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...