Pages

Thursday, February 1, 2024

திருக்குறள் வாழ்வியல் - வான் சிறப்பு - பகுதி 6 // சிவ.கதிரவன்

                                                 வான் சிறப்பு


வான் சிறப்பிற்குள் ஒரு மனிதன் மிகச் சிறந்த உணவை அமிழ்தமாக பார்க்கிற ஒன்றை, அமிழ்தமாக பார்க்க முடியும் என்கிற ஒன்றை வள்ளுவர் வைத்து தொகுக்கிறார். அமிழ்தமாக மழை இருக்கிறது. குடிநீராக இருக்கிறது. மழையே எல்லா உயிர்களுக்கும் பசியை போக்குகிறது. மழையே உழவிற்கு காரணமாக இருக்கிறது. மழையே உழவனை உயர்த்துகிறது; தாழ்த்துகிறது. மேலிருந்து மழை நீர் வரவில்லை என்று சொன்னால் கீழே பசுவிற்கு கூட அல்லது இளமையான பசுமையான எதையும் நாம் பார்க்க முடியாது என்று மேலும் மழை தன் பொழிப்பை  தன்னுடைய பருவத்தை மாற்றிக் கொண்டால் கடல் நீரும் தன்னுடைய வளமையை ஒன்றும் செய்ய முடியாது. இந்த குறளினுடைய நுட்பம் என்னவென்றால் கடல் நீர் பெரியது. கடல் நீர் என்பது பிரமாண்டமனது. அத்தகைய பிரமாண்டம் கொண்ட கடல் நீர் கூட மழை பெய்யாவிட்டால் தன்னுடைய வளமையை குறைத்துக்கொள்ளும் என்கிற பார்வையோடு சொல்கிறார்.

மேலும் இந்த உலகில் இருக்கிற எல்லா வழிபாடுகளும் கடவுள் வழிபாடே மழையை வைத்து தான் என்கிற அளவில் ஒரு பாடலை வைத்திருக்கிறார் என்பது நமக்கு எவ்வளவு உயர்வாக இயற்க்கையினுடைய தன்மைகளை, மழையினுடைய தன்மைகளை, உழவினுடைய தன்மைகளை வள்ளுவர் வழங்குகிறார் என்பதை நாம் மகிழ்வோடு பார்க்க முடிகிறது.

 அடுத்த குறளில் இந்த உலகம் அறமாக வாழ்வதற்கு இரண்டு அம்சங்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒன்று தானம் செய்வது. தானம் நீங்கள் பிறருக்கு செய்வது. இரண்டாவதாக ஆன்மிக உலகில் பேசுகிற மெய்யியல் உலகில் பேசுகிற தவம் செய்வது. தானமும் தவமும் எப்படி சாத்தியம்? எதன் பொருட்டு சாத்தியமாகிறது என்று வள்ளுவரிடம் கேட்கிற போது இரண்டாவது அதிகாரத்தில் வள்ளுவர் சொல்கிறார், "தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்" இந்த உலகத்தில் நீங்கள் உங்களுக்காக செய்கிற தானமும் உங்களுடைய மன நிறைவிற்காக செய்கிற தானமும் உங்களுடைய ஆன்மிக வளர்ச்சிக்காக தத்துவ வளர்ச்சிக்காக செய்கிற தவமும் மழையை சார்ந்தே இருக்கிறது. ஒருவேளை மழை பொய்க்கும் என்றால் தானமும் செய்ய முடியாது. தவமும் செய்ய முடியாது என்று மழையினுடைய தேவையை, மழையினுடைய முக்கியத்துவத்தை, உணவினுடைய முக்கியத்துவத்தை உங்களுக்கு வழங்கப்படுகிற வளங்களினுடைய முக்கியத்துவத்தை மிக நெருக்கமான, நுட்பமான, அதிர்வான ஒரு உதாரணத்தோடு சொல்கிறார்.

மழை இல்லையென்றால், உணவு இல்லையென்றால், மழை இல்லையென்றால் உணவு இல்லை. அமிழ்தம் இல்லை .குடி நீர் இல்லை. எல்லா உயிர்களும் பசியில் வாடும்.  உழவன் உழ மாட்டான். உழவனை உயர்த்துவதும் தாழ்த்துவதும் மழையின் அம்சம் கொண்டே. 

பசுப் புற்கள் வளராது. மேகம் வராவிட்டால் கடல் வளமை குறையும். திருவிழாக்களும் வழிபாடும் நடக்காது. இது எல்லாமும் போகும். இது எல்லாம் சென்ற பின்பு உங்கள் தானமும் உங்கள் தவமும் பொய்த்து போகும். பொய்த்துப் போகும் என்பது மட்டுமல்ல அது மறைந்து போகும் என்கிறார்.  இரண்டும் தங்காது. இரண்டும் உங்களிடம் இருக்காது. மனிதனிடம் தானமும் தவமும் இருக்க வேண்டும் என்றால், வளர வேண்டும் என்றால் அதற்கு நல்லுணவும் உணவிற்கு காரணமாக இருக்கிற அமிழ்தமும் அமிழ்தமாக சொல்லப்படுகிற மழையும் அவசியம் என்பது இந்தக் குறளினுடைய மிக நுட்பமான பொருள்.

இறுதியான ஒரு குறளில்  அவர் சொல்கிற  மிக முக்கியமானது பலரும் இன்றும் கூட எல்லா இடங்களிலும் நாம் பார்த்திருப்போம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்று ஒரு வாசகத்தை சொல்லி இருப்பார்கள். நீரின்றி அமையாது உலகு என்றால் நீர் தான் எல்லாமும் என்கிற அம்சத்தில் அது சொல்லப்படுகிறது. இந்த நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஒரு உவமையாக ஒழுக்கத்தை சொல்வார். இந்த உலகத்திற்கு, இந்த உலகம் மேன்மையாக நிகழ்வதற்கு, நடப்பதற்கு மழை வேண்டும் என்று இந்த உவமைக்கான அடிப்படை. ஆனால் இந்த உவமையை விளக்கி சொல்கிற வள்ளுவர் சொல்கிற ஒரு அழகான வழங்கு முறை என்னவென்றால் நம்மோடு பேசுகிற முறை என்னவென்றால் இந்த உலகம் நீண்ட நாள் நிலைத்து இருப்பதற்கு ஒழுக்கம் முக்கியமானது. இந்த ஒழுக்கம் நிலையாக இருப்பதற்கு மழை முக்கியமானது. இந்த உலகத்தினுடைய எல்லா அறங்களும் சென்ற பாடலில் சொன்னது போல தவமும் தானமும் உட்பட எல்லா அறங்களும் எல்லா மறைகளும் எல்லா போற்றுதலுக்குரிய ஞானங்களும் தொடர்ந்து நிலைபெற வேண்டும் என்றால் அதற்கும் மழை காரணமாக - மழை என்பது முதலில் சொன்னது போல எல்லா அதிகாரங்களையும் நாம் ஒவ்வொன்றாக படித்து புரிந்து கொண்டோம் என்றால் ஒவ்வொரு அதிகாரத்திற்குமாக இருக்கிற மழை என்கிற சொல்லினுடைய பொருள் மாறிக்கொண்டே இருக்கும்.

மழையை அமிழ்தம் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். முதல் குறளிலேயே. ஆக நாம் இந்த குறளை வாசிக்கிற போது நான் விரும்புவது அல்லது எனது யூகத்தில் நான் படிக்கிற முறை மழையை முதலிலேயே அமிழ்தம் என்ற சொல்லிவிட்டதனால் மழையை முதலிலேயே தலைசிறந்த உணவு என்று சொல்லிவிட்டதனால் இந்த அதிகாரம் முழுவதும் மழை என்று வருகிற இடத்தில் எல்லாமும் நான் அமிழ்தம் அமிழ்தம் என்றே வைத்துப் பொருள் கொண்டு பார்க்கிறேன்.

ஆக, உலக நடப்பிற்கு நல்லொழுக்கம் வேண்டும். "நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு" என்று பாடல் நிறைவடைகிறது. உலகம் முழுவதும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது, முதன்மையானது. உலகம் முழுவதும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றால் அந்த ஒழுக்கம் மழை இருந்தால் மட்டுமே சாத்தியம். அமிழ்தம் இருந்தால் மட்டுமே சாத்தியம். உணவு இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று மழையை அமிழ்தமாக சொல்கிற வள்ளுவர் வான்சிறப்பு என்கிற அதிகாரத்தை நிறைவு செய்கிறார்.

ஆக, வான் சிறப்பு என்கிற அதிகாரத்தை இதுவரை நீங்கள் வேறு வேறு தன்மையில் சிறப்பான இலக்கிய சாரங்களோடு, வாழ்வியல் சாரங்களோடு பார்த்திருப்பீர்கள். என்னுடைய சிற்றறிவை வைத்து சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து இருக்கிறேன். வான்சிறப்பு என்பது வானத்தினுடைய சிறப்பை சொல்வதென்பது அல்ல. ஏனென்றால் மனிதன் வானத்தைப்  புகழ்வதினாலோ மனிதன் வானத்தை இகழ்வதினாலோ வானத்திற்கொன்றும் ஆகப்போவதில்லை என்பது வள்ளுவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிற பேருண்மை என்கிற அடிப்படையில் வானத்தை வள்ளுவர் வானமாக மட்டும் சொல்லவில்லை.

மனிதனுக்கு இருக்கக்கூடிய உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஜீவராசிகளுக்கும் உணவை வழங்குகிற ஒரு பாத்திரமாக வானத்தை சொல்கிறார். அமிழ்தத்தை வணங்குகிற பாத்திரமாக வானத்தை சொல்கிறார். அந்த வகையில் வானமே அமிழ்தத்தை தருகிறது; வானமே உணவாக நிற்கிறது; வானமே பசி அமர்த்துகிறது; வானமே ஏர் பிடிக்க உதவுகிறது; வானமே உழவனுக்கு துணை செய்கிறது; வானமே பசுமையான புல்லை தருகிறது; வானமே கடல் வளம் குன்றாமல் பார்த்துக் கொள்கிறது; வானமே திருவிழாக்களையும் வழிபாடுகளையும் வழங்குகிறது; வானமே தானத்தையும் தவத்தையும் நிலை பெறச் செய்கிறது; வானமே உலக ஒழக்கத்தை உண்டாக்குகிறது.

இந்த வகையில் வானம் உணவு தந்து, உணவின் வழியாக உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. உணவு நல்ல உணவாக உள்ளபோது வாழ்வு நல்ல வாழ்வாக அமையும் என்கிற புரிதலோடு வள்ளுவர் இந்த புரிதலை தருகிற அம்சத்தில் நமக்கு இவற்றை கற்றுக் கொடுக்கிறார்.

வானம் என்பது வெறுமனே வானம் அல்ல. அது நமக்கு அமிழ்தம் தருகிற பாத்திரம். அது ஒழுக்கமாக வாழ வைக்கிற, வழிகாட்டுகிற அடிப்படை அம்சம். அந்த வகையில் வள்ளுவரினுடைய வான்சிறப்பு என்பது உணவினுடைய ஆதியாக, உணவை வழங்குகிற பொக்கிஷமாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

நாம் அடுத்த அதிகாரத்தில் தொடர்ந்து பேசுவோம்...

                             


No comments:

Post a Comment