Pages

Wednesday, June 12, 2024

திருக்குறள் வாழ்வியல் - பாயிரம் - பகுதி 1 // சிவ.கதிரவன்

                                              பாயிரம்

வணக்கம்,

     திருக்குறள் தொடர் வகுப்பில் திருக்குறள் வாசிப்பது குறித்து திருக்குறளை வாழ்வியலாக புரிந்து கொள்ள வேண்டும் என்கிற வகையில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

    தற்போது கூட இந்த வகுப்பை, இந்த உரையாடலை இன்னும் செழுமையாக  இன்னும் செம்மைப்படுத்தி, செழுமைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும் என்று எனக்கு பலரும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மீது, வாழ்வியல் மீது, திருக்குறள் மீது அன்பும் மரியாதையும் வாழ்வியல் மீது அக்கறையும் கொண்ட பலரும் இந்த வகுப்பினுடைய சாரம் குன்றாமல், எளிமை குறையாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாம் மிகக் குறிப்பாக, பெரும் பேராக நான் நினைக்கிற வழிகாட்டல் என் தந்தையரின் வழிகாட்டல். அவர்கள் என் வகுப்பை கேட்பதும் அதன் மீது கருத்து சொல்வதும் அதை நெறிப்படுத்துவதும் மிகப்பெரும் பேராக, மகிழ்வாக நான் கருதுகிறேன். நல்ல தத்துவங்களை கற்றுக்கொடுத்தவர்கள், அறிமுகம் செய்தவர்கள், தமிழ் மீது நாட்டம் உருவாவதற்கு அன்னாரே காரணம். அவர்களின் வழிகாட்டல் என்னை அழைத்து திருக்குறள் வகுப்பு, வார்த்தை பிரயோகம், சொற்களின் கூட்டு எல்லாமும் இன்னும் செம்மைப்பட வேண்டுமடா என்று வலியுறுத்தி சொல்லியது, இந்த வகுப்பிற்கு இந்த தொடர்ந்த பணிக்கு ஒரு பெரிய மதிப்பு மிகுந்த ங்கிகாரமாக நான் நினைக்கிறேன்.

    நான் பலமுறை அவர்களோடு கேட்பதுண்டு. இதை பார்த்தீர்களா? இந்த வகுப்பை நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன் பார்த்தீர்களா என்று நான் பலமுறை கேட்டதுண்டு. பல நேரங்களில் அவர்கள் பார்ப்பார்கள். சில நேரங்களில் கருத்துகள் சொல்லுவார்கள். அதாவது இந்த வகுப்பு குறித்த அவர்களின் கருத்து என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. அது ஒரு சிறந்த விமர்சனமும் கூட. எனக்கு இருக்கிற சிக்கல், ஒரு மொழியை அல்லது ஒரு மொழியில் இருக்கக்கூடிய மிகச் சிறந்த அறநூலை, மறைநூலை துல்லியமாக  சொல்ல வேண்டிய பக்குவம் எனக்கு சிறிதளவே பிடிபட்டிருக்கிறது என்கிற காரணத்தினால் அந்த பக்குவத்தை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆலோசனையை நான் பெற்றுக் கொள்வது நியாயமானது தான். அந்த வகையில் பலரும் திருக்குறள்  வகுப்பு குறித்து, திருக்குறளை வாழ்வியலாக பார்க்க  என்பது குறித்து நாம் செய்கிற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், கலந்து கொள்கிறார்கள், நம்மை நெறிப்படுத்துகிறார்கள். இதை பெரும் பேராக, பெருமையாக நாம் கருதுகிறோம். அவர்கள் அனைவருக்கும் நாம் தொடர்ந்து இந்த பணியை செய்வதன் வழியாக அவர்களினுடைய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இன்னும் மேன்மை செய்வோம் என்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


    திருக்குறளை தொடர்ந்து நான் உங்களோடு பகிர்ந்து கொள்வது திருக்குறளை ஒரு வாழ்வியல் நூலாக நாம் பார்க்க வேண்டும் என்று. திருக்குறளை வாழ்வியல் நூலாக பார்க்க வேண்டும் என்றால் இன்று வாழ்வியலுக்கு நாம் வைத்திருக்கிற அர்த்தப்பாடுகளில் இருந்து  பார்ப்பது பொருந்தாது. இறப்பைப் பற்றி திருக்குறள் என்ன சொல்கிறது? பணம் சம்பாதிப்பதை பற்றி திருக்குறள் என்ன சொல்கிறது?  என்றெல்லாம் அதற்குள்  தேடுவதற்கு ஒன்றுமில்லை. நம் அறிவுக் குறைபாட்டோடு நமக்கு வாய்க்கப் பட்டிருக்கிற  நம் முயற்சிக்கு பிடிபடுகிற, நம் உணர்வுக்கு சகாயமாய் இருக்கிற இணக்கமாய் இருக்கிற ஒன்றின் வழியாக நாம் செய்கிற செயல்பாடுகளில் ஏற்படும் இடர்பாடுகளை, ஏற்படும் நெருக்கடிகளை போக்கிக் கொள்வதற்கு திருக்குறள் வழிகாட்டும்.

திருக்குறள் தடுமாற்றங்களில் இருந்து விடுபடுவதற்கு ஒரு பாதையை ஒரு மனிதன் தேடுவான் என்றால் அவனுக்கு வழி காட்டும். திருக்குறள் ஒரு சமன்பாடு மாதிரி நாம் புரிந்து கொள்ளக்கூடாது. திருக்குறளை நாம் ஒரு மெருகேறிய நூல் என்று புகழ்வதெல்லாம் ஒருபுறம். அதற்குள் இருக்கிற சூத்திரங்கள் எல்லாமும் ஒரு மனிதனை அவன் தேடுகிற போது அவன் வாழ்வை செம்மையாக வாழ்வதற்கு முயற்சிக்கிற போது உதவி செய்கிறது என்கிற தன்மையில் பார்க்க வேண்டியிருக்கிறது என்பதை நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

மிகுந்த முக்கியமான, அடர்த்தியான கருத்து இது. நீங்கள் வெளிப்படையாக திருக்குறளை படிப்பீர்கள் என்றால் அதை ஒரு மனப்பாடச் செய்யுள் அளவிலேயே கடந்து செல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது.  மேலோட்டமாக வாசிப்பீர்கள் என்றால் ஒரு இலக்கிய புத்தகம் போல படிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பெருமை மிகுந்த தமிழ் நூலாக நீங்கள் கொண்டாட முடியும். அதெல்லாம் உண்மை என்றால் உண்மை. ஆனால் திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். வாழ்வியல் மீது அக்கறை கொண்ட நூல். ஒரு மனிதன் செம்மையாக வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணங்களை வகுத்திருக்கிற நூல். அப்படிப்பட்ட ஒரு நூலை நாம் படிக்கிறோம் என்பது நமக்கு கிடைத்திருக்கிற பெரும் பேரு. அந்த நூலை பேசுகிறோம் என்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த நூல் குறித்து ஒரு தொடர் உரையாடல் செய்கிறோம் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி. ஆக இந்த அற நூலில் நாம் பேசிக் கொண்டிருக்கிற உரையாடலில் இந்த நூலினுடைய பல பகுதிகளை தொடர்ந்து பேச வேண்டும் என்று நாம் முடிவு வைத்திருக்கிறோம். அதில் தற்போது பாயிரம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு மனிதன் தம் வாழ்நாள் முழுவதும் அறமோடு வாழ்வதற்கு இந்த நான்கு அதிகாரங்களின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வார் என்றால் அவருக்கு வாழ்வு மகிழ்வானதாக இருக்கும் என்று என்னுடைய கருத்து. எல்லா திருக்குறளையும் நாம் படிக்க வேண்டும். எல்லா திருக்குறளையும் நம் வாழ்வில் பொருத்திப் பார்க்க வேண்டும். செயல்படுத்த வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை. இன்னும் அறிஞர் பெருமக்கள் சொல்வது திருக்குறளில் ஒரு குறளை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்றாலும் கூட போதுமானது என்று சொல்வார்கள். ஏதாவது உங்களுக்கு வசதிபட்ட, நினைவில் இருக்கிற, பேருந்தில் படித்த அல்லது உங்கள் செய்யும் பகுதியில் படித்த உங்களுக்கு நினைவில் இருக்கிற ஏதேனும் உங்களுக்கு அறிமுகமாய் இருக்கிற ஒரு  குறட்பாவை நீங்கள் நினைவில் நிறுத்தி, அந்தக் குறட்பாவை நீங்கள் தொடர்ந்து செயல்படுத்திவீர்கள் என்றால் அதுவே போதுமானது. உங்கள் வாழ்வு முழுவதும் அது உங்களுக்கு வழிகாட்டும் வல்லமை கொண்டது என்று அறிஞர் பெருமக்கள் சொல்வது உண்டு. அது தவறான கருத்து அல்ல. அது சரியான கருத்து. உண்மையான கருத்து. அந்த வகையில்

திருக்குறளில் இருக்கிற மொத்த அதிகாரங்களினுடைய சாரமாக முதல் நான்கு அதிகாரங்கள் - கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை, வான்சிறப்பு. நான் வரிசை மாற்றி சொல்கிறேன் ஆனால் வரிசைப்படி கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்றுதான் அமைக்கப்பெற்றிருக்கும். நான் எனக்கு பிடித்தவாறு சொல்கிறேன். கடவுள் வாழ்த்தும் அறன் வலியுறுத்தலும் என்பது நான் மிக நெருக்கமாக பார்க்கிற அதிகார வரிசை என்பதால் நான் அவ்வாறு சொல்கிறேன்.

...தொடர்ந்து பேசுவோம்...


No comments:

Post a Comment