Monday, December 18, 2023

திருக்குறள் வாழ்வியல் - திருக்குறள் ஏன் ஒருவர் வாசிக்க வேண்டும்? - பகுதி - 3 -சிவ.கதிரவன்

                                 திருக்குறள் ஏன் ஒருவர் வாசிக்க வேண்டும்?

முரண்பட்ட குறள்கள், மிக சுருக்கமாக பெரிய செய்திகளை உள்ளடக்கமாக வைத்திருக்கிற பாடல்கள் என்று நிறைய குறிப்புகளை திருக்குறளுக்குள் நாம் பார்க்க முடியும். கடுகை போல சிறியது என்று திருக்குறளைப் பற்றிய  வர்ணனைகளை தமிழ் சமூகம் வைத்திருக்கிறது. கடுகை போல சிறியது. பாரதியார் வள்ளுவரை பேசுகிறார், கம்பராமாயணத்தை வள்ளுவர் வழியில் நின்று தமிழ் மொழியில் கம்பர் இயற்றினார் என்று ஒரு வாதம் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் இப்போதும் இருக்கிறது. கம்பராமாயணம் குறித்து பேசுகிற, இலக்கண இலக்கிய நுட்பங்கள் குறித்து பேசுகிற பலரும் கம்பரின் செயல்பாடு,  கருத்தாக்கங்கள் எல்லாமும் வள்ளுவரின் வழி நின்று வந்தவை என்றெல்லாம் கூட வாதங்கள்  இருக்கின்றன. இப்படி இலக்கணத்திற்குரிய, இலக்கியத்திற்குரிய எல்லா உள்ளடக்கங்களையும் திருக்குறள் வைத்திருக்கிறது என்று பார்க்கிற போது திருக்குறள் இலக்கணத்திற்காகவே படைக்கப்பட்ட ஒன்று என்று அறிஞர்கள் போற்றுவதில் வியப்பில்லை. மேலும் திருக்குறளை வாசிக்கிறபோது அது கலை, இலக்கியங்கள் சமூகத்திற்காக என்று வாதிடுகிற அறிஞர்களினுடைய அந்த குறிப்பு வைத்து பார்க்கிற போது அதற்கும் அது பொருத்தமானதாக இருக்கிறது.

ஒரு மனிதன், ஒரு சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குறளுக்குள் வரையறைகள் செய்யப்பட்டிருக்கின்றன. சமூகம் எப்படி இருக்க வேண்டும், சமூகத்தில் இருக்கிற மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்கிற நெறிப்படுத்தும்  நெறிபாடுகள் திருக்குறளுக்குள் இருக்கிறது. இப்படி இந்த சமூகத்தில் வாசிப்பதற்கு ஆர்வமுள்ள, தேடல் உள்ள யார் ஒருவரும் திருக்குறளை வாசிக்கும் வாய்ப்புள்ள ஒரு இடத்தை திருக்குறள் தனக்குள் வைத்திருக்கிறது என்பது மிக முக்கியமாக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வேறொரு நூலிற்கு  அப்படி  வாய்ப்பு இருக்கலாம்.  அறிஞர்களோடு பேசுகிறபோது அவர்களினுடைய உரைகளைக் கேட்கிற போது  வேறுவேறு தளங்களில் பேசுகிற ஆய்வு நூல்களைப் படிகிற போது நமக்கு எல்லா நூல்களுக்கும் இந்த  வாய்ப்பு எதற்காக கலை இலக்கியம் உருவாகி இருக்கிறது.  எதற்காக கலை இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று பேசுகிற  பேச்சின் ஊடாக, கருத்துக்களின் ஊடாக அவை ஒன்றை சொல்கின்றன. ஆனால் திருக்குறளைப் பொறுத்தவரை எத்தகைய கருத்தை வைத்து விவாதித்தாலும் கூட அவை மிகப் பொருத்தமான பொருத்தப்பாடோடு, கச்சிதமான தன்மைகளோடு அமைந்திருக்கிறன  என்பது நவீன மனிதர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய பெரிய அவா. பெரிய ஆவல். நவீன மனிதர்கள் திருக்குறளை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்பது உங்களை போல் எனக்கு இருக்கிற பேராவல்.

வாசிப்பதற்கு நேரம் இல்லாத மனிதர்களுக்கு மிகப் பொருத்தமான அடிகளைத் தொகுத்து ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் வகுத்திருக்கிறார் என்று நான் நண்பர்களோடு சொல்வதுண்டு.  கம்பராமாயணத்தை படிக்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் அவர் நிறைய பாடல்களை படிக்க வேண்டும். பெரிய புராணத்தை படிக்க வேண்டும் என்று ஒருவர் விரும்பினால் நிறைய பாடல்களைப் படிக்க வேண்டும். சங்க இலக்கியங்களுக்குள் இருக்கிற எந்த நூலையும் ஒருவர் படிக்க வேண்டும் என்று விருப்பத்தோடு அந்த புத்தகத்தை எடுப்பார் என்றால் நிறைய பாடல்களை, அடிகளை அவர் வாசித்து மனனம் செய்து வாசிப்பு அனுபவத்தை பெறுவதற்கு தேவை இருக்கிறது. நவீன மனிதர்களுக்கு இன்று அப்படி வாய்ப்பு இல்லை. நேரம் இல்லை என்று நாம் தப்பித்து ஓடுகிறோம். உண்மையிலேயே இரண்டு வரியில் நவீன மனிதர்களுக்கு ஒரு சமூகத்தை, ஒரு வாழ்வியலை சொல்வதற்கு திருக்குறள் உள்ளடக்கத்தை வைத்திருக்கிறது. நவீன மனிதர்கள் நீண்ட பாடல்களை படிப்பதற்கு நேரம் இல்லாதவர்களாக வருவார்கள் என்ற தரிசனத்தில் திருவள்ளுவர் அப்படி தொகுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

இரண்டு சொல் எப்படி படிக்க வேண்டும். கற்க கசடற வள்ளுவர் நமக்கு சொல்கிறார். எப்படி படிக்க வேண்டும் என்று நவீன மனிதன் ஒருவன் சந்தேகத்தோடு திருவள்ளுவரோடு கேட்பார் என்றால் அந்த மனிதருக்கு இரண்டு சொற்களில் அவர் எப்படி படிக்க வேண்டும் என்று சொல்கிறார். கற்க கசடற முடிந்தது. கற்க விரும்பும் ஒருவர் எவ்வாறு கற்க வேண்டும் என்று தேடினார் என்றால் கசடு இல்லாமல் கற்க வேண்டும். இன்னும் விரிவாக கற்க என்பது குறித்து வள்ளுவர் பேச வேண்டும் என்று நாம் வள்ளுவரிடம் கேட்டோம் என்றால் இரண்டு அடிகளில் சொல்கிறார். கற்க கசடற கற்க, எவற்றை கற்க வேண்டும்? கற்பவை எவையெல்லாம் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கற்க வேண்டும். அவற்றை எல்லா கோணங்களிலும் கற்க வேண்டும். எல்லா வகைகளிலும் கற்க வேண்டும். அவற்றை கசடு இல்லாமல் கற்க வேண்டும். ஆக, கற்க கசடு இல்லாமல் கற்க, கற்க வேண்டிய எல்லாவற்றையும் கற்க, என்று இரண்டு வரியில் கற்பது குறித்து கற்பதற்கு நேரம் இல்லை என்று கருதுகிற ஒரு சமூகத்திற்கு, பரபரப்பாக இயங்கிக் கொண்டு கற்க முடியாமல் தவிக்கிற ஒரு சமூகத்திற்கு வள்ளுவர் இரண்டு வரிகளில் கற்பது குறித்து முழுமையும் சொல்கிறார் என்பது மகிழ்ச்சிக்குறியது தானே. அவசியமானது தானே. இப்படி வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதனுக்குரிய செய்திகளை, வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் பின்பற்ற வேண்டிய செய்திகளை துல்லியமாக திருவள்ளுவர் சொல்கிறார் என்பது தான் நாம் வாசிக்க வேண்டும் என்று கூறுவதற்கு அடிப்படையான காரணம்.

கல்வி எதற்கு பயன்பட வேண்டும். கல்வி எதற்காக இருக்கிறது என்று விவாதிக்கிற போது அத்தகைய விவாதத்தின் வழியாக (நிறைய அதை தனியாக பின்னால் நான் தொடர் சொற்பொழிவு தொடர்  உரையாடலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்). திருவள்ளுவர் புத்தகத்தை கையில் கொடுத்தவுடன் முதல் பாடலில் வாசிப்பதற்கு முன்பு ஒரு செய்தியை கூறுகிறார். நீங்கள் கடவுளை தொழுதுவிட்டு வாசிக்க துவங்குங்கள் என்று. நல்லது கடவுளைத் தொழுது விட்டு வாசிக்க துவங்கலாம் என்று நீங்கள் வாசிக்கும்போதே அகர முதல  என்று உங்கள் வாசிப்பு துவங்கிவிடும். நீங்கள் கடவுளை நம்புகிறவராக இருப்பீர்கள் என்றால் உங்கள் கடவுளுக்கு பொருத்தமான சொற்கள் அவற்றில் இருக்கின்றன. நீங்கள் கடவுளை நம்பாதவர்களாக இருப்பீர்கள் என்றால் உங்கள் மொழியை முதன்மையாக கூறுகிறார். எந்த மொழியை பேசுபவர்க்கும் இது பொருந்தும். திருவள்ளுவர் உலகத்திலேயே மிடுக்காக நாம் சொல்ல முடியும், உலகத்திலேயே இதுவரை எந்த நூட்களிலும் கடவுள் வாழ்த்து பாக்களில் இடம்பெறாத  ஒரு பெரும் மரியாதையை திருவள்ளுவர் மொழிக்கு கொடுக்கிறார்.

கடவுளுக்கு ஒப்பான ஒன்று எது என்றால் எதுவும் இல்லை. அறியாத ஒரு மனிதனுக்கு கடவுளை அறிமுகம் செய்ய வேண்டும். கடவுள் பற்றி எதுவும் தெரியாத ஒரு மனிதனுக்கு கடவுளை அறிமுகம் செய்ய வேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்வது? ஒரு விமானத்தை விமானம் பற்றி அறியாத ஒருவருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்யும்போது நீங்கள் எளிமையாக பறவையை போல் இருக்கும் என்று சொல்லலாம். ஒரு வாகனத்தை நீங்கள் அறிமுகம் செய்யும் போது அவர் வீட்டில் இருக்கிற வேறொரு வாகனத்தை உதாரணமாக சொல்லி அறிமுகம் செய்யலாம். அறிமுகம் செய்வதில் ஒரு இலக்கணம் இருக்கிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...