திருக்குறள் ஏன் ஒருவர் வாசிக்க வேண்டும்?
அறிமுகம் செய்வதில் ஒரு இலக்கணம் இருக்கிறது. நீங்கள் அறிமுகம் செய்கிற அந்த மதிப்பு மிக்க பொருளுக்கு இணையான ஒன்றை ஒப்பிட்டு சொல்ல வேண்டும். இப்போது வள்ளுவர் கடவுளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறார். கடவுள் உங்களுக்கு தெரியாத ஒன்று. உங்களுக்கு தெரிந்த ஒன்று என்ன? கடவுளை நீங்கள் இதுவரை கண்டதில்லை. கடவுள் பற்றி உங்களுக்கு எந்த அனுபவமும் இல்லை. இப்போது நீங்கள் கடவுளை தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் என்று கடவுளை அறிமுகம் செய்யும் முயற்சியில் திருவள்ளுவர் உங்களோடு உரையாடுகிறார். எவ்வாறு உரையாடுகிறார் என்றால் கடவுள் இந்த உலகத்தை படைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எப்படி கடவுள் உலகத்தை படைத்திருக்க முடியும் என்ற ஏராளமான வினாக்கள் உங்கள் மனதில் ஓட ஆரம்பிக்கும். எப்படி உலகத்திற்கு கடவுள் தான் முதன்மை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று நிறைய கேள்விகள் உங்களுக்கு எழ ஆரம்பிக்கும்.
முதன்மையானது என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய இன்னொன்றை உங்களுக்கு சொல்ல
வேண்டும் அது என்ன என்றால் உங்கள் மொழி. எழுத்துக்களுக்கு எப்படி அகரம் முதன்மையாக
இருக்கிறதோ அதேபோல உலகத்திற்கு ஆதி முதன்மையாக இருக்கிறது என்று ஒப்பிடுகிறார். இதில் மிக நுட்பமான செய்தி
ஒன்று இருக்கிறது. நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் தொழுகை கடவுளை
நோக்கி இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றால் அதற்கு இணையான ஒன்று உங்களிடம் இருக்கிறது.
அது உங்கள் மொழி என்று வள்ளுவர் ஒரு நுட்பமான செய்தியை நமக்குத் தருகிறார்.
உங்கள் மொழிக்கு அகரம் இருப்பது உங்களுக்கு
தெரியும் தானே என்று கேள்வி எழுப்புகிறார். உங்கள் மொழி ‘அ’ என்கிற எழுத்தில் இருந்து துவங்குகிறது தானே என்று நம் முன் கேட்கிறார். நாம் ஆம் என்ற பதில் சொல்வோம். எப்படி உங்கள் மொழி
‘அ’ என்ற எழுத்திலிருந்து ‘அகரம்’ என்கிற அடியிலிருந்து துவங்குகிறதோ அதைப்போல இந்த உலகம் ‘ஆதிபகவன்’ என்பதிலிருந்து
துவங்குகிறது என்று படைக்கப்பட்டிருக்கிறது என்று உங்கள் மொழியையும் உங்களுக்கு தெரியாத
கடவுளையும் ஒப்பிட்டு சொல்கிற பாங்கு வேற எந்த புலவனுக்கும் வேறு எந்த மொழி ஆளுமைக்கும்
எந்த இலக்கிய ஆளுமைக்கும் இல்லாத ஒரு பாங்கு என்று எனது சிற்றறிவில் நான் பார்க்கிறேன்.
உங்கள் கடவுளை நீங்கள் பார்த்ததில்லை என்றால் அதற்கு இணையான ஒன்று உங்களிடம் இருக்கிறது என்று நீங்கள் தேடுவீர்கள் என்றால் அது உங்களது மொழி என்று வள்ளுவர் உங்களுக்கு அறிமுகம் செய்கிறார். இப்படி நுட்பமான, அழகான பகுதிகளை தெரிந்து கொள்வதற்கு கடவுளை தெரிந்து கொள்வது தான் முதல் பாடலே. இன்றைய நவீன காலத்தில் மனிதர்கள் இறைவனை தேடுகிறோம் என்று விதவிதமான பயிற்சிகளையும் செயல்பாடுகளையும் உலகம் முழுவதும் செய்து கொண்டே இருக்கிறார்கள். நவீன மடாலயங்கள் இருக்கின்றன. தத்துவ விசாரணைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. விசாரிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பயிற்சிக் கூடங்கள் பலவும் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் இறுதி இலக்கு என்ன என்று நாம் விசாரித்தோம் என்றால் அவர்கள் சொல்கிற உச்சபட்சமான இலக்கு கடவுளை கண்டு கொள்வது. கடவுளை தேடுகிறோம் என்பது. கடவுளை கண்டு கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரு தனிமனிதனினுடைய நவீன மனிதனுனிடைய இலக்காக நவீன மடாலயங்கள், நவீன மறை போதனைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவரிடம்
நீங்க பேச துவங்கியவுடன் திருவள்ளுவர் கடவுள் யார் என்று உங்களிடம் அறிமுகம் செய்து வழி நடத்தத் துவங்கி
விடுகிறார். அவர் அறிமுகம் செய்கிற பாங்கு அலாதியாக இருக்கிறது. கடவுள் என்பது என்ன,
கடவுளை நீங்கள் இதுவரை கண்டதில்லை என்கிற போது
அதற்கு ஒப்பான ஒன்று, அதைப் போல ஒன்று உங்களிடம் இருக்கிற ஒன்று அகரம். உங்கள் மொழி
என்று ஒப்பிட்டு பேசுகிற ஒப்பிட்டு அறிமுகம் செய்கிற ஒரு அழகு, நுட்பம், பாங்கு வள்ளுவரிடம்
இருக்கிறது. இது வள்ளுவத்தை வாசிக்கிற போது நாம் பூரித்து நிற்கிற பகுதியாக இருக்கிறது.
சரி வள்ளுவத்தை வாசிக்க துவங்கியாயிற்று. நீங்கள்
புத்தகத்தை திருக்குறள் என்னும் புத்தகத்தை பெற்றுக் கொண்டு வாசிக்க துவங்கி விட்டீர்கள்.
முதலில் நீங்கள் தேடுகிற, இந்த உலகம் தேடுகிற, ஜென்ம ஜென்மமாக காத்து நின்று தேடுகிற
கடவுள் எப்படிப்பட்டது என்று வள்ளுவர் முதல் பாடலிலேயே சொல்லிவிட்டார். இனி இந்த உலகில் நீங்கள் தேடுவதற்கு அங்கிங்கு செல்வதற்கு
வழியேதும் இல்லை என்கிற அளவிற்கு மிகப் பொருத்தமான ஒன்றை சொல்லிவிட்டார். உங்கள் மொழிக்கு
இருக்கிற அகரம் போல், இந்த உலகிற்கு ஆதி இருக்கிறது. இந்த உலகத்திற்கு ஆதி இருப்பது
போல் உங்கள் மொழிக்கு அகரம் இருக்கிறது. இரண்டும் வேறல்ல ஒன்று என்கிற அற்புதமான குறியீடை வள்ளுவர் தொட்டு துவங்குகிறார்.
துவங்கியாயிற்று. ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு உங்களிடம் கொடுத்தாயிற்று. திருக்குறள்
உங்கள் கையில் இருக்கிறது. இந்த புத்தகத்தை வாசிப்பதற்கு நோக்கம் என்ன என்று உங்களுக்கு
ஒரு கேள்வி வரும். நான் ஏன் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்?
முதல்
பாடல் படித்தவுடன் கடவுள் தெரிந்தாயிற்று. இரண்டாவது பாடலை நான் ஏன் வாசிக்க வேண்டும்
அல்லது இந்த மொத்த புத்தகத்தையும் நான் ஏன் வாசிக்க வேண்டும். என் வாசிப்பின் நோக்கம்
என்ன என்று உங்கள் மனம் கேட்க துவங்கும். ஒரு ஆர்வம் மிகுதியால் கேட்க துவங்கும் என்று
வைத்துக்கொள்வோம். கடவுள் தான் தெரிந்தாகிவிட்டதே
இனி ஏன் நான் வாசிக்க வேண்டும் என்று கேட்க துவங்கியவுடன் அவர் அதற்கு பதில் சொல்கிறார்.
உங்கள் மனம் தெரிந்தே பதில் சொல்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. நீங்கள் கற்பதன்
பயன் என்ன. நீங்கள் கற்பதன் நோக்கமென்ன நீங்கள் ஏன் கற்க வேண்டும். ஏன் வாசிக்க வேண்டும்
என்று உங்கள் எழும்புகிற கேள்விக்கு இரண்டாவது பாடலில் வள்ளுவர் பதில் சொல்கிறார்.
கற்பதன் பயன் வாலறிவனை தொழுவது. நீங்கள் கடவுளை அறிந்து கொண்டீர்கள் முதல் பாடலில்.
இரண்டாவது பாடலில் கடவுளிடம் தொழுகை செய்வதுதான் நீங்கள் கற்பதினுடைய பயன் என்று வள்ளுவர்
வகுக்கிறார். வழிகாட்டுகிறார். நெறிப்படுத்துகிறார். இப்படி நுணுக்கமான, பிரம்மாண்டமான
செய்திகளை சிறிது சிறிதாக நமக்கு வழங்கி இருக்கிற ஒரு பெரும் ஆற்றல் வள்ளுவத்திற்கு
இருக்கிறது. வள்ளுவருக்கு இருக்கிறது. அது எப்படி நீங்கள் படிப்பதற்கு பதில் படிப்பதற்கான
நோக்கம் இறைவனை தொழுவது என்று சொல்ல முடியும்
என்கிற வாதத்தை நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். கேட்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்த
அறிவின் அடிப்படையில் நான் சொல்லி இருக்கிறேன். பின்னாளில் பேரறிஞர் ஒருவர் பேசியதை
கேட்டு இன்னும் தெளிவு கிடைத்திருக்கிறது எனக்கு.
ஒரு
சமையல் புத்தகத்தை நீங்கள் படிக்கிறீர்கள். சமையல் புத்தகத்தை படிக்கிற போது அந்த சமையல்
புத்தகம் என்ன செய்யும். முதலில் நீங்கள் ஒரு சாம்பார் வைப்பது எப்படி என்று படிக்கிறீர்கள்
என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக சாம்பார் வைத்து பார்ப்பீர்கள். ஆக இந்த புத்தகம் உங்களை சாம்பார்
வைக்கிற நிலைக்கு நகர்த்தும். துல்லியமாக சாம்பார் வைக்க கற்றுக் கொள்ளும் நபராக நீங்கள்
சுவையான சமையல் நிபுணராக மாறிப்போவீர்கள். நீங்கள் வைத்த அந்த சுவையான உணவை இன்னொருவருக்கு
பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்கிற ஆவலை அந்த
புத்தகம் உங்ககளை அறியாமலேயே கொடுத்து விடும். ஏனென்றால் நீங்கள் ஒரு சட்டி நிறைய சுவையான
உணவை சமைத்து விட்டு நீங்கள் மட்டும் வைத்து கொண்டு என்ன செய்வீர்கள். இன்னொருவருக்கு
கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அந்த புத்தகம் உங்களை அறியாமலேயே உங்களுக்கு கொடுத்துவிடும்.
அப்போது நீங்கள் முதலில் படித்தீர்கள். இரண்டாவது சமைத்தீர்கள். மூன்றாவதாக அதை பகிர்ந்து கொடுத்தீர்கள்.
பகிர்ந்து கொடுக்கிற போது அதில் வருகிற குறைகளை நிறைகளை பார்த்துக் கொண்டு மீண்டும்
இன்னும் சுவையான ஒன்றை சமைப்பதற்கு உங்களை சரி செய்து கொள்கிற சுய பரிசீலனைக்கு உள்ளாவீர்கள்.
இப்படி ஒரு சமையல் புத்தகம் உங்களுக்குள் வேலை செய்து கொண்டே இருக்கும். முதலில் அது
உங்களை வாசிக்க வைக்கும். இரண்டாவதாக அது உங்களை
செயல்பட வைக்கும். மூன்றாவதாக அது பகிர்ந்து கொடுக்க வைக்கும். நான்காவதாக உங்களுக்குள்
இருக்கிற கவனக் குறைவை உள்ளடக்க மாறுபாடை, பிழையை அது உங்களுக்கு நினைவூட்டும். மீண்டும்
உங்களை சீர் செய்யும். இப்படி ஒரு நான்கு, ஐந்து அடுக்குகளை ஒரு எளிய புத்தகம் சமையல்
குறிப்பு உங்களுக்குள் நிகழ்த்தி விடும். இவை
அந்த சமையல் குறிப்பிற்குரிய நோக்கம். சமையல் குறிப்பை படிப்பதற்குரிய நோக்கம். சமையல்
குறிப்பை வெறுமனே சுவையான சமையலுக்காக படிப்பேன் என்று சொன்னால்கூட குறைந்தபட்சம் அது
இன்னொருவருக்கு பகிர்ந்து கொடுக்கிற இடத்திற்கு நகர்த்தி விடும்.
அன்பு செலுத்தி உங்களுக்கு அறிந்த, அறியாத
இன்னொருவரோடு நீங்கள் சமைத்த ஒரு பொருளை, சமைத்த பண்டத்தை, பலகாரத்தை பகிந்து கொடுக்க
வேண்டும் என்கிற ஒன்றை அந்த புத்தகம் உங்களுக்கு செய்துவிடும். இது அந்த புத்தகம் வெற்றிப்
பெறுகிற இடம்.
இப்படி ஒரு தனி மனிதனினுடைய அன்பை வெளிப்படுத்திக்
கொள்கிற எளிய புத்தகங்கள் போல அந்த புத்தகத்திற்குள் இருக்கிற நோக்கம் அன்பில் துவங்கி
இறைவன் வரை நீளும் என்பது அறிஞர்களினுடைய வாதம். ஒரு புத்தகத்தை படிக்கிற போது நீங்கள்
சமையல் புத்தகத்தை படிக்கலாம். வரலாற்று புத்தகத்தை படிக்கலாம். இலக்கியத்தை படிக்கலாம். ஆய்வு நூல்களை படிக்கலாம். எத்தகைய வாசிப்பிற்குரிய
புத்தகத்தையும் கூட நீங்கள் வாசிக்க முடியும்.
வாசித்தவுடன் அந்த புத்தகம் உங்களை செயல்படுத்த வைக்கும். நீங்கள் செயல்பட ஆரம்பித்தவுடன்
மீண்டும் ஒரு விளைவை,
உறவை, அன்பை, நட்பை நீங்கள் கண்டு கொள்வீர்கள்
என்பது ஒவ்வொரு புத்தகமும் செய்கிற வாசிப்பின் விளைவு. அப்படி திருக்குறள் போன்றதொரு
புத்தகம் வேறுவேறு எல்லைகளை,
நிலைகளை உங்களுக்கு அறிமுகம் செய்து விரிவாக இறைவனை அடைவதற்கு, தொழுவதற்குரிய ஒன்றாக பலனுக்குரிய ஒன்றாக நகர்த்தி செல்கிற நுட்பம் அதற்குள் இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
வாசிப்பினுடைய நோக்கம் இறை தொழுதல் என்கிற
பாதையில் செல்கிறது என்று அறிஞர்களுடைய வாதத்தை பார்க்கிறபோது நாம் முழுமையாக திருக்குறளினுடைய
தொடர் உரையாடல் நடந்து நிறைவில் நான் சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஆனாலும் ஒரு நூலின் நோக்கம் குறைந்த பட்சம் உங்களை அன்பு செய்ய வைத்து விடும். பகிர்ந்து அளிக்க வைத்து
விடும் என்பதை நீங்கள் அனுபவபூர்வமாக பார்ப்பீர்கள். பார்த்திருப்பீர்கள். அப்படியான
தரமான பண்புகளை,
பரிமாணங்களை உங்களுக்குள் எல்லா புத்தகமும் ஏற்படுத்தும். திருக்குறள் போன்றதொறு புத்தகம்
அன்பு செய்ய வைக்கும் என்கிற எல்லை தாண்டி நகர்ந்து, நகர்ந்து, நகர்ந்து, நகர்ந்து இறைத் தொழுகைக்கு அழைத்துச் செல்லும்
என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்,
அது எவ்வாறு இறைத்தொழுகைக்கு
அழைத்துச் செல்லும் என்று நான் தொடர்ந்த
உரையாடலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இப்படி ஒரு வாசிப்பு அனுபவம் திருக்குறளை
வாசிப்பதன் வழியாக உங்களுக்கு கிடைக்கும் என்பதில் எனக்கு நிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது.
கல்வி குறித்து நான் அழுத்தமாக சொல்வதற்கு
காரணம், கல்வி என்பது மிகுந்த முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கிறது.
வாசிப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்று. நாம் வாசிப்பதற்குரிய
நேரங்களை வாசிக்காமலே உதிர்த்து விடுகிறோம். நவீன தொழில்நுட்பத்தினுடைய வளர்ச்சியின்
காரணமாக நமது வாசிப்பு அனுபவம் குறைந்து கொண்டே இருக்கிறது என்பதை நாம் கவலையோடு பார்க்கிறோம்.
மிகச் சுருக்கமான வாசிப்பு என்பது
வாசிப்பு சுருங்கி விட்ட நிலையாக மாறிவிட்டது. ஆக, இப்படி ஒரு வாசிப்பு நெருக்கடியில் வசிக்கிற
வாழ்கிற நவீன மனிதன் வாசிப்பை நிகழ்த்த வேண்டும், திருக்குறளை வாசிப்பதன் வழியாக அவனுக்கு கிடைக்கிற
பெரும் மகிழ்வும் நிறைவும் எப்படியானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இந்த உரையினுடைய
தொடர் உரையாடலினுடைய மையப் பொருளாக இருக்கிறது நண்பர்களே.
அந்த வகையில் இன்றைய அறிமுக நிகழ்வில் திருக்குறள்
என்பது வாசிப்பதற்குரிய நூல் என்பதில் நான் முன்பே சொன்னது போல யாருக்கும் ஐயம் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஆனால் இந்த நவீன மனிதன் தேடுகிற,
அடைந்தே ஆக வேண்டும் என்று கருதுகிற,
வாழ்வின் இறுதி இலக்காக இருக்கிற இறைநிலை என்கிற ஒரு கருத்தாக்கத்தை முதல் பாடமாக வைத்து
வள்ளுவர் துவங்குகிறார் என்பது நமக்கு மகிழ்விற்குரியது. அரிய வாய்ப்பு. வாழ்நாள்
முழுவதும் செலவு செய்து இறை நிலையை கண்டு கொள்ள வேண்டும் என்று தேடுகிற ஒருவர் அவர்
துவங்குகிற போதே
இறைநிலையை கண்டுகொண்டு துவங்குகிறார் என்றால் அது அவருக்கு ஆசிர்வாதத்திற்குரியது என்பது
எனது தனிப்பட்ட பார்வை. நீங்கள் இறை தேடுபவராக இருக்கலாம் அல்லது இறை மறுப்பவராக இருக்கலாம்
அதைப்பற்றி விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆதி என்கிற இயக்கம் அல்லது இருத்தல் என்கிற
இயங்கும் முறை என்று எந்த பேரில் நீங்கள் இந்த உலகினுடைய அவிழ்க்க முடியாத புதிரை கருதிக்
கொண்டாலும் அந்த அவிழ்க்க முடியாத புதிருக்கு
இணையான ஒன்று மொழி. அந்த மொழி உங்கள் இருத்தல். அந்த மொழி உங்கள் அவிழ்க்க
முடியாத புதிரினுடைய
குறியீடு. அவற்றை நீங்கள் புரிந்து கொள்வதன் வழியாக இருத்தலை புரிந்து கொள்ள முடியும். இந்த இயக்கவியலை புரிந்து
கொள்ள முடியும். இந்த உலகை,
பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள முடியும் என்று வள்ளுவர் துவக்கத்திலேயே உங்கள் வாழ்வின்
இறுதி இலக்கை அறிமுகம் செய்து உங்களை வாசிக்க அழைக்கிறார்.
…தொடர்ந்து
வாசிப்போம்… தொடர்ந்து
பேசுவோம்...
No comments:
Post a Comment