Wednesday, June 26, 2024

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                             எண்ணங்கள் பற்றி...



வணக்கம்,

                 இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்ணம், நேர்மறை எண்ணம் என்று நாம் பேசுகிற, கேட்கிற பல செய்திகளை விளக்கிப் பேசிப் பார்க்கலாம் என்கிற  நோக்கத்தில் இந்த உரையாடலை பேசிப் பார்க்கிறோம். இதுவரையிலும் ஆகச்சிறப்பாக எண்ணங்கள், மனம், அதனுடைய செயல்பாடுகள் பற்றி அது எப்படி இயங்குகிறது? எப்படி நடைமுறைப்படுத்துவது?  எப்படி புரிந்து கொள்வது?  என்று அதை ஒட்டி பேசுபவர்கள் என்று பார்த்தால் மிகச் சிறப்பாக யாரையும் பார்க்க முடிவதில்லை.

எண்ணத்தின் வலிமை, எண்ணத்தினுடைய செயல்பாடு, எண்ணத்தினுடைய வெளிப்பாடு என்று பல தலைப்புகளில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. பல விதமான உரையாடல்கள் நடைபெற்று இருக்கின்றன. அது எவ்வளவு பயன்படுகிறது என்பதும் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால் அது அப்படி ஒரு பயன்படும் தன்மையில் இருப்பதாகவும் புலப்படுவதில்லை. சிறிய அளவில் ஆங்காங்கே புரிந்து கொண்ட செய்திகளை புத்தகங்களாகவும் இது போன்ற உரையாடல்களாகவும்  தன்முனைப்பு செயல்பாடுகளாகவும் வெளிப்படுத்துகிறார்கள் என்கிற அளவில் தான் இருக்கிறது.

மிக நேர்மையாக அதிக பொறுப்புடன் மனம் பற்றி, எண்ணங்கள் பற்றி பேசிய  எழுதியவர்கள் என்றால் மெய்யியல் புரிந்து வேலை செய்த மதிப்பிற்குரிய ஓஷோ அவர்களை கூறலாம். மதிப்பிற்குரிய ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கூறலாம். அவர்களுடைய எழுத்துக்களும் நடைமுறையும் பேச்சும் மனிதர்களுக்குள் தோன்றி மனிதனை இயக்குகிற, உறவாட செய்கிற எண்ணங்கள் பற்றி மிக விரிவாகப் பேசி இருக்கிறார்கள். மிக ஆழமாக பேசியிருக்கிறார்கள். சமகாலத்தில் அப்படி பேசியவர்கள் எழுதியவர்கள் என்றால் மதிப்பிற்குரிய அய்யா.ஞானமூர்த்தி அவர்களினுடைய  உரை.  ஒரு மெய்யியல் நூலினுடைய அடிப்படையில்  விளக்கி பேசுவதும் அது பற்றிய உரையாடல் செய்வதையும் பார்க்க முடிகிறது. அது மிகுந்த மதிப்பிற்குரியதாகவும் இருக்கிறது. அதனுடன் ஐயா செந்தமிழன் அவர்களினுடைய  மனம் குறித்த உரையாடல்கள் மதிப்பிற்குரியதாக இருக்கிறது. இப்படி சில குறிப்பிடத்தகுந்த மதிப்பு மிக்க உரையாடல்களும் நூல்களும் குறைவாகத்தான் இருக்கிறது.


ஆனாலும் அதிலிருந்து நாம் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் கூட அதிலிருந்து துவங்க முடியும். இன்றைக்கு நாம் பேச வேண்டும் என்று நினைக்கிற இந்த எண்ணம், நேர்மறை எண்ணம், எதிர்மறை எண்ணம் இதையெல்லாம்  பேசுவதற்கு அடிப்படையில் எனக்கு எந்தவிதமான புரிதலும் அதில் பெரிதாக தெரியவில்லை. அது ஒரு புறம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் என்ன பேசப் போகிறோம் என்பது தான் என்னுடைய நிலை. ஆனால் தொடர்ந்து இது குறித்தான கேள்விகளை நான் எதிர்கொள்கிறேன். நேர்மறை எண்ணங்களை எப்படி வளர்த்துக் கொள்வது, எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் எப்படி இருப்பது போன்ற கேள்விகளை நான் எதிர்கொள்கிறேன். அதற்கு எனக்குத் தெரிந்த, நான் புரிந்து கொண்ட செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காகத் தான் இந்த  உரையாடலினுடைய நோக்கம்.

எண்ணங்கள் என்று சொன்னவுடன் அது உளவியல் சார்ந்ததாக பல கதைகளுடன் இருக்கிறது. அது பற்றி உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும்  நீங்கள் தெரிந்து வைத்திருக்கிற எல்லாவற்றையும் தனியாக வைத்து விடுங்கள். இதுவரைக்கும் இந்த தலைப்பு பற்றி இந்த கருத்தைப் பற்றி உங்களுடைய  பழைய கதைகள் எல்லாவற்றையும் ஒரு புறம் வைத்துவிட்டு அமைதியாகவும் பொறுமையாகவும் நான் உங்களுக்கு  கூறுவதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தோடு இந்த உரைக்குள் செல்லலாம் என்று நினைக்கிறேன்.

எண்ணங்கள் என்பது பொதுவாக நமக்கு எண்ணங்கள் எப்போது தோன்றுகிறது எப்படி தோன்றுகிறது என்றால் என்னை பொறுத்த அளவில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற எண்ணங்கள் என்பது நிகழ்கிற எதார்த்தத்தை சொல்லும். ஒரு வேலையை செய்யலாம் என்று நீங்கள் முன்னெடுக்கும் போது அல்லது உங்களுக்குள் உந்துதலாக இப்போது இதை செய்யலாம் என்று ஒரு முயற்சியை நீங்கள் தொடங்கும் போது உங்கள் செயல்பாட்டையொடட்டி ஒரு எண்ணம் தோன்றும். அதற்கு முன்பாகவே எண்ணம் தோன்றி தான் நீங்கள் துவங்குகிறீர்கள் என்பதெல்லாம் இன்னும் ஆழமாக பேசிக் கொள்ளலாம். அடிப்படையில் நீங்கள் ஒரு சமையல் செய்ய வேண்டும். ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும். ஒரு பேருந்தில் செல்ல வேண்டும். ஆட்டோவில் செல்ல வேண்டும் என்ற ஒரு செயல்பாட்டை நீங்கள் துவங்கும் போது எண்ணங்கள் தோன்றத் துவங்கி விடும் அந்த  செயல்பாட்டை சார்ந்து. அந்த செயல்பாட்டை சார்ந்து வருகிற எண்ணங்கள் என்னவாக இருக்கும் என்றால்  என்றால் உதாரணமாக பேருந்தில் பயணம் செய்ய போகிறீர்கள் என்றால் அந்தப் பேருந்து உங்களுக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் இருக்கலாம் என்று அந்த எண்ணம் வரும். சமைக்கப் போகிறீர்கள் என்றால் சமையல் சுவையாக வரலாம், வராமலும் இருக்கலாம். எந்த வேலை செய்தாலும் அந்த வேலையினுடைய அனுகூலமான ஒரு பகுதியும் மாறுபட்ட ஒரு பகுதியும் உங்களுக்கு எண்ணங்களாக வரும் என்பதை நான் பார்க்கிறேன்.

பொதுவாக இப்படித்தான் எண்ணங்கள் தோன்றும். ஏனென்றால் இந்த வகையில் வருவதனால் தான் நேர்மறை, எதிர்மறை விற்பனை வியாபாரங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. பெரிய வணிகமாக இருக்கிறது. ஆனால் எண்ணங்கள் இதைத்தான் சொல்கிறது. எண்ணம் என்பது இப்படித்தான் வருகிறது. என்ன சாத்தியமாக இருக்கிறதோ நீங்கள் செய்கின்ற வேலையினுடைய  வெளிப்பாடு எதை கொடுக்கும் சாத்தியமான இரண்டு தான் கொடுக்கும். நீங்கள் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்கிறீர்கள். அந்த முடிவில் ஏற்படுகிற எண்ணங்கள் இரண்டு சாத்தியங்களை உங்களுக்கு  கூறும்.  ஒன்று அந்த இடத்திற்கு செல்வது குறித்து சொல்லும் அல்லது அந்த இடத்திற்கு செல்ல முடியாதது குறித்து  எண்ணங்கள் வெளிப்படும். இதுதான் எண்ணத்தினுடைய தன்மையாக இருக்கிறது. இந்த இரண்டையும் அடிப்படையில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இவை இரண்டுமே சாத்தியமானது தான். ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் முடிவு  செய்தீர்கள் என்றால் நீங்கள் செல்வதும் நடக்கும்  அல்லது செல்ல முடியாததும் நடக்கும். இதற்குள் வேறு வாய்ப்பு இல்லை. எண்ணம் சொல்வது சரிதான்.  இது சாதாரணமாக துவங்கி உங்கள் உயிர் வரை கூட இருக்கும். நான் காலையில் உயிருடன் இருப்பேனா என்று எண்ணம் தோன்றலாம் அல்லது உயிரோடு இருக்க முடியாது என்று எண்ணமும் வரலாம். காலையில் தான் தெரியும் நீங்கள் உயிருடன் இருப்பீர்களா இல்லையா என்று.

சாதாரணமா ஒரு வேலையை துவங்குவதில் இருந்து உயிருடன் இருப்பது வரை கூட இருக்கும். நீங்கள் சிந்தித்தீர்கள் அல்லது அது குறித்து ஏதாவது வேலை செய்கிறீர்கள் என்றால் எந்த விதத்தில் உங்கள் சிந்தனை முறை, செயல்பாட்டு முறை இருந்தால் கூட அதில் இருந்து வெளிப்படுகிற எண்ணம் இந்த இரண்டை சொல்லிக் கொண்டே இருக்கும். இதுதான் எண்ணமாக இருக்கிறது. இதில் ஒன்றும் உங்களுக்கு மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.  எண்ணங்கள் அப்படித் தான் வரும். ஓரிடத்திற்கு போகிறோம். போகவில்லை என்றால்? என்ற எண்ணம் வரும்.ஒரு வேலையை செய்யப் போகிறோம், அந்த வேலையை செய்ய முடியவில்லை என்றால்? இது உங்களை சார்ந்தும் வரும். உங்களை சுற்றி இருப்பவர்களை சார்ந்தும் வரும். உங்களை நேசிப்பவர்களை சார்ந்தும் வரும். இது போன்ற பலவிதமாக வரும். என் சகோதரர் என்னை வந்து சந்திப்பார். திடீரென்று வரவில்லை என்றால்? என்ற எண்ணம் வரும். உங்களுடைய கணவர் வேலைக்கு சென்று மாலை 6:00 மணிக்கு வருவார் திடீரென்று வரவில்லை என்றால்? என்று எல்லா சத்தியமும் இருக்கிறது. நிஜம் இதுதான்.

எண்ணங்கள் பொதுவாக சாத்தியமாக இருக்கிற நிஜங்களை சொல்கிறது என்பதை நான் பார்க்கிறேன்.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...