மிர்தாதின் புத்தகம் பற்றிய புரிதல்
சமகாலத்தில்
இருக்கிற அந்த இளைஞன் மலைக்கு கீழே உள்ள கிராமத்தில் மலையை சுற்றி இருக்கிற நகரங்களில்
இருக்கிற பல மனிதர்களை மெய்யியல் கோட்பாடு பேசுகிற, மெய்யியல் கோட்பாடை புறக்கணிக்கிற
பல மனிதர்களைக் கண்டு மேலே நகர்ந்து வந்தவர். அந்த இளைஞனுக்கு பின்னால் இருக்கிற சமூகப்
பின்புலம் எல்லாமும் எப்படிப்பட்டது என்பதை மிர்தாதின் புத்தகம் அறிந்து வைத்திருப்பது
போன்று அவரோடு அந்த புத்தகம் பேசிக் கொண்டிருக்கிறது.
புத்தகம் பேசுகிறது
என்றால் புத்தகத்தின் வழியாக மிர்தாத் பேசிக் கொண்டிருக்கிறார். மிர்தாதின் புரிதல்
இந்த புத்தகத்தை வாசிக்கிற ஒரு நபர் எவ்வாறான நபராக இருக்கிறார் என்கிற பார்வையோடு
இருக்கிறது என்பதை என்னால் தனிப்பட்ட முறையில் பார்க்க முடிகிறது. மிர்தாத் ஒரு கட்டுரையை,
ஒரு ஆய்வு நூலை உருவாக்கி இருக்க முடியும். இந்த மிர்தாதின் புத்தகத்திற்குள் மிர்தாத்
என்கிற அந்த மெய்யியல் வழிகாட்டி மெய்யியலை போற்றுகிற, முன்னிறுத்துகிற, அன்பை போதிக்கிற
வழிகாட்டி ஆய்வு குறிப்புகள் போல், சமன்பாடு குறிப்புகள் போல் நிறைய கோட்பாடுகளை பரிந்துரையாக
வைத்திருக்க முடியும். அவர் அவ்வாறு செய்யவில்லை.
மிர்தாதின்
புத்தகம் வேறு சில நபர்களுக்கு வழி காட்டுவது போலவும் அங்கு இருக்கிற சீடர்களுக்கு
வழி காட்டுவது போலவும் படிக்கிற ஒருவருக்கு உதவி செய்வது போலவும் அமையப்பட்டிருக்கிறது.
மிர்தாத் புத்தகத்தை வாசிக்கிற போது ஒரு மனிதன் நன்றாக வாழ வேண்டுவதற்கு என்ன செய்ய
என்ற கேள்வியை நேரடியாக சொல்லி அந்த கேள்விக்கு மிர்தாதே பதில் சொல்வது போன்ற ஒரு கேள்வி
பதில் புத்தகமாக அது அமையவில்லை. மிர்தாதின் புத்தகத்திற்குள் மிர்தாத் வேறு நபர்களோடு
பேசுகிறார். அந்த வேறு நபர்கள் யார் என்றால் இந்த
சமூகத்தினுடைய களைப்பான பகுதிகளில் இருந்து விடுபட்டவர்கள். இந்த சமூகத்திற்குள்
இருக்கிற சிக்கலான தன்மைகளிலிருந்து விடுபட்டவர்கள். சமூகம் முன் வைத்திருக்கிற எல்லா
கேளிக்கைகளையும் புறம் தள்ளி மெய்யியலை தேடிக் கொண்டிருக்கிறவர்கள்.
யார் ஒருவரும் எப்படிப்பட்ட நபராகவும் இருக்கலாம். ஆனால் அவரோடு ஒரு மெய்யியல் வழிகாட்டி பேசுகிறபோது அவர் சமூகப் பின்புலத்தோடு மெய்யியல் வழிகாட்டியை பார்ப்பதற்கும் காண்பதற்கும் காத்திருக்கலாம். ஆனால் மெய்யியல் வழிகாட்டி எப்போதும் சுயநினைவோடு செயல்படும் தன்மை உள்ளவர்கள். எப்போதும் விழிப்புணர்வோடு இருக்கிற தன்மை உள்ளவர்கள். அவர்கள் தம் பரிந்துரையை தம் வழிகாட்டலை எப்போதும் விரயம் செய்வதில்லை. எனவே மிர்தாத் ஒரு சமூகப் பின்பலம் கொண்ட மனிதனை சந்திக்கிற போது அவனுக்காக பேசுவதில்லை. அவனுக்கு பேசுவதற்கு உதவியாக அவன் புரிந்து கொள்வதற்கு உதவியாக அவன் என்கிற சமூகப் பிம்பங்கள் அவனை இயக்குவதன் வழியாக அந்த தடுமாற்றங்களை உடைப்பதற்கு உதவியாக மிர்தாத் தாம் முன் வைத்திருக்கிற தாம் முன் நிற்கிற துறவிகளோடு பேசுகிறார். துறவிகள் முழுவதும் சமூகத்திலிருந்து விடுபட்டவர்கள். சமூகத்திலிருந்து விடுபட்டவர்கள் என்பது முக்கியமானதாக சொல்வதற்கு காரணம் அவர்கள் சமூகத்தை கடந்து விடுபட்டவர்கள். சமூகத்தில் இருக்கிற எந்தவிதமான சிக்கலையும் அவர்கள் சுமந்து வரவில்லை. சமூகம் வைத்திருக்கிற எந்த கோட்பாட்டிற்குள்ளும் அவர்கள் சிக்கி தவிக்கவில்லை. சமூகம் வைத்திருக்கிற எல்லா பொருளாதார சிக்கல்களையும் உடைத்து பேசியவர்கள். எல்லா லவ்கீக வாழ்க்கைகளையும் கடந்து வந்தவர்கள். எல்லாவற்றையும் அனுபவமாகவும் செயல்பாடாகவும் அதன் வழியாக படிப்பினைகளை பெற்றுக் கொண்டவர்களாகவும் இருக்கிற துறவிகள் மத்தியில் மிர்தாத் பேசுகிறார். இப்படித்தான் மிர்தாதின் புத்தகம் வழிகாட்டு துவங்குகிறது.
