Friday, November 3, 2023

மிர்தாதின் புத்தகம் - இறையின் இருப்பு - பகுதி 2 / சிவ.கதிரவன்

                                மிர்தாதின் புத்தகம் - இறையின் இருப்பு

 www.swasthammadurai.comகேள்விகள் தகவல் சேகரிப்பிற்காக உருவாக்கப்படுகின்றன. தகவல் சேகரிப்பு என்கிற மனோபாவமே கேள்விகளை உருவாக்குகின்றன. கேள்விகள் அறிவு சார்ந்தவை என்ற பிம்பம் கூட தகவல் சேகரிப்பினுடைய அம்சம் தான். கேள்விகள் அறிவு சேகரிப்பு என்கிற நிலையில் தகவல் சேகரிப்பு என்கிற நிலையில் பொருளாதாரத்தை அதிகமாக்கி கொள்கிற நோக்கத்தில் வாழ்க்கை முறையை இன்னும் செம்மையாக்கி இந்த உலகத்தோடு கரைந்து போவதற்கான தன்மையிலேயே தொடர்ந்து உரையாடல்களாகவும் கேள்விகளாகவும் இருந்து கொண்டே இருக்கின்றன என்பதை நாம் கவனத்தில் வைத்துக் கொண்டு ஒரு கேள்வி எங்கிருந்து உருவாகிறது. ஒரு கேள்வியை எவ்வாறு அணுக வேண்டும் என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

கேட்கப்படுகிற எல்லா கேள்விகளும் தகவல் சேகரிப்பின் அடிப்படையிலேயே கேட்கப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டால் பதில் சொல்கிற எல்லா பதில்களும் எந்த புள்ளியில் கேள்வியை எதிர்கொள்கின்றன என்பதை பார்க்க முடியும். மெய்யுணர்வு குறித்த உரையாடல் என்பது கேள்விகளுக்கு பதில் சொல்வதாக இல்லை. மெய்யுணர்வாளர்கள் பேசப்படுகிற கேள்விகளும் அவர்கள் மத்தியில் கேட்கப்படுகிற கேள்விகளும் அவர்கள் அதற்கு சொல்லப்படுகிற பதில்களும் எப்போதும் தர்கபூர்வமாக இருந்ததே இல்லை. மெய்யுணர்வாளர்கள் பலரும் கேட்கப்படுகிற கேள்விகளுக்கு கேள்விக்குறிய பதில்களை அவர்கள் கொடுப்பதில்லை. ஒன்று கேட்பவர்க்குரிய பதிலாக இருக்கும் அல்லது அந்த தகவலுக்குரிய சரியான பதிலாக இருக்கும் அல்லது அந்த நேரத்திற்குரிய பதிலாக இருக்கும்.

ஒற்றை பதிலை ஒரு கேள்விக்கு நிரந்தரமாக மெய்யுணர்வு பேசுகிறவர்கள் வைத்துக் கொள்வதே இல்லை. ஏனென்றால் மெய்யுணர்வு பேசுகிறவர்கள் அவர்களுக்கு உள்ளே இருக்கிற மெய்யுணர்வு அனுபவத்திலிருந்து ஒரு பதிலை முன் வைக்கிறார்கள். கேள்வியை எதிர்கொள்கிறார்கள் என்பதே இதற்கு காரணம். ஒரு நிரந்தரமான பதில் எப்போதும் மெய்யுணர்வாளர்களிடமிருந்து வருவதே இல்லை.

ஒரு கேள்வியை ஒரு சாதகர், ஒரு சீடர் கேட்கிறார் என்றால் அந்தக் கேள்விக்குரிய விடை அன்று, அப்போது கிடைக்கப்படுகிற விடையாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வேறொரு நிலையில் அதே சீடர் அந்த மெய்யுணர்வு பேசுகிற மெய்யுணர்வாளரிடம் அதே கேள்வியை கேட்பார் என்றால் கடந்த அமர்வில் கிடைத்த பதிலை அவர் மீண்டும் பெற்றுக்கொள்ள மாட்டார். அந்த நேரத்தில் மெய்யுணர்வு பேசுகிற அந்த மெய்யுணர்வாளருடைய இருப்பு நிலையிலிருந்து வெளிப்படுகிற பதில் பழைய கேள்வியாக இருந்தாலும் புதிய கேள்வியாக இருந்தாலும் பதில் என்பது மெய்யுணர்வு நிலையிலேயே வெளிப்படுகிறது. இந்த மெய்யுணர்வு நிலையிலேயே வெளிப்படுகிற பதில் குறித்த புரிதல் மிகுந்த முக்கியமானது.

மெய்யுணர்வாளர்கள் எவ்வாறு பதில் அளிக்கிறார்கள் என்பதிலிருந்து கேள்விகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். மெய்யுணர்வாளர்கள் எவ்வாறு பதில் சொல்வார்கள் என்கிற புரிதலில் இருந்து கேள்விகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்வதற்கு மிர்தாத் போன்ற நூலை படிப்பதற்கு முன் மிகுந்த அவசியமானது என்று நான் கருதுகிறேன். ஏனென்றால் மிர்தாதிற்குள் கேட்கப்படுகிற கேள்விகள் பொதுவெளியில் கேட்கப்படுகிற கேள்விகள் போல இருப்பதில்லை.

கடவுள் பற்றி ஒருவர் மிர்தாதிடம் கேட்கிறார், மடாலயத்தில் இருக்கிற துறவிநான் என்பது பற்றி கேட்கிறார் என்றால் அதனுடைய கேள்வியும் சமூகத்தில் நான் என்று எழுப்பப்படுகிற கேள்வியும் ஒன்றல்ல. மடாலயத்தில் இருக்கிற துறவி ஒருவர் கடவுள் பற்றி கேட்பதும் சமூகத்தில் கடவுள் பற்றி விசாரிக்கப்படுவதும் ஒன்று அல்ல. மிகுந்த கருத்தியல் ரீதியான, நோக்க ரீதியான வேறுபாடு இரண்டு கேள்விகளுக்கும் அல்லது இரண்டு கேட்கும் முறைக்கும் இருக்கிறது. எனவே கேள்விகள் எவ்வாறு எழுப்பப்படுகின்றன. விடைகள் எவ்வாறு தரப்படுகின்றன என்பது குறித்து நமக்கு ஒரு தீர்க்கமான புரிதல் அவசியம். ஒரு மெய்யுணர்வு பேசுகிற ஒருவரிடம் நீங்கள் கேள்விகள் எழுப்புகிற போது உங்கள் கேள்வி உங்கள் தேடலில் இருந்து உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. உங்கள் கவனத்தில் நிறுத்த வேண்டியது.

ஒரு சினிமா, ஒரு கேளிக்கை போன்ற ஒரு காட்சியை பார்த்துவிட்டு அதில் எழுப்பப்படுகிற தொழில்நுட்ப ரீதியான கேள்வி போல அதற்குள் விவாதிக்கப்படுகிற தொழில்நுட்ப ரீதியான விவாதம் போல ஒரு மெய்யறிவு பேசுபவரிடம் கேட்டுவிட முடியாது. அப்படி கேட்கப்படுகிற கேள்விகள் குறித்து மெய்யறிவாளர்களுக்கு எந்த சிக்கலும் கிடையாது. கேட்பவருக்கு சிக்கல் இருக்கிறது. கேட்பவர் மெய்யறிவாளர் கூறுகிற பதிலை முழுமையாக தவறவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் மெய்யறிவு பேசுகிறவர்கள் கேளிக்கைகள் எழுப்புகிற கேள்விகளுக்கு, கேளிக்கைகள் எழுப்புகிற விவாதங்களுக்கு எப்போதும் பதிலளிப்பதில்லை. அவர்கள் எப்போதும் மெய்யுணர்விலிருந்தே பதில் அளிக்கிறார்கள்.

ஆக, மெய்யுணவாளர்கள் மெய்யுணர்வோடு இருப்பது என்பது எவ்வாறு நிகழ்கிறது எவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இன்னும் கூடுதலாக நாம் புரிந்து கொள்வதன் வழியாக மெய்யணர்வாளர்களின்  பதில் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் விரிவாக புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கடவுள் பற்றி பேசுகிறவர்கள் மெய்யுணர்வாளர்களாக இருக்கிறார்கள். மெய்யுணர்வாளர்கள் கடவுள் பற்றி பேசுகிறார்கள். பொதுவாக இப்படி இருப்பதை நாம் பார்க்கிறோம். கடவுள் என்பது நபரா? பொருளா? இயக்கமா? இவையெல்லாமுமா?  படைப்பா? படைப்பின் ஆதாரமா? என்று தேடுபவரின் வசதிக்கேற்றார்போல், தேடுபவரின் பார்வைக்கு ஏற்றார் போல் விரிந்து கிடக்கிறது. இறை பற்றி, படைப்பு பற்றி, கடவுள் பற்றி கேட்கப்படுகிற எல்லா கேள்விகளுக்கு பின்னாலும் கேட்கப்படுபவரின் விளையாட்டுத்தனங்களுக்கு ஏற்றார் போல் வார்த்தைகளினுடைய அடுக்கு முறை இருக்கத்தான் செய்கிறது. உண்மையிலேயே இறை என்பது நபராக இல்லை. உண்மையிலேயே இறை என்பது பொருளாக இல்லை. ஆனால் எந்த பொருளும் எந்த நபரும் இறை இல்லாமல் இருப்பதில்லை. இயங்குவதில்லை. இறை என்பது ஒரு அதிர்வு. ஒரு உணர்வு. தேடுகிறவர்களுக்கு புரிந்து கொள்ள முயற்சி செய்கிறவர்களுக்கு புரிதலின் அடர்த்திக்கு ஏற்றார் போல் கை கொள்வதற்குரிய வாகான இலகுவான ஒரு பக்குவ நிலை

...தொடர்ந்து பேசுவோம்...



No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...