Friday, November 3, 2023

மிர்தாதின் புத்தகம் - இறையின் இருப்பு - பகுதி 1 / சிவ.கதிரவன்


மிர்தாதின் புத்தகம் - இறையின் இருப்பு

www.swasthammadurai.com


 மெய்யியல் கோட்பாடுகளில், மெய்யியல் விதிகளில் இறை குறித்த உரையாடல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு மனிதனுக்கு உலகில் மிக முக்கியமான கேள்வியாக கடவுளின் இருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கடவுள் இருப்பு குறித்த உரையாடலை விவாதிப்பவர்கள் உண்டு. கடந்துபோபவர்கள் உண்டு. அதைப் பற்றி தமக்குள் ஒரு தீர்க்கமான முடிவை வைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்டு. இப்படி கடவுள் இருப்பு குறித்த உரையாடல் செய்பவர்கள் பலவிதமாக இருக்கத்தான் செய்கிறார்கள். தத்துவ, ஆன்மீக தேடலில் மிகுந்த சவாலான உரையாடல் கருத்தாக கடவுளின் இருப்பு சொல்லப்படுகிறது. இந்த உலகத்தை யார் படைத்தார், இந்த உலகம் எப்போது படைக்கப்பட்டது, அதற்கான தர்கபூர்வமான காரணங்கள்,  விஞ்ஞான பூர்வமான விவாத தொகுப்புகள் என்று இந்த உலகத்தினுடைய இயல்பு குறித்து, இருப்பு குறித்து தொடர்ந்து உரையாடல் மனிதனுக்கு அறிவு தோன்றிய காலத்திலிருந்து உரையாடல் தோன்றிய காலத்திலிருந்து இருந்து கொண்டே இருக்கிறது. அப்படியான உரையாடலை செய்வதற்கு, அப்படியான உரையாடலில் ஈடுபடுவதற்கு ஆர்வம் இருக்கிறவர்கள், ஆர்வத்திற்குரிய சிந்தனை உள்ளவர்கள், இந்த கருதாக்கங்கள் குறித்து தேடிக் கொண்டிருப்பவர்கள் என்று  மெய்யியல் கோட்பாடுகளில் நிறைய நபர்களை நாம் பார்க்க முடியும்.

உலகில் மெய்யியல் கோட்பாடு பேசுபவர்கள், மெய்யியலாளர்கள் என்று கருதப்படும் ஒவ்வொருவருக்கும் முன்பும் கடவுளின் இருப்பு குறித்த வினா எழுப்பப்பட்டு கொண்டே இருக்கிறது. கடவுளின் இருப்பு குறித்த வினா எழுப்பப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விடவும் அது விடை தேட முடியாத அல்லது விடை கிடைத்தாலும் கவனத்திற்குரிய ஒன்றாக பார்க்க முடியாத தன்மையோடு இருக்கவும் செய்கிறது. யாராவது மெய்யியல் குறித்து, தத்துவங்கள் குறித்து பேசுவார்கள் என்றால் அவர்கள் அதிகம் சந்திக்கிற கேள்வி அல்லது தொடர்ந்து சந்திக்கிற கேள்வி கடவுளின் இருப்பு பற்றிய கேள்வியாக இருக்கிறது.

மெய்யியல் கோட்பாடு பேசுபவர்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தளத்தில் பேசப்படுபவர்களாக, பேசுகிறவர்களாக அறியப்படுகிறார்கள். மெய்யியல் பேசுபவர் ஆன்மீக தத்துவ தளத்தில் பேசிக் கொண்டும் கடவுளைப் பற்றி கேட்பவர் அத்தகைய பார்வையோடு இல்லாத நிலையில் இருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. அப்படித்தான் பார்க்கிறோம். கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்கப்படுகிற கேள்வி ஒன்றாக இருந்தாலும் கேட்கப்படுகிற இடம் ஆன்மீகம், தத்துவம், மெய்யியல் என்கிற நிலையில் இருப்பவர் மத்தியிலும் கேட்கும் இடம் மிக எளிய அல்லது ஆன்மீக தத்துவ தேடல் ஏதும் இல்லாத நிலையிலும் இருப்பதில் இவ்வாறு தொடர்ந்து பயணப்பட்டு வந்திருப்பதில் நிறைய ஆவணங்களை நாம் பார்க்கிறோம். அப்படித்தான் கேள்விகள், கேள்விகளுக்குரிய கேட்கும் இடங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.

மெய்யியல் கோட்பாடுகளை பொருத்தவரை ஒரு மனிதனின் கேட்கும் கேள்வியும் கேட்கும் மையப்பொருளும் கேட்கப்படும் இடத்தில் இருக்கிற அந்த தேடலோடு, அந்த பதிலோடு ஒத்திசைவாக இருக்க வேண்டும். போதிதர்மர் பற்றி தொடர்ந்து பேசப்படுகிற கதை ஒன்று இருக்கிறது. போதிதர்மர் புத்த மதத்தை இந்தியாவிலிருந்து வடக்கு நோக்கி கொண்டு சென்றவர் என்று கருதப்படுபவர். போதிதர்மர் பற்றிய வரலாற்றில் அவர் இந்தியாவினுடைய புத்த விதையை சீனாவிற்குள் எடுத்துச் சென்ற மாபெரும் ஞானி என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  போதிதர்மர் ஒரு முறை அந்த நாட்டில் சீன தேசத்தில் தொடர்ந்த புத்த பயிற்சி முறைகளை அம்மக்களுக்கு கற்றுத் தருவதற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். நீண்ட ஆண்டு காலம் வெற்றுச்சுவரை பார்த்துக் கொண்டிருந்தார் என்று அவரைப் பற்றிய குறிப்புகளை படிக்க முடிகிறது. ஏன் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று அவரோடு கேட்டபோது கேட்கப்பட்டபோது நான் தேடுகிற மனிதன் இதுவரை வரவில்லை என்று அவர் பதில் கூறியதாகவும் கருத்துக்கள் உண்டு. என்றாலும் போதிதர்மர் இந்திய மண்ணிலிருந்து புத்த விதையை சீன மண்ணிற்கு எடுத்துக்கொண்டு பரவலாக்க செய்தவர். அவரைப் பற்றி ஒரு பிரபல்யமான, அவருக்கும்  அவர்களது சீடருக்கும் நடந்த கதை.  அவரது சீடர்களை சந்தித்து விட்டு அவர் நாடு திரும்பலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது அவர் தம் சீடர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளும் முகமாக உண்மையைப் பற்றி நீங்கள் என்ன புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அப்போது முதல் சீடர், உண்மை சொல்ல முடியாதது. நாம் கூறுகிற வார்த்தைக்கு அப்பாற்பட்டது என்று கூறுகிறபோது போதிதர்மர் உனது கருத்து, உனது நிலைப்பாடு எனது தோல் அளவில் இருக்கிறது என்று பதில் உரைக்கிறார். மற்றொரு சீடர் உண்மை நாம் வார்த்தைகளின் சாரங்களுக்கு அப்பாற்பட்டு உணர்வின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்று கூறுகிறபோது போதிதர்மர் உனது நிலைப்பாடு, உனது புரிதல் எனது தசையும் சதையுமாக இருக்கிறது  என்று கூறுகிறார். மீண்டும் மூன்றாவது நபர் போதிதர்மருடைய சீடர், உண்மை வார்த்தைகளின் மீது இருப்பதில்லை. சொல்வதற்கும் ஒன்றுமில்லை என்று சொல்லுகிற போது போதிதர்மர் என் எலும்பு வரை வந்திருக்கிறாய் என்று கூறுகிறார். நான்காவது ஒரு நபர் போதிதர்மர் முன்பு வந்து  நின்று புன்முறுவலோடு நிற்கிறார்.   இப்போது என் எலும்பின் மஜ்ஜையாக  உணர்கிறேன் உன்னை என்று போதிதர்மர் கூறுகிறார். மீண்டும் அவர் அந்த உரைக்கு நன்றியாக வணங்கி விடைபெறுகிறார். இருவரும் சிரித்தபடி அமர்ந்திருக்கிறார்கள். இவ்வாறு அந்த கதை நிறைவடைகிறது.

மனிதர்களினுடைய உள அமைப்பை, சீடர்களினுடைய உள அமைப்பை வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி உருவகமாக சொல்வதற்குரிய தன்மையோடு இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நான் பார்க்கிறேன். இந்த கதையின் சாராம்சம் வரலாற்று ரீதியாக ஒருவேளை நிகழ்ந்திருக்க கூடும். ஆனால் ஒரு மறை ஞானியும் அவர்களது சீடர்களும் உரையாடிக் கொண்டிருக்கிற போது சீடரில் ஒருவர் உண்மை என்பது எங்கிருக்கிறது என்ற கேள்விக்கு விடை அளிக்கிறபோது உண்மையை தர்கபூர்வமாக பார்க்கிறார். அவர் மறைஞானியின் எல்லையில் இருந்து மறைஞானியின் தோள் அளவில் இருக்கிறார்.  உண்மையை தர்க்கம் கடநது இன்னொரு அடி பார்க்கிற இன்னொரு சீடர் அந்த மறைஞானியின் தோலுக்கு அடியில் சதையும் தசையுமாக மாறுகிறார். மூன்றாவது நபர் உண்மையினுடைய வார்த்தைக் அப்பாற்பட்டு செல்ல முடியும் என்று கூறுகிறபோது அவர் அந்த மறைஞானியின் எலும்பு போல இருக்கிறார். நான்காவது நபர் சொல்வதற்கு ஏதுமில்லை. உண்மை விசித்திரமானது. உண்மை பரவலானது. உண்மை புரிந்து கொள்வதற்குரியது. உண்மை வார்த்தைகளால் விளக்கப்படுவதற்கு ஏதுமில்லை என்கிற குறியீடோடு  மௌனமாக சிரிக்கிறார். இது அந்த மறைஞானியினுடைய மையத்தோடு இணைகிறது.

ஒரு மறைஞானியின்  மறைவகுப்பில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டவர்கள், ஏராளமான கதைகளை உரையாடியவர்கள், மறைஞானியோடு விவாதித்தவர்கள் நிறைவு நிலையில் மறைஞானியோடு நெருங்கி வருவதற்கு வேறுவேறு தூரங்களில், வேறுவேறு இடைவெளிகளில் இருக்கின்றனர் என்பதை இந்த கதையின் வழியாக நாம் பார்க்க முடிகிறது.

உண்மை என்பது உண்மை பற்றி பேசுகிற மறைஞானியினுடைய தன்மையிலிருந்து ஒன்றாகவும் உண்மையைப் பற்றி புரிந்து வைத்திருக்கின்ற, உண்மையைப் பற்றி கேள்வி எழுப்புகிற சீடர்களின் நிலையிலிருந்து வேறொன்றாகவும் இடைவெளியோடு இருக்கிறது என்பது மிகுந்த கவனத்திற்குரியது.

ஒரு ஆன்மீக அல்லது தத்துவார்த்த மெய்யியல் கோட்பாடுகளை வாசிக்கிற போது கேட்கப்படுகிற கேள்வியும் கேட்கப்படுகிற இடமும் ஒற்றைப் புள்ளியில் சந்திக்கிறபோது நிறைவான திசையில் அது நகர்கிறது. வெளிப்படையான திசையில் அது நகர்கிறது என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியும். உண்மை அல்லது கடவுள் அல்லது இருப்பு அல்லது மெய்யுணர்வு என்று பேசப்படுகிற எல்லாவற்றிற்குப் பின்னாலும் இப்படியான சந்திப்பு நிகழ்வது அவசியம். இப்படியான சந்திப்புகள் இல்லாமல் கேள்விகள் வெறுமனே வார்த்தை கோர்வைகளாக, கேட்பதற்குரிய ஆர்வத்தோடு மட்டும் இருந்து விடுகின்றன. கேட்கப்படுகிற ஆர்வம் என்பது கேட்பவரின் தேடலாக இருக்கும் என்றால் அந்த ஆர்வம் மதிப்பிற்குரியது. கேட்பவரின் தேடல் என்பது அவரது உள்ளுணர்விலிருந்து, உணர்வுபூர்வமான தன்மையோடு, தாகத்தோடு இருக்கும் என்றால் அந்தக் கேள்வி மதிப்பிற்குரியது. ஆனால் கேள்விகள் சமகாலத்தில், சமூகத்தில், பொருளாதார தேடல் உள்ள கூட்டத்திற்கு மத்தியில் எல்லா கேள்விகளும் தகவல் சேகரிப்பிற்காக இருக்கின்ற போது கேட்கப்படுகிற கேள்வியினுடைய தரம் என்பது மெய்யுணர்வு என்கிற அடிப்படையில் ஒப்பிடுகிற போது மிகுந்த குறைபட்டதாகவே இருக்கிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...