Monday, April 13, 2026

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு(பகுதி -2 ) - சிவ கதிரவன்

                 விருப்பம் - சுதந்திரம் - பொறுப்புணர்வு


  எந்த ஒன்றின் மீது பொருந்த முடியவில்லையோ உங்களுக்கு பொருத்தம் என்பது தோன்றவில்லையோ அப்போதெல்லாம் அதன் மீது விருப்பம் இருக்காது. இவ்வாறாக ஒரு எளிமையான சமன்பாடு போல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எளிமையாக நாம் பார்த்தோம் என்றால் பொருத்தமாக இருக்கிற எல்லாவற்றிலும் நீங்கள் விருப்பமாக இருப்பீர்கள். உங்களுக்கு பொருந்தாத ஒன்றின் மீது விருப்பம் ஏற்படாது. இது எளிமையானது. பொருந்தாத ஒன்றின் மீது அல்லது விருப்பமில்லாத ஒன்றின் மீது நீங்கள் இருக்கிற போது  அதனை விட்டு விலகுவது என்பதுதான் உங்களுக்கு நிறைவைக் கொடுக்கும். அவ்வாறு இல்லாமல் விருப்பமில்லை என்றாலும் அதில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் உந்தப்படுவீர்கள் எனில் அந்த வேலையில் நீங்கள் ஈடுபட முடியும். நல்ல வெற்றி கூட காண முடியும். ஆனாலும் அது உங்களுக்கு ஒரு மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான கருத்து.  மன அழுத்தம் என்ன செய்கிறது? இந்த மன அழுத்தத்தின் வழியாக அந்த மனம் இருக்கிற உடலிற்கு சொந்தக்காரர் என்னவாகிறார் என்பதுதான் இன்று நோய்களுக்குரிய காரணமாக இருக்கிறது.

எவ்வளவு நோய்கள் வந்திருக்கின்றன என்று நீங்கள் பட்டியல் எடுத்துப் பார்க்கிற போது அவ்வளவு நோய்களுக்குப் பின்னாலும் மன அழுத்தம் என்பது குறிப்பிடத் தகுந்த ஒரு வேலையை செய்து கொண்டே இருக்கிறது என்பதை நீங்கள் காண முடியும். நான் துவக்கத்தில் கூறியது போல உடலிற்கு அடிப்படையான சில இயக்க முறைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். உடலிற்குள் மூச்சின் இயக்கம், செரிமான இயக்கம், வியர்வை வெளியேற்றம், சிறுநீர் வெளியேற்றம், இன்ன பிற கழிவுகள் வெளியேறுகின்ற வெளியேற்ற முறைகள் உங்கள் உடலினுடைய அவையங்களின் இயக்கம், உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் என்று பலவகையான உடல் இயக்கங்களை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இந்த உடல் இயக்கம் தன்னளவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது என்பதும் இந்த இயக்கங்களுக்கு தூண்டல் என்பது அதன் உள்ளேயே இருந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய உடல் இயங்கும் முறை.

உண்பதால் சத்தாக இருக்கிறோம், உறங்குவதால் சத்தாக இருக்கிறோம் என்கிற கோட்பாடுகள் எல்லாம் தனியாக வைத்து விட்டு பார்த்தால் கூட உயிரோடு இருக்கிற ஒரு உடல் தோற்றத்திற்கு அதன் அளவில் இயக்கம் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, இது மனித உடலிற்கும் பொருந்தும். உடல் எவ்வாறு இயங்க வேண்டும் என்கிற வரம்புகளையும் வரையறைகளையும் அந்த உடலுக்குள்ளேயே ஒரு சூத்திரம் போல் வைத்திருக்கிற அமைப்பும் இருக்கிறது.  இப்படி இயக்கம் முறைப்பட இயங்கிக் கொண்டே இருக்கிற போது இது நலமாக நிறைவாக இயங்குவதற்கு நம்முடைய மன செயல்பாடு இன்றியமையாத பங்கு வகிக்கிறது.  ஒரு தனி மனிதனினுடைய மனச் செயல்பாடு உடலினுடைய இயக்கப் போக்கிற்கு மிக நெருக்கமாக  பங்காற்றுகிறது என்பதுதான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து.

உடல் தன்னளவில்  இயங்கிக்கொண்டே இருக்கிறது. அந்த உடலில் இருக்கிற உறுப்புகள் தன்னளவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை யாவும் முறைப்பட, நெறிப்பட அதற்கே உரிய தூண்டலோடு இயக்கம் கொள்கின்றன. உள்வாங்குகின்றன, வெளித் தள்ளுகின்றன, சுழல்கின்றன,  பெருக்கின்றன, மெலிகின்றன. இவ்வாறு பல வகையான இயக்கங்கள் உள்ளே நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வளவு இயக்கமும் இயல்பு மாறாமல் நிகழ்ந்து கொண்டிருப்பவை. இந்த  இயக்கத்தை அப்படியே நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள் என்றால் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்றும் இதில் தடுமாற்றம் ஏற்படும் என்றால் நீங்கள் நலக்குறைவிற்கு உள்ளாகிறீர்கள் என்றும் நலம் பற்றி நீங்கள் எளிமையாக உணர்ந்து கொள்ள முடியும். இதுதான் நலம் குறித்து இருக்கிற எளிமையான வரையறை.

இயல்பாக இருக்கிற உடல் எப்பொழுது தன் இயல்பிலிருந்து விலகுகிறது, இயல்பிலிருந்து பிறழ்வடைகிறது? - விருப்பமான மனநிலையில் உடல் இயங்கும் என்றால் அந்த உடல் இயல்பு மாறாமல் இயங்கும். அழுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, விருப்பமில்லாமல் ஒரு செயல்பாட்டில் அந்த உடல் இயங்கும் என்றால் அந்த உடலினுடைய இயல்பான இயக்க முறை என்பது பிறழ்விற்கு உள்ளாகும். அது நோயாக வளர்ச்சி அடையும் என்பதுதான் மன அழுத்தம் என்பது உடலின் இயல்பை பிறழ்விற்கு உள்ளாக்குகிற கதை.   

நீங்கள் எந்த ஒன்றில் ஈடுபடுகிறீர்களோ, ஆர்வம் காட்டுகிறீர்களோ எந்த ஒன்றை செயல்படுத்துகிறீர்களோ இவற்றிற்குள் எல்லாம் நீங்கள் முழு விருப்பத்தோடு இருப்பீர்கள் என்றால் அந்த செயல்பாடுகள் வழியாக உங்களுக்கு எப்பொழுதும் நோய் வராது. நோய் வருவதற்கு நான் முன்பு சொன்னது போல பல காரணங்களை நீங்கள்  கூற முடியும், உணவு, மாசு, சுற்றுச்சூழல் கேடு, நஞ்சாக்கப்பட்ட உணவு உற்பத்தி முறை என்றெல்லாம் பல காரணிகள் இருந்தாலும் கூட மிக அடிப்படையாக உடலை நீங்கள் மேம்படுத்திக் கொள்வதற்கு விருப்பத்தின் பாற்பட்டு உங்கள் உடல் நலத்தை பராமரித்துக் கொள்வீர்கள்  என்றால்  உங்கள் வேலைத்தன்மையை அமைத்துக் கொள்வீர்கள் என்றால் நீங்கள் முழுவதுமாக நலம் பெறுவதற்கு அல்லது இழந்த நலத்தை மீட்பதற்கு மிக எளிமையான சாத்தியங்களை வாய்ப்புகளை பெறுவீர்கள்.

விருப்பம் இல்லாத செயல்களை செய்யாதீர்கள். விருப்பமில்லாத பணியில் உங்களை ஈடுபடுத்தாதீர்கள். விருப்பமில்லாத சொற்களை நீங்கள் சொல்லாதீர்கள் என்றவாறு நீங்கள் விருப்பத்திற்கு உரிய வகையில் உங்களது நடைமுறைகளை மாற்றிக் கொள்வீர்கள் என்றால் அது உங்கள் நலம் பெறுவதற்கான அருமருந்தாக செயல்படும். உங்கள் நலம் மீட்கப்படுவதற்கான அருமருந்தாக செயல்படும். இவ்வாறு மன அழுத்தம் உடல் நலத்தில் வினையாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றால் மன அழுத்தம் இல்லாத ஒரு வாழ்க்கை முறையை ஒரு செயல்பாட்டு முறையை நீங்கள் கடைபிடிக்க முடியும். 

எந்த செயல்பாட்டிலும் எந்த இயக்கத்திலும் எந்த நடைமுறையிலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது - விருப்பத்தோடு நாம் அவற்றில் ஈடுபடுகிறோமா? விருப்பத்தோடு அவற்றில் நாம் வினையாற்றுகிறோமா?  செயல்படுகிறோமா என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் உங்களுக்கு அந்த பணியின் காரணமாக, அந்த செயல்பாடுகளின் காரணமாக எந்த விதத்திலும் உடல் நலப் பிறழ்வு  என்பது ஏற்படாது என்பதை நீங்கள் கண்கூடாக மெய்ப்பாடாக பார்க்க முடியும். 

                                            

அடுத்து, நீங்கள் விருப்பமான முறையில் உங்களது செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்ள துவங்குவீர்கள் என்றால் அந்த விருப்பமான செயல்பாடு என்பது உங்களுக்கு வழங்குகிற உயர்வு உங்களது சுதந்திரம். ஒரு குறுக்கு வழியில் நான் சுதந்திரமாக இருக்கப் போகிறேன் என்று நீங்கள் இவற்றை புரிந்து கொள்ளக்கூடாது. நீங்கள் ஈடுபடுகிற யாவற்றிலும்  நீங்கள் விருப்பத்தோடு இருக்கிறீர்கள் என்பது முதல் நிலை. நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா என்பது அதன் அடுத்த ஆழம். நீங்கள் சுதந்திரமாக இருப்பீர்கள் என்றால் நீங்கள் ஈடுபடுகிற செயல்பாடு உங்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். நீங்கள் இப்போது ஒரு கற்பனைக்காக கண்ணை மூடி உங்களை சுற்றி இருக்கிற செயல்பாடுகளில், உங்களது உறவு பாராட்டும் உறவு முறைகளில் எந்த அளவிற்கு சுதந்திர உணர்வோடு இருக்கிறீர்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் எத்தனை கட்டுகளை உங்கள் கைகால்களில் கட்டி இருக்கிறீர்கள் அல்லது கட்டப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை எளிமையாக பார்க்க முடியும். இவ்வளவும் உங்களுக்கு மன அழுத்தத்தை தருகிற கட்டுகள். நீங்கள் சுதந்திரமாக செயல்படாத போது அல்லது விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற போது அவை ஏற்படுத்துகிற விளைவு என்பது முதன்மையாக உங்கள் உடல்நலப் பிறழ்வு. எனவே உடல் நலப் பிறழ்வில் இருந்து நீங்கள் விடுபடுவதற்கு நீங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்பி சுதந்திரமாக செயல்படுவீர்கள் என்றால் அது உங்கள் நலம் மேம்படுவதற்கு தொடர்ந்து உதவும்.

சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று சொன்னவுடன் நான் இன்றிலிருந்து சுதந்திரமாக செயல்பட போகிறேன் என்று நீங்கள் முடிவு செய்யலாம். எவற்றையெல்லாம் சுதந்திரத்தின் மீதான சிக்கல் என்று கருதிக் கொண்டிருக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்கள் இன்று செய்யத் துவங்கலாம். அப்படித்தான் நான் பார்த்திருக்கிறேன். என்ன நிகழும்? இப்போது இருந்து சுதந்திரமாக செயல்படு என்று நான் ஒருவரிடம் சொல்லி விட்டேன். உடனடியாக அவர் செய்த காரியம் இரவெல்லாம் விழித்திருந்தது. இரவெல்லாம் விழித்திருப்பது கண்விழித்து சினிமாவிற்கு செல்வது, இரண்டு, மூன்று மது புட்டிகளை முற்றுமுதலாக குடித்துக் களிப்பது, தொடர்ந்து புகைப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகளை அவர் சுதந்திரம் என்று  செய்ய துவங்கினார். இந்த சுதந்திரமான செயல்பாடுகளை இவ்வாறு புரிந்து கொண்டு நீங்களும் கூட அவ்வாறு செய்யத் துவங்கக்கூடும். அது ஒன்றும் பிழையானது அல்ல. இவ்வாறு ஈடுபட்டுக் கொண்டிருக்கிற போது அவர் தன் உடல் அளவில் சோர்வினையும்  நெருக்கடிகளையும் பார்க்கத் துவங்கினார்.  சுதந்திரமாக இருக்கிறபோதும் உடல் சோர்வு ஏற்படுகிறது என்பதை உணரத் துவங்கினார். உங்களுக்கும் அப்படி உணர்வு ஏற்படும். இப்போது உங்கள் உடலில் நீங்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டலை உங்கள் உடலளவில் பெறுவீர்கள்.

நீங்கள் சுதந்திரமாக இருக்கத் துவங்கியவுடன் மிகக்  குறுகிய காலத்தில் உங்கள் சுதந்திரம் உங்களுக்கு பொறுப்புணர்வை கற்றுக் கொடுக்கும். நீங்கள் பொறுப்புணர்வோடு உங்களை பராமரித்துக் கொள்கிற நிலைக்கு உயர்வீர்கள். முதலில்  விரும்புவதை எல்லாவற்றையும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த செயல்பாடுகள் பலவற்றின் மீது உங்களுக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும். அந்த செயல்பாடுகள் உங்கள் உடலை என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். உங்கள் சுதந்திரத்திற்கு உங்கள் உடல் தான் உறுதுணையாக இருக்கிறது என்பதை உணர்வீர்கள்.

நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ஒரு நலமான உடல் இல்லாமல் சுதந்திரமாக இருக்க முடியாது என்பதை உணர முடியும். இவ்வாறு உங்கள் உடல் நலத்துடன் இருப்பதை நீங்கள் பொறுப்பாக்கிக் கொள்வீர்கள். உடல்நலத்தின் மீது நின்று கொண்டு சுதந்திரமாக இருக்கிற நிலைக்கு நீங்கள் உயர்வீர்கள் என்பது அதற்குள் நிகழ்கிற அடுத்த நிலை உயர்வு. 

--- தொடரும் ---

Tuesday, April 7, 2026

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு - சிவ கதிரவன்

              உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு

உடல்நலம் என்பதில் மன அழுத்தம் என்பது கவனிக்கத்தக்க கருத்தாக  இருக்கிறது. பலரும் மன அழுத்தமாக   இருக்கிறது என்று பேசுவதை கேட்க முடிகிறது. இன்றைக்கு அது ஒரு பொதுச் சொல்லாக மாறிவிட்டது என்கிற அளவில் நாம் பார்க்கிறோம்.

 உடல் நலத்தில் மன அழுத்தம் என்பது எவ்வாறெல்லாம் வேலை செய்கிறது? உடல் நலத்திலிருந்து நலிவுற்று போவதற்கு மன அழுத்தம் என்பது எவ்வாறெல்லாம் வினையாற்றுகிறது என்கிற அடிப்படையில் நாம் சில செய்திகளை புரிந்து கொள்ளும் முகமாக இந்த உரையாடல்.

உடல் என்பது அடிப்படையாக தன்னளவில் ஒரு இயக்க முறை கொண்டது. உடலிற்கு தானாக இயங்குவதற்கு சில வரம்புகள் அமைந்திருக்கின்றன. உடல் தன்னளவில் தொடர்ந்து இயங்குவதற்குரிய வாய்ப்புகள் பெற்றிருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உயிரோடு இருக்கிற எல்லா உயிர்த் தோற்றங்களும் தன்னளவில் ஒரு இயக்க முறையை வைத்திருக்கின்றன. இயக்க முறை என்பது சொந்தமான தூண்டல், சொந்தமான நிறுத்தம் என்பதை உள்ளடக்கியது. எப்போது பார்க்க வேண்டும்? எப்போது ஒலி எழுப்ப வேண்டும்? எப்போது ஒலியை நிறுத்த வேண்டும்? என்றெல்லாம் பல வகையான தூண்டல்களையும் வரம்புகளையும் ஒருங்கே பெற்றிருக்கிற  இயக்க முறையாக உயிர்த்தோற்றங்களுக்கு உடல் அமைந்து இருக்கிறது. இது உடல் பற்றி இருக்கிற ஒரு சாரமான கருத்து. மனிதன் உடலிற்கும் அது பொருந்தும். ‘உயிரோடு இருக்கிற மனித உடல்’ என்று நான் ‘உயிரோடு இருக்கிற’ என்கிற சொல்லை இணைத்துச் சொல்கிறேன். உயிரோடு இல்லை என்றால் அதற்கு வேறு வகையான இயங்குமுறை உண்டு. உயிர் பற்றி கவலைப்படுவது, நலம் பற்றி பேசுவது என்பது உயிரோடு இருக்கிற மனித உடலுக்குத் தான் பொருத்தம்.

மற்ற உயிர் தோற்றங்களுக்கு  நலம் குறித்த வேறு வகையான இயங்குமுறை அமைந்திருக்கிறது. இந்த இயங்கு முறைகள் அவற்றை பராமரிக்கின்றன. அவற்றை பராமரிக்கின்றன; மீட்டெடுக்கின்றன; இணைக்கச் செய்கின்றன. இவையெல்லாம் தனியாக இருப்பவை. உயிரோடு இருக்கிற மனித உடல் தோற்றத்திற்கு நலம் என்பதும் நலிவு என்பதும் பல தளங்களில் உரையாடப்படுகின்றன. அவ்வாறு உரையாடப்படுகிற போது மிகக் குறிப்பாக  தற்காலத்தில் இந்த உடல் நலம் நலிவுறுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் இன்றியமையாத காரணமாக மனிதனுக்கு மன உளைச்சல், மன அழுத்தம் இருக்கிறது. இது உடல் நலிவுறுவதற்கு இன்றியமையாத காரணமாக இருக்கிறது என்பதை நாம் கேட்க முடிகிறது. எல்லா வகையான நோய்களுக்கும் ஒரு வகையில் மன அழுத்தத்தை காரணமாகக் கூறுவதை பார்க்க முடிகிறது. இந்த நோய் தான் என்று வரம்பு ஒன்றும் கிடையாது. உங்கள் பார்வை திறனில் சிக்கல் வரும் என்றால் மன அழுத்தம் என்று கூறுவது உண்டு. உங்கள் செரிமானம் சிக்கலாகிறது என்றால் அதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது. உங்கள் சுவாச சிக்கலுக்கு என எந்த வகையான உடல் இயங்கும் முறைக்கும் மன அழுத்தம் காரணமாக இருக்கிறது என்று இன்று உரையாடப்படுகிறது. உங்களுக்கும் அப்படி கேள்வி இருக்கும், கேள்விப்பட்டிருப்பீர்கள். மன அழுத்தம் இல்லாமல் ஒரு உடல் நலக் குறைபாடு இல்லை என்கிற அளவிற்கு மன அழுத்தம் உடல் நலத்தில் செல்வாக்கு செலுத்துகிற கருத்தாக மாறி இருக்கிறது. நீங்கள் மன அழுத்தத்தை நெறிப்படுத்திக் கொள்வீர்கள் என்றால் இல்லாமல் பார்த்துக் கொள்வீர்கள் என்றால் நீங்கள்  நோய்களில் இருந்து உங்களை விடுதலை செய்து கொள்ள முடியும் என்று கோட்பாடுகள் எல்லாம் நடப்பில் இருக்கின்றன. எனவே மன அழுத்தம் என்பதும் உடல் நலிவு  என்பதும் ஒன்றை ஒன்று நெருக்கமாகப் பொருத்திக் கொள்கிற கருத்தாக இருக்கிறது.

 மன அழுத்தம் உடல் நலத்தை எவ்வாறு நலிவுறச் செய்கிறது அல்லது மன அழுத்தத்தில் ஏற்படுகிற மேம்பாடு, நன்னிலை எவ்வாறு உடல் நலத்தை உயர்த்துகிறது என்பதுதான் இந்த உரையின் சாரமாக நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த உரையில் நான் கூறியது போல உங்கள் யாவருக்கும் மன அழுத்தத்திற்கும் உடல் நலத்திற்கும் இடையே இருக்கிற தொடர்பு குறித்து புரிதல் இருக்கக்கூடும். பலர் உடல் நலம் முறைப்பட மேம்பட்டு இருப்பதற்கு மன அழுத்தம் முறையாக இருப்பது ஒரு காரணமாக இருக்கும் என்று கருதிக் கொண்டிருக்கிறீர்கள். மன அழுத்தம் நன்றாக அடர்த்தியாக இருக்கிறபோது உடல்நலம் குன்றுகிறது, உடல் சோர்வடைகிறது என்பதை பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மனித உடல் நலத்தில் மட்டும் தான் மன அழுத்தம் என்கிற காரணி உடல் நலிவிற்கு இன்றியமையாத காரணியாக அமைந்திருக்கிறது. வேறு எந்த உயிர் தோற்றத்திற்கும் மன அழுத்தம் குறித்த சிக்கல் இல்லை. புவியில் பார்க்கிற, தோன்றி இருக்கிற, தோற்றமாய் இருக்கிற எந்த விதமான உயிரின வகைக்கும் மனம் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள முடியும். அதற்கான நெறிச் சான்றுகள் இருக்கின்றன. மனதினுடைய வளர்ச்சி எல்லா உயிர் தோற்றங்களுக்கும் ஒருவகையாக இருக்கின்றன என்பதை நாம் அறிய முடியும்.  ஆனால் மனமும் அதற்குள் விளைகிற மன அழுத்தம் என்கிற கருத்தும் உடல்நலத்தை சிக்கலாக்கும் அளவிற்கு மாற்றம் அடைகின்றன என்றால் அது மனித உடலுக்கு மட்டும் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மன அழுத்தம் ஒரு மனிதனுக்கு, மனிதனின் உடலிற்கு ஒரு பெரும் நோயை உருவாக்கும் வல்லமையோடு இருக்கிறது என்பது ஒரு வியப்பான உண்மை. உளவியல் சார்ந்த சிகிச்சை முறைகளில் மன அழுத்தம் தான் எல்லா வகையான நோய்களையும் உருவாக்குகின்றன என்ற கருத்து கூட தற்பொழுதும் நடப்பில் இருக்கிறது. அது இன்னும் வளர்வதற்கு காத்திருக்கிறது.  இன்றைக்கு இருக்கிற மனிதர்கள் மன அழுத்தத்தில் அடர்த்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற தனியான உரையாடல் இருக்கிறது. இப்போது உரையாடுகிற கருத்துக்குள்   பார்க்கிற போது ஒரு சிறிய அளவு மன அழுத்தம் இருந்தாலும் உங்கள் உடல் நலிவுற்று போகிறது என்கிற அளவில் நாம் காண்கிறோம். அவற்றை மாற்ற முற்படுகிறோம். அவற்றிற்கு ஏதேனும் பயிற்சி முறைகளை நாடுகிறோம். நல வழிகாட்டலை நாடுகிறோம். இந்த வகையில் நாம் மன அழுத்தம் மற்றும் உடல் நலம் என்கிற உறவை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

நண்பர்களே, மன அழுத்தம் என்பது என்ன என்றால் உங்கள் உடலிற்கு உரிய வரம்புகளில் நீங்கள் நிற்க வேண்டும் என்பதற்கான குறியீடு அது. அதற்கு நாம் பல சான்றுகளை சொல்ல முடியும். உடல் வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்கிற கருத்தை புரிந்து கொள்வதற்கு முன்பு எப்போதெல்லாம் மன அழுத்தம் கொண்டதாக நீங்கள் உணர்வீர்கள் என்றால் நீங்கள் விருப்பம் இல்லாமல் ஒரு செயலில் எப்போதெல்லாம் ஈடுபடுகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் அழுத்தப்படுவதாக உணர்வீர்கள். ஒருவர் நீண்ட காலம் ஒரு செயலில், ஒரு வேலையில் ஈடுபடுகிறார் என்றால் அந்த வேலையில் ஈடுபடுகிற போது அவருக்கு அந்த வேலை குறித்தான விருப்பம் எவ்வளவு இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய கூற்று.

நீங்கள் ஒரு வேலையில் ஈடுபடுகிறீர்கள் என்றால் அந்த வேலையை நீங்கள் யாருக்காக செய்கிறீர்கள்? அந்த வேலையில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு இருக்கிற காரணம் என்ன என்பது முதன்மையானது. அந்த வகையில் நீங்கள் உங்களது விருப்பத்தின் பார்பட்டு  அந்த வேலையில் ஈடுபடுவீர்கள் என்றால் அந்த வேலை உங்களுக்கு கொண்டாட்டமாக நகரும். மகிழ்ச்சிக்குரிய வேலையாக இருக்கும். ஒருவேளை அந்த வேலையில் நீங்கள் ஈடுபடுகிற போது  உங்களின்  விருப்பத்தின் பார்பட்டு  இல்லாமல் உங்களை சுற்றி இருக்கிற சமூகநிலையோ, குடும்ப நிலையோ வேறு  பிற காரணங்களோ அந்த வேலையில் ஈடுபடும்படியாக உங்களை வற்புறுத்தும் என்றால் இந்த வற்புறுத்தல் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதுதான் மன அழுத்தம் பற்றி  இருக்கிற எளிமையான கருத்து. எப்போதெல்லாம் நீங்கள் விருப்பத்தோடு ஒன்றில் ஈடுபடுகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் இயல்பாக இருக்க முடியும். எப்போதெல்லாம் நீங்கள் அழுத்தத்தோடு ஈடுபடுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள் என்பது தான் அதற்குள் இருக்கிற உண்மை.

எனவே இன்று நாம் பார்க்கிற  எல்லா வகையான நடைமுறைகளிலும் குடும்ப உறவாக இருக்கலாம், பணிச் சூழலாக இருக்கலாம், சமூக உறவாடலாக இருக்கலாம், இப்படி எல்லா வகையான தனிமனிதன் ஈடுபாடு காட்டுகிற எந்த வகையான செயல்பாடாக இருந்தாலும் செயல்முறையாக இருந்தாலும் அவர் தன்னளவில் விருப்பத்தோடு ஈடுபடுகிறார் என்றால் அவர் நலமாக இருக்க முடியும். அதே வேளையில் அந்த வேலையில் ஈடுபடுகிறபோது அந்த உறவாடலில், அந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிற போது அவருக்கு ஒரு சுமையான  அல்லது விருப்பமில்லாத ஒரு போக்கு அமையும் என்றால் அது ஏற்படுத்துகிற விளைவு அவர் தன்னளவில்  மன அழுத்தத்திற்கு உள்ளாவார் என்பதுதான். விருப்பமின்மை என்பது ஒரு பொருந்தாமை என்று நாம் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு துளையில்  ஒரு பொருளை பொறுத்த வேண்டும். ஒரு வாய் அகன்ற   பாத்திரத்திற்குள் அகலம் குறைவான இன்னொரு குடுவையை நுழைத்து  நீங்கள் நீர் எடுத்துப் பருக முடியும். வாய் அகலம் குறைவாக இருக்கிற ஒரு பாத்திரத்திற்குள் பருமமான அகலமான இன்னொரு பாத்திரத்தை நீங்கள் அமிழ்த்தி நீர் எடுக்க முடியும் என்றால் அங்கு ஒரு முரண்பாடு ஏற்படும். அங்கு ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது? பொருத்தமில்லை. அந்த பாத்திரத்தினுடைய அகலம் பொருந்தாமல் இருப்பதால் முரண் ஏற்படுகிறது. அழுத்தம் ஏற்படுகிறது. உராய்வு ஏற்படுகிறது.  இவ்வாறு பொருத்தமின்மை என்பது அழுத்தத்திற்கும் உராய்விற்கும் காரணமாக இருக்கிறது என்பதை நீங்கள் இந்த சான்றின் வழியாக புரிந்து கொள்ள முடியும். இன்னும் பல சான்றிதழ் உங்களுக்கும் இருக்கும்.

எங்கெல்லாம் பொருத்தமின்மை இருக்கிறதோ அங்கெல்லாம் நீங்கள் அழுத்தமாக இருப்பீர்கள். எங்கெல்லாம் பொருத்தமின்மை இருக்கிறதோ அங்கு விருப்பமின்மையும் இருக்கும். ஆக, நீங்கள் விருப்பமின்றி ஒன்றில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள் என்றால் அங்கு பொருத்தமின்மை என்பது தான் உங்கள் விருப்பத்திற்கு தடையாக இருக்கிறது. மேலும் உங்கள் மீது திணிக்கப்படுகிற அந்த சுமை, அழுத்தம் உங்களது மன அழுத்தமாக மாறிப் போகிறது. இந்த மன அழுத்தம் ஒருவாராக சுழன்று சுழன்று உங்களுக்குள் ஒரு சுவர் போல் எழும்புகிறது. மன அழுத்தம் என்பது உங்களது இயல்பிற்கு நெருக்கமான குணம் போல் மாறுகிறது, வெளிப்படுகிறது என்பது தான் இன்று பல நோய்களுக்கான காரணமாக இருக்கிறது.

விருப்பமான ஒரு வேலையை உங்களுக்கு பொருத்தமான ஒரு வேலையை நீங்கள் உங்கள் இயல்பு நிலையில் இருந்து செய்வீர்கள் என்றால் உங்களுக்கு மன அழுத்தம் நிச்சயமாக இருக்காது என்பது நீங்கள் ஈடுபடுகிற போது தெரியும். எனவே மன அழுத்தம்  என்பது பொருத்தமின்மையில் இருந்து வருகிறது அல்லது விருப்பமின்மையிலிருந்து வருகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விருப்பமில்லாத ஒன்றில் நீங்கள் ஈடுபடுகிற போதெல்லாம்  உங்களுக்கு மன அழுத்தம் நிச்சயமாக ஏற்படும். பொருத்தம் இல்லாத ஒன்றின் மீது விருப்பம் ஏற்படாது. இந்த கருத்தை நீங்கள் ஒரு சமன்பாடு போல் நினைவில் கொள்ள வேண்டும். எப்பொழுது மனம் அழுத்தம் ஏற்படுகிறது என்றால் எப்பொழுது விருப்பமில்லாமல் ஈடுபடுகிறோமோ அப்பொழுதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது ஒரு பகுதி.

                                                                                                                          --தொடரும்--

Wednesday, June 26, 2024

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                             எண்ணங்கள் பற்றி...



வணக்கம்,

                 இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்ணம், நேர்மறை எண்ணம் என்று நாம் பேசுகிற, கேட்கிற பல செய்திகளை விளக்கிப் பேசிப் பார்க்கலாம் என்கிற  நோக்கத்தில் இந்த உரையாடலை பேசிப் பார்க்கிறோம். இதுவரையிலும் ஆகச்சிறப்பாக எண்ணங்கள், மனம், அதனுடைய செயல்பாடுகள் பற்றி அது எப்படி இயங்குகிறது? எப்படி நடைமுறைப்படுத்துவது?  எப்படி புரிந்து கொள்வது?  என்று அதை ஒட்டி பேசுபவர்கள் என்று பார்த்தால் மிகச் சிறப்பாக யாரையும் பார்க்க முடிவதில்லை.

எண்ணத்தின் வலிமை, எண்ணத்தினுடைய செயல்பாடு, எண்ணத்தினுடைய வெளிப்பாடு என்று பல தலைப்புகளில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. பல விதமான உரையாடல்கள் நடைபெற்று இருக்கின்றன. அது எவ்வளவு பயன்படுகிறது என்பதும் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால் அது அப்படி ஒரு பயன்படும் தன்மையில் இருப்பதாகவும் புலப்படுவதில்லை. சிறிய அளவில் ஆங்காங்கே புரிந்து கொண்ட செய்திகளை புத்தகங்களாகவும் இது போன்ற உரையாடல்களாகவும்  தன்முனைப்பு செயல்பாடுகளாகவும் வெளிப்படுத்துகிறார்கள் என்கிற அளவில் தான் இருக்கிறது.

மிக நேர்மையாக அதிக பொறுப்புடன் மனம் பற்றி, எண்ணங்கள் பற்றி பேசிய  எழுதியவர்கள் என்றால் மெய்யியல் புரிந்து வேலை செய்த மதிப்பிற்குரிய ஓஷோ அவர்களை கூறலாம். மதிப்பிற்குரிய ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கூறலாம். அவர்களுடைய எழுத்துக்களும் நடைமுறையும் பேச்சும் மனிதர்களுக்குள் தோன்றி மனிதனை இயக்குகிற, உறவாட செய்கிற எண்ணங்கள் பற்றி மிக விரிவாகப் பேசி இருக்கிறார்கள். மிக ஆழமாக பேசியிருக்கிறார்கள். சமகாலத்தில் அப்படி பேசியவர்கள் எழுதியவர்கள் என்றால் மதிப்பிற்குரிய அய்யா.ஞானமூர்த்தி அவர்களினுடைய  உரை.  ஒரு மெய்யியல் நூலினுடைய அடிப்படையில்  விளக்கி பேசுவதும் அது பற்றிய உரையாடல் செய்வதையும் பார்க்க முடிகிறது. அது மிகுந்த மதிப்பிற்குரியதாகவும் இருக்கிறது. அதனுடன் ஐயா செந்தமிழன் அவர்களினுடைய  மனம் குறித்த உரையாடல்கள் மதிப்பிற்குரியதாக இருக்கிறது. இப்படி சில குறிப்பிடத்தகுந்த மதிப்பு மிக்க உரையாடல்களும் நூல்களும் குறைவாகத்தான் இருக்கிறது.

Monday, June 24, 2024

நீத்தார் பெருமை - பகுதி 5 - சிவ.கதிரவன்

                                             நீத்தார் பெருமை



துறந்தார் இந்திரனாக இருக்கிறரே ஒருவர் அவர் தான் துறந்தாருக்கு சான்று என்று இந்திரனை குறிப்பிடுகிறார். இந்திரன் கதை குறித்து நாம் வேறொரு பகுதியில் விரிவாக பேசலாம். ஐந்தும் அடக்கியவன், ஆற்றலுக்கு தலைவன் என்று இந்திரனை சொல்கிற போது சொல்கிறார். ஐந்து என்பது என்ன? ஐந்தையும் அடக்குவது என்பது என்ன? என்பது ஒரு தனி விவாதம். அவற்றை நாம் பின்னால் பேசுகிற போது விரிவாக பேசலாம்.

துறவிகள் பற்றி அவர் சொல்கிற போது, "செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலா கார்"  என்று சொல்கிறார். அரிய செயல்களை துறவியர் செய்வர். அத்தகைய அரிய செயல்களை எளிமையானவர், சாதாரணமானவர் செய்ய மாட்டார். ஏனென்றால் அரிய செயல்களை ஏன் துறவியால் செய்ய முடிகிறது என்று பார்க்கிற போது துறவிகள் எதுவும் செய்வதில்லை.  உண்மையிலேயே துறவிகள் எதுவும் செய்வதில்லை. வெறுமனே காத்திருப்பதும் பண்பாக, அருளாக ஒன்றை அணுகுவது மட்டுமே துறவிகளினுடைய செயல்பாட்டு நிலை. ஆக இவர்களை சொல்கிறபோது அரிய செயல்களை செயல்களை செய்பவர் என்று வள்ளுவர் கூறுவது கவனத்திற்குரியது.

துறவிகள் அமைதியாகவும் வழக்கு மொழியில் சொல்வதென்றால் சும்மா இருப்பது. சும்மா இருப்பது அரிய செயல்களாக சமூகத்திற்கு பார்க்கப்படுகிறது. நீத்தார் பெருமையை நாம் படிக்கிற போது சமூகத்தில் இருக்கிற வழக்கத்தை நேர் எதிரான திசையில் வள்ளுவர் அணுகுகிறார் என்கிற புரிதலோடு படிக்க வேண்டி இருக்கிறது. அரிய செயல்களை துறவியர் செய்வர் என்றவுடன் அவர் தண்ணீரில் நடப்பார். தீயில் உள்ளே சென்று வெளியில் வருவார் என்கிற கதைகள் எல்லாம் பொருள் கொள்வதற்கு இல்லை.

Sunday, June 23, 2024

நீத்தார் பெருமை - பகுதி 4 - சிவ.கதிரவன்

                                                                                 நீத்தார் பெருமை



 துறவை மேற்க்கொள்கிற தரமிக்க மனிதர்களை துறவிகள் என்று, நீத்தார் என்று பெருமை செய்கிறார். நூல்கள் எல்லாமும் இப்படிப்பட்ட துறவிகளை பெருமையாக பேசுகின்றன என்று தம் செய்யுளில் சொல்கிறார்.

உலகில் இருக்கிற மனிதர்களினுடைய பெருமை, உலகில் இருக்கிற மனிதர்களினுடைய இறப்பு என்று ஒரு ஆய்வு குறிப்பு அல்லது ஒரு பட்டியல் தயார் செய்தோம் என்றால் இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து எவ்வளவு மனிதர்கள் பிறந்து இறந்திருப்பார்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்தோம் என்றால்  அந்த எண்ணிக்கை எவ்வளவு இருக்குமோ அவ்வளவு பெருமைகளை துறவிகள் கொண்டிருப்பர் என்று அதன் மதிப்பை அவ்வளவு உயர்வாக சொல்கிறார். இதில் ஒரு அழகான உவமை இருக்கிறது. துறவிகளினுடைய பெருமையை இறந்தவர்களினுடைய எண்ணிக்கைக்கு ஒப்பாக வள்ளுவர் சொல்கிறார். நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தில் "துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று"  என்று ஒரு செய்யுள் இருக்கிறது. இந்த செய்யுளில் வள்ளுவர் கூறுகிற உவமை மிக முக்கியமானது. துறந்தாரின் பெருமையை இறந்தார் கொண்டு வள்ளுவர் கூறுவதற்கு காரணம் இந்த மனம் வாழ்வதிலேயே, கொண்டாட்டமாக கழிவதிலேயே பெருமையாக, உற்சாகமாக வாழ்ந்து கொண்டிருக்கும். இந்த மனம் என்று நான் சொல்கிற பொருள் அவசரம் நிறைந்த காரண காரிய அறிவு இல்லாத பரபரப்பான மேலோட்டமான மனநிலை. இந்த மேலோட்டமான மனநிலைக்கு வாழ்வது என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்வது, வாழ்வது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும் அப்படி ஒரு குணம் உண்டு.

தத்துவவாதிகள் மனதை மனம் என்றும் புத்தி என்றும் பிரித்து சொல்வார்கள். புத்தி என்பது அடிப்படையாக இருப்பது. மனம் என்பது அலைபாய்த்து கொண்டிருப்பது. ஆக, அலைபாய்ந்து கொண்டிருக்கிற மனம் வாழ்வது என்பது என்னவென்று தெரியாமலேயே வாழ்வது வாழ்வது என்று அலை பாய்ந்து கொண்டிருக்கிற சூழலில் மனதிற்கு பதற்றம் தரும் வகையாக மனதினுடைய அறியாமையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் முறையாக, மன அதிர்ச்சியின் பொருட்டு துறந்தாரினுடைய பெருமையை இறந்தாரின் எண்ணிக்கை கொண்டு வள்ளுவர் முன் வைக்கிறார். இறப்பு என்பதை, மரணம் என்பதை, நிலையாமை என்பதை மனித மனதால் கொள்ள முடியாது. முன்பே சொன்னது போல மேலோட்டமான மனம், அவசரமான மனம் மரணம் குறித்து ஒன்று சந்திக்க நேர்ந்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகும். பெரும் பரபரப்பிற்குள்ளாகும். இந்த பரபரப்பின் பொருட்டு, மரணம் குறித்து எந்த ஒன்றையும் பார்க்கவோ, படிக்கவோ, ஆய்வு செய்யவோ இந்த மனதால் முடியாது. மனம் அஞ்சிய ஒரு பேசும் பொருள் மரணம்.  ஆக இந்த வாழ்வு என்றால் என்னவென்று தெரியாத இந்த மேலோட்டமான மனதின் அவசரத்திற்கு இறந்தாரின் எண்ணிக்கையைக் கொண்டு அல்லது அப்படி ஒரு உவமையைக் கொண்டு துறந்தாரின் பெருமையை சொல்வதின் வழியாக வள்ளுவர் பாடம் புகட்டுகிறார். அது என்ன பாடம் என்றால் மரணம் என்றவுடன் மனதிற்கு பதட்டம் வருகிறது. ஆனால் துறந்தாருக்கு, துறவிகளுக்கு அவர்கள் உயிரை பின்பற்றி நடப்பவர்கள். அவர்கள் என்ற ஒன்றையும் பற்றி கொள்ளாதவர்கள். தன் உடல்கள் உட்பட, உடைமைகள் உட்பட, உறவுகள் உட்பட எவற்றையும் பற்றி கொள்ளாத  நிலைப்பாடு உள்ளவர்கள். அவர்களுக்கு உயிர் மட்டுமே கவனத்திற்குரியது. அவர்களது கோட்பாடுகளில் உயிர்களுக்கு மரணம் இல்லை. உயிர்களுக்கு பிறப்பும் இல்லை. உயிர் என்பது நித்தியமானது. மற்ற எல்லாமும் மாறக்கூடியது.

Saturday, June 22, 2024

நீத்தார் பெருமை - பகுதி 3 - சிவ.கதிரவன்

 

நீத்தார் பெருமை 



நிறைவாக நீங்கள் ஒரு உணவை உண்ட பின்பு, நிறைவாக நீங்கள் ஒரு  உணவை நீங்கள் எடுத்துக்கொண்ட பின்பு அந்த உணவின் மீது நாம் நிறைவாக உண்டோம் என்று உணர்வு ஏற்படுகிற போது மீண்டும் மீண்டும் அந்த உணவை கட்டாயப்படுத்தி உங்களுக்கு ஒருவர் ஊட்டி விட முடியாது. நீங்கள் அதன் மீது போதுமான நிறைவுத் தன்மையோடு இருக்கிறபோது அதன் மீது உங்களுக்கு இருக்கிற பற்று மெது மெதுவாக விலகிச் செல்வதை நீங்கள் பார்க்க முடியும். அதுதான் துறவு. உங்கள் அனுபவம் நிரம்பி இருக்கிற போது எல்லாவற்றின் மீதும் எல்லா பொருள்களின் மீதும் உங்களை சுற்றி இருக்கிற எல்லா உறவுகளின் மீதும் உங்கள் அனுபவத்தினுடைய அறிவின் பொருட்டு, உங்கள் அனுபவத்தினுடைய நிதானத்தின் பொருட்டு நீங்கள் வைத்திருக்கிற பற்றான செயல்பாடுகள், நீங்கள் வைத்திருக்கிற பற்றுக்கொண்ட  வினையாற்றும் முறை எல்லாமும் மெதுமெதுவாக நகர்ந்து அமைதி நிலைக்கு செல்வதை நீங்கள் பார்ப்பீர்கள். அதற்கு பெயர் துறவு. துறவு என்பது அப்படியானது தான்.

நன்றாக ஒருவர் வாழ்வை நிறைவாக வாழ்ந்திருக்கிறார்.  இந்த வாழ்வில் தமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில்  தவறவிடாமல் எல்லாவற்றையும் நிறைவாக பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார் என்றால் அந்த வாழ்க்கை முறையில் அவர் பெற்றிருக்கிற அனுபவம் அந்த வாழ்க்கைக்கு டே இருக்கிற எல்லாவற்றின் மீதும் எல்லா செயல்பாடுகளின் மீதும் ஒரு நிறைவை அவருக்கு கொடுத்திருக்கும். ஒரு அறிவை அவருக்கு கொடுத்திருக்கும். இது அவரை துறவியாக மாற்றி இருக்கும். ஆக, துறவு என்பது நீங்கள் முயற்சிப்பது அல்ல. உங்களுக்குள் நிகழ்வது.

சிறிய குழந்தையாக இருக்கிற ஒருவர் ஒரு வேலையை செய்கிறார். உதாரணமாக வீட்டில் இருக்கிற ஒரு குழந்தை ஒரு விளையாட்டு பொருளை உருட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு விளையாடுகிறது. தொடர்ந்து விளையாடி அந்த பொருளுக்கும் அதற்குமாக இருக்கிற உறவை பலப்படுத்திக் கொள்கிறது. அந்த பொருளில் அந்த குழந்தை நிறைவு கொள்கிறது. அந்த குழந்தை பின்னாளில் வளர்ந்து நிற்கிற போது அந்த பொருளோடு விளையாடுகிற இன்னொரு குழந்தையை பார்க்கிற போது அந்த குழந்தை விளையாடுகிற விளையாட்டுக்களை அது உருட்டி எழுப்புகிற சத்தங்களை தாம் குழந்தையாக இருந்த போது முழுமையாக நிறைவாக விளையாடிய ஒருவரால் மிகச் சரியான புரிதலோடு பார்க்க முடியும். இப்போது அவர் வளர்ந்திருக்கிறார்.  நிறைவான விளையாட்டிலிருந்து விடுபட்டு இருக்கிறார். வேறொரு அதை பயன்படுத்தி விளையாடுகிறார் என்கிற நிலையில் அதை பார்க்கிறபோது இந்தக் குழந்தையும் நிறைவாக விளையாடுகிற போது சத்தங்களை நிறுத்திக் கொள்ளும் என்கிற புரிதலோடு அவர் அந்த குழந்தை மீது அன்பாகவும் அருளாகவும் காத்திருப்பார். இந்த குழந்தை எழுப்புகிற சத்தத்தின் பொருட்டு அந்த குழந்தை மீது எதிர்வினை செய்யமாட்டார்.

Friday, June 21, 2024

நீத்தார் பெருமை - பகுதி 2 - சிவ.கதிரவன்

 

                                                     நீத்தார் பெருமை



நான் இன்றிலிருந்து ஒரு குறிப்பிட்ட புண்ணிய தளத்திற்கு செல்கிறேன். அங்கு புண்ணிய  நீராடி முடித்தவுடன் நான் இந்த உணவை துறந்து விடுகிறேன். இன்றிலிருந்து இந்த உணவை நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். இந்த உணவை பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்கிற துறவு சொற்கள் சமூகத்தில் உண்டு. குறிப்பாக காசியில், இராமேஸ்வரத்தில் சென்று இன்றிலிருந்து உருளைக்கிழங்கை சாப்பிட மாட்டேன். பாகற்காயை சாப்பிட மாட்டேன். நான் அவற்றைத் துறந்து விட்டேன் என்று துறக்கிற துறவு என்பது துறவாகுமா? இந்த துறவை பற்றி தான் நீத்தார் பெருமையில் வள்ளுவர் பேசுகிறாரா என்றெல்லாம் பேசிp பார்ப்பதற்காக இந்த உரையாடலை செய்து கொண்டிருக்கிறோம்.

இன்னும் சமூகத்தில் நோன்பு நோற்று இருக்கிற இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுகிற நம்பிக்கையாளர்கள் நோன்பு துறப்பு என்கிற ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். நோன்பு காலங்களில் நோன்பு துறக்கிற நேரம் என்று ஒரு நேரத்தை துறப்பு நேரமாக வைத்திருக்கிறார்கள். நோன்பு நோற்று இருக்கிற அந்தக் குறிப்பிட்ட நேரத்தை நிறைவு செய்யும் முகமாக அவர்கள் நோன்பை துறந்து, உணவை எடுத்துக்கொள்கிற நேரமாக குறிப்பிடும் வண்ணம் நோன்பு துறப்பு என்று ஒரு சொல்லை பயன்படுத்துகிறார்கள். இத்தகைய செயல்பாடு துறப்பு ஆகுமா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த வகையிலேயே துறப்பு, துறவு, துறவி என்கிற சொல்லிற்கு பின்னால் இருக்கிற மெய்யான பொருள் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஆக, துறவு என்பது நான் மேற்சொன்ன வகையிலேயே அமைந்திருக்கிறதா என்றால் அவ்வளவுதான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் துறவு என்பது அப்படியானது அல்ல. வள்ளுவரினுடைய அறிமுகத்தில் வள்ளுவர் துறவியர் பற்றி அறிமுகம் செய்கிற போது அவர்களுக்கு வணக்கம் சொல்கிற முகமாகவும் அவர்களுக்கு புகழ் செலுத்தும் முகமாகவும் அவர்களை போற்றும் முகமாகவும் பாடல்களை வடிவமைக்கிறார்.

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு(பகுதி -2 ) - சிவ கதிரவன்

                      விருப்பம் - சுதந்திரம் - பொறுப்புணர்வு உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு - (பகுதி -1)     எந்த ஒன்றின் மீது பொருந்த மு...