Tuesday, April 14, 2026

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு(பகுதி -3 ) - சிவ கதிரவன்

 உடல் நலன் - மன அழுத்தம் - விருப்பம்



 உங்கள் உடல் மீது நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளும் போது என்ன நிகழும்?  - நான் முதலில் குறிப்பிட்ட உங்களது உடலினுடைய இயல்பான வரம்புகளை நீங்கள் பின்பற்றுவீர்கள். உங்கள் உடல் தன்னளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தன்னளவில் தூண்டிக் கொள்கிறது. தன்னளவில் தனக்கு உதவாதவற்றை வெளியில் தள்ளுகிறது. தனக்கு ஊக்கமானவற்றை உள்ளே வைத்துக் கொள்கிறது. வளர்கிறது. புதிதாக பிறக்கிறது. பரவுகிறது, கொண்டாடுகிறது என்கிற பல நுட்பமான உடல் செயல்பாடுகளை நீங்கள் புரிந்து கொண்டு அவற்றிற்கு எந்த வகையிலும் குந்தகம் வராத வண்ணம் அவற்றின் இயல்பு கெடா வண்ணம் உங்களை நீங்கள் பொறுப்புடன் பார்த்துக் கொள்வீர்கள் என்பது சுதந்திரம் வழங்குகிற உயர்வு.

இந்த சுதந்திரத்தினுடைய பொறுப்புணர்விலிருந்து உங்கள் உடலினுடைய இயல்பை, ஆழமான நுட்பங்களை நீங்கள் தக்க வைத்துக் கொள்வதும் அதன் போக்கில் உங்கள் வேலைகளை, செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதும் முறையாக நெறியாக அவற்றில் ஈடுபடுவதும் உங்களுக்கு இயல்பாக நிகழும். இந்நிலையில் உங்களுக்கு மன அழுத்தம் என்பது இல்லாமல் போகும். முற்றிலும் தணிந்த நிலையில் நீங்கள் மன அழுத்தம் குறித்த கருத்துகளை பார்க்க முடியும். மன அழுத்தம் ஏற்படுவதற்கு எந்த வகையிலும் வாய்ப்பு இல்லாத நபராக நீங்கள் இருப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் பொறுப்புடன் இருக்கிறீர்கள். ஏனென்றால் அந்த பொறுப்பிற்கு காரணமாக சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் விருப்பமான ஒன்றில் மட்டுமே ஈடுபடுகிறீர்கள். பொருத்தமான ஒன்றில் மட்டுமே ஈடுபடுகிறீர்கள். இவ்வாறு இருக்கையில் உங்களுக்கு எப்பொழுதும் மன அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த உளவியல் இலக்கணங்களுக்கு உள்ளாக இன்று உங்களது வாழ்க்கை எத்தனை வாய்ப்புகளை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

பெரும் நிறுவனங்களில் நீங்கள் பணியில் இருக்கக்கூடும். பெரும்துறை சார்ந்து நீங்கள் பணியாற்றக் கூடும். இப்படி பல முரண்பட்ட சூழலில் இருப்பதற்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. தற்காலத்தில். இந்நிலையில் நீங்கள் விருப்பமாகவும் சுதந்திரமாகவும் இருப்பதற்குரிய வாய்ப்பு மிகவும் குறைவாகத்தான் இருக்க முடியும் என்றால் இப்போது என்ன செய்வது என்று பார்க்கிற போது நான் உங்களுக்கு வழங்குகிற பரிந்துரை என்னவென்றால் மிக எளிமையாக, வாய்ப்புள்ள நேரங்களில் நீங்கள் உண்பது, உறங்குவது, இன்ன பிற ஓய்வு நேரங்களில் செயல்படுவது என்கிற அளவில் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்யாதீர்கள். நீங்கள் நடக்க வேண்டும் என்று விரும்புகிற போது நீங்கள் விருப்பமாக நினைக்கிற போது நீங்கள் நடந்து கொடுங்கள்.  பொருத்தமான உணவை உண்ண வேண்டும் என்று எந்தவித அழுத்தமும் இல்லாமல் உணவை உட்கொள்ளுங்கள். துவக்கத்தில் அடக்கி வைத்த நெருக்கடிக்கு உள்ளான விருப்பம் சில தாறுமாறான நடைமுறைகளை உங்களுக்கு சந்திக்கச் செய்யும். அவை ஒன்றும் குறை அல்ல என்றாலும் உங்கள் விருப்பத்தின் பாற்பட்டு நீங்கள் நகர்கிறபோது மிக குறுகிய காலத்திலேயே உங்களுக்கு பொருத்தமான உணவு, உங்களுக்கு பொருத்தமான செயல்பாடு, உங்களுக்கு பொருத்தமான பயிற்சி முறைகள் என்றவாறு ஒரு புதிய பொருத்தமான சூழலை நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். அது உங்களுக்கு உடல் நலத்தை, இன்ன பிற எல்லா வகையான நலன்களையும் மீட்டுருவாக்கம் செய்வதற்கு உதவும்.  அந்த வகையில் ஒரு நாளில் எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ அந்நேரங்களில் உங்களுக்கு விருப்பத்திற்குரிய செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு விருப்பமான நேரத்தில் விருப்பமான உணவுப் பொருட்களை உங்களுக்கு உணவாக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் விருப்பம் போல உங்கள் உடல் வழிகாட்டுகிற வழிகாட்டுதலின் அடிப்படையில் பொறுப்புணர்ந்து உங்கள் செயல்களை பணிகளை நடைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகிறேன். 

அந்த வகையில் நீங்கள் ஈடுபடுகிற போது உங்களது மனம் உயர்வடையும். அழுத்தம் தணிவடையும். உங்கள் உடல் நலம் மேம்படும். உடல் நலிவு மீட்கப்படும். இவ்வாறாக ஒரு நிறைவான உடல் நலம் பெற்ற வாழ்வை நோக்கி நீங்கள் நகர்வீர்கள். அந்த வகையில் உங்களது உடல் நலம் விருப்பத்தின் பாற்பட்டு கட்டமைக்கப்பட வேண்டும் என்று வேண்டி இந்த உரையை நிறைவு செய்கிறேன்.

 உங்கள் யாவருக்கும் மெய்நிலை அருள் நிறைவதாகுக ! நன்றி... 

 

 

No comments:

Post a Comment

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு(பகுதி -3 ) - சிவ கதிரவன்

 உடல் நலன் - மன அழுத்தம் - விருப்பம் உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு ( பகுதி -1 ) உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு ( பகுதி - 2 )   உங்கள்...