Tuesday, April 7, 2026

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு - சிவ கதிரவன்

              உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு

உடல்நலம் என்பதில் மன அழுத்தம் என்பது கவனிக்கத்தக்க கருத்தாக  இருக்கிறது. பலரும் மன அழுத்தமாக   இருக்கிறது என்று பேசுவதை கேட்க முடிகிறது. இன்றைக்கு அது ஒரு பொதுச் சொல்லாக மாறிவிட்டது என்கிற அளவில் நாம் பார்க்கிறோம்.

 உடல் நலத்தில் மன அழுத்தம் என்பது எவ்வாறெல்லாம் வேலை செய்கிறது? உடல் நலத்திலிருந்து நலிவுற்று போவதற்கு மன அழுத்தம் என்பது எவ்வாறெல்லாம் வினையாற்றுகிறது என்கிற அடிப்படையில் நாம் சில செய்திகளை புரிந்து கொள்ளும் முகமாக இந்த உரையாடல்.

உடல் என்பது அடிப்படையாக தன்னளவில் ஒரு இயக்க முறை கொண்டது. உடலிற்கு தானாக இயங்குவதற்கு சில வரம்புகள் அமைந்திருக்கின்றன. உடல் தன்னளவில் தொடர்ந்து இயங்குவதற்குரிய வாய்ப்புகள் பெற்றிருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உயிரோடு இருக்கிற எல்லா உயிர்த் தோற்றங்களும் தன்னளவில் ஒரு இயக்க முறையை வைத்திருக்கின்றன. இயக்க முறை என்பது சொந்தமான தூண்டல், சொந்தமான நிறுத்தம் என்பதை உள்ளடக்கியது. எப்போது பார்க்க வேண்டும்? எப்போது ஒலி எழுப்ப வேண்டும்? எப்போது ஒலியை நிறுத்த வேண்டும்? என்றெல்லாம் பல வகையான தூண்டல்களையும் வரம்புகளையும் ஒருங்கே பெற்றிருக்கிற  இயக்க முறையாக உயிர்த்தோற்றங்களுக்கு உடல் அமைந்து இருக்கிறது. இது உடல் பற்றி இருக்கிற ஒரு சாரமான கருத்து. மனிதன் உடலிற்கும் அது பொருந்தும். ‘உயிரோடு இருக்கிற மனித உடல்’ என்று நான் ‘உயிரோடு இருக்கிற’ என்கிற சொல்லை இணைத்துச் சொல்கிறேன். உயிரோடு இல்லை என்றால் அதற்கு வேறு வகையான இயங்குமுறை உண்டு. உயிர் பற்றி கவலைப்படுவது, நலம் பற்றி பேசுவது என்பது உயிரோடு இருக்கிற மனித உடலுக்குத் தான் பொருத்தம்.

மற்ற உயிர் தோற்றங்களுக்கு  நலம் குறித்த வேறு வகையான இயங்குமுறை அமைந்திருக்கிறது. இந்த இயங்கு முறைகள் அவற்றை பராமரிக்கின்றன. அவற்றை பராமரிக்கின்றன; மீட்டெடுக்கின்றன; இணைக்கச் செய்கின்றன. இவையெல்லாம் தனியாக இருப்பவை. உயிரோடு இருக்கிற மனித உடல் தோற்றத்திற்கு நலம் என்பதும் நலிவு என்பதும் பல தளங்களில் உரையாடப்படுகின்றன. அவ்வாறு உரையாடப்படுகிற போது மிகக் குறிப்பாக  தற்காலத்தில் இந்த உடல் நலம் நலிவுறுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் இன்றியமையாத காரணமாக மனிதனுக்கு மன உளைச்சல், மன அழுத்தம் இருக்கிறது. இது உடல் நலிவுறுவதற்கு இன்றியமையாத காரணமாக இருக்கிறது என்பதை நாம் கேட்க முடிகிறது. எல்லா வகையான நோய்களுக்கும் ஒரு வகையில் மன அழுத்தத்தை காரணமாகக் கூறுவதை பார்க்க முடிகிறது. இந்த நோய் தான் என்று வரம்பு ஒன்றும் கிடையாது. உங்கள் பார்வை திறனில் சிக்கல் வரும் என்றால் மன அழுத்தம் என்று கூறுவது உண்டு. உங்கள் செரிமானம் சிக்கலாகிறது என்றால் அதற்கும் மன அழுத்தம் காரணமாகிறது. உங்கள் சுவாச சிக்கலுக்கு என எந்த வகையான உடல் இயங்கும் முறைக்கும் மன அழுத்தம் காரணமாக இருக்கிறது என்று இன்று உரையாடப்படுகிறது. உங்களுக்கும் அப்படி கேள்வி இருக்கும், கேள்விப்பட்டிருப்பீர்கள். மன அழுத்தம் இல்லாமல் ஒரு உடல் நலக் குறைபாடு இல்லை என்கிற அளவிற்கு மன அழுத்தம் உடல் நலத்தில் செல்வாக்கு செலுத்துகிற கருத்தாக மாறி இருக்கிறது. நீங்கள் மன அழுத்தத்தை நெறிப்படுத்திக் கொள்வீர்கள் என்றால் இல்லாமல் பார்த்துக் கொள்வீர்கள் என்றால் நீங்கள்  நோய்களில் இருந்து உங்களை விடுதலை செய்து கொள்ள முடியும் என்று கோட்பாடுகள் எல்லாம் நடப்பில் இருக்கின்றன. எனவே மன அழுத்தம் என்பதும் உடல் நலிவு  என்பதும் ஒன்றை ஒன்று நெருக்கமாகப் பொருத்திக் கொள்கிற கருத்தாக இருக்கிறது.

 மன அழுத்தம் உடல் நலத்தை எவ்வாறு நலிவுறச் செய்கிறது அல்லது மன அழுத்தத்தில் ஏற்படுகிற மேம்பாடு, நன்னிலை எவ்வாறு உடல் நலத்தை உயர்த்துகிறது என்பதுதான் இந்த உரையின் சாரமாக நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த உரையில் நான் கூறியது போல உங்கள் யாவருக்கும் மன அழுத்தத்திற்கும் உடல் நலத்திற்கும் இடையே இருக்கிற தொடர்பு குறித்து புரிதல் இருக்கக்கூடும். பலர் உடல் நலம் முறைப்பட மேம்பட்டு இருப்பதற்கு மன அழுத்தம் முறையாக இருப்பது ஒரு காரணமாக இருக்கும் என்று கருதிக் கொண்டிருக்கிறீர்கள். மன அழுத்தம் நன்றாக அடர்த்தியாக இருக்கிறபோது உடல்நலம் குன்றுகிறது, உடல் சோர்வடைகிறது என்பதை பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.

மனித உடல் நலத்தில் மட்டும் தான் மன அழுத்தம் என்கிற காரணி உடல் நலிவிற்கு இன்றியமையாத காரணியாக அமைந்திருக்கிறது. வேறு எந்த உயிர் தோற்றத்திற்கும் மன அழுத்தம் குறித்த சிக்கல் இல்லை. புவியில் பார்க்கிற, தோன்றி இருக்கிற, தோற்றமாய் இருக்கிற எந்த விதமான உயிரின வகைக்கும் மனம் இருக்கிறது என்று நாம் புரிந்து கொள்ள முடியும். அதற்கான நெறிச் சான்றுகள் இருக்கின்றன. மனதினுடைய வளர்ச்சி எல்லா உயிர் தோற்றங்களுக்கும் ஒருவகையாக இருக்கின்றன என்பதை நாம் அறிய முடியும்.  ஆனால் மனமும் அதற்குள் விளைகிற மன அழுத்தம் என்கிற கருத்தும் உடல்நலத்தை சிக்கலாக்கும் அளவிற்கு மாற்றம் அடைகின்றன என்றால் அது மனித உடலுக்கு மட்டும் தான் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மன அழுத்தம் ஒரு மனிதனுக்கு, மனிதனின் உடலிற்கு ஒரு பெரும் நோயை உருவாக்கும் வல்லமையோடு இருக்கிறது என்பது ஒரு வியப்பான உண்மை. உளவியல் சார்ந்த சிகிச்சை முறைகளில் மன அழுத்தம் தான் எல்லா வகையான நோய்களையும் உருவாக்குகின்றன என்ற கருத்து கூட தற்பொழுதும் நடப்பில் இருக்கிறது. அது இன்னும் வளர்வதற்கு காத்திருக்கிறது.  இன்றைக்கு இருக்கிற மனிதர்கள் மன அழுத்தத்தில் அடர்த்தியாகிக் கொண்டே இருக்கிறார்கள் என்கிற தனியான உரையாடல் இருக்கிறது. இப்போது உரையாடுகிற கருத்துக்குள்   பார்க்கிற போது ஒரு சிறிய அளவு மன அழுத்தம் இருந்தாலும் உங்கள் உடல் நலிவுற்று போகிறது என்கிற அளவில் நாம் காண்கிறோம். அவற்றை மாற்ற முற்படுகிறோம். அவற்றிற்கு ஏதேனும் பயிற்சி முறைகளை நாடுகிறோம். நல வழிகாட்டலை நாடுகிறோம். இந்த வகையில் நாம் மன அழுத்தம் மற்றும் உடல் நலம் என்கிற உறவை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

நண்பர்களே, மன அழுத்தம் என்பது என்ன என்றால் உங்கள் உடலிற்கு உரிய வரம்புகளில் நீங்கள் நிற்க வேண்டும் என்பதற்கான குறியீடு அது. அதற்கு நாம் பல சான்றுகளை சொல்ல முடியும். உடல் வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்கிற கருத்தை புரிந்து கொள்வதற்கு முன்பு எப்போதெல்லாம் மன அழுத்தம் கொண்டதாக நீங்கள் உணர்வீர்கள் என்றால் நீங்கள் விருப்பம் இல்லாமல் ஒரு செயலில் எப்போதெல்லாம் ஈடுபடுகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் அழுத்தப்படுவதாக உணர்வீர்கள். ஒருவர் நீண்ட காலம் ஒரு செயலில், ஒரு வேலையில் ஈடுபடுகிறார் என்றால் அந்த வேலையில் ஈடுபடுகிற போது அவருக்கு அந்த வேலை குறித்தான விருப்பம் எவ்வளவு இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய கூற்று.

நீங்கள் ஒரு வேலையில் ஈடுபடுகிறீர்கள் என்றால் அந்த வேலையை நீங்கள் யாருக்காக செய்கிறீர்கள்? அந்த வேலையில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு இருக்கிற காரணம் என்ன என்பது முதன்மையானது. அந்த வகையில் நீங்கள் உங்களது விருப்பத்தின் பார்பட்டு  அந்த வேலையில் ஈடுபடுவீர்கள் என்றால் அந்த வேலை உங்களுக்கு கொண்டாட்டமாக நகரும். மகிழ்ச்சிக்குரிய வேலையாக இருக்கும். ஒருவேளை அந்த வேலையில் நீங்கள் ஈடுபடுகிற போது  உங்களின்  விருப்பத்தின் பார்பட்டு  இல்லாமல் உங்களை சுற்றி இருக்கிற சமூகநிலையோ, குடும்ப நிலையோ வேறு  பிற காரணங்களோ அந்த வேலையில் ஈடுபடும்படியாக உங்களை வற்புறுத்தும் என்றால் இந்த வற்புறுத்தல் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதுதான் மன அழுத்தம் பற்றி  இருக்கிற எளிமையான கருத்து. எப்போதெல்லாம் நீங்கள் விருப்பத்தோடு ஒன்றில் ஈடுபடுகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் இயல்பாக இருக்க முடியும். எப்போதெல்லாம் நீங்கள் அழுத்தத்தோடு ஈடுபடுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள் என்பது தான் அதற்குள் இருக்கிற உண்மை.

எனவே இன்று நாம் பார்க்கிற  எல்லா வகையான நடைமுறைகளிலும் குடும்ப உறவாக இருக்கலாம், பணிச் சூழலாக இருக்கலாம், சமூக உறவாடலாக இருக்கலாம், இப்படி எல்லா வகையான தனிமனிதன் ஈடுபாடு காட்டுகிற எந்த வகையான செயல்பாடாக இருந்தாலும் செயல்முறையாக இருந்தாலும் அவர் தன்னளவில் விருப்பத்தோடு ஈடுபடுகிறார் என்றால் அவர் நலமாக இருக்க முடியும். அதே வேளையில் அந்த வேலையில் ஈடுபடுகிறபோது அந்த உறவாடலில், அந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிற போது அவருக்கு ஒரு சுமையான  அல்லது விருப்பமில்லாத ஒரு போக்கு அமையும் என்றால் அது ஏற்படுத்துகிற விளைவு அவர் தன்னளவில்  மன அழுத்தத்திற்கு உள்ளாவார் என்பதுதான். விருப்பமின்மை என்பது ஒரு பொருந்தாமை என்று நாம் சான்றாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு துளையில்  ஒரு பொருளை பொறுத்த வேண்டும். ஒரு வாய் அகன்ற   பாத்திரத்திற்குள் அகலம் குறைவான இன்னொரு குடுவையை நுழைத்து  நீங்கள் நீர் எடுத்துப் பருக முடியும். வாய் அகலம் குறைவாக இருக்கிற ஒரு பாத்திரத்திற்குள் பருமமான அகலமான இன்னொரு பாத்திரத்தை நீங்கள் அமிழ்த்தி நீர் எடுக்க முடியும் என்றால் அங்கு ஒரு முரண்பாடு ஏற்படும். அங்கு ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது? பொருத்தமில்லை. அந்த பாத்திரத்தினுடைய அகலம் பொருந்தாமல் இருப்பதால் முரண் ஏற்படுகிறது. அழுத்தம் ஏற்படுகிறது. உராய்வு ஏற்படுகிறது.  இவ்வாறு பொருத்தமின்மை என்பது அழுத்தத்திற்கும் உராய்விற்கும் காரணமாக இருக்கிறது என்பதை நீங்கள் இந்த சான்றின் வழியாக புரிந்து கொள்ள முடியும். இன்னும் பல சான்றிதழ் உங்களுக்கும் இருக்கும்.

எங்கெல்லாம் பொருத்தமின்மை இருக்கிறதோ அங்கெல்லாம் நீங்கள் அழுத்தமாக இருப்பீர்கள். எங்கெல்லாம் பொருத்தமின்மை இருக்கிறதோ அங்கு விருப்பமின்மையும் இருக்கும். ஆக, நீங்கள் விருப்பமின்றி ஒன்றில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகிறீர்கள் என்றால் அங்கு பொருத்தமின்மை என்பது தான் உங்கள் விருப்பத்திற்கு தடையாக இருக்கிறது. மேலும் உங்கள் மீது திணிக்கப்படுகிற அந்த சுமை, அழுத்தம் உங்களது மன அழுத்தமாக மாறிப் போகிறது. இந்த மன அழுத்தம் ஒருவாராக சுழன்று சுழன்று உங்களுக்குள் ஒரு சுவர் போல் எழும்புகிறது. மன அழுத்தம் என்பது உங்களது இயல்பிற்கு நெருக்கமான குணம் போல் மாறுகிறது, வெளிப்படுகிறது என்பது தான் இன்று பல நோய்களுக்கான காரணமாக இருக்கிறது.

விருப்பமான ஒரு வேலையை உங்களுக்கு பொருத்தமான ஒரு வேலையை நீங்கள் உங்கள் இயல்பு நிலையில் இருந்து செய்வீர்கள் என்றால் உங்களுக்கு மன அழுத்தம் நிச்சயமாக இருக்காது என்பது நீங்கள் ஈடுபடுகிற போது தெரியும். எனவே மன அழுத்தம்  என்பது பொருத்தமின்மையில் இருந்து வருகிறது அல்லது விருப்பமின்மையிலிருந்து வருகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். விருப்பமில்லாத ஒன்றில் நீங்கள் ஈடுபடுகிற போதெல்லாம்  உங்களுக்கு மன அழுத்தம் நிச்சயமாக ஏற்படும். பொருத்தம் இல்லாத ஒன்றின் மீது விருப்பம் ஏற்படாது. இந்த கருத்தை நீங்கள் ஒரு சமன்பாடு போல் நினைவில் கொள்ள வேண்டும். எப்பொழுது மனம் அழுத்தம் ஏற்படுகிறது என்றால் எப்பொழுது விருப்பமில்லாமல் ஈடுபடுகிறோமோ அப்பொழுதெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது ஒரு பகுதி.

                                                                                                                          --தொடரும்--

No comments:

Post a Comment

உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு - சிவ கதிரவன்

                   உடல் நலனில் மன அழுத்தத்தின் பங்கு உடல்நலம் என்பதில் மன அழுத்தம் என்பது கவனிக்கத்தக்க கருத்தாக  இருக்கிறது. பலரும் மன அழுத...