மிர்தாதின் புத்தகம் - இறையின் இருப்பு

இந்த உலகம் யாரால் படைக்கப்பட்டது என்று தர்கபூர்வமான கேள்விகள் கேட்கப்படுவதன் வழியாக இறையின் அடையாளத்தை குறிப்பிட்ட வரையறைக்குள் வைத்து விட முடியும் என்று பேசுபவர்கள் உண்டு. அல்லது இறையை மறுப்பவர்கள் கூட இந்த உலகம் அதுவாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுவாக சுற்றி வருகிறது என்று கூறுவதும் உண்டு.
ஐரோப்பிய நாடுகளினுடைய பகுத்தறிவு கோட்பாடுகள் விரிவாக விவாதத்திற்கு வந்த பிறகு உலகின் இயக்கங்களை பகுப்பாய்வு செய்வதற்குரிய ஆவணங்களும் சேகரிப்புகளும் குவியத் தொடங்கின. அதிகமான விஞ்ஞான விதிகள், காந்தவியல் கோட்பாடுகள், மின்னூட்டம் திசைவேகம் பற்றிய விரிவான வியாக்யாணங்கள் என்று ஐரோப்பிய நாடுகளினுடைய தொழில் புரட்சிக்கு பின்னால் வந்த இறையியல் பகுப்பாய்விற்குரிய ஆவணங்கள் நிறைய வரத்துவங்கின. இவை எல்லாமும் இறையின் இருப்பை ஒரு உரையாடலுக்கு உட்படுத்தின. அதற்கு நேர் எதிராக, மாற்றாக இறையின் உணர்வை, இறையின் நிலையை பகுப்பாய்விற்கு ஏதும் உட்படுத்தாமல் கிழக்கத்திய நாடுகள் ஒன்றாக புரிந்து வைத்திருக்கின்றன. இந்த இரண்டு மனநிலைக்கும் எதிராக இந்த இரண்டு மனநிலைக்கும் மாற்றாக ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வதும் எதிர்த்து கொள்வதுமான உரையாடல் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இறையுணர்வென்பது பகுப்பாய்வின் அடிப்படையில் எப்போதும் கண்டு கொள்வதற்கு வாய்ப்பு இல்லாதது என்று கிழக்கத்திய நாடுகள் கூறுகின்றன. கிழக்கத்திய தேடல் கூறுகிறது. கிழக்கத்திய பதிவுகள் கூறுகின்றன.
பகுப்பாய்வின் வழியாக இறை நிலையை, இயற்பியல் பௌதிக கோட்பாடுகள் வழியாக இறைநிலையை துகள் அளவில் புரிந்து கொள்ள முடியும். அணுவின் பிளவின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும் என்கிற கோட்பாடுகளும் நிரூபணங்களும் கிழக்கத்திய இறைக் கோட்பாடுகளுக்கு மாற்றாக கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருக்கிறன. இப்படி இரண்டு வேறு தர்க்கங்களுக்கு இடையில் இறைப் பற்றிய கோட்பாடுகளும் நிரூபணங்களும் ஆவணங்களும் மோதிக் கொண்டிருக்கிற வேளையில் இவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஒன்றாக இறை இருக்கிறது என்று இறை பற்றி பேசுபவர்கள் கூறுவதையும் நாம் பார்க்க முடிகிறது.
இறை என்பது தன்னளவில் தானே உற்பத்தி செய்து கொள்கிற, தானே இயக்கத்திற்கு உள்ளாகிற. தானே இயங்கிக் கொள்கிற எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு இயங்கு முறை என்று ஒரு அடிப்படை புரிதலை நாம் வைத்துக் கொள்ள முடியும்.
இறை என்பது தோற்றத்தில் இருப்பதில்லை. தோற்றத்திற்குள் இறை இயக்கம் சாத்தியம் இருக்கிறது. இறை என்பது வரையறைக்குள் வைக்க முடியாது. ஒரு வரையறையின் வழியாக இறை இயக்கத்தை நாம் நெருங்கி செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இறை இயக்கம் என்பது ஆத்திக, நாத்திக கோட்பாடுகளின் வகைப்பட்டு பிரித்து பேசுவதற்கு வாய்ப்பில்லாதது. இப்படி ஒவ்வொன்றிற்குள்ளும் நாம் எந்த நோக்கத்தோடு இந்த உரையாடலை செய்கிறோமோ அந்த நோக்கத்திற்கு பிறழ்வாகவோ, இசைவாகவோ ஒன்றை கற்பிதம் செய்து கொள்வதற்குரிய வாய்ப்போடு இறை கோட்பாடு இருக்கிறது. எல்லா கோட்பாடுகளுக்கும் அப்படி ஒரு தன்மை உண்டு. இறைக் கோட்பாடுகளுக்கு அப்படியான தன்மை கூடுதலாக உண்டு. இத்தகைய இறை கோட்பாடை, பகுத்தறிவு கோட்பாடை அல்லது மெய்யியல் கோட்பாடை நாம் விரும்புகிற கேட்பவர் விரும்புகிற அம்சத்தில் வடிவமைத்துக் கொள்கிற சாத்தியத்தோடு இருப்பதால் நாம் மறுப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஆய்வு மனப்போக்கில் இறை குறித்த ஒரு உரையாடலை செய்வதற்கும் மடாலயத்தில் துறவிகள் வழியாக துறவிகள் முன் நின்று இறைகுறித்த ஒரு உரையாடலை செய்வதற்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது, வேறுபாடு இருக்க வேண்டும் என்கிற தன்மையோடு மிர்தாதினுடைய கடவுள் பற்றி, இறை பற்றி, மெய்யுணர்வு பற்றிய உரையாடலை நாம் வாசிக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் மிர்தாத் கடவுள் பற்றி பேசுகிற போது நான் என்ற சொல்லை பற்றி அறிமுகப்படுத்தி கூறுகிறபோது இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கிற ஒன்றாக நான் என்பதை கூறுகிறார். இந்த உலகம் முழுக்க நிறைந்திருக்கிற ஒன்றாக நான் இருக்கிறது என்றால் அது இறையின் குறியீடு.
இறை இருப்பதாக அவர் கூறுகிறார். எல்லாவற்றிலும் நான் நிரம்பி வழிகிறது. ‘நான்’தான் இந்த உலகை இயக்குகிறது. ‘நான்’ தான் நம்மை படைக்கிறது. ‘நான்’ தான் நம்மை இயக்குகிறது. நான் தான் நம்மை வழி நடத்துகிறது என்று ‘நான்’ என்கிற பேருண்மையை உலகம் முழுவதும் வியாபித்து இருக்கின்ற, விரவி இருக்கின்ற ஒன்றைப் பற்றி விளக்குன்ற போது நான் என்பது குறித்த குறைந்தபட்ச பார்வையும் குறைந்தபட்ச தேடலும் இருப்பது அவசியமாகிறது.
மிர்தாதின் புத்தகத்தை வாசிக்கிற போது நான் குறித்து நானினுடைய உலக அளவில் வியாபித்திருக்கிற அந்த பிரம்மாண்டம் குறித்து தேடுகிறவர்களுக்கு, தேடுகிற முறையின் அடிப்படையிலேயே அது விளங்கிக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய புரிதலோடு நான் பற்றி தெரியாத, நாளைய வாழ்வின் மீது, பொருளாதாரத்தின் மீது, சமூகக் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவருக்கு விளங்கிக் கொள்கிற நானும் விளங்கிக் கொள்கிற நான் என்கிற கருத்தக்கமும் நாளை பற்றி கவலை இல்லாமல், நேற்றை பற்றிய நினைவில்லாமல் இன்று என்கிற நிதானத்தில் இருக்கிற ஒரு மனிதன் விளங்கி வைத்திருக்கிற நான் என்கிற கருத்தாக்கமும் வேறுவேறாக இருவருக்கும் புரிவதற்கு வா]ய்ப்பு இருக்கிறது. இருவருக்கும் வேறுவேறாகத் தான் புரிய முடியும். இருவரும் வேறுவேறாகத் தான் உள்வாங்கிக் கொள்ள முடியும்.
இந்த சமகால உலகில், நவீன தொழில்நுட்பத்திற்கு பின்னால் சென்று கொண்டிருக்கிற ஒருவர் நான் என்பதை எவ்வாறு கருதுகிறார் என்று நாம் விவாதித்தோம் என்றால் அவரது நான் பற்றிய கருத்தாக்கமும் ரமண மகரிஷி போன்றதொரு மெய்யுணர்வாளருடைய நான் பற்றிய கருத்தாக்கமும் சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை. இரண்டும் நேர் எதிரான திசையில் தேடி பயணம் செய்வதற்குரியவை.
நவீன தொழில்நுட்பம் பேசுகிற ஒருவர் நான் என்பதை விளக்கி சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்து கொள்கிற விஞ்ஞானபூர்வமான காரணங்களும் பகுத்தறிவுப்பூர்வமான காரியங்களும் விவாதங்களும் மலை போல் குவிந்திருக்கின்றன. அவரிடம் நான் குறித்த உரையாடலை புத்தர் செய்தால் கூட புத்தர் தர்க்கபூர்வமாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. புத்தர் நான் என்பது குறித்து தர்க்கமற்றிருப்பவர். புத்தர் தாவோவின் வழியில் பயணிப்பவர். தர்க்கங்கள் கடந்து செல்வதற்கு தம்மை உட்படுத்திக் கொள்பவர். ஆனால் இன்றைய சம உலகில் மனதின், நினைவாற்றலின், சேகரிக்கப்பட்ட அறிவின் பின்னால் இயங்குகிற ஒரு மனநிலையினுடைய வடிவத்தில் இருந்து உரையாடப்படுகிற நான் பற்றிய கருத்தாக்கம் என்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. தர்க்கத்தோடு தன்னை உடைத்துக் கொள்வதற்கோ சரிபார்த்துக் கொள்வதற்கோ அவற்றின் மீது வேறொன்றை கண்டு கொள்வதற்கோ எந்த தயாரிப்பும் செய்வதற்கு ஆயத்தமானதல்ல. இது முழுக்க தகவல் சேகரிப்பிற்குரிய முயற்சி. இப்படியான இரு வேறு கருத்தாக்கங்கள் இருக்கிற சூழலில் இந்த கருத்தாக்கங்களுக்குள் நான் பற்றி, இறைநிலை பற்றி பேசுகிற முயற்சியில் நாம் பற்றிக்கொள்ள தேவையாக இருப்பது மிர்தாதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தர்க்கம் கடந்து மடாலயத்திற்குள் இருக்கிற மடாலய துறவிகளினுடைய மன ஓட்டத்தில் அனுபவ நினைவில் நான் எவ்வாறு பார்க்கப்படும், கடவுள் எவ்வாறு பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற பார்வையில் பார்த்தாலோழிய மிர்தாத் முன் வைக்கிற நான் பற்றிய, பேருண்மை பற்றிய, மும்மை பற்றி எந்த கோட்பாடையும் நம்மால் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் கடவுளை புரிந்து கொள்வது என்பது ஒரு துறவியின் மனநிலையிலிருந்து பார்க்கிற போது ஒன்றாகவும் தன் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டு பிரார்த்தனை செய்கிற ஒரு தாயின் மனநிலையில் வேறோன்றாகவும் இருக்கிறது.
ஒரு காட்சி நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தக் காட்சியை ஒரு நிகழ்ச்சி போல நான் படித்திருக்கிறேன். ஒரு மகாஞானி ஒருவர் சுடுகாட்டினுடைய எரி மேடையை கடந்து நடந்து செல்கிறார். ஒரு பச்சிளம் குழந்தை உயிர்விட்ட நிலையில் அந்த தகன மேடைக்கு உறவினர்கள் மிகுந்த சோகத்தோடு, அழுகையோடு, கண்ணீரோடு எடுத்து வருகின்றனர். அந்த மகா ஞானி அவரது நிதானமான பயண வேகத்தில் அந்த எரி மேடையை கடந்து நடந்து வந்து கொண்டிருக்கிறார். அந்த குழந்தையை சுற்றி பலரும் அந்த குழந்தையினுடைய இறப்பை, அந்த குழந்தையினுடைய மரணத்தை ஏற்றுக்கொள்ளாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டே வருகிறார்கள். இவ்வளவு சின்ன வயதில், இவ்வளவு இளம் குழந்தை உயிர் விட்டிருக்கக் கூடாது. கடவுளே உனக்கு இரக்கம் இல்லையா என்றெல்லாம் கூட சாபம் விட்டுக் கொண்டு அந்த குழந்தையை எரிமேடைக்கு கொண்டு வருகிறார்கள். அந்த குழந்தை இறந்த நிலையில் எரிமேடையில் அந்த குழந்தையை எரிப்பதற்கு தயாராக இருக்கிற எரி மேடையில் இருக்கிற அந்த இளைஞன் எந்த சலனமும் இல்லாமல் அந்தக் குழந்தையினுடைய சடலத்தை வாங்கி எரிமேடையில் வைக்கிறார். சுற்றி இருக்கிற விறகுகளை அதன் மேல் அடுக்குகிறார். எல்லோரும் மிகுந்த சோகத்தோடு அந்த குழந்தையினுடைய உடலை, முகத்தை ஒருமுறை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அழுகிறார்கள். இந்த எரி மேடையில் வேலை செய்கிற இளைஞனுக்கு அந்த குழந்தை குறித்தோ, இறப்பு குறித்தோ, இளம் குழந்தை என்கிற உணர்வு குறித்தோ எந்த சிந்தனையும் இல்லாமல் தொடர்ந்து அந்த குழந்தைக்கு எரியூட்டுவது குறித்தான வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார். இப்போது அந்த மகாஞானி அந்த எரிமேடையை கடந்து நகர்கிறார். எரிமேடையில் எரிப்பதற்காக இருக்கிற இளைஞனின் முகத்திலும் அந்த எரி மேடையை கடந்து செல்கிற மகான் ஞானியின் முகத்திலும் எந்தவிதமான சலனமும் இல்லை.
ஒரு பெரும் கூட்டம் குழந்தையினுடைய இறப்பு குறித்து அழுது கொண்டிருக்கிற அழுகுரல் இந்த எரியூட்டுகிற இளைஞனின் மனதில் எந்த சலனத்தையும் எந்த சாயலையும் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல அந்த குழந்தையினுடைய மரணமும் சுற்றி அழுகிற நபர்களினுடைய அழுகுரலும் அந்த மகாஞானியினுடைய நடையிலும் பாவனையிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த மகாஞானி மிகுந்த நிதானத்தோடு அந்த எரி மேடையை கடந்து செல்கிறார். அந்த இளைஞன் எந்த யோசனையும் இல்லாமல் எரி மேடை மீது வைத்திருக்கிற சடலத்தின் மீது எரியூட்டுகிறார். இருவரும் தோற்றத்தில் ஒன்று போலவே காட்சியளிக்கிறார்கள். இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எரிமேடையில் ஒரு குழந்தையை அடுக்கி வைத்துவிட்டு, கிடத்திவிட்டு எரிக்கிற இளைஞனின் முகத்திலும் சலனமில்லை. இரண்டு புறத்திலேயும் குழந்தையினுடைய சுற்றத்தாரின் முகத்திலும் ஏற்பட்டிருக்கக் கூடிய எந்த உணர்வையும் எளிமையாக கடந்து போகிற மகா ஞானியினுடைய முகத்திலும் எந்த சலனமும் இல்லை. இருவரும் ஒன்றே போல் பார்ப்பதற்கு தெரிகிறார்கள். ஆனால் உண்மையிலேயே ஒன்றே போல் தெரிகிறார்களா என்றால் இருவருக்கும் தர வேறுபாடு இருக்கிறது.
மகா ஞானி எல்லாவற்றையும் கடந்தவர். மகான் ஞானி இறப்பு பிறப்பு குறித்த ஏதோ ஒன்றை புரிந்து கொண்டவர். இந்த இளைஞன் தொடர்ந்து சடலங்கள் மத்தியில் வேலை செய்து தம் உணர்வை நீர்த்து போகச் செய்தவர். எந்த உணர்வும் இல்லாதவர். தொழில் முறையாக ஒரு சடலத்தை எரிப்பதற்கு முயற்சிக்கிறவர்.
இருவரின் தோற்றத்திலும் வேறுபாடு ஏதும் இல்லை என்றாலும் கூட இருவரின் மனம் கடந்த நிலையில், மனம் நிறைவு பெற்ற நிலையில், மனதினுடைய பண்பு உயர்வு நிலையில் இருவருக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது . அது தர வேறுபாடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இரு மனமும் வேறுவேறு தரம்.
ஒரு கேள்வியை ஒரு தோற்றத்தின் அடிப்படையில் இருந்து நாம் முடிவு செய்வதற்கு கூடாது. ஒரு விசாரிப்பை தோற்றத்தின் அடிப்படையில் இருந்து நாம் முடிவு செய்தோம் என்றால் அது ஒரு முழுமையான ஆய்வாக இருக்காது. இறை பற்றி கேட்கப்படுகிற மடாலயத்திற்குள் துறவிகள் மத்தியில் எழுப்பப்படுகிற நான் என்ற, முழுமை என்ற வினாவிற்கும் இந்த சமூகத்தில் எழுப்பப்படுகிற நான் என்ற, முழுமை என்ற வினாவிற்கும் இருக்கிற வேறுபாடு இத்தகைய தரம் வேறுபாடு உடையது. இத்தகைய தரத்தில் மாறுபாடு உடையது. ஆக, துறவிகளினுடைய மையத்திலிருந்து எழுப்பப்படுகிற வினாவிற்கு பின்னால் இருக்கிற பார்வை மிகுந்த முக்கியமானது. துறவிகள் நீண்ட அனுபவத்தோடு எல்லாவற்றையும் கைவிட்ட நிலையில், எல்லாவற்றையும் வேறோன்றாக கருதி இருக்கிற நிலையில் தம்மை இந்த உலகில் இருந்து அன்பின் பாற்படடு வேறொரு தளத்திற்கு உயர்த்துவதற்கு முயற்சிக்கிற நிலையில் எழுப்பப்படுகிற கேள்வி என்பது தேடலின் பாற்பட்டது. அவர்கள் தேடலின் வழியாக கேள்வியை முன்வைக்கிறார்கள். இத்தகைய தேடலின் வழியாக எழுப்பப்படுகிற கேள்வியின் அம்சத்தில் நான் என்பது என்ன என்று கேட்கப்படுகிற போது, கடவுள் என்பது என்ன என்று கேட்கப்படுகிற போது அதன் தரம் என்பது உண்மையிலேயே மிகுந்த உயர்வான தன்மையோடு இருக்கிறது. அது மனிதனினுடைய தன்முனைப்பு சார்ந்த கேள்வி அல்ல. அது மனிதனினுடைய தகவல் சேகரிப்பு சார்ந்த கேள்வி அல்ல. அது முழுக்க நான் குறித்து, ஒரு ஆன்மாவின் தேடல். நான் குறித்து ஒரு உயிர் மையத்தினுடைய தேடல். இத்தகைய உயிர் மைய தேடலோடு இத்தகைய ஆன்மாவின் தேடலோடு கேட்கப்படுகிற கேள்விக்கு மிர்தாதினுடைய பதில் என்பது மிக நெருக்கமானதாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படித்தான் இருக்க முடியும். பொதுவான தகவல் சேகரிப்பிற்கும் துல்லியமான தேடலின் நிலையிலிருந்து கேட்கப்படுகிற கேள்விக்குமான விசாரிப்பில் இருக்கிற வேறுபாடு மிர்தாதினுடைய பதில் என்கிற அடிப்படையில் ஒரு துல்லியமான தேடலில் இருந்து கேட்கப்படுகிற கேள்விக்கே பதிலாக அமைகிறது. நான் என்று மிர்தாத் சொல்லுகிற பிரம்மாண்டத்தினுடைய விவரிப்பு என்பது எல்லோராலும் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு குறைவானதாகவே இருக்கிறது. எல்லோரும் மிர்தாதினுடைய விவரிப்பை பிரம்மாண்டத்தினுடைய அழகை மிர்தாத் முன் வைக்கிற எந்த ஒன்றையும் புரிந்து கொள்வதற்கு முன் தயாரிப்பாக கடவுள் பற்றி, நான் பற்றி, பிரம்மாண்டம் பற்றி தேடிக் கொண்டிருக்கிற ஒருவராக இருப்பதின் வழியாகவே அவற்றை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதற்கு முடியும். அப்படியான உள்வாங்களுக்குரிய தயாரிப்போடு ஒரு துறவையினுடைய மடாலயத்தில் இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் நான் பற்றி மிர்தாத் பேசுகிறார்.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment