Monday, November 27, 2023

மிர்தாதின் புத்தகம் - மனித இறை - பகுதி 2 - சிவ. கதிரவன்

                                                 மிர்தாதின் புத்தகம்

ஒரு மனிதன் கடவுளாக இருக்கிறான். கடவுள் மனிதனாக இருக்கிறார். ஒரு மனிதன் கடவுளாக இருக்க முடியும் என்பதற்கு யூத மரபு இயேசு கிறிஸ்துவை குறிப்பிடுகிறது. கடவுளே மனிதராக பிறக்கிறார். மனிதனே கடவுளாக மாற முடியும் என்பதற்கு சாட்சியாக வரலாற்று ஆவணமாக இயேசு கிறிஸ்து இருக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்க முடியும், நிகழ முடியும் என்பதற்கு ஆதாரமாக வரலாற்று நிகழ்வாக புத்தரையும் குறிப்பிட முடியும். புத்தர் மனிதனாக இருந்து கடவுளாக இருந்தவரா, கடவுளாக இருந்து மனிதராக இருந்தவரா என்ற விவாதத்தில் புத்தரின் வாழ்க்கை வரலாறை பார்க்கிறபோது புத்தர் தமக்குள் இருந்த கடவுளை கண்டு கொண்டார் என்பது புலப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கிற கடவுளை அந்த மனிதன் கண்டு கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. கண்டு கொள்வதற்கு சாத்தியம் இருக்கிறது. ஆக, ஒவ்வொரு மனிதனும் தமக்குள் இருக்கிற கடவுளை கண்டு கொள்வதற்கும் அந்த சாத்தியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மறைஞானங்கள் ஏற்றுக்கொள்கின்றன, வலியுறுத்துகின்றன, குறிப்பிடுகின்றன. இந்த மறை ஞானத்தை பின்பற்றுகிற மனிதர்கள் பலரும் இந்த மறை ஞானத்தில் உள்ளடக்கத்தை புரிந்து கொண்டவர்களாக  இருக்கிறார்கள் என்றாலும் கூட அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட கிழமைகளில் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் கடவுளை நோக்கி பிராத்தனை செய்கிறார்கள் என்பது காண்கிறோம். கடவுள்  கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்வது முரண்.  கடவுள் கடவுளை நோக்கி வேண்டுவது நகைப்புக்குரியது.  இதைத்தான் மிர்தாத் குறிப்பிடுகிறார்.

கடவுள் ஏன் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்ய வேண்டும். மனிதன் என்கிற கடவுள்,  கடவுள் என்கிற கடவுளை நோக்கி பிராத்தனை செய்கிற நிகழ்வு எங்கு நிகழ்கிறது. இந்தப் பெரும் வேறுபாட்டை ஆன்மீக குழப்பத்தை மிர்தாத் விளக்குகிறார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே  இருக்கிற தொடர்பை கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கிற பிணைப்பை நாம் புரிந்து கொள்வதற்காக மிர்தாத் பேசுகிறார்.

வெறும் துணிக் கட்டாக குழந்தைகளை கருதி விட முடியாது. ஒரு குழந்தை துணி போர்த்தி இருக்கிறது. நாம் பார்க்கிறபோது அதற்குள் குழந்தை இருக்கிறது என்று நம்மால் உணர முடிகிறது. எதை வைத்து குழந்தை என்று அந்த துணிப் பொதியை முடிவு செய்கிறோம் என்பதிலேயே  நாம் தெளிவு கொள்ள வேண்டி இருக்கிறது. நம் தெளிவின் அடிப்படையிலேயே குழந்தையை துணிக் கட்டு என்றும் துணிக்கட்டை குழந்தை என்றும் முடிவு செய்கிறோம். ஒரு குழந்தையை துணி கட்டாகவும் துணிக்கட்டை குழந்தையாகவும் எப்போது பேதம், பகுப்பு தெரிகிறதோ அப்போது அதுவே நமது தெளிவின் அளவுகோல். துணிக்கட்டை குழந்தையாக பார்ப்பவர்களும் உண்டு. குழந்தையை துணி போர்த்தி இருக்கிற துணிப் பொதி என்று பார்ப்பவர்களும் உண்டு. நீங்கள் குழந்தையை துணிப்பொதியாக பார்க்கிறீர்களா அல்லது துணிப் பொதியை குழந்தையாக பார்க்கிறீர்களா என்பதில் உங்களது புரிதல் அடிப்படையாக இருக்கிறது. இந்த புரிதல் என்பது கடவுளாக இருக்கிற உங்களை கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்ய தூண்டுகிறது. இந்த புரிதலில் இருக்கிற அறியாமை கடவுளாக இருக்கிற உங்களை கடவுளை நோக்கி யாசகம் செய்ய தூண்டுகிறது. மனிதன் உதவி கேட்டு கெஞ்சுகிறான். யாரிடம் கெஞ்சுகிறான். கடவுளிடம் கெஞ்சுகிறான். ஒரு கடவுள் இன்னொரு கடவுளோடு கெஞ்சுவது சாத்தியம் இல்லாதது. இந்த நிகழ்வு புரிதலில் ஏற்படுகிற தடுமாற்றத்தின் காரணமாக புரிதலுக்குள் இருக்கிற அறியாமையின் காரணமாக, அறியாமையின் மொத்த வடிவமாக மனிதன் இருப்பதன் காரணமாக இந்த கெஞ்சுதல் நிகழ்கிறது.

யாசகம் செய்பவரும் யாசகம் தருபவரும் ஒருவரே என்பதை அறிந்து கொள்வதற்கு எது தடையாக இருக்கிறது என்பது மிர்தாத்  நம்முன் முன்வைக்கிற கேள்வி. மிர்தாத்  துறவிகளை நோக்கி இந்த கேள்வியை எழுப்புகிறார். முன் வைக்கிறார். மனிதன் நான் என்று சொல்லும் போது தன்னை இரண்டாக வெட்டிக் கொள்கிறான். மனிதன் தன்னை நான் என்று குறிப்பிடுகிற சமயங்களில் எல்லாம் கடவுளில் இருந்து வேறுபடுகிறான்.

உளவியலில், மேற்கத்திய மன ஆய்வு முறைகளில் நான் குறித்து விரிவான உரையாடல்கள் செய்யப்படுகின்றன. நான் என்பது இந்த பிரபஞ்சத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்கிற சாராம்சம். பிரபஞ்சமும் அதிலிருந்து துண்டாக்கப்பட்ட இன்னொரு பாகமும் தோன்றுகிற போது, தோன்றுகிற இன்னொரு பாகம் தன்னை நான் என்று அழைத்துக் கொள்கிறது என்று உளவியலின் சாராம்சத்தின் வழியாக நாம் காண முடிகிறது.

ஆனால் பிரபஞ்சத்திற்கும் அதிலிருந்து துண்டாகி விழுந்த இன்னொரு பொருளுக்கும் தர அளவில் வேறுபாடு இல்லை. ஆனால் அந்த பொருள் தன்னை நான் என்று கற்பனை செய்து கொள்கிறது. மனிதனின் பக்குவமின்மையே  அந்த கற்பனையை உருவாக்குகிறது என்று மிர்தாத் நினைவூட்டுகிறார். மனிதன் எப்போதும் நான் என்று கருதிக் கொள்கிற போது, எப்போதும் நான் என்று சொல்லிக் கொள்கிற போது  அவனது சமநிலையற்ற போர் உருவாகிறது. அவனது சமநிலை தவறுகிறது. மனிதன் நான் என்று கருதிக் கொண்டு பிரபஞ்சத்தோடு மோதி, இயற்கையோடு மோதி, இறைவனோடு மோதி என்கிற போராட்டங்களை உருவாக்கிக் கொண்டு முழுக் கற்பனையில் தன்னை விடுவித்துக் கொள்ளாத சுழற்சியில் மீண்டும் மீண்டும் பயணிக்கிறான் என்று நாம் பார்க்க முடிகிறது. ஆன்மீகத் தேடலின் வழியாக அறிந்து கொள்ளவும் முடிகிறது.

துறவிகளை பார்த்து மிர்தாத் சொல்வது இதுதான். நான் என்பதை நீங்கள் கடவுளின் சாரம்சமாக பயன்படுத்துகிற போது பிரபஞ்சத்திலிருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்ற கவனத்தோடு, புரிதலோடு பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். நாமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் மிர்தாதின் உரையாடல் வழியாக, மிர்தாதின் கவனப்படுத்துதல் வழியாக நாம் கண்டு கொள்கிற பேருண்மை. நாம் நான் என்று சொல்கிற போது பிரபஞ்சத்திலிருந்து வந்திருக்கிறோம் என்கிற புரிதலோடு சொல்ல வேண்டும். நாம் நான் என்று உச்சரிக்கிறபோது அந்த வார்த்தையை மிகுந்த கவனத்தோடு பயன்படுத்த வேண்டியிருக்கிறது. குழந்தைகளை கவனிக்காமல் துணிப் பொதியை மட்டும் நாம் கவனிக்கும் வரை குழந்தைகளை கவனிக்காமல் துணிப் பொதியை குழந்தை என்று நாம் நம்புகிற வரை நாம் புரிதல் இல்லாதவர்களாக இருக்கிறோம்.  நாம் துணிப்பொதியாக இருக்கிறோம். நமக்குள் இருக்கிற கடவுள் என்கிற, இறைநிலை என்கிற, பிரபஞ்சம் என்கிற ஒன்றைப் பற்றிக்கொள்ள இயலாதவர்களாக இருக்கிறோம். இதை மீண்டும் புரிந்து கொள்வதற்கு, கவனப்படுத்திக் கொள்வதற்கு, பற்றிக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டியது நான் என்பது பிரபஞ்சத்தினுடைய ஒரு துகள்தான். நான் என்பது பெரும் கடலினுடைய ஒரு அலை தான். நான் என்பது பெரும் காற்றினுடைய ஒரு அணு தான் என்பதை புரிந்து கொள்வது அவசியமாகிறது. அதைத்தான் மிர்தாதின் வழியாக, அவரது நினைவூட்டலின் வழியாக நாம் பார்க்கிறோம்.

நான் என்பது கடவுள் கற்பனை எனும் கட்டுக்குள் ஒளிந்திருக்கிறார் என்கிற புரிதலோடு நாம் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நமக்குள் இருக்கிற நான், பிரபஞ்சத்தின் நான். பிரபஞ்சத்தில் இருக்கிற நான், நம் துளியின் பிரம்மாண்டம்.  நானும் பிரபஞ்சமும் பிரபஞ்சமும் நானும்  வேறுவேறாக இல்லை. நடுவில் இருப்பது தடைகளே. நடுவில் இருப்பது கற்பனையே. நடுவில் இருப்பது பக்குவமின்மையே. நடுவில் இருப்பது புரிதலின்மையே. கடவுளும் மனிதனும் எப்போதும் ஒன்றாகவே கற்பனைகள் நீங்கிய பின்பு, கற்பனைகள் விலகிய பின்பு, புரிதல் மேம்பட்ட பின்பு, புத்தர் தன்னுள் இருக்கிற கடவுளை கண்டு கொண்டது போல பொதிகளை கலைந்து  நாமும் நீங்களும் நானும் பிரபஞ்சத்தின் நானைக் கட்டிக் கொள்வதற்கும் கண்டு கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மிர்தாத் நம்மை அழைக்கிறார்.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...