Wednesday, May 5, 2021

சொர்க்கம் - ஸ்வஸ்தம் நூல் அகம்

 

சொர்க்கம்

www.swasthammadurai.com


சொர்க்கம் என்ற ஒன்று இருக்கிறதா? எல்லோருக்கும் இப்படி ஒன்று இருக்க வேண்டும் என்ற விருப்பமும், இருக்கிறது என்ற நம்பிக்கையும் மனதிற்குள் உள்ளது.

  சொர்க்கம் என்றால் என்னவெல்லாம் இருக்கும்!

 

அங்கே வானுயர்ந்த அருவி. துளித்துளியாய் தெறித்து ஓடும் நீரோடை. இருபுறமும் வண்ண வண்ணப் பூக்கள் நிறைந்த பூந்தோட்டம். இடையிடையே பட்டாம்பூச்சிகளும் சிறு வண்டுகளும். இன்னும்இன்னும் அலங்கார அழகு பூச்சிகளும். வானத்தில் பறவைகள் கூட. அவைகளின் பார்வையில் பெரிய காடு. உண்டு மகிழ நிறைய நிறைய கனிகள். இது ஒருபுறம்.

 

செல்வச்செழிப்பான ராஜாங்கம். தோல்வியே கண்டிராத அரசர்கள். அவர்களின் படைகள். நாட்டிற்கு அழகு சேர்க்க கலைகளும் இலக்கியங்களும். கலைகளுக்கும் இலக்கியங்களுக்கும் ஒரு தனிப்பிரிவு. அங்கே கொஞ்சம் கம்பர்களும் கொஞ்சம் இளங்கோக்களும் கொஞ்சம் ஷெல்லிக்களும். அவற்றுக்குள் சிறிதாய் அகத்தியரும் போகரும். விளையாட பெரிய மைதானம். அதற்குள் குழந்தைகளும் வீரர்களும். இது ஒருபுறம்.

 

எரியும் சூரியன். கொஞ்சம் பக்கத்தில் நிலா. சிதறலாய் சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்கள். ஆங்காங்கே பெரும் இரைச்சலோடு பயணிக்கும் விண்கற்கள். சூரியனின் வெப்பத்தை பார்ப்பவர்களுக்குச் சொல்லும் பாலைவன மணல் மேடுகள். அவற்றிற்கிடையே ஆங்காங்கே சோலைகளும்.

 

குழம்பு கக்கும் எரிமலைகள். அதோடு குளிர் நடுங்கும் பனிமலைகள். இந்தப் பனிகற்கள் உருகி ஓடி எங்கு தான் செல்கின்றன என்று தேடிப் போகும்போது பெரிய கடல் விரிகிறது. இதுவும் சொர்க்கத்திற்குள் தான். சொர்க்கத்திற்குள் கடல்கள். கடலுக்குள் மீன்களும் தவளைகளும் பாசிகளும் பவளங்களுமாய் ஒரு பெருங்கூட்டம்.

இவைகளுக்கு மத்தியில் அமைதியாய் சிரிக்கும் புத்தர்களும் இயேசுகிறிஸ்துகளும். எவரையும் துன்புறுத்தாத வள்ளலாரும் வள்ளலாரின் வருகையும் போதலும். மேலும் வள்ளுவர்களும் தாகூர்களும் அமர்ந்துகொண்டு அறத்தையும் அழகியலையும் பாடிக்கொண்டே இருக்கின்றனர். அவர்கள் ஓய்வெடுக்கும் போது ஆண்டாளின் திருப்பாவையும் திருவெம்பாவையும் பாடப்படுகின்றன. அதோடு தொல்காப்பியர்களின் இலக்கணங்களும் எழுதப்படுகின்றன. ஆங்காங்கே மாக்சிம் கார்க்கிகளும் டால்ஸ்டாய்களும் ஜெயகாந்தன்களும் கூட சிரித்துக்கொண்டும் அழுது கொண்டும் கதைசொல்லிக் குவிக்கின்றனர்.

 

மற்றொரு மூலையில் காரல் மார்க்ஸ்களின் தத்துவ ஆராய்ச்சிகளும் சாக்ரடீசின் பள்ளிக்கூடங்களும். மனதைப் பற்றி ஆராயும் சிக்மன்ட் பிராய்ட்களும் லெக்கான்களும். மனதைக் கடக்கும் ரமணர்களும் ஓஷோக்களும்.

 

இவற்றிற்கிடையே வாழ்வின் புதிர்களை சந்தித்து, பயணித்து, கண்ணீர் விட்டு கற்றுக்கொண்ட அனுபவஸ்தர்களின் அனுபவக் கதையாடல்களும் பழமொழிகளும். இப்படித்தான் சொர்க்கம் இருக்கிறது.

 

நீங்கள் சொர்க்கத்திற்குள் செல்ல ஆசை உள்ளவர் என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் தேடி வந்து நிற்பது சொர்க்கத்தின் வாசலில் தான்.

 

இதோ பக்கத்தில் கதவு இருக்கிறது.

 

 உங்கள் கையில் சாவியை தருகிறோம்.

 

அந்த சாவியின் பெயர் வாசிப்பு.

அங்கே உங்களுக்கு விருப்பமான கூடாரங்களாக புத்தகங்கள் உங்களை கூப்பிடுகின்றன.

 

நீங்கள் வாசிக்க துவங்குங்கள்.

 

நீங்கள் அவற்றுள் நுழைந்து சொர்க்கத்தின் அனுபவத்தை மகிழ்ச்சியை ஆராதிக்க முடியும்.

அன்புடன் உங்களை சொர்க்க வாசலில் நின்று வரவேற்கும்

                                                  ஸ்வஸ்தம் நூல் அகம்,

                                                        மதுரை.

 

 

 

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...