ஆணவம் அழிய வேண்டும் என்ற விருப்பத்துடன் குருவிடம் செல்கிறேன். சரணாகதியுடன் இருக்க முடியவில்லை. என்ன செய்ய வேண்டும் ஐயா?
இது ஒரு புதிய மனிதனின் பழைய மனநிலையில் இருந்து வெளிப்படுகிற கேள்வி. இன்று ஆணவம், அதன் அழிவு, சரணாகதி, குரு என்கிற கருத்தாக்கங்கள் மலிந்துவிட்டன.
உளவியல் பார்வையில் பேசுகிறபோது, இவை கற்பனையாக உருவாக்கப்பட்ட கருத்துருவாக்கங்களாக இருக்கின்றன. என் ஆணவம் அழிய வேண்டும் என்று ஒருவர் கேட்கிறபோது, ஒரு குருவிடம் செல்ல வேண்டுமென்று ஒருவர் விரும்புவது, சரணாகதியுடன் இருக்க வேண்டும் என்று ஒருவர் கருதுவது எல்லாமும் கற்பனையான தளத்திலேயே உரையாடப்படுகிற உரையாடல்.
கற்பனை என்பது அவர் அந்தக் கேள்வியை உருவாக்குகிற மனநிலைக்கு பலியாகிறார் என்று நான் பார்க்கிறேன். இந்த கேள்விக்குள் இருக்கிற நோக்கம், செய்யப்படுகிற பணிவான முயற்சி என்பது குறிப்பிட்டு பேசப்பட வேண்டியது.
ஆணவத்தை அழிக்க வேண்டுகிற ஒருவர், ஆணவத்தை அழிக்க வேண்டும் என்று விரும்புகிற ஒருவர் சரணாகதியை மேற்கொள்கிறார் என்றால் இதில் இருக்கிற முரண் விருப்பம் இருக்கிறபோது சரணாகதி சாத்தியமில்லை.
விரும்புகிற மனம் சரணாகதி அடையாது. சரணாகதி என்பது விருப்பத்தில் இருந்து உருவாவது அல்ல. ஒரு மனிதன் தன்னை எந்த விருப்பமும் இல்லாமல் முழுமையாக பணிய வைத்துக்கொள்வது முழுமையாக ஒப்படைப்பது என்பதில் நிகழ்கிற நிகழ்வு மாற்றம் சரணாகதி என்று நான் பார்க்கிறேன். விரும்பி ஒருவர் சரணாகதியை அடைகிறார் என்றால் அந்த சரணாகதிக்குள் சிறிய கலக்கம் இருக்கிறது என்று பொருள் கொள்ள முடியும். சரணாகதி என்பதை நாம் துல்லியமாக விளங்கிக் கொள்வது என்பது இன்னும் இவற்றை பொருத்திப் பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
நம் அனைவருக்கும் கால் இருக்கிறது, கைகள் இருக்கின்றன, உடல் இருக்கிறது, உடலுக்கு ஒரு இயங்கு முறை இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட திசையில் நடக்க வேண்டுமென்று உங்கள் கால்கள் உங்கள் மனதின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்கின்றது என்றால் உங்கள் முதுகு உங்கள் உடலை எந்த விமர்சனமும் இல்லாமல், எந்த விருப்பமும் இல்லாமல் பின் தொடர்கிறது என்பதை நீங்கள் உணர முடியும். உங்கள் உடலின் ஒரு பகுதி எந்த கேள்வியும் இல்லாமல் ஒட்டிக்கொண்டு பின்தொடர்வதுக்குள் இருக்கிற அந்த பயண நுட்பம் சரணாகதிக்கு ஒப்பிட முடியும் என்கிற உதாரணமாக நான் பார்க்கிறேன்.
உங்கள் உடலுக்குள் இருக்கிற உங்களால் மிகவும் நெருக்கமாக பார்க்க முடிகிற ஒரு உதாரணம் இது. உளவியல் பேசுகிறபோது உளவியலில் நாம் பேச வேண்டும் என்கிற அடிப்படையில் உங்கள் உடலை வைத்து இந்த உதாரணத்தை பொருத்திக் கொள்வதற்கு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
உடல் என்பது என்ன? உடலுக்குள் தரப்படுகிற உளவியல் விளக்கங்கள் என்ன? உடல் என்பது மாயை என்கிற வேறொரு கருத்தாக்கங்கள் இருக்கின்றன. உடல் என்பது இயங்குமுறை சார்ந்த விஞ்ஞான கருத்தாக்கங்கள் இருக்கின்றன. இவற்றிற்குள் இருந்து இந்த உதாரணத்தை பொருத்திப் பார்த்தீர்களென்றால் என்று சொன்னால் இந்த உதாரணத்திற்குள் இந்த தத்துவங்களும் அல்லது தத்துவத்திற்குள் இந்த உடலும்
பொருந்தாது.
வெறுமனே சரணாகதி என்கிற பொருளுக்கு நான் முன்வைக்கிற உளவியல் சார்ந்த ஒரு உதாரணமாக உங்கள் கால்கள் நடக்கிறபோது உங்கள் கால்களின் திசைக்கு பின்னாலேயே உங்கள் முதுகு உங்களை தொடர்ந்து நடந்து வருகிறது. உங்களுடைய முதுகுப் பகுதி உங்களை ஒட்டிக்கொண்டு வருகிறது. இதில் முதுகுப் பகுதிக்கு விருப்பம் இருக்கிறதா அல்லது முதுகுப் பகுதியின் விருப்பம் பற்றி உங்களுக்கு கவலை இருக்கிறதா? உங்கள் கால்களுக்கு கவலை இருக்கிறதா? என்பதெல்லாம் கூட இங்கு விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை. வெறுமனே கால்களை தொடர்ந்து நடப்பவரின் முதுகு வருகிறது என்பதுதான் சரணாகதியினுடைய அடிநாதம்.
எந்த கேள்வியும் இல்லாமல், எந்த விருப்பமும் இல்லாமல், எந்த முன் யோசனையும் இல்லாமல் இருப்பதற்கு நீங்கள் தயாராகிறீர்கள் என்றால் அங்கு சரணாகதி பூப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
சரணாகதி நிகழ்வதாகத்தான் நான் பார்க்கிறேன். சரணாகதி நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன். சரணாகதியை நீங்கள் செய்ய முடியாது.
மனம் எப்போதும் நினைவுகள் எப்போதும் நம்மை செய்ய வைப்பதற்கு நிறைய குறிப்புகளை கொடுத்து கொண்டே இருக்கும். குறிப்புகளுக்கு அப்பாற்பட்டு எதுவும் செய்ய வாய்ப்பில்லாத நிலையில் எதுவும் செய்வதற்கு திறன் இல்லாத நிலையில் கூட சரணாகதி நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், உங்கள் முயற்சியில் சரணாகதி ஒரு போதும் நிகழாது.
இன்று முதல் நான் சரணாகதியாக இருக்க பார்க்கிறேன். இன்று முதல் நான் சரணாகதியின் திசையில் என்னை மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன் என்று நீங்கள் விரும்புவீர்கள் என்று சொன்னால் உள்ளபடியே அப்படி ஒரு நிலை சாத்தியமில்லை.
சரணாகதி ஒரு முழுமையிடம் உங்களை ஒப்படைப்பதாக உங்களை பணித்துக் கொள்வதாக உங்களை உள்ளாக்கிக் கொள்வதாக நிகழ்கிற நிகழ்வு மாற்றம்.
மழைக்காலங்களில் ஒரு புல் தரையில் இருந்து வெளிப்படுவது போல ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும் குறிப்பிட்ட ஈரப்பதமும் குறிப்பிட்ட மண் தரமும் இருக்கிறபோது, அந்த நிலத்தில் ஒரு புது வகை புல்லோ பூவோ செடியோ வளர்வதற்கு வாய்ப்பு உருவாகிறது. இது பிரபஞ்ச இயங்கு முறையில் இருக்கிற இயல்பான ஒழுங்கமைவு. இந்த இயல்பான ஒழுங்கமைவை நான் சரணாகதி என்று குறிப்பிட விரும்புகிறேன். சரணாகதியில் ஒரு ஒழுங்கமைவு ஏற்படக்கூடும். சரணாகதியில் ஒரு இயல்பு இருக்க முடியும்.
மனிதனின் எந்த திறனும் எந்த அறிவும் எந்த பலமும் எப்போதும் சிறந்தவை அல்ல. எந்த வகையில் சிறந்தவை அல்ல என்றால் அவை எல்லாமும் மனிதனின் அனுபவத்தில் முயற்சியில் உருவானவை. மேலும் ஒரு மனிதனுக்கு இருப்பது போல் இன்னொரு மனிதனுக்கு அவை அமைவதில்லை. எனவே அவை சிறந்தவையாக அந்த மனிதன் அளவில் மட்டுமே இருக்கக்கூடும். ஒரு பொதுவெளியில் யாவருக்கும் சிறந்தவையாக ஒரு திறமையோ ஒரு மேன்மையோ இருப்பதற்கு அறிவின் பாற்பட்டு வாய்ப்பில்லை. அனுபவத்தின் பாற்பட்டு வாய்ப்பில்லை. ஆனால் இயற்கையாக நிகழ்கிற நகர்வு என்பது யாவருக்கும் பொதுவாக நகர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. யாவருக்கும் பொதுவாக மலர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த இயற்கையோடு இயற்கையாக மலர்கிற, நகர்கிற, அறிவு சாயல் இல்லாத பொதுவாக இருக்கிற நிலை சரணாகதி உட்பட்டது.
சரணாகதி நிகழ்கிற போது மனிதன் சேகரித்து வைத்திருக்கிற எல்லா புனிதங்களும் வேலை செய்வதில்லை. மனிதன் சேகரித்து வைத்திருக்கிற எல்லா வகையான அறிவும் பயன்படுவதில்லை. வெறுமனே மனிதன் தன்னை மனிதனாக, இயற்கையாக, வாய்ப்பு இல்லாதவனாக ஒன்றோடு ஒப்பிட்டுக் கொள்ளும் அறிவு கூட இல்லாதவனாக, பிறரைத் திருட, சுரண்ட, கைகொள்ள, கட்டுப்படுத்த நோக்கம் இல்லாதவனாக, முழு இயல்பான இயற்கையான பயணம் துவங்குகிற போது சரணாகதி மலர்கிறது. இந்த மலர்ச்சியை நோக்கிய உரையாடலை உருவாக்குவதற்கு ஒருவர் உங்களுக்கு கிடைப்பார் என்றால் அது மதிப்பிற்குரியது. உங்களை நீங்கள் கண்டு கொள்வதற்கும் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்வதற்கும் உங்கள் உளவியிலில் இருக்கிற சிக்கலை, உங்கள் ஆணவத்தின் பாற்பட்ட மேட்டிமையை உங்களுக்குள் நகர்வதற்கும் கிடப்பதற்கும் இருக்கிற முரண்பாடை உடைத்துக் கொள்வதற்கு ஒரு வழிகாட்டி உங்களுக்கு வாய்ப்பார் என்றால் அவரை நீங்கள் குருவென்றோ வேறு பெயரிலேயோ அழைத்துக் கொள்ள முடியும்.
ஆனால் இலக்கியங்களும் மதங்களும் பாடசாலைகளும் வரையறைக்கு உள்ளே வைத்திருக்கிற குரு என்கிற கருத்தாக்கத்தில் இருந்து சொல்லப்படுகிற குருவாக சரணாகதியை பொழிகிற குருவாக உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.
உங்களை கண்டு கொள்வதற்கு நீங்கள் எடுக்கிற முயற்சிகளை இலேசாக நகர்த்தி விடுவதற்கு ஒருவர் உங்களுக்கு உதவக்கூடும். அவர் உங்களை பார்த்துக் கொள்வார் என்று கூட சொல்ல முடியாது. அவர் உங்களோடு பயணிப்பார். ஒரு தென்றல் காற்று எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு பூவின் இதழை வருடி செல்கிறபோது இலகுவாக பூ மலர்வதைப் போல பூவின் இதழ்கள் முழுவதும் விரிவதை போல ஒரு மனிதன் உங்கள் இருப்பை கண்டு கொள்வதற்கு, உங்களைத் தேடிக் கொள்வதற்கு, உங்கள் முரண்பாடுகளை உடைத்துக் கொள்வதற்கு, இயற்கையாக நீங்கள் மாறிக் கொள்வதற்கு, சுரண்டல் இல்லாமல் உங்களை விலக்கி கொள்வதற்கு, சுதந்திரமாக உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதாவது செய்வார் என்றால் அந்த நிகழ்வு அதனளவில் அழகானது. அது எந்த புனிதமும் உங்களை திறப்பவர் கொண்டாட மாட்டார். எந்த முக்கியத்துவமும் அந்த நிகழ்வுக்கு இருப்பதாக அவர் பார்க்க மாட்டார்.
தொடரும்...
THANK YOU VERY MUCH .
ReplyDelete