Saturday, February 5, 2022

கீழை உளவியல் ll கீழ்ப்படிதலும் சரணடைதலும் lll Obedience - Surrendering PART 2

                                             கீழ்ப்படிதலும்  சரணடைதலும்

www.swasthammadurai.com


கீழ்ப்படிதலுக்கும் சரணடைவதற்கும் இடையே உள்ள வேறுபாடு

புதிய ஒன்றை கற்றுக் கொள்கிற ஒருவர் தன் மனதிற்குகு தன் உளவியல் பகுதிக்கு பலகீனமான பகுதியை நீக்க வேண்டுமென்று கற்றுக் கொள்கிற ஒருவர் ஒரு சிறிய சமரசத்தோடு கீழ்படிதல் என்பதை செயல்படுத்த முடியும். கீழ்படிதல் என்பதை பின்பற்ற முடியும். இது ஒருவகையில் ஆணவத்திற்கு எதிரானது என்றாலும் கூட ஆணவத்தோடு இணைந்து பயணிக்கிற ஒரு சிறு பாதை இதற்குள் இருக்கிறது.

கீழ்படிதல் ஆணவம் அல்லாதது. ஆனால் ஆணவத்தோடு கீழ்படிதல் நிகழ்கிறது. ஒரு மனிதனுக்கு அவர் உளவியல் சார்ந்த எல்லா அலங்காரங்களும் இருக்கிறபோது அவர் புதிய அலங்காரத்தை பூசிக் கொள்வதற்கு கீழ்ப்படிதல் என்பதை கைக்கொள்ள முடியும்.

கீழ்படிதல் என்பது எந்த அளவில் இருக்கிறது. ஆணவத்திலிருந்து விடுபட்ட ஒன்றாக கீழ்படிதல் என்கிற மன மாற்றம் நிகழ்கிறது. இது மிகவும் தர அளவில் போதுமானதல்ல.

ஆனால் கீழ்படிதலுக்கு இன்னும் ஆழமான பகுதி இருக்கிறது. கீழ்படிதல் என்பது இத்தகைய மேம்போக்கான நிலையிலிருந்து நகர்ந்து, தன் ஆணவம் முழுவதையும், குழப்பம் முழுவதையும், சிக்கல்கள் முழுவதையும் உடைத்துக் கொள்வதான தைரியத்தோடு நகர்கிற ஒரு பகுதி சரணடைதல் என்பதை பார்க்க முடியும். சரணடைதல் என்பது வெறுமனே கீழ்படிதல் போன்று இருப்பதல்ல.

சரணடைதல் என்பது தன்னை ஒப்புக் கொடுப்பது. தன்னை முழுவதுமாக பணையம் வைப்பது. நமக்கு என்ன நிகழும் என்பது சரணடையும் ஒருவருக்கு தெரியவும், தெரியாமல் இருக்கவும் எந்த உரிமையும் இல்லாதது.

இது பொதுவாக கிழக்கு தத்துவ மரபுகளில் மனிதனுக்கும் இறைவனுக்கும் இருக்கின்ற உறவுகளில் சரணடைதல் என்பது குறிப்பிட்டுச் சொல்லப்படுகிற உறவு முறையாக இருக்கிறது. ஒரு கை தேர்ந்த குருவுக்கும் பணிவான மாணவனுக்கும் இடையில் சரணடைதல் நிகழ்கிறது என்று கிழக்கத்திய தத்துவ மரபு கற்பிக்கும் மரபு வைத்திருக்கிறது.

கீழ்படிதல் என்கிற நிலையிலிருந்து சற்று ஆழமான தன்மையோடு மிக முக்கியமான தரமான வேறொரு பரிமாணமாக சரணடைதல் நிகழ்கிறது. தான் பற்றி வைத்திருக்கிற, தன்னை பற்றி தான் நினைத்து வைத்திருக்கிற எல்லாவிதமான மன மேம்பாடுகளையும் மனமேட்டிமைகளையும் முழுவதுமாக எடுத்து வெளியே போடுகிற ஒரு பெரும்பணையத் தன்மையோடு சரணடைதல் நிகழ்கிறது.

 சரணடைதல் என்பதை பொருத்தவரை அது செய்வது அல்ல. நிகழ்வது. பொதுவாக தவறாக புரிந்து கொள்கிற தத்துவ மரபில் சரணடைதலும் தவறாக புரிந்து கொள்ளப் படுவதை நான் பார்க்கிறேன்.

ஒரு பெரிய பக்திமான் தனக்கு இருக்கிற எல்லா செல்வங்களையும் தர்மசாலைகளுக்கு எழுதிவைத்துவிட்டு இறைவனிடம் சரணடைந்து விட்டார். இப்போது அவர் கையில் எதுவும் இல்லை என்று ஊர் மக்கள் பேச அந்த சீமானை பற்றிய நாட்டுப்புற கதையை நான் சிறு வயதில் படித்திருக்கிறேன். அந்த சீமான் எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு தன் கடைசி நாட்களை இறைவன் பாற்பட்ட பக்தியின் காரணமாக முழுக்க ஆன்மீக வாழ்க்கையை வாழத் துவங்கி விட்டார் என்று அந்த கதை சொல்கிறது. ஒரு நேரத்தில் அவரைச் சுற்றி இருந்த எல்லா உறவுகளும் அவர் வைத்திருந்த பொருள், பணம் இவற்றின் மீதான மேட்டிமை என்று இருந்த நிலையில் இருந்து நகர்ந்து விலகிச் சென்றுவிட்டனர். அப்போது கூட அவர் கவலைப்படவில்லை. எப்போதும் போல அவர் துறவு வாழ்க்கையை கடைசி காலத்தில் மேற்கொள்வதோடு ஒரு துறவியாகவே பாவித்துக் கொண்டு அந்த கிராமத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு அவர் துறவு மேற்கொண்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அமர்ந்திருந்த இடம் நோக்கி ஒரு இளைஞன் ஓடி வந்து, உங்கள் மனைவி உயிர் பிரிந்து விட்டது என்று தகவல் சொல்கிறார். அந்த தகவலை கேட்டவுடன் அந்த துறவிக்கு மனம் நிம்மதியாக மாறிவிட்டது என்று உணர்ந்து அவர் அதை சொல்கிறார்,

எனக்கு இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது என்று.

இந்தக்கதையில் அந்தத் துறவி மனைவி இறக்கும் வரை சரணடையவில்லை. மனைவியைச் சுற்றி மனைவிக்கும் தமக்குமாய் இருக்கிற உறவுகளை மையமாக வைத்து, நினைவுகளை மையமாக வைத்து அவருக்கும் அவர் மனைவிக்குமாய் இருக்கிற அந்தரங்கங்களை நினைவுகளாக வைத்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டு இருக்கிறார் என்று எனக்கு புலப்பட்டது. இது சரணாகதி ஆகாது. இது ஒருவகையில் கீழ்படிதல்.

எல்லா சரணாகதியும் முயற்சியின் பாற்பட்டு நிகழுமே என்றால் அது சரணாகதியாக இருப்பதில்லை. தான் புரிந்து கொண்ட ஒரு மேன்மையான நிலைக்கு, தான் புரிந்து கொண்ட ஒரு சிறந்த நிலைக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிற முயற்சி என்பது ஒருவகையில் கீழ்படிதல் தான். ஆனால் சரணாகதி என்பது கீழ்படிதலிலிருந்து சற்று ஆழமாக நிகழ்வது. உங்கள் வாழ்க்கையில் எந்த ஒன்றையும் நீங்கள் செய்ய வேண்டும் என்று முயற்சித்து முயற்சித்து எல்லாவற்றையும் இழந்த பின்பு, எல்லாவற்றையும் பறிகொடுத்த பின்பு, எந்த ஒன்றையும் செய்வதற்கு இனி எந்த வாய்ப்பும் இல்லை என்ற நிலை வரும்போது உங்களது உடலும் உங்களது மனமும் உங்களது பலமும் உங்களது பணமும் உங்களை காப்பாற்றாது என்கிற உண்மை தெரிகிற போது எல்லாமும் தளர்ந்து போனபோது இனி எதுவும் செய்வதற்கில்லை. அதுவாகவே என்ன நிகழ்கிறதோ நிகழட்டும் என்று உங்களை ஒப்புக்கொடுக்கிற நிகழ்வில் உங்களது சரணாகதி தொடங்குகிறது.

இப்படித்தான் மீரா கிருஷ்ணனிடம் இருந்தார். இப்படித்தான் புத்தபெருமான்  இருத்தலிடம் இருந்தார். எல்லா மகா பெருமான்களும் சரணாகதியை இப்படித்தான் துவங்கி இருக்கிறார்கள்.

சரணாகதி என்பது முயற்சி செய்து வருவது அல்ல. சரணாகதி உங்களது எல்லா முயற்சிகளும் தோற்றுப் போன பின்பு அதுவாக நிகழ்வது. அதுவாகவே துவங்கும். அதுவாகவே நகர்த்தும். அதுவாகவே ஒரு இடத்தில் உங்களைக் கொண்டு கரை சேர்க்கும். சரணாகதிக்குள் இத்தனை நுணுக்கங்கள் இருக்கின்றன என்று நீங்கள் கற்றுக் கொண்டு சரணாகதியை முயற்சி செய்தீர்கள் என்றால் அது மீண்டும் ஒருவகையில் தரம் குறைந்த சரணாகதியாகவும் ஆணவம் சேர்ந்து இருக்கிற கீழ்படிதலாகவும் மாறுகிறது.

கீழ்படிதல் என்பது வேறு. அது நிகழ்த்தப்படுவது. உங்கள் முயற்சியில் செயலாக விளைவது. உங்களால் கீழ்படிய முடியும். ஒரு அறிவுத் திறன் மிகுந்த மனிதனால் கீழ்படிய முடியும். ஒரு பணம் பெற்ற செல்வந்தனால் கீழ்படிய முடியும். ஒரு பெரும் பேராசிரியரால் கீழ்படிய முடியும். ஒரு கவிதையை அறிவாய் தீட்டுகிற கவிஞனால் கீழ்படிய முடியும். யார் ஒருவராலும் தன் மனம் கொண்டு கீழ்படிய முடியும்.

கீழ்படிதல் என்பது தனது ஆணவத்தை உடைத்துக் கொள்வதற்கு மனம் எடுக்கிற தைரியமான சிறு முயற்சி. மனதைக் கொண்டு கீழ்படிய முடியும். ஆனால் சரணாகதி என்பது மனம் தோற்றுப் போகிற நிலை. மனதில் இருக்கிற எல்லாமும் சலித்துப் போகிற நிலை. எல்லா முயற்சிகளும் வீணாகிப் போன பின்பு வெறுமனே வெறும் உடலாக எதுவுமில்லாத மனமாக, எதையும் செய்வதற்கு உரிய வாய்ப்பும் புத்திக் கூர்மையும் தடுக்கப்பட்ட தவிர்க்கப்பட்ட ஒரு ஆன்மாவாக ஒரு மனிதன் ஒரு உளவியல் தரையில் கிடைக்கிற போது சரணாகதி துவங்குகிறது. அவ்வாறுதான் சரணாகதிக்குள் ஒரு மனிதன் பயணிக்க முடியும். இந்த பயணத்தின் வழியாக நிகழ்கிற போக்கு என்பது இந்த பயணத்தின் வழியாக விளைகிற விளைச்சல் என்பது உண்மையிலேயே ஆணவம் இல்லாத, கலப்படமில்லாத, பழைய நினைவுகள் ஏதும் இல்லாத, நினைவுகள் பற்றி சுற்றுகிற கற்பனைகள் இல்லாத, இருத்தலின் நியாயத்தோடு இன்னொரு மனிதனை சுரண்டுகிற எந்த நோக்கமும் இல்லாமல் இந்த பூமிக்கு, இந்த பிரபஞ்சத்திற்கு தன்னை அழகாக்குவதற்கு ஒப்படைக்கிற இந்த பிரபஞ்சத்தின் அழகை தனக்குள் ஏற்றுக்கொள்கிற விரிந்த மனப்பான்மையோடு நகர்கிற ஒரு மலர்ச்சி நிலையாக நான் பார்க்கிறேன்.

                                                                    தொடர்ந்து பேசுவோம்…

ALSO READ: கீழை உளவியல் - கீழ்ப்படிதலும் சரணடைதலும் ll Obedience - Surrendering PART 1

 

 

 

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...