Saturday, February 5, 2022

கீழை உளவியல் - கீழ்ப்படிதலும் சரணடைதலும் ll Obedience - Surrendering PART 1

 

கீழ்ப்படிதலும்  சரணடைதலும்

www.swasthammadurai.com


கீழ்ப்படிதலுக்கும் சரணடைவதற்கும் இடையே உள்ள வேறுபாடு

கீழ்படிதல்(Obedience) - சரணடைதல்(Surrendering) இந்த இரண்டு செயல்பாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? என்ற கேள்வியை நம் அன்றாட வாழ்வியல் தன்மையோடு பேசுகிறபோது, ஒரு பெரிய முக்கியத்துவம் பெற்றதாக இருப்பதில்லை.

அன்றாட வாழ்வியல் ஈடுபாடுகளில், செயல்பாடுகளில் கீழ்ப்படிதலும் சரணடைதலும் ஒரு பேசுபொருளாக இருப்பதில்லை. இந்தக் கேள்வியை ஒரு மனிதனின் உளவியல் சார்ந்த, அக மாற்றம் சார்ந்த தளத்தில் கேட்கப்படுகிற போது சற்று முக்கிய இடம் வைப்பதாக மாறி விடுகிறது.

இயல்பான வாழ்க்கை முறையில் ஒரு மனிதன் இயங்குவதற்கு சில குறிக்கோள்கள் தீர்மானிக்கப்படுகின்றன. புறச்சூழல் அந்த குறிக்கோளை கண்டடைவதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கி தருகின்றன. அந்த மனிதன் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற பாடங்களை புறச்சூழல் தொகுத்து வைத்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக தான் வாழ்கிற வாழ்க்கை முறையில், தான் அடைய வேண்டும் என்று நினைக்கிற வெற்றியை நோக்கி பயணிக்கிற ஒரு மனிதனுக்கு கீழ்ப்படிவதும் சரணடைவதும் ஒருவகையான உள்நோக்கம் கொண்டதாக மாறிவிடுகிறது. ஒருவன் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, வெற்றி பெற வேண்டும் என்கிற பெரிய ஆவலோடு கீழ்ப்படியவோ சரணடையவோ செய்வார் என்றால் இந்த இரண்டு சொல்லின் அடிப்படை பொருளுக்கு எதிரான ஒன்றை அவர் செய்வதாக மாறிவிடும்.

புறவுலகில், நடைமுறை உலகில், பொருளாதாரத்தை, பொருள் சார்ந்த வாழ்க்கை மேட்டிமையை முதன்மையாகக் கொண்ட உலக வாழ்க்கையில் எல்லாமும் வெற்றி என்பது பொருள் சார்ந்தது என்கிற குறிக்கோளுடன் இணைக்கப்பட்டிருக்க வாழ்க்கை முறைக்குள் பயணிக்கிற ஒருவர் கீழ்படிகிறார் என்றால் அவர் வெற்றிக்காக கீழ்படிகிறார். சரணடைகிறார் என்றால் அவர் வெற்றிக்காக சரணடைகிறார்.

ஆனால் கீழ்ப்படிவதும் சரணடைவதும் ஒரு உள்நோக்கத்தோடு செய்வதாக இருக்க முடியாது. எப்போது ஒரு மனிதன் உள்நோக்கத்தோடு கீழ்படிகிறார் என்று வந்துவிட்டால் அவர் கீழ்படிவது போல் பாவனை செய்வதாக மாறிவிடும்.

ஒரு மனிதன் சரணடைகிறேன் என்று வெற்றிக்காக சரணடைந்தால் அவர் அவரளவில் ஏதோ ஒன்றை சமரசம் செய்து கொள்கிறார் என்று பொருள் வந்துவிடும்.

ஆக, வெற்றி இலக்கோடு, வெற்றி நோக்கத்தோடு இருக்கிற ஒருவருக்கு கீழ்படிவதும் சரணடைவதும் சாத்தியமில்லாதது. அது முழுக்க இலக்கு இல்லாத முழு நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட வேறு தளம்.

புற உலக பொருளாதார உலகைச்சுற்றி இயங்குகிற வாழ்க்கை முறைக்குள் கீழ்ப்படிதலையும் சரணடைதல் தன்மை பற்றியும் நம்மால் பேசிவிட முடியாது. ஏனென்றால் இத்தகைய வாழ்க்கை முறைக்குள் இருந்து இதன்பொருள் சிதையாமல் செயல்படுவது என்பது சாத்தியமில்லை.

எனவே கீழ்படிதல் - சரணடைதல் என்கிற இரண்டு சொற்களுக்கும் இருக்கிற பொருளும் வேறுபாடும் ஒரு மனிதன் உளவியலில், தன்னளவில், அக அளவில், ஆன்மீகத் தேடலில் என்று திசைமாறி வேறு திசையில் பயணிக்கிற பயணத்திலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இது இருக்கிறது.

அந்த தளத்தில் உளவியல் சார்ந்து, மனவலிமை சார்ந்து தன் மனதை மாற்றி கட்டமைக்கிற கட்டமைப்பு சார்ந்து மனதிற்குள் புதிதான ஒன்றை சேர்த்துக் கொள்வதும் மனதை விடுவித்துக் கொள்வதுமாக இருக்கிற செயல் முறைகள் சார்ந்து நாம் பேசுகிறபோது கீழ்படிதலும் சரணடைதலும் மிக முக்கியமான சொல்லாக மாறிவிடும்.

இதில் கீழ்படிதல் என்பது ஒருவருக்கு தன்னை, தன் செயல்பாடை தனக்குள் இருக்கிற சிறந்த தன்மைகளை தளர்த்திக் கொள்வது என்கிற தன்மையோடு, அணுகுமுறையோடு இருப்பது.

ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவர் கீழ்படிய முடியும். ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவர் கீழ்படிய முடியும் என்பது அந்த மாணவனின் ஆணவ குறிப்புகளிலிருந்து சில முக்கியமான பகுதிகளை வெட்டி விடுகிற முயற்சி. புதிய ஒன்றை கற்றுக் கொள்ள புதிய ஒன்று நமக்கு கிடைக்கிற நிலையில் ஒரு அறிவை பெற்றுக் கொள்ள ஒரு மாணவன் கீழ் படிதலை செய்ய வேண்டும். இன்று இருக்கிற கல்வி முறையில் கூட நாம் அவற்றைப் பார்க்க முடியும்.

கீழ்படிதல் என்பது கற்று கொள்கிற ஒருவனுக்கு கற்றுக் கொடுக்கிற ஒருவன் முன் நிகழ்கிற நிகழ்வு மாற்றம். தமக்கு எல்லாமும் தெரியும் என்றாலும் கூட புதிய செய்தியை புதிய தகவலை புதிய ஒன்று பற்றிய அறிவை தேடி வருகிற ஒருவர் தனக்குள் ஏதோ ஒரு மூலையி,ல் தன் உளவியலில், தன் உள்ளத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது என்று ஒத்துக் கொள்கிற ஏற்றுக்கொள்கிற நிலையில் கீழ்ப்படிதல் துவங்குகிறது.

ஒரு குருவானவர், ஒரு ஆசிரியரானவர், ஒரு அறிவாளி ஒன்றை பிறரோடு பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு தெரிந்த ஒன்றை பிறருக்கு புரியவைக்க முயற்சிக்கிறார். அவர் எடுக்கிற இந்த முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிற ஒருவர், அவரிடமிருந்து அவரது செய்திகளை வார்த்தைகளாக அறிவினை விளக்கங்களாக பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு பெற்றுக்கொள்ளல் நிகழ்ந்த உடன் அந்த வகுப்பு கலையும். அந்த வகுப்பு கலைந்தவுடன் மீண்டும் வழக்கமான வாழ்க்கைக்குள் மாணவர் சென்று விட முடியும். ஆசிரியரும் சென்றுவிட முடியும்.

ஒரு கல்லூரி வகுப்பறையை நாம் உதாரணமாக வைத்துக் கொள்ளலாம். ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு முதுநிலை கல்வி கற்றுக் கொடுக்கிற வகுப்பறையில் ஒரு சிறந்த கவிஞர் ஒரு பாடத்தை தேர்வு செய்து படிக்க வந்திருக்கலாம். அந்த கவிஞருக்கு மிக உயர்வாக கவிதை எழுத கைகூடும் வாய்ப்பு இருக்கலாம். அவர் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை கற்றுக் கொள்கிறார் என்றால் அவர் வகுப்பறைக்கு வெளியில், கல்வி கூடத்திற்கு வெளியில் மிகச் சிறந்த கவிஞராகவும் அந்த வகுப்பறைக்குள் ஒரு தொழில் சார்ந்த, நுட்பம் சார்ந்த அறிவை சேகரிக்கிற கீழ்ப்படிதல் உள்ள மாணவனாகவும் தன்னை மாற்றிக் கொள்ள அவசியம் ஏற்படுகிறது.

இன்னும் கூட இது மேம்போக்கான நிலையிலிருந்து நகர்ந்து கீழ்படிதல் என்பது புதிய ஒன்றை கற்றுக் கொள்வதற்கான ஆணவத்தை கைவிடுவது, ஆணவத்தை குறைத்துக்கொள்வது என்கிற தளத்தில் பார்க்கக் கூடியது.

                                                                                                தொடரும்...

ALSO READ : சும்மா இருப்பது - Being Idle - Part -1

ALSO READ : மகிழ்ச்சியாக இருப்பதற்கான கிழக்கு நாடுகளின் குறிப்பு

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...