Monday, October 4, 2021

சும்மா இருப்பது - Being Idle - Part -1

 

www.swasthammadurai.com




    சும்மா இருப்பது பற்றி ஏதாவது பேசவேண்டும் என்று ஒரு உரையாடலை நிகழ்த்தி பார்க்க வேண்டுமென்று அன்பர்கள் கேட்டுக் கொள்கின்றனர். பெரும்பாலும் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வாக பரிந்துரைக்கிற ஒரு ஆலோசனை “சும்மா இருப்பது” என்பதைத்தான். சும்மா இருப்பது என்றால் என்ன? என்று புரிந்து கொள்ள வேண்டும். “சும்மா இருப்பது” எவ்வாறு உங்களுக்கு உதவி செய்யும்? என்பதை நீங்கள் அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற தேவையும் வாய்ப்பும் ஒருசேர அமையும் என்றால் என்னைப்போலவே நீங்களும் சும்மா இருப்பது சிறந்தது என்று உணர்ந்து கொள்ள முடியும். இரண்டு நண்பர்கள் சந்திக்கிற போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நலம் விசாரித்துப் பிரிந்து செல்கின்றனர். இருவரும் அவர்கள் அளவில் மன கனத்தோடு இருந்தாலும்கூட நலமாக இருப்பதாக பகிர்ந்து கொள்கின்றனர் மன கனத்தோடு இருக்கிறபோது நீங்கள் எவ்வாறு நலமாக இருப்பதாக பகிர்ந்து கொள்ள முடிகிறது என்று அவர்களோடு பேசும்போது மன கனத்தை நாம் ஏன் சொல்ல வேண்டும்? “சும்மா சொல்லி வைக்கலாம். நல்லா இருக்கேனு” என்று சும்மா என்கிற வார்த்தையை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இப்படி ஒரு பயன்பாடு சும்மா குறித்து நம்மிடம் இருக்கிறது. இந்த பயன்பாடு சும்மா குறித்து, சும்மா இருப்பது என்பது குறித்து நமக்குள் இருக்கிற தவறான புரிதலாக எனக்குத் தோன்றுகிறது.

ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து பேசிக் கொள்கிற இளம் வயதினர், நடுத்தர வயது மக்கள் பெரும்பாலும் உரையாடலை சும்மா நிகழ்த்துவதாக கூறிக்கொள்கின்றனர். நவீன சமூக ஊடகங்களில் வெளியிடப்படக் கூடிய செய்திகளும் அதைத்தொடர்ந்து நிகழ்த்தப்படக்கூடிய உரையாடல்களும் “சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறோம், சும்மா பேசிகிட்டு இருக்கிறோம்” என சும்மா என்கிற கருத்தாக்கத்தில் உரையாடப்படுகிற உரையாடலாக அவை இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த சும்மாக்கள் பற்றி நான் பேச வேண்டும் என்று அன்பர்களினுடைய தற்சமய வேண்டுதல். விருப்பம்.

அந்த வகையில் சும்மா என்பது என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சும்மா என்ன செய்கிறது என்பதை நாம் அனுபவிக்க வேண்டும். உலகிலேயே ஒரு மனிதன் இறுதியாக நிம்மதிக்காக வந்து சேர்வதற்கு ஏதாவது ஒரு செயல்பாடு இருக்கிறது என்றால் அது சும்மா இருப்பதுதான். தாவோ தத்துவத்தில் நீங்கள் சும்மா இருக்க வேண்டும் என்று எல்லா பயிற்சி  முறைகளிலும் பரிந்துரைக்கப்படுகிறது. தாவோ உலகம் முழுவதும் போற்றப்படுகிற மதிக்கப்படுகிற தத்துவ மரபு. வெறுமனே வேடிக்கை பார்ப்பது. வெறுமனே சும்மா இருப்பது என்பது தாவோ மரபின் மிக முக்கியமான பரிந்துரை. இன்றும்கூட மரபார்ந்த தாவோ பின்பற்றும் நம்பிக்கையாளர்கள், பயிற்சியாளர்கள் ஒரு தேநீர் சமைக்கும்போது சும்மா வேடிக்கை பார்ப்பதாக ஒரு தியானப் பயிற்சியை வைத்திருப்பதாக நான் படித்திருக்கிறேன். சும்மா என்பது தியானிக்கிற நிலைக்கு, தியானிக்கிற தன்மைக்கு மிக அருகில் இருக்கிற ஒரு அனுபவம். அந்த வகையில் சும்மாவை நாம் வெறுமனே கடந்து போக முடியாது என்பதற்காக சும்மா பற்றி பேசவேண்டும் என்று நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

ஒரு உரையாடலில் மதிப்புமிக்க நேரத்தில்கூட நீங்கள் உரையாடுகிற போது இரவு 11 மணிக்கு உங்கள் தொலைபேசியில் ஒரு சமூக ஊடகத்தின் வழியாக “சாப்டீங்களா” என்று உங்களுக்கு செய்தி வரக்கூடும். நீங்கள் மிகுந்த பதட்டத்தோடு அந்த செய்தியை திறந்து பார்க்கிறபோது சாப்பிட்டீர்களா? என்கிற செய்தியும் அதற்காக உங்கள் பதில் என்ன என்பதற்கான காத்திருப்பும் சமூக ஊடகத்தில் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் மீண்டும் நீங்கள் “சாப்பிட்டேன்” என்று பேசுவது, தூங்கி விட்டீர்களா? என்று கேட்பது “நான் தூங்க போகிறேன்” என்று பேசுவது இத்தகைய மதிப்புமிக்க நேரத்திற்குள் நடக்கிற உரையாடல்கள் சும்மாவின் மீது, சும்மா என்கிற பொருளில் நடத்தப்படுவதாக அத்தகைய உரையாடல் செய்கிறவர்கள் சொல்கிறார்கள். இத்தகைய சும்மாவிற்கும் தாவோ பரிந்துரைக்க சும்மாவிற்கும் உள்ள வேறுபாடு தரமானது, உயர்வானது என்பதால் சும்மா மதிப்புமிக்கது என்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இந்த மனிதர்கள் சும்மாவை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அப்படியான சும்மாக்குள் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த உரையாடல்.

வெறுமனே காலை எழுந்தவுடன் நான்கு, ஐந்து மணிக்குள் இலட்சக்கணக்கான பறவைகளின் சத்தங்கள் உங்கள் காதுகளை வந்தடைகின்றன. பறவைகளுக்கு எந்த இலக்கும் கிடையாது. இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களில் விடிந்துவிடும் என்று கூட பறவைகளால் யோசிக்க முடியுமா? என்பது கூட தெரியாது. பறவைகள் விழித்தவுடன் வெறுமனே இசைவாக, அழகாக கூவிக் கொண்டும் கத்திக் கொண்டும் பறந்து கொண்டும் இருக்கின்றன. இவை சும்மா நிகழ்வது. ஏழு மணிக்குப் பிறகு இத்தகைய இரைச்சலை பறவைகள் எழுப்புவதில்லை. ஒரு பெரும் வெப்ப நேரத்தில் மரங்கள் அசைவதும் அசைவிற்கு இடையில் காற்று மிதமாக வீசுவதும் எந்த திட்டமும் இல்லாமல் நிகழ்கிறது. இது சும்மா நிகழ்வது. ஒரு நீண்ட இரவுப் பொழுதுக்கு முன்பு ஒரு மாலை நேரத்தில், இதமான காற்றோடு மேகங்கள் கூடுவதும் பின் சிறிது நேரத்தில் அங்கே ஒரு பெரிய மழை வெள்ளமாய்ப் பெருகுவதும் சும்மா நிகழ்வது. இவை நிகழ்வதற்கு எந்த காரணமும் தேவையில்லை. இரண்டு விலங்குகள் சந்தித்துக் கொள்வதும் காதல் கொள்வதும் சும்மா நிகழ்வு. மரங்கள் அசைவது, மீன்கள் நீந்துவது, ஒவ்வொன்றிற்குள்ளும் அவை சும்மாவே அவற்றை செய்கின்றன.

இந்த சும்மாவிற்குள் இருக்கிற ரகசியம் இவை அனைத்தும் இயற்கையாக, இலகுவாக, நோக்கம் இல்லாமல் அதற்கே உரிய ஒத்திகையில் நிகழ்பவை. சும்மாக்கள் எப்போதும் இப்படித்தான் நிகழ்கின்றன. இயற்கையின் இசையில் ஒத்திசைவாக முரண்பாடுகள் இல்லாமல் கச்சிதமாக எழுகிற, நிகழ்கிற, படிகிற எல்லாமும் சும்மாவே நிகழ்பவை. அவற்றிற்குள் லட்சியங்கள் இருக்காது. அவற்றிற்குள் கோட்பாடுகள் இருக்காது. அந்த நிகழ்வில் எந்த முன் முடிவும் இருக்காது. முழுக்க “சும்மா” என்கிற அளவிலேயே அவை நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த லட்சியங்கள் இல்லாத, கோட்பாடுகள் இல்லாத மிகுந்த அமைதியை நோக்கி இன்று அமைதிக்கான தன்மையோடு நிகழ்கிற ஒன்றாக உங்கள் சும்மா இருப்பதில்லை. உங்கள் சும்மாவிற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதன் வழியாக மட்டுமே இயற்கையிலிருந்து உங்கள் சும்மாக்கள் தரம் குறைந்து இருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

ALSO READ:MEDITATION(தியானம்)

ALSO READ:CELEBRATIONS(கொண்டாட்டம் )

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...