![]() |
meditation |
தியானம்
தியானம் என்பது இன்று பரவலாக மக்கள் மத்தியில் கேட்கப்படுகிற புழக்கத்தில் இருக்கிற செயல்பாடாக காணமுடிகிறது. தியானம் பற்றி பேசுவது, தியானம் பற்றி ஒருவரை ஒருவர் சந்திக்கிற போது உரையாடிக் கொள்வது, தியானம் பற்றி தேடுவது என்று இந்த தியானம் சார்ந்த பயணங்கள் மக்கள் மத்தியில், தனி மனிதர்கள் மத்தியில் விரிவடைந்து கொண்டே போவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு தியானம் குறித்து தேடல், தியானம் குறித்த புரிதல், தியானம் குறித்த பிடிப்பு, வந்திருக்கிறதா என்றால் தெரியவில்லை. ஆனால் தியானம் என்கிற பயிற்சி முறைகளும் முயற்சிகளும் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மேலும் தியானத்தை பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தவிப்பு மக்கள் மத்தியில் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றிற்கும் காரணம் தியான மீதான பற்று, தியானம் மீதான மரியாதை, தியானம் மீதான தேடல் என்பதாக எனக்கு பார்க்க முடியவில்லை.
ALSO READ:தியானக் கதைகள் - 2
சம காலத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு
தனிமனிதனும் தன் வாழ்வின் மீது
நம்பிக்கை கொண்டவனாக இல்லை. தன் வாழ்வின்
மீது அக்கறை கொண்டவனாக இல்லை.
தன்னை போல பிறரை குறைந்தபட்சம்
நேசிக்கிறவனாக இல்லை. இந்த நேசிப்பின்மையும்
நம்பிக்கையின்மையும் இந்த வாழ்வு குறித்த
போதுமான தைரியமும்
இல்லாத மக்கள் பெருகி இருக்கின்ற
சூழலில், இந்த வாழ்க்கை அவர்களுக்கு
சலிப்பானதாக மாறிப் போகிறது. அதிலிருந்து
இந்த வாழ்வை மாற்றுவதற்கு பதிலாக,
இந்த வாழ்கின்ற முறையை மாற்றுவதற்கு பதிலாக,
தியானம் என்று தங்களை விலக்கிக்
கொள்ளவும் தப்பித்துக் கொள்ளவுமான முயற்சியில் ஈடுபடுவதை நான் பார்க்கிறேன்.
உங்கள் கண் முன் இருக்கிற சவால்களை உங்கள் கண்முன் இருக்கிற வாய்ப்புகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்? புதிர்களை எவ்வாறு அவிழ்க்கிறீர்கள்? என்பதில்தான் உங்கள் வாழ்வின் உடைய அழகு நிரம்பி இருப்பதாக நான் பார்க்கிறேன். ஒருவேளை தியானம் என்று ஏதாவது ஒன்று இருக்கும் என்றால் உங்கள் வாழ்வினுடைய இந்த நிமிட வாழ்வை நீங்கள் எவ்வாறு வாழ்கிறீர்கள்? என்பதில் தான் அந்தப் பரவசத்தில் தான் தியானம் என்பது இருக்கக்கூடும்.
ALSO READ:தியானக் கதைகள்
ஆக, வாழ்வின் அடுத்த வினாடி குறித்த, நிகழ்கால சவால்கள் குறித்த, விடுதலையை, சந்திப்பை மேற்கொள்ளாமல் நீங்கள் அச்சத்தில் இருந்தும் தைரியத்தில் இருந்தும் சலிப்பில் இருந்தும் தேடுகிற எந்த ஒன்றும் தப்பித்தலாகவே இருக்கும் தவிர, தியானமாக இருக்காது; தியானமாக இருக்க முடியாது என்பது அறிவுறுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வாழ்வினுடைய அழகு என்பது இந்த வினாடி வாழ்வை சந்திப்பது; இந்த வினாடி வாழ்வை எதிர் கொள்வது; இந்த வினாடி வாழ்வை நகர்த்துவது; இந்த வினாடி வாழ்வை வாழ்ந்து பார்ப்பது. இதுதான் ஒரு வாழ்விற்கான வாழ்வதற்கான இலக்கணமாக இருக்க முடியும். இலக்கணமாக இருக்க வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்கிறேன். தியானம் என்பது இந்த நிமிட வாழ்வை நீங்கள் எவ்வாறு வாழ்கிறீர்கள்? என்பதில் இருந்துதான் துவங்குவோ புரிந்துகொள்ளவோ முடியும். அதுதான் சாத்தியமானதும் கூட சத்தியமானது கூட.
அந்தந்த நிமிடத்தில் வாழ வேண்டுமென்றால் கடன், கஷ்டம் இருக்கும் போது அடுத்த நாட்களைப் பற்றி அடுத்த நிமிடத்தை பற்றி கவலைப்படாமல் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் தைரியத்துடன் எதிர்கொள்வது?
இந்த நிமிடத்தில் வாழவேண்டும் என்பது அடுத்த நிமிடத்தின் மீது, அடுத்த நாளின் மீது, அடுத்த வினாடியின் மீது பொறுப்பில்லாமல் வாழ்வதாகவே இந்தச் சமூகம், இதுவரை நீங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை முறை உங்களுக்கு பதிவு செய்திருக்கிறது. இந்த நிமிடத்தில் வாழ்வது என்று நீங்கள் முடிவு செய்த உடன் அடுத்த நிமிடத்தில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்ற தர்க்கத்தில் இருந்தே இந்த நிமிட வாழ்க்கையை பார்க்க துவங்கி விடுகிறீர்கள். இந்த நிமிடத்தில் வாழ்வது என்பது இந்த நிமிடத்தில் பொறுப்போடு இருப்பது. இந்த நிமிடத்தில் வாழ்வது என்பது இந்த நிமிடத்தில் சுதந்திரமாக இருப்பது. அடுத்த நிமிடம் வரும்போது அப்பொழுதும் அது இந்த நிமிடமாக மாறிவிடும்.
ALSO READ:புத்தர்களுக்கு அடையாளம் தேவைப்படாது
ஆக, நீங்கள் எப்போதுமே அடுத்த நிமிடத்தில் பொறுப்புடன் வாழ்வதாக எண்ணிக்கொண்டு இந்த நிமிடத்தில் பொறுப்பில்லாமலும் தவிப்போடும் இருப்பதை மாற்ற வேண்டும் என்பதைத்தான், அழகாக வாழ்வது, கொண்டாட்டமாக வாழ்வது, இந்த நிமிடத்தில் வாழ்வது என்பதாக நான் பரிந்துரை செய்கிறேன். பொறுப்போடு இருக்க வேண்டும் என்பது, அந்தந்த நிமிடத்தில் தான் சாத்தியமாகக் கூடியது. கற்பனையான ஒரு நிமிடத்தில் கற்பனையான பொறுப்போடு இருப்பது வாய்ப்பில்லை. கற்பனையான நாளுக்காக கற்பனையான தைரியத்தோடு இருப்பது சாத்தியமில்லை. இன்னும் வந்து சேராத நாளைய பொழுதிற்காக இன்று நம்பிக்கையான வார்த்தைகளை கற்பனை செய்வதன் மூலமாக நீங்கள் கற்பனையான நாளை நோக்கி கற்பனையான தைரியத்தோடு இருப்பது மட்டும்தான் வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இன்று இப்பொழுது தைரியத்தோடு எதிர்கொள்கிற வாழ்க்கை முறை என்பது சுதந்திரமாகவும் பொறுப்பானதாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற உங்களது மனம் முடிவு சம்பந்தப்பட்டது. உங்களைச் சுற்றி இருக்கிற அல்லது இப்பொழுது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற கற்பனை சார்ந்த அடுத்த நிமிடத்திற்கான வாழ்க்கை என்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது இந்த நிமிடத்தை அடுத்த நிமிடத்திற்காக விரையம் செய்வதாகவே இருக்கிறது. அடுத்த நிமிட விரயம் என்பது இந்த நிமிடத்திலிருந்து துவங்குவதாகவே நான் பார்க்கிறேன். உண்மையிலேயே இந்த வாழ்க்கை வாழ வேண்டியது இப்போது இன்று, இந்த வினாடி என்பதாக இருந்தால் மட்டும்தான் நீங்கள் தியானிப்பதற்கான நபராக இருக்க முடியும். தொடர்ந்து நிமிடங்கள் வரத்தான் போயிருக்கின்றன. நாட்கள் வரத்தான் போகின்றன. அந்தந்த நிமிடத்திற்குரிய வாழ்க்கைமுறையை அந்தந்த நிமிடத்திற்கு உரிய சௌகரியத்தை அந்தந்த நிமிடத்திற்கு உரிய வாய்ப்புகளை சுதந்திரமாகவும் பொறுப்பாகவும் உங்களால் உருவாக்க முடியும் என்பது இந்த நிமிடத்தில் வாழும் போது தான் உணர முடியும்.
ALSO READ:நலம்(HEALTH)
இந்த நிமிடத்தில் வாழ்க்கையை அனுபவிக்கும் போதுதான் கற்றுக்கொள்ள முடியும். வராத நிமிடத்திற்காக வாழ்வது கற்பனையாக வாழ்வதாகவே முடிந்து போகும். அந்த வகையில் உங்களுடைய தைரியம் என்பது பொறுப்புணர்வு என்பது வராத நிமிடத்திற்கான கற்பனையாக இருக்க வேண்டியதில்லை. உங்கள் தைரியமும் சுதந்திரமும் பொறுப்பும் இந்த நிமிடத்தில் அனுபவமாக, கச்சிதமாக, சிறப்பாக வாழ்வதற்கான சங்கதியோடு சம்பந்தப்பட்டது. இந்த நிமிடத்தில் இன்று இப்போது மகிழ்வாக வாழ்வதை தியானமாக கொள்ளுங்கள். தியானம் என்பது இப்படித்தான் துவங்க முடியும். இப்படித்தான் துவங்குகிறது.
No comments:
Post a Comment