சும்மா இருப்பது
ஒரு சமகால
மருத்துவர் இராஜன் சங்கரன் மனிதரின் பற்றி உளவியல் தொடர்பான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார்.
அந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அவரது மருத்துவ பயிற்சி இருப்பதாக அவர் பதிவு செய்கிறார்.
அவரது பதிவு மிகுந்த முக்கியமானது. ஒவ்வொரு மனிதனும் சும்மா இருப்பதில்லை என்பது அவரது
பதிவில் நான் புரிந்து கொண்டது. மேலும் அவர் பதிவு செய்ததில் மிக முக்கியமான பகுதி
ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு வகையில் பிடிதொன்றை சார்ந்து இருக்கிறான், பிரிதொன்றை
பிரதிபலிக்கிறான். அவனுக்கு சும்மா இருக்க முடியாது என்கிற பொருள்பட அவரது ஆய்வு முழுக்க
பேசிக்கொண்டே இருக்கிறார்.
இந்த உளவியல்
ஆய்வு மருத்துவ அளவில் மட்டுமல்லாமல் எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதாக இருக்கிறது.
மனிதர்கள் சும்மா இருப்பதில்லை. மனிதர்களால் சும்மா இருக்க முடிவதில்லை. ஏதாவது ஒன்றாக
தன்னை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். இந்த மாற்றிக் கொள்கிற முயற்சியில் ஏற்படுகிற
வெளிப்பாடுகள்தான் இரவு நேரங்களிலும் விலைமதிப்புமிக்க நேரங்களிலும் கூட ஒரு பயன்படாத
உரையாடலை உருவாக்குவது. இரவு நேரத்தில் ஒருவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி அவர் உண்கிறாரா?
உறங்குகிறாரா? என்று பார்ப்பதற்கு எந்த தேவையும் இல்லை. காலை எழுந்தவுடன் நமது வணக்கத்தை
அவர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எந்த அழுத்தமும் அவசியமில்லை. இவை எல்லாமும் சும்மாவின்
மீதே நிகழ்த்தப்படுகின்றன. இந்த சும்மா நிகழ்வதற்கு ஒரு மனிதன் ஏன் தன்னை பலி கொடுக்கிறான்?
என்பதுதான் இராஜன் சங்கரனின் ஆய்வுக் குறிப்பில் நாம் பார்க்க முடிகிறது.
1940களில்
இந்த மனித அபிப்பிராயங்களை “நான் யார்?” என்கிற தன்மையோடு விசாரணை செய்த பகவான்
இரமண மகரிஷி - அவரது முயற்சியும் பயிற்சியும் குறிப்பிடத்தகுந்தது. மனிதனுக்குள்
எழும்புன்ற அபிப்ராயங்களே மனிதனை இயக்குகின்றன. மனிதனை சும்மா இருப்பதற்கு அவை விடுவதில்லை
என்று அவரது தத்துவ பயிற்சியில் பதிவு செய்கிறார். இந்த இயக்கம், இந்த அபிப்பிராயங்களின்
மீது பயணிக்கிற பயணமே மனிதனை இயக்குகிறது. மனிதன் சும்மா இருப்பதற்கு வாய்ப்பில்லை
என்கிற தன்மையில் இருக்கிறபோது ஒரு மனிதன் சும்மா இயங்குவதாகவும் சும்மா குறுஞ்செய்தி
அனுப்புவதாகவும் நடைபெறுவது என்பது குழப்பத்திற்கு உரியது.
ஒரு மனிதன்
ஏன் பயனில்லாத ஒன்றிற்கு தன்னை பலி கொடுக்க வேண்டும் என்பது சிந்தித்து பார்க்க வேண்டியது.
நம்மைச் சுற்றி இருக்கிற பலரும் இவ்வாறு இருக்கின்றனர் என்று எனக்குத் தோன்றுகிறது.
எந்த காரணமும் இல்லாமல் ஒரு காரணத்தை கண்டுபிடிக்க ஒவ்வொருவரும் முயற்சித்துக் கொண்டே
இருக்கின்றனர் என்று பார்க்கிறேன். இது உடல் அளவில், மன அளவில், சமூக உறவுகளில் பெரிய
சேதத்தை, கவலையை அவர்களுக்கு தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பதையும்
பார்க்கிறேன். ஒரு மருத்துவம் உதவ முடியாத இடம் அதற்குள் ஒளிந்து இருக்கிறது. ஒரு உளவியல்
ஆய்வாளர் தலையிட முடியாத ஒரு சிக்கல் அதற்குள் இருக்கிறது. ஒரு ஆன்மீக குரு விழிப்புணர்வு
தரமுடியாத ஒரு தடுமாற்றம் அதற்குள் இருக்கிறது.
ஒவ்வொரு
மனிதனும் தனக்குள் இருக்கிற ஒன்றை விட்டுவிட்டு வேறொன்றாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிற
மன ஓட்டம் மனித சமூகத்திற்கு நல்லதில்லை. அந்த மன ஓட்டம் மாற வேண்டியது. வாய்ப்பிருந்தால்
இன்னொருவரின் உதவியோடு மாற்றப்பட வேண்டியது. இந்த மன ஓட்டம் எவ்வாறாக மாறிப் போகிறது
என்றால் இரவு நேரத்தில் ஒருவருக்கு பயன்படாத உரையாடலை குறுஞ்செய்தியாக அனுப்புவது போலவே
ஒரு பக்தி சொற்பொழிவை பார்த்துவிட்டு உறங்குவதாக மாறுகிறது. பரபரப்பாய் இருக்கிற மனதிற்கு
குறுஞ்செய்திக்கும் பக்தி சொற்பொழிவிற்கும் எந்த வேறுபாடும் கண்டுபிடிக்கிற அக்கறையும்
அனுபவமும் வாய்க்கப் பெறாது. வெறுமனே பரபரப்பை பற்றிக்கொண்டே இயங்குகிற மனம் எல்லாவற்றையும்
பரபரப்பாகவே பார்த்துப் பழகியிருக்கும். இந்த மனம் பரபரப்பாய் இருக்கிறோம் என்பதை;
தயக்கத்தோடு இருக்கிறோம் என்பதை; பதட்டத்தோடு இருக்கிறோம் என்பதை; பயத்தோடு இருக்கிறோம்
என்பதை பார்ப்பதற்கு பதிலாக, அதை உடைத்துக் கொள்வதற்குப் பதிலாக, அதை கடந்து போவதற்குப்
பதிலாக வெளியில் மதிப்பிழந்த உரையாடல்களை “சும்மா” என்கிற பெயரில் உருவாக்கிக்கொண்டே
இருக்கிறது. இந்த மனம் உருவாக்குகிற எந்த உரையாடலும் பரபரப்பின் பாற்பட்டு விளைபவை.
தடுமாற்றத்தின் பாற்பட்டு உருவாகுபவை. இவை இயற்கையில் இயங்குகிற ஒத்திசைவான “சும்மாக்களில்” இருந்து மாறுபட்டவை.
ALSO READ: சும்மா இருப்பது - Being Idle - Part -1
No comments:
Post a Comment