Wednesday, October 6, 2021

சும்மா இருப்பது - Being Idle - Part -3

                                                      சும்மா இருப்பது

www.swasthammadurai.com




தொடர்ந்து சும்மா இருப்பது குறித்து ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெளிவு தேவைப்படுவதாக இருக்கிறது. இங்கு இருக்கிற எந்த நிறுவனத்திற்கும் எந்த ஆன்மீக கோட்பாடுகளுக்கும் கூட அதை நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு, அது அமைப்பு முறையாக மாறிய பிறகு இயற்கையாக இருக்கிற, இறைவன் போல் இருக்கிற ஒரு பரிசுத்தத்தின் சும்மா இருக்கும் நிலை பற்றி தெரிவதில்லை. சும்மா இருக்கிறோம் என்று பேசுகிற, யோசிக்கிற யாவரும் அப்படியானவர்களாக இல்லை. எந்த இலக்கும் இல்லாமல் இருப்பது மட்டுமே சும்மா இருப்பதற்கான அடையாளம்.

ஏன் சும்மா இருக்க வேண்டும்? என்று உங்களுக்கு தோன்றக்கூடும். எவ்வாறு சும்மா இருப்பது? என்பது கூட உங்களுக்கு கேள்வியாக எழலாம். இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து மனதிற்குள் ஏற்பட்ட, மகிழ்ச்சியற்ற அசௌகரியமான நலமில்லாத பகுதிகள் மனிதனுடைய வளர்ச்சிக்கு காரணமாய் இருக்கின்றன. இந்த நலம் இல்லாத பகுதியில் என்பது, அசௌகரியமான பகுதிகள் என்பது ஒரு மனிதன் இந்த சமூகத்தோடு தன்னை இணக்கமாக பொறுத்துக் கொள்ள முடியாத பகுதி. சமூகத்தோடு பொறுத்துக் கொள்ள விருப்பம் இருக்கிற ஒருவர் சும்மா இருப்பதற்கு முயற்சி செய்தாலும் கூட அது வெற்றி பெறாது. சும்மா இருப்பதற்கும் சமூகத்தோடு பொருத்தமாய் இருப்பதற்கும் நேர் எதிரான நிலைப்பாடு இருக்கிறது.

சும்மா இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற யார் ஒருவரும் சமூகத்தில் தன்னை விடுவித்துக் கொண்டவராக இருக்கிறார். மகாவீரர், அவர் வாழ்ந்த காலத்தில் சும்மா இருப்பதற்கு ஏராளமான பரிந்துரைகளையும் பயிற்சி முறைகளையும் முன்வைக்கிறார். அவர் சமூகத்தோடு தன்னை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் வாழ்ந்தவர். இயேசு கிறிஸ்து சும்மா இருப்பதை வலியுறுத்துகிறார். ஒரு சமூகம் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றிப் படுகொலை செய்தது. இந்த சமூகம் சும்மா இருப்பவர்களை பொருத்தம் இல்லாதவர்களாக பார்க்கிறது. நீங்க சமூகத்தோடு எவ்வளவு இணக்கமாக இருக்கிறீர்களோ அவ்வளவு நீங்கள் சும்மா இருப்பதற்கு எதிராக இருக்கிறீர்கள்.

உங்கள் மேல் ஒருவரும் விரல் நீட்டி குற்றம் சொல்லவில்லை என்றால் நீங்கள் சும்மா இருக்க வில்லை என்று பொருள். நீங்கள் நல்ல கணவராக இருப்பீர்கள் என்று சொன்னால் உங்களால் சும்மா இருக்க முடியாது. சும்மா இருக்கிற நபராக உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என்றால் ஒரு கணவராகவோ மனைவியாகவோ காதலனாகவோ மகனாகவோ எந்த சமூக அடையாளத்திற்குள்ளும் உங்களை பொறுத்துக்கொள்ள முடியாது.  சும்மா இருப்பது என்பது இலக்குகள் இல்லாமல் சத்தியத்தை மட்டும் முன் வைத்துக் கொண்டு சரணாகதி போக்கில் ஒரு மனிதன் தன் வாழ்வை வடிவமைத்துக் கொள்வதாக பொருள் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் இருக்கையில் தன்னைக் கரைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிற நியாயத்திற்கு மிக நெருக்கமான கோட்பாடு, நியாயமான வழிப்பாதை சும்மா இருப்பதுதான்.

ALSO READ: சும்மா இருப்பது - Being Idle - Part -1

ALSO READ: சும்மா இருப்பது - Being Idle - Part -2

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...