திருக்குறள்
திருக்குறள்
- வாழ்வியலுக்கான உரையாடல்
திருக்குறள்
குறித்த ஒரு உரையாடலை பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகுந்த பெருமை கொள்கிறேன்.
இந்த உலகில்
அறம் பற்றி பேசுவதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
அறம் குறித்து
பேசுவது என்பது இயற்கையின் மிக நுட்பமான, உயிர்ப்பான பகுதிகளைக் குறித்து பேசுவது என்று
நான் பொருள் கொள்கிறேன்.
இயற்கை என்றவுடன் நம் கண்ணில் காண்கிற மலைகளையும் செடிகொடிகளையும் நீரோடைகளையும் மட்டும் கணக்கில் கொள்ளாமல், இவற்றிற்கு ஆதாரமாக அடிநாதமாக இருக்கிற மிக முக்கியமான உயிர்ப்பான ஒரு இயங்கு முறையை இயற்கை என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன்.
எல்லா உயிர்களும்
இயங்குவதற்கான சுதந்திரம் இயற்கை. எல்லா பூக்களும் பூப்பதற்கான வாய்ப்பு - இயற்கை.
எல்லா நதிகளும் இணைந்து கொள்வதற்கான இணைப்பு கடல் - இயற்கை. எல்லா நட்சத்திரங்களும்
மின்னுவதற்கான இருள் - இயற்கை. எல்லா வாசமும் படர்ந்து செல்வதற்கான வாய்ப்பு தரும்
பூந்தோட்டம் - இயற்கை.
இப்படியான
இயற்கையை, இயற்கைக்குள் ஒளிந்திருக்கிற உயிர்ப்பை மொழி கொண்டு, சொல் கொண்டு உருவாக்க
யாரேனும் முயற்சி செய்வார் என்றால் அவரது முயற்சியில் வெளிப்படுகிற இயற்கையின் உயிர்ப்பு,
இயற்கையின் உயிரோட்டம், இயற்கையின் அடிநாதம் அறமாக வெளிப்படும். இயற்கையை பேசுவதே அறம்.
இயற்கையின் உயிர்ப்பை பேசுவதே அறம். இயற்கைக்குள் தரப்படுகிற வாழ்வியல் சாத்தியங்களை,
உயிரியல் இயங்குமுறையை பேசுவதே அறம்.
இத்தகைய
அறம் பேசுவதற்கு எல்லோருக்கும் வாய்ப்பு அமைந்து விடுவதில்லை. சிலர் பேசி இருக்கிறார்கள்.
என்றாலும் உலகம் முழுவதும் ஒப்பிட்டுப் பார்க்கிற எண்ணிக்கையோடு, உலகம் முழுவதும் எண்ணிப்
பார்க்கிற எண்ணிக்கையோடு நாம் கணக்கெடுத்தோம் என்றால் யாவர் பேசிய அறத்தை விடவும் எல்லோராலும்
ஏற்றுக் கொள்ளப்பட்ட மறுப்பிற்கு உட்படாத மாபெரும் அறமாக திருக்குறள் அமைந்திருக்கிறது
என்று நான் பார்க்கிறேன்.
திருக்குறள்
வாழ்வியலை, இயற்கையின் இயக்கவியலை தொகுத்து, சுருக்கி, தெளிந்து, கசடற சொல்லக்கூடிய
மிக அற்புதமான தொகுப்பு.
உலகம் தோன்றிய
காலந்தொட்டு இன்றுவரை வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற, இன்னும் எதிர்காலத்தில் வாழ்வதற்குரிய
சாத்தியம் இருக்கிற மனிதர்களுக்கும் கூட பொருத்தமான செய்திகளை பதிவு செய்து வைத்திருக்கிற
மதிப்பிற்குரிய அறநூல் திருக்குறள்.
யாவருக்கும்
பொதுவானது. யாவரும் இயற்கையை, இயல்பை, இயங்குவியலை, சமூக உறவுகளை புரிந்து கொள்ளவும்
பொருள் கொள்ளவும் செயல்படுத்தவுமான நுட்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய அற்புதமான பெரும்
படைப்பு திருக்குறள்.
மற்ற நூட்களை
படித்ததிலிருந்து திருக்குறளை, திருக்குறளின் மேன்மையை பேச வேண்டும் என்கிற ஆவல் எனக்கு
எப்போதும் இருப்பதுண்டு.
பெரும்
புலவர்களும் சொற்பொழிவாளர்களும் திருக்குறளின் மேன்மை குறித்து, உலக இலக்கியங்களை கற்றுக்
கொண்ட கற்றல் அறிவு குறித்து அதன் வழி சேகரிக்கப்பட்ட செய்திகளோடு ஒப்பிட்டு திருக்குறளை
பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள்.
எனது வாசிப்பு
எல்லை மிகக் குறுகியது. திருக்குறளை பேசுவதற்கு தனி அறிவு வேண்டும் என்று ஒரு அச்சம்
எனக்கு எப்போதும் இருப்பது உண்டு. திருக்குறளோடு இன்னும் ஆழமாக பயணிக்க வேண்டும் என்கிற
விருப்பம் எனக்கு உண்டு. திருக்குறளை விமர்சிக்கவும் உயர்த்திப் பேசவும் அதற்குள் இருக்கிற
அறக்கருத்துக்களை, செம்மை கருத்துக்களை மேன்மையை வெளிப்படுத்தவும் கூட போதிய அறிவும்
இலக்கிய சேகரிக்கும் தேவை என்று எனக்கு ஒரு கவனம் இருந்துகொண்டே இந்த உரையாடலில் நான்
பங்கேற்கிறேன்.
நான் புரிந்து
கொண்ட, நான் ரசித்த வள்ளுவருக்கும் எனக்குமாக நடைபெற்ற உரையாடலில் என்னை மேம்படுத்திய
பகுதிகளை மட்டும் நான் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒற்றை நோக்கம் தவிர திருக்குறளை
பேசுவதற்கு உரிய எந்த காரணமும் எனக்கு இல்லை.
திருக்குறள்
வள்ளுவரால் எழுதப்பட்டது. வள்ளுவர் எழுதிய 1330 குறட்பாக்களில் எல்லா குறட்பாக்களையும்
உள்வாங்கிக் கொண்டு செயல்படுத்தும் வல்லமையும் வாய்ப்பும் வாய்ப்பிருக்கிறது என்ற அறிவும்
கூட எனக்கு கிடையாது.
ஆனால் வள்ளுவர்
தம் குறளில் தெரிவித்து வைத்திருக்கிற, பதிவு செய்து வைத்திருக்கிற பல்வேறு செய்திகளில்
சிதறி ஓடிய சிதறலை கற்றுக்கொண்டு, என்னை அகத்தாய்வு செய்து சரி செய்து கொள்வதற்கான
முயற்சியை செய்ய வேண்டுமென்கிற உந்துதலையும் பெற்றுக்கொண்டு, பயணிக்கிற வாய்ப்பை நான்
பெற்றிருக்கிறேன். இந்த வாய்ப்பிற்கு உறுதுணையாக இந்த வாய்ப்பை செம்மைப்படுத்தும் தன்மையோடு
திருக்குறள் இருந்திருக்கிறது. இத்தகைய காரணங்களே எனக்கு திருக்குறளைப் பற்றி நான்
உரையாடுவதற்கு போதுமான காரணங்களாக நான் பார்க்கிறேன்.
உலக மேன்மையான
அறங்கள், மதங்கள், ஆன்மீக கருத்தாக்கங்கள் எல்லாமும் மனிதனின் வாழ்க்கை நிலையை வீடுபேறு
என்று நிறைவு செய்கின்றன.
ஒரு மனிதன்
தன் வாழ்வை நிறைவு செய்வதற்கு அவன் வந்து சேர வேண்டிய இடமாக வீடுபேறு என்பதை மறை நூல்கள்
வலியுறுத்துகின்றன. வீடுபேறு என்கிற நிலைக்கு எவ்வாறு ஒரு மனிதன் நகர வேண்டும் என்பதை
எனக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்திருக்கிறது என்பதை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு மனிதன்
வீடுபேறை அடைய வேண்டும் என்றால் அவன் எங்கிருந்து துவங்குவது, எந்த வரிசையில் பயணிப்பது,
எந்த எல்லையில் நிறைவு செய்வது என்று திருக்குறள் பாதை வகுத்து அளித்திருக்கிறது. இந்தப்
பாதையில் துவங்கி பயணித்து நிறைவு செய்தால் அந்த மனிதனின் முயற்சி அந்த மனிதனின் தனிப்பட்ட
எல்லா விருப்பங்களும் கடந்து அந்த மனிதன் வந்து சேர்ந்து நிற்கிற இடம் எல்லாம் மறை
நூல்களும் எல்லா ஆன்மீக தலங்களும் எல்லா கோட்பாடுகளும் சொல்கிற வீடுபேராக இருக்கும்
என்பது என்னுடைய பார்வை.
திருக்குறள்
ஒரு மனிதன் வாழ்வை துவங்க வேண்டிய இடமாக அறம் பாடுகிறது. அறத்தில் துவங்கி, அறம் செய்து
சேகரிக்கிற பொருளை பின்பு இணைக்கிறது. அறமும் பொருளும் சேர்ந்து விளைகிற போது விளைகிற
விளைச்சலை இன்பத்தில் வகைப்படுத்துகிறது. அறமும் பொருளும் இன்பமும் சேர்ந்து கடந்த
பின்பு ஒரு மனிதன் வந்து நிற்கிற நிலை வீடுபேறாக மலரும் நின்று நான் பார்க்கிறேன்.
இந்த வரிசையை, இந்த துவக்கத்திற்கான சமன்பாட்டை ஒரு மனிதன் செய்ய வேண்டியது துவங்க
வேண்டியது என்று எல்லா வகையான நுட்பங்களையும் சமன்பாடுகளையும் போதிய தரவுகளோடு அடுக்கி
சேகரித்து வைத்திருக்கிற மாபெரும் நூலாக திருக்குறள் இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்;
நான் சிலாகிக்கிறேன்; நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
தொடர்ந்து பேசுவோம்…
No comments:
Post a Comment