Saturday, October 23, 2021

FASTING / எவ்வாறு விரதம் இருப்பது?

                            எவ்வாறு விரதம் இருப்பது?

www.swasthammadurai.com


ஒருவர் உணவை மறுக்கிறார். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மத அடிப்படையில், மரபு அடிப்படையில், சார்ந்திருக்கிற பண்பாட்டின் அடிப்படையில் ஒருவர் உணவு உட்கொள்வதை ஒரு நாள் முழுவதும் நிறுத்தி வைக்கிறார் என்பதாக நாம் கொண்டோம் என்றால் இந்த நிலைப்பாடு உடலில் என்ன வேலை செய்கிறது என்று நாம் பார்க்க முடியும்.

இன்று நவீன தொலைத்தொடர்பு வளர்ச்சிக்குப் பிறகு பழைய மரபுகளை எடுத்து வைத்துக்கொண்டு இன்றைய விஞ்ஞான உடல் அறிவியலோடு ஒப்பிட்டு பார்க்கிற ஒரு மனப்போக்கு நாம் பார்க்கிறோம். இது முழுவதும் சரியா, தவறா என்பது உரையாடி பார்க்கவேண்டிய வேறு ஒரு பகுதி.

அமாவாசை அன்று உணவு உட்கொள்ளாமல் இருந்தீர்கள் என்றால் அந்த நாட்களில் உங்கள் உடலில் இந்தந்த உறுப்புகள் வேகமாக வேலை செய்யும். இதை அன்றே நமது மரபினர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவேதான் அமாவாசை என்று உணவு உட்கொள்ளக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள் என்று புதிய புதிய கதைகளை பின்னி வலைதளங்களில் ஒளிபரப்பு செய்கிற நிறைய கதையாடல்களை நாம் பார்க்கிறோம்.

இத்தகைய கதையாடல்கள் உண்மையிலேயே அத்தகைய அறிவியல் தன்மையோடு தான் இந்த மரபு சமூகம் கட்டமைத்து வைத்திருந்ததா என்பது கேள்வியாக ஒருபுறமிருக்கது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட உணவை குறிப்பிட்ட நாட்களில் நீங்கள் உட்கொள்ளாமல் இருக்கிற போது அது என்ன வேலை செய்கிறது என்பது அக்கறையோடு கவனிக்கப்படவேண்டிய பகுதியாக நான் பார்க்கிறேன்.

ஒரு உணவை உட்கொள்கிறோம் அல்லது ஒரு உணவை மறுக்கிறோம். அந்த உணவு உடலளவில் என்ன வேலை செய்கிறது என்று நம்மால் ஆய்வு செய்ய முடியும். ஆனால் மனிதனின் இயக்கம் என்பது உடல் அளவில் சுருங்கி போவது அல்ல என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மனிதன் உடலாலும் உள்ளத்தாலும் இயங்குகிற ஒரு இயங்கு பொருள். மனிதனுக்கு உயிர் என்கிற நிலையிலிருந்து அதற்கும் மேலாக ஒரு தளமும் அதற்கு மேலாக ஒரு தளமுமாக ஒரு நான்கு, ஐந்து தளங்கள் இருக்கின்றன என்று மருத்துவங்கள் குறித்து வைத்திருக்கின்றன.

சித்த மருத்துவத்தினுடைய தத்துவத்தில் தொண்ணூற்றாறு வகையான தத்துவங்களாக உடலை பகுத்து பார்க்கிறது. அது உடலுக்குள் ஐந்து வகையான உறைகள் இருக்கின்றன என்று வகைப்படுத்தி சொல்கிறது. ஐந்து வகையான உறைகளாலானது இந்த உடல் என்று ஒரு தத்துவ குறிப்பு இருக்கிறது. வெறுமனே பொருளாக இருக்கிற உணவை உட்கொண்டு வளர்கிற இதனை அண்ண உடல் என்று சித்த மருத்துவ தத்துவம் பறைசாற்றுகிறது. பிராணத்தை மட்டும் உணவாக உட்கொண்டு வளர்கிற உடலுக்கு அந்த உறைக்கு பிராண உடல் என்று சித்த மருத்துவம் வகைப்படுத்தி வைத்திருக்கிறது.

இதைப்போலவே காண்கிற காட்சி, கேட்கிற செய்திகளை சேகரித்து வைத்துக்கொண்டு அதன்மூலம் இயங்குகிற வளர்ச்சி அடைகிற உடலை மன உடல் என்று பகுத்து வைக்கிறது. இதைப் போல விஞ்ஞான உடல், அனந்த உடல் என்று ஐந்து உறைகளாக ஐந்து உடல்களாக சேர்ந்த ஒரு மனிதன் தான் முழுமையான மனிதன் என்று சித்த மருத்துவ தத்துவ மரபு தன் தத்துவ குறிப்புகளில் வைத்திருக்கிறது என்பதை நாம் ஆவணங்களின் வழியாக பார்க்க முடிகிறது.

இந்த வகையில் இருக்கிற உணவுத் தேவைக்கு உடலின் அமைப்பிற்கு உண்ணாவிரதம் என்பது வெறுமனே உள்ளே உண்கிற அரிசியையும் கோதுமையையும் தவிர்த்துவிட்டு பார்ப்பது என்பது போதுமானது அல்ல.

சித்தமருத்துவத்தினுடைய ஆய்வுக் குறிப்புகளை மட்டும் வைத்து நாம் பேசினாலும் கூட ஒரு மனிதன் என்பவன் ஐந்து உடலாக இருக்கிறபோது அந்த மனிதன் வாழ்வதற்கு ஐந்து தளங்களில் தேவைப்படுகிறது.

ஒரு மனிதன் வாழ வேண்டுமென்றால் அவன் பொருள் சார்ந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பது ஒரு உடலுக்கான தேவை. அந்த உடலுக்குள் இருக்கிற ஒரு உறைக்கான தேவை. பின்பு பிராண காற்றை சுவாசித்துக் கொண்டு உடலை வளர்த்துக் கொள்ளவேண்டிய பிராணா உடலுக்கான தேவை என்பது ஒன்று இருக்கிறது. மன உடலுக்கான தேவை என்பது ஒன்று இருக்கிறது. விஞ்ஞான உடலுக்கான தேவை என்பது ஒன்று இருக்கிறது. அனந்த உடலுக்கான தேவை என்ற ஒன்று இருக்கிறது. இப்படி உடல் வளர்வதற்கான தேவை ஐந்து உறைகளாக இருக்கிறபோது ஐந்து உறைகளுக்குமான உட்கொள்ளும் தேவை ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது என்பதை தத்துவங்களின் வழியாக நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. இந்த ஐந்து உடல்களின் தேவையை எந்த விரதத்தின் வழியாக நாம் நிறைவு செய்து கொள்கிறோம் என்ற உரையாடலின் முகமாகவே இந்த உண்ணாவிரதங்கள் எத்தனை வெற்றி பெறுகின்றன என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

நீங்கள் உண்ணாவிரதம் என்று சொன்னவுடன் புரிந்து கொள்வது வாய்வழியாக உண்கிற அரிசியையும் தானியத்தையும் நிறுத்திவிடுவது என்கிற தன்மையிலேயே உண்ணாவிரதங்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன.

இந்த ஒரு பகுதி உரையில் நீங்கள் உண்பதை நிறுத்திவிட்டால் மீதமிருக்கிற நான்கு பகுதிகள் உங்கள் உடலில் இயங்கிக் கொண்டே இருக்கும். சாப்பிட்டுக் கொண்டே இருக்கும்.

உங்கள் கண்கள் பார்த்துக் கொண்டே இருப்பதன் வழியாக நீங்கள் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். உங்கள் காதுகள் கேட்பதன் வழியாக நீங்கள் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இத்தகைய மன வியாக்கியானங்களின் வழியாக உங்களது உடல், உங்களது மனம் தொடர்ந்து ஜீரணித்துக் கொண்டு புதிய புதிய செரிமான சக்திகளை உங்கள் உடலுக்குள் செலுத்திக் கொண்டே இருப்பதை உண்ணாவிரதங்கள் வழியாக, உணவை மறுப்பதன் வழியாக எதுவும் செய்துவிட முடியாது என்கிற ரகசியம் இருக்கிறது.

உங்கள் உண்ணாவிரதங்கள் எத்தகைய உண்ணாவிரதமாக இருக்கிறது என்பதை உடைத்துப் பார்த்து பேச வேண்டி இருக்கிறது. உண்ணாவிரதம் என்றவுடன் வெறுமனே எந்த உணவையும் உட்கொள்ளாமல் இருக்கிற மறுப்பு நிலைப்பாடு அல்ல.

நீங்கள் உண்மையிலேயே உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் உண்ணாவிரதத்தை சற்று ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

உடலுக்கு முழுமையாக ஓய்வு கொடுப்பது. உடலுக்கு தேவை இல்லாத எந்த ஒன்றையும் செய்யாமலிருப்பது. உடலுக்கு முழுமையாக ஓய்வு கொடுப்பது என்று நீங்கள் முடிவு செய்தீர்கள் என்றால் வெறுமனே வயிற்றுப் பகுதிக்கு செலுத்தக்கூடிய தானியங்களை மட்டும் நிறுத்தி வைப்பதாக பொருளல்ல. ஏனென்றால் நீங்கள் தானியங்களை மட்டும் நிறுத்தி வைத்துக் கொண்டால் உங்களது உடல் உடலளவில் சௌகரியமாக இயல்பாக இலகுவாக இருப்பதற்கு, ஓய்வு எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் உண்ணாவிரதம் என்பது அப்படியானதாக இருக்கக்கூடாது என்று நான் கருதுகிறேன். இத்தகைய உண்ணாவிரதங்கள் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது.

இன்று உங்கள் உடலை விடவும் உங்கள் மனமும் உங்கள் சுவாசமும் அதிக வேகத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிற போது உங்கள் மனதையும் உங்கள் சுவாசத்தையும் பின்பற்றியே உங்கள் உடல் இயங்குகிறது. உங்கள் சுவாசத்தையும் உங்கள் மனதையும் பின்பற்றியே உங்கள் உடல் இயங்குகிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் உண்ணாவிரதம் உங்கள் உடலை ஒன்றும் செய்யாது என்பதை நீங்கள் பார்க்க முடியும்.

உங்கள் மனம் எங்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறதோ அங்குதான் உங்கள் உடல் திரும்புகிறது. உங்களது சுவாசம் எவ்வாறு இருக்கிறது என்பதில் இருந்தே உங்கள் உடல் இயக்கம் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் சுவாசம் நின்றுவிட்டால் உங்கள் உடலால் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் சுவாசம் வேகமாக இருக்கிற போது உங்கள் உடல் வேகமாக இயங்குகிறது. உங்கள் சுவாசத்தின் அளவை மெதுவாக சுருக்கி விட்டீர்கள் என்றால் உங்கள் உடலினுடைய இயக்கம் மெதுவாக சுருங்கத் தொடங்கும்.

இந்தத் தொடர்பை புரிந்து கொள்வதன் வழியாகவே ஒரு உண்மையை நாம் கண்டுகொள்ள முடியும். அந்த உண்மை என்னவென்றால் உங்கள் உடல் வெறுமனே உடலளவில் இயங்குவது இல்லை. உங்கள் உடலுக்குள் இருக்கிற நான்கு, ஐந்து வகையான வேறுவேறு உறைகள் இணைந்ததுதான் உங்களது முழு உடல். இந்த ஐந்து உறைகளும் வெவ்வேறு வகையான உணவு உட்கொள்கிற வேலையை செய்கின்றன. வெவ்வேறு வகையான உணவுகள் உள்ளே செல்வதன் வழியாகவே இந்த ஐந்து வகையான உறைகளும் சேர்ந்து ஒரே உடலாக இயங்குகிறது என்பதை மருத்துவ ஆவணங்களின் வழியாக நாம் புரிந்து கொள்ளலாம்.

நவீன மருத்துவங்கள் இந்த பகுதியில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இன்னும் காலம் எடுக்கும். நவீன மருத்துவங்கள் இப்போதுதான் உடலளவில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. புதிய ஆய்வுகளை செய்து கொண்டு இருக்கிறது.

சித்த மருத்துவங்களும் இன்னபிற மரபுசார்ந்த மருத்துவங்களும் கூட இந்த ஆய்வுகளில் நிறைய ஆவணங்களை குறித்து வைத்து இருக்கின்றன. சேகரித்து வைத்திருக்கின்றன.

இன்னும் சீன மரபுகளில் இருக்கிற அக்குபங்சர் மருத்துவம் முழுக்க பிராண உடலில் வேலை செய்கிற மருத்துவமாக இருக்கிறது என்று அக்குபங்சர் மருத்துவ ஆவண நூல்கள் சொல்கின்றன. இத்தகைய மருத்துவம் எந்த நிலையில் இருந்து உடலை புரிந்து வைத்திருக்கின்றன என்பது கூட மருத்துவங்களின் பரிந்துரையில் மிக கவனத்திற்குரியதாக நாம் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டி இருக்கிறது.

தொடர்ந்து பேசுவோம்...

ALSO READ: எவ்வாறு விரதம் இருப்பது? - FASTING PART 1

ALSO READ: WHAT IS HEALTH? - PART - 6 நலம் எனப்படுவது - பகுதி 6

No comments:

Post a Comment

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம் - பகுதி 1 - சிவ கதிரவன்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்             நா ம் இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக் கொ...