Friday, November 24, 2023

புதிய குழந்தை - ஓஷோ - பகுதி 6 - சிவ.கதிரவன்

                                                     புதிய குழந்தை - ஓஷோ

ஒரு குறிப்பிட்ட பருவத்தில், குறிப்பிட்ட வெப்ப நிலையில், குறிப்பிட்ட ஈரப்பதத்தில் மல்ர்கிற மலர்ச்சி சரியானது.  ஒரு குறிப்பிட்ட இயற்கையினுடைய நகர்வில், இயற்கையினுடைய வளமையில் விளைகிற தானியங்களின் விளைச்சல் சரியானது. முன்பு விளைந்த தானியங்கள் இப்போது விளையவில்லை என்று சமூக ஆர்வலர்களும்  இயற்கையியல் ஆர்வலர்களும் பேசுகிறார்கள். அவர்களின் உட்குறிப்பில் பார்க்கிறபோது முன்பு விளைகிற விளைச்சல் இப்போது இல்லை. இப்போது ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஜப்பானிய அறிஞர் புகாகோ குறிப்பிடுகிற போது இயற்கையினுடைய சரியானதும் தவறானதும் தன்னைத் தானே சரி செய்து கொள்கிற தன்மையோடு இயற்கை இருக்கிறது. முன்பு விளைச்சல் அத்தகைய பருவத்தன்மையோடு இருந்தது. இப்போது இருக்கிற விளைச்சல் இப்போதைய இயற்கையின் இயக்கத்தோடு பொருந்துகிறது என்று ஒரு புதிய விளக்கத்தை தருகிறார்.

இயற்கையினுடைய சார்பு நிலையில் வளர்கிற எல்லாமும் சரியானது. ஆக, குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது நீங்கள் தேடுகிற போது குழந்தையினுடைய இயற்கையின் இயல்போடு நீங்கள் ஒட்டி வளர்ப்பீர்கள் என்று சொன்னால் நீங்கள் குழந்தையை சரியாக வளர்க்கிறீர்கள் என்று பொருள் என்பது என்னுடைய பார்வை.

குழந்தைக்கு வளர்ச்சி போக்கில் நடப்பதற்கு காலம் இருக்கிறது. அமர்வதற்கு காலம் இருக்கிறது. குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருந்து பிறக்கிற போது பிறந்தவுடன் குறிப்பிட்ட வினாடி நேரத்தில் அது அழத்  தொடங்குகிறது. குறிப்பிட்ட வினாடி நேரத்தில் அழத் தொடங்குகிறது என்பதை கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குழந்தை ஒரு பத்து, பதினைந்து  வினாடி தொடங்கி அரை மணி நேரத்திற்குள் அழ வேண்டும் என்பது ஒரு உடலியியல் இயக்க விதி. நீங்கள் அரை மணி நேரத்திற்குள் அழ வேண்டும் என்று கிள்ளுவீர்கள் என்று சொன்னால் அது குழந்தையை நீங்கள் பழக்குகிறீர்கள், பயிற்றுவிக்கிறீர்கள், இயற்கைக்கு எதிராக வன்முறை செய்கிறீர்கள் என்று பொருள். குழந்தை எப்போது அழ வேண்டும் என்று பௌதிக அடிப்படையில், உயிரியல் அடிப்படையில் விரும்புகிறதோ அப்போது   அழும் வரை நீங்கள் காத்திருப்பீர்கள் என்று சொன்னால்  நீங்கள் குழந்தையை சரியாக வளர்கிறீர்கள் என்று பொருள். குழந்தைகள் எப்போது பால் உறிஞ்ச வேண்டும் என்று தீர்மானித்திற்கிறதோ, விரும்புகிறதோ அப்போது பால் உறிஞ்சி கொள்வதற்கு தாய்ப்பாலோடு நீங்கள் காத்திருப்பீர்கள் என்று சொன்னால் நீங்கள் குழந்தையை சரியாக வளர்ப்பதற்கு முயற்சிக்கிறீர்கள். குழந்தைகள் பிரண்டு படுப்பதற்கு நீங்கள் காத்திருப்பீர்கள் என்று சொன்னால் குழந்தைகள்  பிரண்டு படுக்கும் வரை நீங்கள் செய்கிற எல்லா முயற்சியும் குழந்தைக்கு எதிரானது. குழந்தைகள் பிரண்டு படுப்பதற்கும் குழந்தைகள் தவழ்வதற்கும் குழந்தைகள் நடப்பதற்கும் குழந்தைகள் ஓடுவதற்கும் தனக்கே உரிய காலத்தை எடுத்துக் கொள்கின்றார்கள். அத்தகைய கால இடைவெளியில் அவர்கள் நகரட்டும், நகர வேண்டும் என்று நம்பிக்கையோடு வாய்ப்பு கொடுக்கிற முறையில் நீங்கள் குழந்தைகளை வளர்ப்பீர்கள் என்று சொன்னால் நீங்கள் சரியாக குழந்தைகளை வளர்க்கிறீர்கள் என்று பொருள். இப்படித்தான் நான் குழந்தையை  சரியான முறையில் வளர்ப்பதற்கான வியாக்கியானத்தை வைத்திருக்கிறேன். இது நியாயமாகவும் எனக்கு இருக்கிறது. அந்த வகையில் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்களா என்பது தான் சரியான குழந்தை வளர்ப்பிற்குரிய வரையறை.

குழந்தைகள் சரியான வழியில் வளர வேண்டும் என்று நாம் பார்க்கிறபோது எல்லா நிலைகளிலும் குழந்தைகள் பார்ப்பதில், குழந்தைகள் கேட்பதில், குழந்தைகள் உரையாடுவதில், குழந்தைகள் தர்க்கம் செய்வதில், குழந்தைகள் புதிய ஒன்றை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கே உரிய ஒரு உயிரியல் இயல்பு இருக்கிறது என்பதை பெற்றோராக இருக்கிற நாம், காப்பாளர்களாக இருக்கிற நாம், ஆசிரியராக இருக்கிற நாம் பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் சிந்திக்க வேண்டியிருக்கிறது நண்பர்களே. இதுதான் முறையாக, சரியாக வளர்ப்பதற்குரிய வழியாக நான் பார்க்கிறேன். இத்தகைய பண்புகள் கலைந்து போய் இருக்கிற சமூகத்தில் ஓஷோவினுடைய சரியான குழந்தை வளர்ப்பு முறை என்பது அவசியமாகிறது. ஓஷோவும் நான் சொல்கிற நான் பார்க்கிற அம்சத்தில் பார்ப்பதை விடவும் இன்னும் துல்லியமான வேறு சில பரிந்துரைகளை அவர் நமக்கு வழங்குகிறார்.

உலக அளவில் இருக்கிற உளவியல் உரைகள், உலக அளவில் இருக்கிற குழந்தைகள் பற்றிய உள்ளடக்கம் குறித்த ஆய்வுகள் இவற்றை எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு மேன்மையான வேறு சில பரிந்துரைகளை ஓஷோ சரியான குழந்தை வளர்ப்பு முறைக்கு நமக்குத் தருகிறார். ஆனால் குறைந்தபட்சம் என்னுடைய சிற்றறிவிற்கு நான் பார்க்கிறபோது எப்போதெல்லாம் குழந்தைகள் இயல்பாக இயங்குவதற்கு நீங்கள் வாய்ப்பு தருகிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் குழந்தையை சரியாகவே வளர்க்கிறீர்கள் என்று தான் நான் உங்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதுதான் குறைந்தபட்ச அளவு. மேன்மையான ஓஷோ போன்றதொரு அறிவாளியினுடைய அறிவு பரிந்துரையின் அடிப்படையில் நீங்கள் குழந்தையை மேன்மையாக வளர்ப்பீர்கள் என்று சொன்னால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் குழந்தையை வளர்ப்பதற்கு நீங்கள் மேற்கொள்கிற முயற்சி குழந்தை எப்படி இயற்கையின் வளமையின் பாற்பட்டு, இயற்கையின் உள்ளடக்கத்தின் பாற்பட்டு வளர்கிறதோ, நகர்கிறதோ அந்த  நகர்விலேயே நீங்களும் காத்திருந்து காத்திருந்து குழந்தையோடு நகர்வீர்கள் என்று சொன்னால் அதுவே நீங்கள் குழந்தையை சரியாக வளர்ப்பதற்குரிய முறை என்றே நான் கருதுகிறேன். இப்படியான வளர்ப்பு முறைக்கு உள்ளாகிற பெற்றோர் உண்மையிலேயே சரியான பெற்றோராக இருப்பார் என்றும் நான் பார்க்கிறேன்.

சரியான பெற்றோரினுடைய பார்வை, சரியான பெற்றோராக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று சொன்னால் இந்த காத்திருப்பை, இந்த நம்பிக்கையை உடைப்பதற்கு சமூகங்கள் உங்கள் முன் நிறைய சவால்களை கொடுக்கும். நான் என் குழந்தையினுடைய இயற்கையின் போக்கிலேயே வளர்க்க வேண்டும் என்று கருதுகிறேன் என்றால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் அவ்வாறு வளர்ப்பதற்குரிய ஆயிரம் ஆயிரம் கேள்விகளை என் முன் நீட்டுவார்கள். நான் சந்தித்திருக்கிறேன் அப்படி.

என் குழந்தை சிறிய வயதாக இருக்கிற போது என் பையனுக்கு ஒரு மூன்று, நான்கு வயது இருக்கிற போது நாங்கள் இருவரும் மழையில் சத்தம் போட்டு கொண்டே ஓட வேண்டும் என்று என் குழந்தையினுடைய விருப்பம். ஒரு மாலை மூன்று, நான்கு மணி நேரத்தில் அடர்த்தியாக மழை பெய்கிறது. தொடர்ந்த மழை. அந்த மழையில் சத்தம் போட்டுக் கொண்டே நாங்கள் ஓட வேண்டும் என்று என் குழந்தை கேட்கிறார். நான் குழந்தையோடு சத்தம் போட்டுக் கொண்டே ஓடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு மழையில் நனைவதற்கு வசதியாக வீட்டு வாசலை விட்டு இறங்குகிற போது முதல் எதிர்ப்புக் குரல் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடமிருந்து வந்தது. மழையில் நனைவதால் சளி பிடித்து விடும். நோய் வந்துவிடும். காய்ச்சல் வந்து விடும் என்று. நான் அப்போது அவர்களிடம் சொன்னேன் காய்ச்சல் என்பது கேன்சர் போன்றதொரு குணப்படுத்த முடியாத நோய் அல்ல. நாம் குணப்படுத்திக் கொள்ளலாம் என்கிற மருத்துவ பார்வையோடு அவர்களுக்கு சொன்னேன். ஆனால் நான் சந்தித்த கேள்வி நிஜமானது. அது என் குடும்பத்தில் உள்ளவர்களுடைய கேள்வி மட்டும் அல்ல. சமூகம் வைத்திருக்கிற கேள்வி. குழந்தையை அதன் இயல்பில் வளர்ப்பதற்கு நீங்கள் தயாராகிற போது, இயங்குகிற போது அந்த தன்மையில் நீங்கள் நகர்கிற போது சமூகம் உங்கள் முன் ஏராளமான கேள்விகளை நீட்டி கொண்டே இருக்கும். நீங்கள் எப்படி குழந்தையை அதன் இயல்பில் வளர்க்கலாம் என்று. இந்த  கேள்விகளை சந்தித்து, அதில் கிடைக்கிற அனுபவத்தை, அதில் கிடைக்கிற விடைகளை நீங்கள் உங்கள் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்கிற வாய்ப்பை உருவாக்கிக் கொள்வீர்கள் என்று சொன்னால் உங்கள் பெற்றோர் தன்மை சரியான தரமான பெற்றோர்  தன்மை என்று நான் பார்க்கிறேன்.

 நான் குழந்தையோடு நல்ல பெற்றோராக எப்படி இருப்பது என்று ஒரு கேள்வியை நாம் பார்க்கிறபோது இந்த கேள்வி குழந்தை வளர்ப்பில் வருகிறது. நான் எப்படி நல்ல பெற்றோராக இருப்பது என்றவுடன் நவீனத்தில் குழந்தையை நீங்கள் அப்படி வளர விட வேண்டும், இப்படி வளர விட வேண்டும் என்று சொல்கிற பதில்களை நாம் பார்க்கிறோம் என்றாலும் கூட குழந்தை வளர்ப்பு என்பது குறித்த சரியான பெற்றோர் தன்மை என்ன என்பது நாம் பேசிப் பார்க்க வேண்டிய மிக முக்கியமான விடையாக ஓஷோ தன் பதிவுகளில் நமக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. அவர் இப்படியான ஒரு பதிலை இணைத்து வைத்திருப்பதன் வழியாக குழந்தை வளர்ப்பு குறித்து பேசுவதில் பெற்றோரின் பங்கு என்ன என்கிற ஒரு உரையாடல் நிர்பந்தத்தை நமக்கு வீசி எரிகிறார்.

நல்ல பெற்றோராக இருப்பது குறித்து நீங்கள் உரையாடாமல் ஒரு குழந்தை வளர்ப்பு குறித்து குழந்தையின்  மீதான உங்கள் பார்வையை உருவாக்கி விட முடியாது என்கிற அடிப்படையில் ஒரு நிர்பந்தத்தை ஓஷோ உருவாக்குகிறார் என்று நான் ஒரு பெருமதிப்போடு பார்க்கிறேன். நீங்கள் நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த வாழ்வில் ஒரு நல்ல குழந்தையை இயற்கையின் வழியில் வளர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற போது பெற்றோராக நீங்கள் சந்தித்த இடர்ப்பாடுகளை அதில் கிடைத்த அனுபவங்களை உங்கள் குழந்தைகளோடு நேர்மையாக பகிர்ந்து கொள்வீர்கள் என்று சொன்னால் நீங்க நல்ல பெற்றோராக மாறியிருக்கிறீர்கள், நல்ல பெற்றோராக நகர்ந்து இருக்கிறீர்கள் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...