Thursday, December 7, 2023

திருக்குறள் வாழ்வியல் - திருக்குறள் ஏன் ஒருவர் வாசிக்க வேண்டும்? - பகுதி 1 - சிவ.கதிரவன்

திருக்குறள் ஏன் ஒருவர் வாசிக்க வேண்டும்?

            திருக்குறள் ஏன் ஒருவர் வாசிக்க வேண்டும் என்ற தலைப்பின் கீழ் திருக்குறள் குறித்து உரையாட வேண்டும் என்று பணித்திருக்கிறார்கள்.

முதலில் திருக்குறள் ஏன் ஒருவர் கற்க வேண்டும் என்று தலைப்பு வைத்துக் கொள்ளலாமா என்று கூட எனக்கு தோன்றியது. கற்பதற்கும் வாசிப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கும் என்று விவாதித்தோம் என்றால் அது ஒரு தனி தலைப்பாக சென்றுவிடும். வாசிப்பதின் விளைவு, கற்பதின் விளைவு அதாவது ஒருவர் ஒன்றை வாசிக்கிறார் என்பதன் வழியாக அவர் வாசித்து முடித்தவுடன் அந்த வாசிப்பு அவருக்கு ஒரு செயல்பாட்டு  விளைவைக் கொடுக்கிறது. பின்பு செயல்பாட்டு விளைவின் வழியாக ஒரு அனுபவத்தை பெறுகிறார் என்ற வகையில் வாசிப்பு ஒருவருக்கு சுயமான கற்றலை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக எனக்கு தோன்றியது.

கற்றல் என்பது அனுபவத்தின் வாயிலாக கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கிற நிகழ்வுகள், சம்பவங்களின் வழியாக புரிந்து கொண்ட ஒன்றாக இருக்கக்கூடும். கற்றலுக்கு அறிஞர்கள் வெவ்வேறு வகையான துல்லியமான, நுட்பமான விளக்கங்களை சொல்கிறார்கள் என்றாலும்  எளிமையாக கற்றல் என்பது ஒருவரின் தனிப்பட்ட அனுபவ புரிதலாக இருந்து கொண்டே இருக்கிறது.

ஒரு நூலை வாசிப்பதற்கும் கற்பதற்கும் துவங்குகிற முறையில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்த நூல் வாசித்த பின்பு, கற்றலின் வழியாக ஒரு முறை புரிந்து கொண்ட பின்பு ஏற்படுத்துகிற விளைவுகள், ஏற்படுத்துகிற புதிய தரிசனங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்கிற ரீதியிலும் தனிப்பட்ட ஒரு மனிதனின் தேடலின் அடிப்படையில் கற்றல் இருந்து கொண்டிருக்கிறது என்கிற அடிப்படையிலும் வாசிப்பு என்பதை விடவும் கற்றல் என்று நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனால் எல்லோருக்கும் ஒரே வகையான கற்றல் வாய்ப்பதில்லை. ஒவ்வொருவரும் வெளியேறு வகையான புற சூழலில், பூகோள அமைப்பில் சமூக ரீதியான பின்புலத்தில் வசிக்கின்றோம். வளர்கின்றோம். ஒன்றைப் புரிந்து கொள்கின்றோம். இத்தகைய பின்புலங்களின் அடிப்படையில் கற்றல் என்பது ஒருபோல நடந்து விடுவதில்லை. வேறுபட்டு வேறுபட்டு புதிய புதிய தரிசனங்களை தனித்தனியாக கற்றல் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கற்றல் என்பதை திருக்குறள் போன்றதொரு மறைநூலில் இருந்து துவங்குகிற போது நிச்சயமாக ஒரு மாபெரும் புரிதலை மனிதனினுடைய ஞானத்தை, அறிவை விரிவு செய்யும் தன்மையோடு அது அழைத்துச் செல்லும்.

அந்த வகையில் கற்றல் என்பதை விடவும் வெவ்வேறுபட்ட அனுபவங்களை நிகழ்ச்சிகளை, நிகழ்வுகளை பெற்றுக் கொண்ட ஒருவர் தனது சொந்த புரிதலின் வழியாக ஒன்றை புதிதாக கற்றுக் கொள்வதும் அனுபவிப்பதும் தரிசிப்பதும் என்கிற தளத்திலிருந்து இன்னும் எளிமையாக வாசிப்பது என்பது முற்றிலும் பொருத்தமாக இருக்கும் என்பதாலேயே திருக்குறளை ஒருவர் ஏன் கற்க வேண்டும் என்கிற தலைப்பை விடவும் திருக்குறளை ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும் என்கிற பொருளில் நாம் தீர்மானித்து இருக்கிறோம். ஒரு பொருத்தமான தலைப்பு இந்த திருக்குறள் என்னும் நூலை வாசிக்கத் தூவங்குகிற ஒருவருக்கு ஒரு உந்து சக்தியாக உந்துகிற ஆர்வத்தை, துவங்குகிற ஆர்வத்தை ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையில் இந்த தலைப்பை நாம் வைத்திருக்கிறோம்.

ஆக, திருக்குறளை ஏன் ஒருவர் வாசிக்க வேண்டும் என்று நாம் பார்க்கிறபோது ஒருவர் வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்கு என்று ஒரு வரியில் அறிஞர்கள் சொல்லிவிடுகிறார்கள். எல்லா நூலையும் வாசிக்கிற போது மனிதன் வாழ்வை மகிழ்வாக வாழ வேண்டும் என்றே நூல்கள் இயற்றப்படுகின்றன. மற்ற இலக்கிய நூல்களாக இருக்கட்டும், குறிப்பாக பக்தி இலக்கியங்களை வாசிக்கிற போது  பார்க்கிறபொழுது ஒரு மனிதனினுடைய கடந்த காலம் அதற்கு முந்திய ஜென்மங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட எல்லா வகையான இழுக்குகளையும் அவலங்களையும் கழுவிக் கொள்ளக்கூடிய ,சாத்தியங்களை நுட்பங்களை இலக்கிய நூல்கள் வாசிப்பதன் வழியாக பெற்றுக் கொள்ள முடியும் என்று  வாசிப்பிற்குள்  நுழைகிற போது நாம் பார்க்க முடிகிறது.

 இலக்கியங்களை வாசித்தாலும் அது மனிதனுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது என்பதில் யாருக்கும் ஐயம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. சமகாலத்தில் எழுதப்படுகிற ஆய்வு நூல்கள் கடந்த காலத்தில் இருக்கிற பதிவுகளாக நாம் படிக்கிற வரலாற்று நூல்கள் இவற்றை நாம் வாசிப்பு என்கிற கருத்தாக்கத்தில் அந்த கருத்தை முதன்மையாக வைத்து ஒப்பிட்டு பார்க்கிறபோது வாசிப்பு என்பது எப்படியானதாக இருக்கிறது. ஒரு வரலாற்று நூலை ஏன் வசிக்க வேண்டும் என்று நாம் சிந்திக்கிற போது ஒரு தனி மனிதன் சார்ந்திருக்கிற சமூகம் எப்படியெல்லாம் தம் வாழ்நாளை கடந்து வந்திருக்கிறது. எவற்றை எல்லாம் இழந்து இருக்கிறது. வற்றை எல்லாம் பெற்று இருக்கிறது. எவ்வகையில் பயன்படுத்தி இருக்கிறது. எவற்றை, எவ்வகையில் தவறவிட்டிருக்கிறது என்று எல்லா வினாக்களுக்கும் விடைகளை வரலாற்று நூல்கள் தந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு புதிய  புரிதலை நாம் வரலாற்று நூல்களை கற்பதன் வழியாக, வாசிப்பதன் வழியாக பார்க்க முடியும். ஏன் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஏன் நாற்காலிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஏன் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஏன் மின்விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அடிப்படையில் மனிதத் தேவையில் தொடங்கி நாடுகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. தத்துவங்கள் எவ்வாறு வரையறுக்கப்பட்டிருக்கின்றன என்கிற ஆழமான விரிவான தலைப்புகள் கூட நாம் வரலாற்று நூல்களை வாசிப்பதன் வழியாக காண முடிகிறது. படிக்க முடிகிறது. இந்த வரலாற்று நூல்கள் வாசிப்பதன் வழியாக மனித வரலாறை, மனித சமூகத்தினுடைய மேம்பாட்டை, மனித சமூகத்தினுடைய கவனமின்மையை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் நாம்  மகிழ்வான ஒரு மனிதனாக மாற முடியும் என்கிற ஒரு  முடிவிற்கு வருவதற்கு வரலாற்று நூல்கள் வாசிப்பிற்கு உதவக்கூடும். அந்த வகையில் வரலாற்று நூல்களும் வாசிப்பை வழங்குவதன் வழியாக, வரலாற்று நூல்களின் வழியாக வாசிப்பை பெற்றுக் கொள்வதன் வழியாக, வாசிப்பை நிகழ்த்துவதின் வழியாக ஒரு மனிதன் மகிழ்வான வாழ்வை பெற்றுக் கொள்ள முடியும்.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...