Saturday, September 17, 2022

குளியல் நலம் - உரையாடல் - 3 - சிவ.கதிரவன்

 

                        குளியல் நலம் 

சோப்பு பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஏன்?

இந்தக் கேள்வியை அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக நான் பார்க்கிறேன். இதில் சோப்பு பயன்படுத்தினால் உடலில் என்ன மாற்றங்கள் வரும். வருகிற மாற்றங்கள் என்ன? என்பது முதன்மையானது அல்ல.

ஒரு மனிதனின் குளியலில் மட்டுமல்ல. அவன் மொத்த வாழ்க்கை முறையிலும் ஒன்றை பயன்படுத்துவதன் வழியாக அவன் என்ன நிலையை அடைகிறான்? என்ன நிலையில் தேக்கமுறுகிறான்? என்பது மிக முக்கியமான தேடல் மிகுந்த கேள்வி.

பயன்பாடு என்பது ஒரு மனிதனுக்கு மன அளவில் பெரும் சிக்கலை உருவாக்குகிற வடிவம். ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் வழியாக, தொடர்ந்து ஒன்றை பயன்படுத்தி தன் பணிகளை முடிக்கும் பழக்கம் இருக்கிற ஒருவருக்கு, அந்தப் பழக்கம் அவரை இயக்குவதாக மாறிவிடுகிறது. எந்த விதத்திலும் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட வகையான திசையில் அமர்ந்து கொண்டு படிப்பது, உண்பது, உறங்குவது என்றெல்லாம் கூட தீர்மானித்து வைத்திருந்தால் அவர் உறங்குவதற்கும் உண்பதற்கும் அடிப்படையான சில வேலைகளை செய்வதற்கும் கூட அந்த திசையில் அமர வேண்டும் என்கிற மன வடிவம் முதன்மையாக வருகிறது. அதற்கு வாய்ப்பில்லை என்றால் அது கிட்டவில்லை என்றால் அதன்படி அவரால் செய்ய முடியவில்லை என்றால் அவர் குளிப்பதில், அவர் குடிப்பதில், அவர் உண்பதில், அவர் உறங்குவதில் கூட சிக்கல் மிகுந்தவராக மாறி போகிறார்.

இன்றும்கூட நடப்பில் ஒரு மனிதன் உறங்குவதற்கு ஒரே இடத்தில் உறங்குகிற வாய்ப்பில்லை என்றால் அவர் இரவு முழுவதும் உறங்கவில்லை என்று சொல்கிற வழக்கத்தை நாம் கேட்கிறோம். இது பழக்கத்தினால் வருவது. ஒரு குறிப்பிட்ட வகையான பயன்பாட்டினால் ஏற்படுகிற சிக்கல்.

சோப்பு என்கிற ஒரு பொருள் மட்டுமல்ல. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான சோப்பை பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட வகையான நீரை பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட வகையான கழிவறையை பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட வகையான கழிவறை தோற்றத்தை பயன்படுத்தலாம். எவ்வாறு இருந்தாலும் உங்களால் பயன்பாட்டிற்குள் சிக்கிக்கொண்டால் உங்கள் மனம் சிக்கலுக்கு உள்ளாகும். ஒரு குறிப்பிட்ட வகையான சோப்பை பயன்படுத்திக்கொண்டு திறந்தவெளியில் குளிக்கிற ஒருவர் கழிவறைக்குள் குளிப்பது சிக்கலானதாகும். ஒரு குறிப்பிட்ட வகையான சோப்பை பயன்படுத்திக்கொண்டு ஒரு அறைக்குள் குளிக்கிற ஒருவரால் திறந்தவெளியில் குளிப்பது சிக்கலானதாகும்.

இது பயன்பாட்டிற்கும் மனிதன் செயல்பாட்டிற்கும் இடையே நடக்கிற அடிமைப்படுத்துகிற, அடிமையாகிக் கொள்கிற மனச் சிக்கலில் இருந்து வருகிற கோளாறு. இவற்றை போக்குவதற்கு மனிதன் தன்னை பார்க்க வேண்டும். பயன்பாட்டிற்கு ஒரு பொருள் இருக்கிறது என்றால் அந்தப் பொருளை தன்னோடு இணைத்துக் கொள்கிற எல்லையை தனிமனிதன் ஒவ்வொருவரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இதற்கான விடை.

சோப்பை பயன்படுத்துவதன் வழியாக உடலில் என்ன மாற்றம் ஏற்படும்? என்று இந்த கேள்வியை கேட்பதை விடவும் இவ்வாறு பார்ப்பதை விடவும் சோப்பை பயன்படுத்துவது மட்டுமின்றி எந்த ஒன்றையும் பயன்படுத்துவதன் வழியாக ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை சேர்த்து பார்ப்பதன் வழியாக ஒரு முழுமையான மனித இயங்கு முறையை முழுமையான மன சிக்கலை நாம் பார்க்கவும் உரையாடவும் வாய்ப்பு இருக்கிறது. வெறுமனே இது சோப்பு பயன்பாடு குறித்த உரையாடல் அல்ல. சோப்பு பயன்பாடு என்பது குளியலுக்கு உரிய செய்தியோடு ஒத்துப் போவதால் இந்தக் கேள்வியை இந்த நேரத்தில் நாம் உரையாடிப் பார்க்கலாம். ஆனாலும் ஒரு முழுமையான மனச் சிக்கலிலிருந்து ஒரு மனிதன் விடுபடுவதற்கு மிக அடிப்படையான செயல்பாடு என்பது எந்த பயன்பாட்டிற்குள்ளும் மனிதன் தன்னை சிக்க வைத்து கொள்ளாமல் இருக்கிற விடுதலையே ஒரு முழுமையான நல்ல மாற்றத்தை, தேவையான மாற்றத்தை உடலுக்கு செய்வதாக அமையும். ஒரு பயன்பாடு என்பது சோப்பு பயன்பாடா, குறிப்பிட்ட வகையான குளியல் பொடி பயன்பாடா என்பது முக்கியமானது அல்ல. எந்தப் பொருளையும் எங்கு துவங்குவது? எங்கு பயன்படுத்துவது? எங்கு நிறுத்துவது? என்கிற தீர்க்கமான விழிப்புணர்வு மனிதனுக்கு அவசியமானது. இந்த விழிப்புணர்வோடு மனிதன் நகர்கிறபோது இந்த விழிப்புணர்வோடு மனிதன் பயன்படுத்துகிற போது அது அவனுக்கு உதவுவதாக மாறும். இந்த விழிப்புணர்வு இல்லாத பயன்பாடு என்பது சோப்பில் மட்டுமல்ல எந்த ஒன்றிலும் விழிப்புணர்வற்ற பயன்பாடு சிக்கலாகவே மாறும். அந்த பொருளின் தன்மைக்கேற்ப அந்த மனிதனின் பயன்பாட்டு எல்லைக்கு ஏற்ப சிக்கலின் அளவும் சிக்கலின் தீவிரமும் அடர்த்தியும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

                                                                        ...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...