சிறார் நலம் - கலீல் ஜிப்ரானின் கவிதை நூலிலிருந்து...
இந்தக் குழந்தைகள் எவ்வாறு
இந்த பூமிக்கு வருவார்கள்? அவர்கள் உன் வழியாக வருவார்கள். இந்த குழந்தைகள், இந்த பூக்கள்,
இந்த பறவைகள் ஏதோ ஒரு காரணத்தின் பொருட்டு காரியமாவதற்கு இந்த பூமிக்கு வருவதற்கு ஒரு
கருவி தேவைப்படுகிறது.
ஒரு ரோஜா பூவிற்கு ஒரு
தண்டும் செடியும் தேவைப்படுகிறது. ஒரு மல்லிகைப் பூவிற்கு ஒரு கொடி தேவைப்படுகிறது.
ஒரு சந்தனத்தின் மணத்திற்கு மரம் தேவைப்படுகிறது. ஒரு குழந்தையின் பிறப்பிற்கு ஒரு
தாய் தேவைப்படுகிறாள். வாழ்வின் நோக்கத்திற்காக அந்தத் தாய் கருவியாக செயல்படுகிறாள்.
வாழ்வின் நோக்கத்திற்காக அந்தத் தண்டு கருவியாக செயல்படுகிறது. வாழ்வின் நோக்கத்திற்காக
அந்தக் கொடி கருவியாக செயல்படுகிறது. குழந்தைகள் உங்களை கருவியாக வைத்துக் கொண்டு வாழ்வின்
நோக்கத்திற்காக பிறக்கிறார்கள். அவர்களின் வாழ்வின் நோக்கத்திற்கான குழந்தைகள். உன்
வழியாக உன் காரணம் பொருட்டு பிறந்த குழந்தைகள். அவை உன் குழந்தைகள் அல்ல என்று கவிதையில்
அந்த மறைஞானி கூறுகிறார்.
அவர்கள் உன் வழியாக வந்திருக்கிறார்கள். உன் காரணமாக வந்திருக்கிறார்கள். நீ வருவதற்கு உனக்கு ஒரு காரணம். நீ இன்னொருவருக்கு காரணமாக இருக்கிறாய். இந்த வாழ்வு தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொள்வதற்கு நாம் ஒருவருக்கு காரணமாகவும் நமக்கு ஒருவர் காரணமாகவும் காரணங்கள் மாறிமாறி கருவிகள் மாறிமாறி தொடர்ந்தாலும் கூட வாழ்வு தன் பொருட்டு ஒன்றை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. அதற்காகவே, இந்த காரணங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்கிற வாழ்வியல் மெய்ப்பொருளிலிருந்து இந்த கவிதை வாசிக்கப்பட வேண்டியிருக்கிறது. வாழ்வு அப்படித்தான் இருக்கிறது.
வாழ்வு தம் பொருட்டு
தம் நோக்கத்தின் பொருட்டு உன்னை கருவியாக்கி ஒரு குழந்தையை ஒரு மகனை ஒரு மகளை ஒரு பூவை
பெற்றுக் கொள்வது போல, ஒரு பறவையை பெற்றுக் கொள்வது போல, ஒரு பெரும் காடை பெற்றுக்
கொள்வது போல, ஒரு பெரும் கடலை பெற்றுக் கொள்வது போல வாழ்வு மகனையும் மகளையும் குழந்தையாக
உன்னை கருவியாக்கி பெற்றுக்கொள்கிறது.
“மேலும் அவர்கள் உன்னோடு
இருக்கிறார்கள். நீ சொந்தம் கொள்ள முடியாமல்.
மேலும் அவர்கள் உன்னோடு
இருக்கிறார்கள் நீ சொந்தம் கொள்ள முடியாமல்.”
சொந்தம் கொள்வது என்பது
சமூகம் சார்ந்தது. அது பற்றுக் கொள்ளுதல் என்கிற மிக நுட்பமான மனச்சிக்கல். இந்திய
இலக்கியங்களில், தமிழ் இலக்கியங்களில் ‘பற்று விடுதல்’ என்பது மிக முக்கியமான வாழ்வியல்
முறை. நீண்டகாலம் வாசிப்பிற்கு உள்ளாகிற திருக்குறளில் ஒரு குறட்பா ‘பற்றுக்கொள்ளுதல்’
என்பதை விரிவாக விளக்குகிறது.
பற்றுக் கொள்வதன் விளைவு
- இந்திய சமூகத்தில் மறுபிறப்பு என்ற ஒரு மரபு
உண்டு. ஒரு நம்பிக்கை உண்டு. மனிதன் தொடர்ந்து தன் வினையின் காரணமாக பிறந்து கொண்டே
இருக்கிற வாழ்க்கைச் சுழல் இருக்கிறது என்கிற நம்பிக்கையும் மரபும் இந்திய சமூகத்தில்
கிழக்கத்திய சமூகத்தில் உண்டு.
தன் கவனமின்மையின் காரணமாக
தன் பற்றுதலின் காரணமாக தன் ஆசைகளின்ன் காரணமாக தொடர்ந்து தான் மரணித்த பிறகும் வேறொரு
வடிவத்தில் இந்த பூமியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிற இந்த பூமியின் துன்பத்தில்
உழன்று கொண்டே இருக்கிற ஒரு மனோபாவம், உடல் பாவம் மனிதனுக்கு இருக்கிறது என்கிற விரிவான
கருத்தாக்கத்தோடு இந்திய மரபு நிறைய கதைகளை வைத்திருக்கிறது.
இந்த பூமியின் துன்பங்களிலிருந்து
விடுபட வேண்டும் என்றால் ஒரு மனிதன் இந்த பூமியில் இருக்கிற எந்த ஒன்றின் மீதும் புரிதலோடு
பற்றில்லாமல் இருப்பதே சிறந்த வழி என்று அந்த மரபு பற்று கொள்ளலை வலியுறுத்துகிறது.
பற்றுக் கொள்ளல் வேண்டாம் என்கிறது. ‘பற்று விடற்கு’ என்று வள்ளுவர் கூறுகிற குறள்
சொல் அது.
‘பற்றுக பற்றற்றான்
பற்றினை’ நீங்கள் பற்ற வேண்டும் என்றால் பற்றுக்கொள்ளாத ஒருவனின் பாதங்களை பற்றிக்
கொள்ளவேண்டும் என்று பற்றுதல் குறித்து பற்றை விட வேண்டும் என்கிற நோக்கத்தில் சொல்லப்படுகிற
செய்யிள் அது. பற்றிக் கொள்ளுதல் துயரத்திற்கு காரணமாகிறது என்று இந்திய மரபு நம்புகிறது.
பற்றுதல் என்பது ஆசையாக
விளக்கம் பெற்று ஆசையே பெரும் துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் பெருமானின் வாக்காக
அது வெளிப்படுகிறது. இந்திய மரபில் அறியப்பட்ட எல்லா தத்துவ ஆய்வாளர்களும் பற்றுதலையும்
ஆசையையும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இப்போதும்
அது நிகழ்கிறது.
பற்றுதலின் வேறொரு வடிவம்
சொந்தம். சொந்தம் கொள்ள முடியாமல் ஒரு குழந்தை, ஒரு குழந்தையின் மீது சொந்தம் கொள்ளவேண்டும்
என்கிற கருத்தாக்கம் இந்த உரையாடல், இந்த உணர்வுமுரண் கவனத்திற்குரியது. ஏனென்றால்
மனித மனமானது ஒன்றைக் கடந்து செல்லும்போது அவற்றோடு தன்னை பிணைத்துக் கொள்கிற ஒன்று
நிகழ்கிறது. இல்லை என்றால் அவற்றோடு தான் பிணைந்து கொள்கிற இன்னொன்று நிகழ்கிறது.
ஒரு பொருளை நீங்க, ஒரு
நிகழ்வை நீங்கள் கடந்து செல்வீர்கள் என்றால் அந்தப் பொருளோடு உங்களைப் பிணைத்துக் கொள்வீர்கள்.
இல்லையென்றால் உங்களோடு அந்த பொருளை பிணைத்துக் கொள்வீர்கள். இப்படித்தான் உங்கள் எல்லா
பற்றுதல்களும் இருக்கின்றன என்று உளவியல் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. நினைவுக்குறிப்புகளாக
அந்தப் பொருளை சேகரித்து வைத்துக் கொள்வீர்கள். பௌதிகப் பொருளாக அந்தப் பொருளை சேகரித்து
வைத்துக் கொள்வீர்கள். இவ்வாறு நினைவுக் குறிப்பாகவோ பௌதீகமாகவோ உங்களை ஒன்றோடு பிணைத்துக்
கொள்வதும் உங்களோடு ஒன்றைப் பிணைத்துக் கொள்வதும் பற்றுதல் வகைப்பட்டது என்ற காரணத்தை
நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த அறிதலிலிருந்து இந்தக் கவிதை வரி மிக முக்கியமானது.
‘மேலும் அவர்கள் உன்னோடு
இருக்கிறார்கள். நீ சொந்தம் கொள்ள முடியாமல்.’
உன்னால் சொந்தம் கொள்ள
முடியாத ஒன்று உண்டு என்றால் அது வாழ்க்கையின் நோக்கம். வாழ்க்கையின் நோக்கம் உன்னை
சொந்தமாக்கிக் கொள்ளும். வாழ்க்கையின் நோக்கம் உன்னை சொந்தமாக்கும் சாத்தியமுள்ளது.
வேறு வழியேயின்றி ஒரு மனிதன் வாழ்க்கையின் நோக்கத்திற்குள் பயணித்தே ஆக வேண்டும். தாம்
சொந்தமாவதற்கு உள்ளாக வேண்டிய வாய்ப்பும் நெருக்கடியும் வாழ்க்கையின் நோக்கம் வைத்திருக்கிறது.
வாழ்க்கையின் நோக்கத்திற்குள் இருக்கிற சொந்தமாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிற ஒற்றை
வாய்ப்பிற்குள் இருக்கிற ஒரு மனிதனால் எதுவும் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. எதுவும்
சொந்தமாக்கிக் கொள்ள முடியாது என்கிற பேருண்மையை இந்திய மரபு தத்துவ மரபு எல்லாமும்
வைத்திருக்கின்றன. அந்த மரபின் பாற்பட்டு சொந்தமாக்கிக் கொள்ள முடியாத ஒன்றாக வாழ்க்கையின்
நோக்கம் இருக்கிறது. அந்த வாழ்க்கையின் நோக்கத்தின் விளைச்சலாக விளைந்த குழந்தைகள்
உன்னோடு இருக்கிறார்கள். வாழ்வின் நோக்கத்தை சொந்தமாக்கிக் கொள்ள முடியாது என்பது எத்தனை
நிஜமோ, அந்த நிஜத்தின் குறியீடாக உன்னோடு இருக்கிற குழந்தைகளை நீ சொந்தமாக்கிக் கொள்ள
முடியாமல் இருப்பதை இந்த கவிதை வரிகள் சொல்கிறது.
‘மேலும் அவர்கள் உன்னோடு
இருக்கிறார்கள். நீ சொந்தம் கொள்ள முடியாமல்’.
சொந்தம் கொள்ள முடியாது
என்கிற நிதர்சனம் பிடிபடுகிற போது ஒருவேளை நீ ஞானி ஆகலாம் என்கிற வாய்ப்பை வலியுறுத்துகிற
வரியாக இது இருக்கிறது. எதையும் சொந்தம் கொள்ள அவசியமில்லை. எதையும் சொந்தம் கொள்ள
முடியாது. எதுவும் சொந்தம் கொள்வதற்கு இல்லை என்கிற மன உயர்வு ஏற்படுகிற போது உனக்கு
அன்பு பெருகலாம். கலீல் ஜிப்ரான், மறைஞானியின் வார்த்தைகளில் யூகமாக சொல்கிறார். உனக்கு
வாய்ப்பிருக்கிறது என்கிறார். ஒருவேளை நீ சொந்தம் கொள்வது அவசியம் இல்லை என்கிற முடிவை
எட்டுகிற போது உனக்கு அன்பு பெருகி வழியலாம். உனக்கு அன்பு பெருகி வழியலாம். உனக்கு
அன்பு பெருகி வழிகிற போது உன் அனுமதி ஏதுமின்றி ஒருவேளை நீ உன் குழந்தைக்கு அந்த அன்பை
தரலாம் என்றாலும்கூட அது குறித்த ஆசையோ எண்ணங்களோ அன்பு குறித்து அபிப்பிராயங்களோ இங்கு
வேலை செய்யாது. அப்படியே பயணம் அது. அன்பு எதுவும் சொந்தம் கொள்ள முடியாது என்கிற நிலையிலிருந்து,
எதுவும் ஆசைக்கு அவசியம் இல்லை என்கிற நிலையிலிருந்து, ஒரு புத்த நிலையிலிருந்து, ஒரு
தத்துவ நிலையிலிருந்து தத்துவ ஞானியின் உயர் நிலையிலிருந்து இந்திய மரபு, யோக மரபு
சொல்கிற ஏழாவது சக்கர நிலையிலிருந்து, ஜென் மரபு சொல்கிற உயர் நிலையிலிருந்து, பௌத்தம்
சொல்கிற உயர் நிலையிலிருந்து, கிறிஸ்தவம் சொல்கிற உயர் நிலையிலிருந்து ஒரு மனிதன் நிறைந்த
அன்போடு இருக்கிற போது அவன் எதற்கும் உட்படாமல், எதன்மீதும் பற்று கொள்ளாமல் எதன்மீதும்
தன்னை இணைத்துக் கொள்ளாமல் நகர்கிற போது அவன் அன்பு பெருக்காக இருக்கிறான் என்று மரபு
நம்புகிறது. பற்றுக் கொள்ளாதவன் தெளிவானவனாக இருக்கிறான் என்பதே அனுபவமாக பார்க்கமுடியும்.
பற்றுக்கொள்ளுதல் இருக்கிற
போதும் பற்றுக் கொள்ளுதல் விடுபடுகிற போதும் மனிதனுக்குள் நடைபெறுகிற மாற்றத்தை காண்கிறபடி
காண்பதன் வழியாக ஒரு மனிதன் ஒரு குழந்தையை, இந்த பிரபஞ்சத்தை அணுகுவது புதிய பரிமாணத்தைப்
பெறுகிறது.
...தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment