Wednesday, September 28, 2022

சிறார் நலம் - கலீல் ஜிப்ரானின் கவிதை நூலிலிருந்து...உரையாடல் - 1 / பகுதி - 4

 

                            கலீல் ஜிப்ரானின் கவிதை நூலிலிருந்து..

மகாவீரர் பற்றிய ஒரு கதை இருக்கிறது. இந்திய சமூகத்தில் மகாவீரர் என்றால் தன்னை வென்றவர் என்று ஒரு பொருள் உண்டு.

ஒருமுறை மகாவீரருக்கு ஒரு பாம்பு தீண்டி விட்டது. பாம்பு தீண்டியவுடன் அவரைச் சுற்றி உள்ளவர்கள் பதற்றம் அடைகிறார்கள். பாம்பு தீண்டி சென்றது. பாம்பு தீண்டிய இடத்தில் இருந்து முழுவதும் பால் வடிகிறது. அவர் உடலில் இருந்து பால் வடிகிறது. இது புனைவா நிஜமா என்பது ஒருபுறம் என்றாலும் மகாவீரர் பற்றி இருக்கிற கதைகளில் இதுவும் ஒன்று. மகாவீரர் உடலிலிருந்து பால் வடிகிறது. பக்தர்களும் அவரது சீடர்களும் பால் வடிவதை பார்க்கிறார்கள். வணங்குகிறார்கள். மகாவீரரும் உடல்முழுவதும் பாலாக இருக்கிறதா என்றால் தர்க்கம் ஆக அது முரண். காரண காரிய அறிவில் இருந்து பார்க்கிறபோது அது வேறுபட்டது. அது சிந்தனைக்கு புலப்படாதது என்றாலும்கூட பால் என்பது அன்பின் குறியீடு. மகாவீரர் முழுநிறைவான அன்பாக இருப்பதால் அவர் உடலில் எங்கு கீறினாலும் பால் வெளிப்படும்.

தாய்மார்களுக்கு மார்பகங்களில் மட்டும் அன்பு நிறைந்து பால் வருகிறது என்று ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது. ஒரு தாய்க்கு பால் அவளது அன்பின் பெருக்கத்தால் குழந்தையின் மீதான உயிரியல் உளவியல் அக்கறையால் அவள் உடலில் இருக்கிற ரத்தமானது அவளது மார்பில் பாலாக மாறுகிறது என்று விஞ்ஞான உடல் இயங்குமுறை ஒன்று இருக்கிறது.

மகாவீரர் இந்த உலகத்தின் பாற்பட்ட அன்பால் தன் உடல் முழுவதையும் மார்பாக தன் உடலில் இருக்கிற ஒவ்வொரு ரத்தத் துளியையும் பாலாக மாற்றும் வல்லமை கொண்ட பேரன்பிற்கு சொந்தக்காரர் என்பதை விளக்குகிற ஒரு கதை இது.

பற்று இல்லாதவர்கள் முழுக்க அன்பானவர்களாக மாறிவிடுவார்கள். ஒருவேளை நீங்கள் பற்றை தவிர்த்தால், ஒருவேளை நீங்கள் பற்று கொள்வதில் இருந்து விடுபட்டால் நீங்கள் மகிழ்வான நபராக அன்பை பொழிகிற நபராக மாறுகிற போது அந்த மாற்றத்தின் வழியாக உங்கள் அன்பு உங்கள் குழந்தைக்கு கிடைக்கலாம். உங்கள் குழந்தைக்கு பகிரப்படலாம். இது சாத்தியமானது. உறுதியானதாக மறைஞானி சொல்லவில்லை. இது சாத்தியமானது. மேலும் அவர்கள் உன்னோடு இருக்கிறார்கள், நீ சொந்தம் கொள்ள முடியாமல். நீ ஒருவேளை உன் அன்பை தரலாம். ஆனாலும் எண்ணங்களால் அல்ல. எண்ணங்களாக அல்ல. ஏனென்றால் குழந்தைகள் அவர்களுக்காக சொந்த எண்ணங்கள் பெற்றிருக்கிறார்கள்.

ஒரு மனிதனின் எண்ணம் என்ன செய்கிறது என்று நவீன விஞ்ஞானம் தொடர்ந்து உளவியல் ஆய்வுகளை செய்து கொண்டு இருக்கிறது. ஆனால் வரலாறு நெடுக தன்னை மகிழ்வாக்கிக் கொள்வதற்கான உந்துதலாகவே எண்ணங்கள் இருக்கின்றன என்று உளவியல் ஆய்வு சொல்கிறது.

உளவியல் மாமேதை சிக்மண்ட் பிராய்ட் தன் வாழ்நாள் மொத்தத்தையும் பணயம் வைத்து செய்துவந்த ஆய்வு முடிவு என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் தன் மகிழ்விற்காக தன்னை உட்படுத்திக் கொள்கிறான். தன் மகிழ்வின் பொருட்டே தான் இயங்குகிறான். தன் மகிழ்வின் பொருட்டே தான் உந்தப்படுகிறான் என்று உளவியலின் காரணத்தை உளவியலின் பயணத்தை ஒரு தனிமனிதன் மீது செய்த ஆய்வின் வழியாக ஒரு பெரும் கூட்டத்தின் மீது செய்த ஆய்வின் வழியாக உளவியல் மாமேதை சிக்மண்ட் பிராய்ட் பறைசாற்றுகிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுகிற எண்ணம், தான் மகிழ்வாக நிறைவாக உற்சாகமாக இருக்க வேண்டும் என்கிற தன்மையோடு இருக்கிறது. குழந்தைகளுக்கும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. இந்த மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சமூகம் தீர்மானித்து வைத்திருக்கிற மகிழ்வு அல்ல. இயற்கையின் நோக்கத்தின் பாற்பட்ட மகிழ்வு. குழந்தை மீண்டும் மீண்டும் தன்னை இயற்கையோடு இணைத்துக் கொள்கிற நோக்கத்தோடு அதற்கே உரிய சொந்த எண்ணங்களோடு இருக்கின்றன.

எனவே நீங்கள் அன்பை தரலாம். அவர்களுக்கு ஒரு வேளை நீங்கள் அன்பை தரலாம். இல்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களுக்கு இயற்கையோடு இணைந்து கொள்வதற்கு அன்பை பெற்றுக்கொள்வதற்கு, அன்பை பகிர்ந்து கொள்வதற்கு சொந்த எண்ணங்கள் இருக்கிறது. எனவே நீங்கள் அன்பைத் தரலாம். எண்ணங்களை அல்ல; எண்ணங்களால் அல்ல. அவர்களுக்கு அவர்களுக்கான சொந்த எண்ணங்கள் இருக்கின்றன. குழந்தைகள் உங்களது உடலியல் கலவியின் காரணமாக உங்கள் உயிரணு சேகரிக்கப்பட்ட சேகரித்து வைத்திருக்கிற உயிரியல் கூடமாக உயிரியல் வீடாக நீங்கள் அவர்களுக்கு இருக்கலாம். குழந்தைகள் அவ்வாறுதான் உங்களோடு உறவில் இருக்கிறார்கள். ஒரு தாய்க்கு ஒரு குழந்தை உயிரியல் வீடாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஒருவர் சொந்த வீடு இல்லாத காலங்களில் வாழ்வதற்கான சமூக வாழ்க்கையை நடத்துவதற்கான காரணம் பொருட்டு இன்னொருவர் வீட்டினில் ஒரு குறைந்த பணம் செலுத்தி சொந்த வீடு பெற்றுக்கொள்ளும் வரை தன் வாழ்நாளை நகர்த்துவது ஒரு சமூக வழக்கம். உலகம் முழுவதும் இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது. எனக்கு வீடு சொந்தமாக நான் கட்டிக் கொள்ளும் வரை இன்னொருவரின் வீட்டில் குறைந்த கட்டணம் செலுத்திக்கொண்டு என் வாழ்நாளை கழிக்க முடியும். அப்படி ஒரு வழக்கத்தின் பாற்பட்டு ஒரு குழந்தை உங்களிடம் உயிரியல் நகர்வை செய்வதற்கு உங்கள் கர்ப்பப்பையில், உங்கள் வயிற்றில் எங்கு உடலும் உயிரும் பாதுகாக்கப்படுமோ அப்படி ஒரு குடியிருப்பு பகுதியில் ஒரு குழந்தை குடியிருப்பு பகுதியாக தங்கிக் கொள்கிறது. அங்கு உயிரியல் வளர்ச்சியும் உடலியல் வளர்ச்சியும் மட்டும் நிகழ்கிறது. அது வெறுமனே உடலியலும் உயிரியலும் இயக்கமுமாக இருக்கிற கற்ப உறுப்பில் வளர்கிறது. இந்த வளர்ச்சியின் காரணமாக மனம் சிந்திக்கும் நான்தான் வளர்த்தேன் எனவே நான் இதற்கு உரிமை கொண்டாட வாய்ப்புள்ளவள் என்று ஒரு தாயின் மனம் பதறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் மறைஞானி அந்தத் தாயைப் பார்த்து சொல்கிறார், இந்தக் குழந்தை உயிரியல் வளர்ச்சிக்காக உன்னிடம் தங்கியிருக்கிறது. உன் குடியிருப்பை பயன்படுத்திக் கொண்டது. உன் குடியிருப்புக்குள் இருந்தது. உன் கர்ப்ப வாசலை வீடாக கட்டிக்கொண்டது என்றாலும்கூட அந்த குழந்தைக்குள் இருக்கிற உள்ஒளியில் அந்த குழந்தைக்குள் இருக்கிற ஆன்ம தளத்தில் உனது உரிமை பயன்படாது. அது வெறுமனே உடலுக்கும் உயிருக்கும் உயிரியல் செயல்பாட்டிற்கும் நீ கொடுத்த குடியிருப்பு வாடகைத்தளம். இந்த வாடகை தளத்தை பயன்படுத்திக் கொண்டு ஒரு குழந்தை உடலையும் உயிரியல் செயல்பாடுகளையும் வளர்த்துக் கொண்டது. மேம்படுத்திக் கொண்டது. அது தன் உள் ஒளியில் தன் ஆன்ம நிலையில் உரிமை செலுத்த முடியாத வேறொரு தளத்தில் இருக்கிறது என்று ஒரு மறைஞானி ஒரு பேருண்மையை தாய்க்கு உணர்த்துகிறார்.

அதன் வாயிலாகவே நீ ஒருவேளை அவர்களின் உடலுக்கு வீடாகலாம். நீ ஒருவேளை அவர்களின் உடலுக்கு வீடாகலாம். அது அவர்களின் ஆன்ம ஒளிக்கு பொருந்தாது. ஒரு குழந்தை உன் வயிற்றில் வளர்கிறது என்பதற்காக அவர்களின் ஆன்ம ஒளியை உயிர் ஒளியை உள்ளொளியை நீ ஒன்றும் செய்து விட முடியாது. அப்படி ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற நிஜம் இருப்பதால்தான் ஒரு எளிய தச்சனின் மகன் இயேசு கிறிஸ்துவாக மாறுவதற்கு வாய்ப்பு இருந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்த ஒரு குழந்தை, கன்னி மரியாளுக்கு எதுவும் தெரியாது. ஒரு எளிய குடும்பத்தைச் சார்ந்தவள். மிகப்பெரிய அறிவு பின்புலம் ஏதும் கிடையாது. வெறுமனே இயேசுகிறிஸ்துவிற்கு ஒரு ஆணின் துணை கூட இல்லாமல் உடலையும் உயிரையும் வளர்த்துக் கொள்வதற்கு இடம் கொடுத்த கர்ப்பப்பை கன்னி மரியாளின் கர்ப்பப்பை.

                                                                ...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...