Sunday, October 2, 2022

குழந்தைகளைப் பின்பற்றுவோம் -பகுதி -1

 

குழந்தைகளைப் பின்பற்றுவோம்

www.swasthammadurai.com


குழந்தைகளைப் பின்பற்றுவோம் என்கிற தலைப்பின் கீழ் இந்த சமூகம் சார்ந்திருக்கிற, சமூகம் பின்பற்றிக் கொண்டிருக்கிற ஏராளமான கதையாடல்களும் உடல் நலம் சார்ந்த, உளவியல் நலம் சார்ந்த, சமூக நலம் சார்ந்த சாயல்களும் ஒரு முறை பேசிப் பார்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகள் நலம் என்கிற வேறுபட்ட தலைப்பில் நேரடியாக குழந்தைகள் நலம் குறித்து நாம் உரையாடி இருக்கிறோம். குழந்தைகள் நலம் குறித்தான தொடர் உரையாடலின் நீட்சியாக, தொடர்ச்சியாக குழந்தைகளை பின்பற்றுவோம் என்கிற வேறொரு தளத்தில் நலம் குறித்து உரையாட வேண்டும் என்று இந்த உரையாடல் செய்யவிருக்கிறோம். 

குழந்தைகளைப் பின்பற்றுவோம் என்று நாம் துவங்குகிற போது குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்கிற பொது மனநிலையில் இருந்து நாம் பார்க்கக்கூடும். சிறிய குழந்தைகளுக்கு இந்த சமூகம் குறித்த அறிவும் ஞானமும் அனுபவமும் இல்லை என்கிற நியாயத்தில் இருந்து குழந்தைகளை நாம் எவ்வாறு பின்பற்றப்போகிறோம் என்கிற கேள்வியும் ஐயமும் கூட நமக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும் சமூகத்தில் தம்மை பொருத்திக் கொள்வதற்கு வாய்ப்பில்லாத, ஏற்பாடு இல்லாத குழந்தைகளோடு நாம் எவற்றை கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் பின்பற்றிக் கொள்ளவும் முடியும் என்கிற இயல்பான வினாவும் நமக்கு எழக்கூடும்.

இந்த சமூகம் எழுதி வைத்திருக்கிற, பின்பற்றி வைத்திருக்கிற தொடர்ந்து இந்த சமூகம் பேசுவதற்கு வந்து சேர வேண்டுமென்று எல்லை வகுத்து வைத்திருக்கிற நிலையாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வாழ்கிற அகமனிதனின் அக உணர்வின் அமைதியும் நிம்மதியும் இலக்காக இருக்கிறது. இந்த மனித சமூகம் வைத்திருக்கிற எல்லாவித கோட்பாடுகளுக்கும் தத்துவங்களுக்கும் மறைஞானங்களுக்கும் ஒற்றை இலக்காக இருப்பது ஒரு தனிமனிதனின் அமைதியும் நிதானமும். இந்த அமைதியும் நிதானமும் நிலவ வேண்டும் என்றே இன்று சமூகம் தன் கையில் வைத்திருக்கிற எல்லா தத்துவங்களையும் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

நாம் பார்க்கிற பொது உலகில், இயேசு கிறிஸ்துவை போற்றுகிற சமூகம் இருக்கிறது. புத்தரைப் போற்றுகிற சமூகம் இருக்கிறது. கிருஷ்ணனை போற்றுகிற சமூகம் இருக்கிறது. நபிகள் நாயகத்தை போற்றுகிற சமூகம் இருக்கிறது. ஹிட்லரை மதிக்கிற சமூகம் இருந்திருக்கிறது. முசோலினியை மதிக்கிற சமூகம் இருந்திருக்கிறது. சாக்ரடீஸ் போற்றப்படுகிறார்.  இவ்வாறு ஒவ்வொரு காலத்திலும் வேறுவேறுபட்ட ஆளுமைகள் இந்த சமூகத்தில் மதிக்கப்பட்டவர்களாக போற்றப்பட்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று சேருகிற ஒரு புள்ளி இந்த சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் குறிப்பிட்ட காலத்திற்குள் அமைதியான வாழ்வை, அதற்கான வாழ்வியலை பெற்றுக் கொள்ள வேண்டும். நிம்மதியாக இந்த சமூகத்தில் வாழ வேண்டும் என்று ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர்.

இந்த அமைதி, வளமை, நிதானம் என்கிற சாயலிலேயே, என்கிற நோக்கத்திலேயே இந்த சமூகத்தில் தொடர்ந்து தத்துவங்களும் மறைகளும் ஞானங்களும் போதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இவற்றைப் பெற்றுக் கொள்ளவும் செய்து பார்க்கவும் இந்த சமூகத்தில் இருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் ஆர்வம் இருக்கிறது விருப்பம் இருக்கிறது. இந்த ஆர்வத்தினாலும் விருப்பத்தினாலும் இந்த சமூகத்தில் வைத்திருக்கிற எல்லாவற்றையும் அவன் கற்றுக் கொள்கிறான். செய்து பார்க்கிறான். இதன் இறுதி விளைவாக அவன் வந்து சேருகிற இடம் அவனளவில் அவன் மகிழ்ச்சியாகவும் நிதானமாகவும் அமைதியாகவும் தன்னை மாற்றிக் கொள்வது, கண்டுபிடிப்பது.

இது ஒட்டு மொத்த மனித சமூகத்தின், தனிமனிதனின் இலக்காக இருக்கிறது என்பதை நாம் மிக எளிமையாக பார்க்க முடியும். ஒரு ஆசிரியர், ஆசிரியர் பணிக்கு செல்வது வெறுமனே வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்காக மட்டுமல்ல. ஒரு ஓட்டுனர், ஓட்டுனர் பணியை செய்வதற்கு அவர் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டும் இருப்பதல்ல. ஒரு ஓவியனுக்கு பிரபஞ்சத்தின் ரகசியத்தை பதிவு செய்யும் எத்தனை அக்கறை இருக்கிறதோ, அவ்வளவு அக்கறை ஒரு ஓட்டுனருக்கு தன் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று எத்தனிககிற முயற்சியில் இருக்கிறது. ஒரு கட்டிட பொறியாளர் ஒரு கவிஞன் போல தான் புதிய கட்டிடத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். இப்படி ஒவ்வொரு துறை சார்ந்த மனிதருக்குள்ளும் இலக்கியம் சார்ந்த மனிதருக்குள்ளும் கலை சார்ந்த மனிதருக்குள்ளும் பிரபஞ்சத்தோடு தனக்குள் இருக்கிற அமைதியை இணைத்துக் கொள்வதற்கான, புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு நோக்கத்தோடு இந்த சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

இத்தகைய அமைதி குறித்தான இயங்கு முறையில் நாம் இயங்குவதற்கு நாம் செய்ய வேண்டியது இத்தனை தத்துவங்களை நாம் பின்பற்றலாம், புதிய தத்துவத்தை கண்டுபிடிக்கலாம் என்றாலும் கூட மிக எளிய வழி குழந்தைகளை பின்பற்றுவது.

 ஒரு ஞானிக்கும் ஒரு குழந்தைக்கும் இருக்கிற ஒற்றை வேறுபாடு ஒரு குழந்தையினுடைய வெகுளித்தனம், ஒரு குழந்தையினுடைய நடவடிக்கை அத்தனையும் ஒரு ஞானிக்கும் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று மறைஞானிகளைப் பற்றி கூறுபவர்கள் கூறுவது உண்டு.

ஒரு குழந்தையும் புத்தரும் தோற்றத்தில் ஒன்றாகவே இருப்பர். ஒரு குழந்தையும் இயேசுகிறிஸ்துவும் தோற்றத்தில், இயக்கத்தில், தரத்தில் ஒன்றாகவே இருப்பர். ஒரு குழந்தையும் ஒரு தேர்ந்த மறைஞானியும் தோற்றத்தில், இயக்கத்தில் ஒன்றாகவே இருப்பர்.  இருவருக்கும் இருக்கிற வேறுபாடு, இயேசு கிறிஸ்துவை வைத்து இந்த உலகை கிறிஸ்துவுக்கு முன்பு கிறிஸ்துவிற்கு பின்பு என்று பிரிக்கும் அளவிற்கு ஒரு செல்வாக்கு செலுத்தி இருக்கிற, ஒரு புத்திக்கூர்மை இருக்கிற, அன்பை போதிக்கிற ஒரு ஞானியை ஒப்பிடும்போது ஒரு குழந்தைக்கு அத்தகைய ஒன்றிருக்குமென்றால் இருக்காது.  ஆனால் இயேசு கிறிஸ்துவும் குழந்தையும் ஒரே தரத்தோடு, ஒரே எடையோடு, ஒரே நிறையோடு இருக்கிற வாய்ப்பு இருக்கிறது. இருவருக்கும் இருக்கிற ஒரு வேறுபாடு, ஒரு குழந்தைக்கு தாம் குழந்தை என்று தெரியாது. இயேசுகிறிஸ்துவிற்கு தான் இயேசு கிறிஸ்து என்று தெரியும். இந்த விழிப்புணர்வு தவிர இருவருக்கும் இருக்கிற குணத்தில் வேறு எந்த மாற்றமும் நாம் காண முடியாது.  ஒரு அமைதியை போதிக்கிற, ஒரு ஞானத்தை வைத்திருக்கிற எல்லாமும் குழந்தையிடம் இருக்கிறது. நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் அமைதிக்காக உங்கள் ஞானத்திற்காக ஒருவரை பின்பற்ற வேண்டுமென்று ஒருவரை பின்பற்றத் துவங்குகிற போது நீங்கள் உங்கள் வீட்டு பக்தியோடு, பக்தி இலக்கியங்களோடு, பாடல்களோடு உங்கள் வாழ்க்கையை தியானத்தை துவங்குவது ஒரு புறம். என்றாலும் கூட மிக எளிமையாக ஒரு குழந்தையை பார்ப்பதன் வழியாக, ஒரு குழந்தையோடு பயணிப்பதன் வழியாக உங்களின் ஞானிகளின் ஞானத்தை, ஞானத்திலிருந்து எழும்பி வருகிற துளியை சிதறலை நீங்கள் அனுபவிக்க முடியும்.

                                                                                        ...தொடர்ந்து பேசுவோம்...


No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...