குழந்தைகளைப் பின்பற்றுவோம்
எல்லா
குழந்தைகளுக்கும் இத்தகைய வாய்ப்பு இருக்கிறது. மனித சமூகம் குழந்தைகளை எவ்வாறு உற்பத்தி
செய்கிறது என்று ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளை உற்பத்தி செய்கிற
பொருளாக சமூகம் நினைக்கத் துவங்கி இருக்கிற காலத்தில் குழந்தைகளை ஞானியாக பார்க்க வேண்டிய
அவசியம் இருக்கிறது. குழந்தைகளை ஞானி போல பார்ப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளை
ஞானி போல பார்ப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.இவற்றை உணர்ந்து கொள்வதின் வழியாக குழந்தைகளை
நாம் பேணுவதற்கு பதிலாக பின்பற்றிக் கொள்வதற்குமான வேலையை செய்ய வேண்டும். செய்ய முடியும்
என்கிற தளத்திலேயே இந்த உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
எல்லாவற்றிற்கும்
துவக்கமாக, எல்லா செயல்முறைக்கும் துவக்கமாக, எல்லா அணுகுமுறைக்கும் துவக்கமாக அமைதியை
நோக்கி ஒரு மனிதன் நகர்வதற்கு குழந்தைகளை பின்பற்றுவதன் வழியாக சாத்தியப்படுத்த முடியும்.
இந்தத் தொடர் உரையாடலில் இரண்டு மூன்று தளங்களில், பொருண்மைகளில் பேசப்பட வேண்டும்
என்று எனக்கு பணிக்கப்பட்டு இருக்கிறது. நலம், உளவியல், சமூக உறவு இந்த மூன்று தளங்களில்
குழந்தைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று இந்த கருத்துரையை நான் உங்களோடு பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.
நலமாக
இருப்பதற்கு எவ்வளவு முயற்சி நாம் மேற்கொள்கிறோம் என்று நாம் அனைவரும் அறிந்தது தான்.
ஒரு மனிதன் நலமாக இருக்க வேண்டும் என்பதற்கு எவ்வளவோ முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்.
தன் உதிர்ந்த தலைமுடியில் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து செயற்கைக் கூந்தலை நிறுவிக்
கொள்கிற மனித மனம் இன்று கண்முன் இருக்கிறது. நிறம் மாறிய, பக்குவத்தின் குறியீடாக
வழங்கப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட நரைமுடியை செயற்கையாக, நிறம் மாற்றிக் கொள்கிற மனிதமனம்
இன்று இருக்கிறது. இயல்பாக இருக்கிற ஒன்றை மாற்றியமைப்பது ஆரோக்கியம் என்று நம்பத்
தொடங்கி இருக்கிற சமூகத்தில் மலர்ச்சியாக நிகழ்கிற ஒன்றை மாற்றம் என்று, மாற்ற வேண்டும்
என்று முயற்சி செய்கிற ஒரு சமூகத்தில் நலம் என்பது என்ன என்பதை கண்டுபிடிப்பதற்கே தனி
அறிவு நமக்கு தேவைப்படுகிறது.
இன்று
40, 50 வயது நிரம்பிய அனைவருக்கும் அவரவர் சிறுவயதில் ஒரு முதியவரை, பண்பட்டவரை சந்திக்கிற
போது அவர் தலை முழுவதும் நரை முடி இருக்க வாய்ப்பிருக்கிறது. வாய்ப்பு இருந்திருக்கும்.
அவர் முடி முழுவதும் நரைத்திருக்கும். கலவையாக இருக்கும். அந்த நரைத்த முடியின் அளவிற்கேற்ப
அவரை தாத்தா என்றோ மாமா என்றோ குழந்தைகள் அழைப்பர். அவர் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பார்.
அவருக்கு சமூகத்தில் நிறைய அனுபவங்கள் இருக்கும். அவரோடு உரையாடுவதின் வழியாக நிறைய
செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அவரோடு உரையாடுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்படும்.
பண்பானவர், மேன்மையானவர், பக்குவமானவர் என்றெல்லாம் கூட அவரை பற்றிய கருத்தாக்கங்கள்
பார்ப்பவரின் மனநிலையில் எழும். இவை எல்லாம் ஒரு நரைமுடிக்கு பின்னால் இருக்கிற ஆரோக்கிய
குறியீடு.
மனிதன்
சமூக அளவில், உடல் அளவில் ஒரு மலர்ச்சியை எட்டி இருக்கிறான் என்பதை காட்டுவதற்காக உடல்
தன்னை மாற்றி வைத்திருக்கிறது என்ற பொருண்மையில், என்ற பார்வையில் இந்த சமூகம் அவரைப்
புரிந்து வைத்திருக்கிறது. இந்தப் புரிதலில் இன்று சமூகம் சிக்கல் ஒன்றை உருவாக்கி
வைத்து இருப்பதை பார்க்கிறோம். மலர்ச்சியாக இருந்த ஒன்று, பண்பாக இருந்த ஒன்று, மேன்மையாக
இருந்து ஒன்று, பார்க்கப்பட்ட ஒன்று இன்று ஆரோக்கிய குறைபாடு என்று மனிதனால் மாற்றி
அமைக்கப்படுவதை நலம் என்று பரிந்துரைக்கிற, நலம் என்று போற்றுகிற ஒரு சிக்கலில் இருந்து
பார்க்கிறபோது இந்த மனித சமூகம் நலம் என்பதை எவ்வாறு புரிந்திருக்கிறது என்று நாம்
தனியாக சிந்திக்க வேண்டி இருக்கிறது. இவர்கள் நலம் என்று ஏதோ ஒன்றை தவறாக பிடித்துத்
தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. இயல்பாக இருப்பதே நலம். இசைவாக இருப்பதே நலம். எது
உங்களுக்கு இலகுவாக இருக்கிறதோ, எது உங்களுக்கு அதுவாக மலர்கிறதோ இவையெல்லாம் நலத்தின்
பாற்பட்டு நிகழ்வது மலர்வது.
உங்களுக்கு
உடலில் தோன்றி இருக்கிற பழுப்பு நிறம் நலம் சார்ந்தது. அதுவாக மலர்ந்தது அது. உங்களுக்கு
தலையில் வளர்ந்திருக்க முடியும், உதிர்ந்து இருக்கிற முடியும் அதுவாக நிகழ்ந்தது. நலம்
சார்ந்தது. உங்கள் உணவின், உங்கள் உறக்கத்தின்,
உங்கள் வாழ்க்கை முறையின் ஏதோ ஒரு பகுதியில் உங்கள் உடலை, உயிரை தக்க வைப்பதற்கான முயற்சியில்
உடல் பயணிக்கிற போது, உயிர் பயணிக்கிற போது உடலில் ஏற்படுகிற எல்லா தகவமைப்பு மாற்றங்களும்
இயல்பாக ஏற்படுமெனில், இசைவாக ஏற்படுமெனில் அது முழுக்க நலம் சார்ந்தது. இப்படி நலம்
சார்ந்து இருப்பதற்கு ஒரு புதிய வரையறை நாம் மீண்டும் பேசிப் பார்க்க வேண்டி இருக்கிறது
என்கிற கவலையிலிருந்து நாம் நலத்தை பார்க்கவும் இந்த நலத்தை குழந்தைகள் எவ்வாறு செய்கிறார்கள்
என்பதை புரிந்து கொள்ளவும் இந்த உரையாடலை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
நலம்
இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நலம் இன்று வேறொரு திசையில் சிக்கிக்
கொண்டிருக்கிறது. நாம் எவ்வாறு அமர வேண்டும் என்று நமக்கு தெரிவதில்லை. நாம் எவ்வாறு
நடக்க வேண்டும் என்று நமக்கு தெரிவதில்லை. நாம் எவ்வாறு உணவருந்த வேண்டும் என்று நமக்கு
தெரிவதில்லை. இந்த சமூகம் நேரத்திற்கு உண்ண பழகி இருக்கிறது. காலை 9 மணி, நண்பகல் ஒரு மணி, முன்னிரவு 7 மணி என்று
மூன்று வேளைகளில் நிறைவாக உண்ண வேண்டும் என்று இந்த சமூகம் பழகி இருக்கிறது. நிறைவாக உண்ண வேண்டும் என்று கூப்பாடு போடுகிற அனைவரிடமும்
நான் கேட்கிற போது நான் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வேன் என்று பதில் உறைப்பதை
நான் கேட்கிறேன். நீங்கள் சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளும் பழக்கம் உங்களுக்கு
உண்டு எனில் நீங்கள் சரியான நேரத்திற்கு உறங்கச்
செல்லும் பழக்கத்தை வைத்திருக்கிறீர்களா என்று அவர்களைப் பார்த்து நான் மீண்டும் கேட்கிறபோது
அவர்கள் அவ்வாறு செய்வதில்லை என்று வெளிப்படுகிறார்கள். நீங்கள் சரியான நேரத்திற்கு
உணவு உட்கொள்ள பழகி இருப்பீர்கள். ஆனால் தூக்கம் மட்டும் வரும்போது தூங்குவீர்கள்.
9 மணிக்கு நீங்கள் சாப்பிட வேண்டும் என்று எடுத்த முடிவு உங்களுக்கு நியாயமாக உள்ளது
எனில் இரவு 7 மணிக்குள் உணவை முடிக்க வேண்டும் என்று நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்
எனில் 9 மணிக்கு உறங்க வேண்டும் என்பதை நீங்கள்
நிகழ்த்த வேண்டும். நீங்கள் பகலில் மட்டும் நேரத்தை பின்பற்றிக்கொண்டு இரவில் வரும்போது
உறங்குவேன் என்பது உடலுக்கு எதிரான வன்முறை.
உங்கள்
உடலை நீங்கள் போற்றுவது போல் அவமதிக்கிறீர்கள். உங்கள் உடலை பின்பற்றுவது போல் நீங்கள்
புறக்கணிக்கிறீர்கள். இந்த அவமானமும் புறக்கணிப்பும் உங்களுக்கு எதிராக நீங்கள் செய்து
கொள்வது. இத்தகைய எந்த விசேஷ வியாக்கியானங்களும் இல்லாமல் விமர்சனங்களும் இல்லாமல்
குழந்தைகள் எப்போதும் போல் நேரம் பார்க்காமல் உண்பார்கள். நேரம் பார்க்காமல் உறங்குவார்கள்.
பசி வரும் போது சாப்பிடுவார்கள். உறக்கம் வரும்போது உறங்குவார்கள். நீங்கள் பசி வரும்
போது சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தால் நீங்கள் சொல்கிற உறக்கம் வரும்போது உறங்குவது
நியாயமானது. நீங்கள் நேரம் வரும்போது சாப்பிடுவேன்
என்று சொன்னால் நீங்கள் நேரம் வரும்போது உறங்குவது என்பதுதான் பொருத்தமானது. நீங்கள்
எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு குழந்தைகள் நியாயமான
தராசுகளாக உங்கள் முன் இருப்பார்கள் என்பதை நினைவூட்டுவதற்காக குழந்தைகளைப் பின்பற்றுவோம்
என்று நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இப்படி
குழந்தைகளுக்குள் இருக்கிற நலம் சார்ந்த, உளவியல் சார்ந்த சமூகம் சார்ந்த வேறுவேறு
செய்திகளை பார்ப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமான தளமாக நாம் இந்த உரையாடலை மாற்ற
வேண்டும் என்று விரும்புகிறேன். நலத்திற்குள் குழந்தைகள் ஏராளமாக சொல்லித் தருகிறார்கள்.
நிறையப் பேசுகிறார்கள். நலமாகவே வாழ்கிறார்கள்.
குழந்தைகளை
மதிப்பு குறைவாக சமூகம் பார்ப்பதுப் போல நலம் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்கிற
பொது மனநிலை நமக்கும் இருக்கிறது. அது மாற்றப்பட வேண்டியது. அது சீர் செய்யப்பட வேண்டியது.
அது பின்பற்றப்பட வேண்டியது.
தொடர்ந்து பேசுவோம்....
No comments:
Post a Comment