Tuesday, October 4, 2022

குழந்தைகள் விரைந்து குணமடைகின்றனர் / பகுதி - 1


                குழந்தைகள் விரைந்து குணமடைகின்றனர்

                          

                             உடல் நலம் குறித்தான வெவ்வேறு வகையான விளையாட்டுத்தனங்களையும் சிந்தனாமுறைகளையும் கதையாடல்களையும் தத்தமது வாழ்க்கை இயல்பாக கொண்டிருக்கிற குழந்தைகளை முன்மாதிரியாக நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தளத்தில் குழந்தைகள் குறித்தான உடல்நலம் குறித்தான பொருண்மையை குழந்தைகள் வழியாக பேசிப் பார்க்கிறோம்.

இயற்கையாக, இயல்பாக உடல் நலம் என்பது எவ்வாறு அளவிடப்பட வேண்டும் என்று நாம் விவரித்துப் பார்க்கிறபோது இயற்கையாக, இயல்பாக என்கிற செய்தியும் அளவுகோலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

உடல் எப்போதும் இயற்கையாகவே பிறந்த ஒன்று. உருவான ஒன்று. உடலைப் பற்றி பேசுகிறபோது ஒரு சிலாகிப்பு கவிதை போல் உடலை நாம் வரையறுக்க முடியும். ஒரு இலக்கியத்தை பேசி மனம் மகிழ்வது போல், உடலை இயற்கையோடு இணைந்து இருக்கிற பகுதிகளை ஒப்பிட்டு நாம் மகிழ முடியும். இத்தகைய இயங்கு முறையும் கட்டமைவும் உடலுக்கு இருக்கிறது. இந்த இயங்கு முறையும் கட்டமைவும் உடலுக்கு இருக்கிறது என்கிற இயல்பு இயற்கையாகவே அமையப்பெற்றது. உடலை மனித அறிவால் உருவாக்க முடியாது. உடல் இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்குகிற இயங்கு முறையின் கீழ் நிகழ்கிற ஒழுங்கமைவு மாற்றம்.

உடல் என்றால் யாவருக்கும் உடல் உண்டு. எல்லா பொருட்களுக்கும் உடல் உண்டு. எல்லா உயிரினங்களுக்கும் உடல் உண்டு. இத்தகைய உடலின் தன்மையை எவற்றின் வழியேனும் நாம் பெற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

ஒரு நாற்காலியின் உடலை படைப்பது போல ஒரு ஆட்டுக்குட்டியின் உடலை நம்மால் படைக்க முடியாது. ஒரு எழுது பலகையின் உடலை படைப்பது போல ஒரு நாய்க்குட்டியின் உடலை நம்மால் படைக்க முடியாது. தமிழில் உயர்திணை, அஃறிணை எனறு இரண்டு வகைப்பட்ட சொல்லாடல்கள் வழக்கத்தில் உண்டு. தமிழ் இலக்கியம், தமிழ் வாழ்வியல் மரபு மனிதர்களை உயர்திணையாகவும் மனிதர்கள் அல்லாதவற்றை அது இல்லாத திணை அஃறிணை என்றும் வகைப்படுத்தி வைத்திருக்கிறது.

இலக்கியப் பார்வையிலிருந்து சற்று ஆழமாக நாம் பார்க்கிறபோது உயிர் இருக்கிற ஒரு வகைமையும் உயிரற்ற ஒரு வகைமையுமாக பிரித்தோம் என்றால் ஜீவராசிகளை ஒன்றாகவும் பொருட்களை இன்னொரு வகையாகவும் நாம் பார்க்க முடியும். ஜீவராசிகள் அல்லாத எல்லாவற்றிற்கும் உடல் இருக்கிறது. ஜீவராசிகளுக்கு இருப்பதைப் போலவே அமைப்பு முறை இருக்கிறது. மின்சாரமும் இயங்கு முறையும் அதற்குரிய நிரல்களையும் நீங்கள் பதிவிட்டால் கணிப்பொறி கொண்டு ஒரு மனிதனைப் போன்ற பிம்பத்தை இயக்க முடியும் என்றாலும் கூட அத்தகைய உடல்கள் எல்லாமும் மனிதனுக்கு இருக்கிற உடல் அமைப்பை போல் உருவாக்கப்பட்டவை அல்ல. மனித உடல் சற்று வேறுபட்டது. இந்த வேறுபாடு என்பது இவை உருவாக்கப்பட்டது அல்ல, உருவானது என்கிற அடிப்படையான தளத்தில் இருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டியது.

இன்று நமது உடலை அலங்கரித்துக் கொள்வதற்காக நாம் உருவாக்குகிறோம். விஞ்ஞான வளர்ச்சியில் நவீன மருத்துவத்தினுடைய உதவியில் ஆய்வுகளில், ஆவணங்களில் நாம் பார்க்கிறபோது நவீன மருத்துவம் உடலில் இருக்கிற உறுப்புகளை மாற்றி வைப்பதற்கான நுட்பங்களை கண்டுபிடித்து வைத்திருக்கிறது. நவீன மருத்துவம் உடலின் நிறத்தை மாற்றுவதற்கான செயல்பாட்டு முறைகளை வடிவமைத்து வைத்திருக்கிறது. உங்கள் தலைமுடியின் அலங்காரத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். உங்கள் கண் கருவிழியின் வடிவமைப்பை நிறமிகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றாலும் கூட ஒரு குழந்தையை ஒப்பிடுகிற போது இத்தகைய அலங்காரங்களும் மாற்று முறைகளும் இல்லாத ஒரு சிறப்புத் தன்மை குழந்தைகளுக்கு இருக்கிறது என்பதை நாம் காண முடியும்.

நவீன மருத்துவம் தேவையின் பொருட்டு, மனிதர்களின் நிர்பந்தத்தின் பொருட்டு மருத்துவ செயல்வளியை பொறுத்து தனக்கான புதிய புதிய ஆய்வுகளையும் பாதைகளையும் செய்து கொண்டும் கண்டுபிடித்துக் கொண்டும் இருக்கிறது என்பது ஒரு புறம். என்றாலும் கூட அவை கண்டுபிடித்து வைத்திருக்கிற செயல்பாட்டு முறைகளும் நுட்பங்களும் ஒரு புதிய மனிதனை இயற்கையில் இருந்து சற்று இடைவெளியோடு நகர்த்தி வைக்கிற முயற்சியை செய்து கொண்டிருக்கின்றன. அதில் வெற்றி பெறவும் செய்கின்றன.

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு நபர், உடலுக்குள் எலும்புகளுக்குப் பதிலாக கம்பிகளைப் பொருத்தி கொண்ட ஒரு நபர், கண்களில் கருவிழியை சீர் செய்து கொண்ட ஒரு நபர், உடல் அளவில் ஆரோக்கியமாக நலமுடையவராக இருந்தாலும் கூட ஒரு குழந்தையின் உடலை ஒப்பிடுகிற போது இயற்கையில் இருந்து வெகுதூரத்தில் இருக்கிற தன்மையோடு அவர் உடல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பொருட்களின் கலவையால் சற்று உயிர் தன்மையோடு இயங்குகிற ஏற்பாடோடு அந்த மாற்றியமைக்கப்பட்ட உடல் இருக்கிறது என்றுதான் நாம் பொருள் கொள்ள முடியும். ஆனால் குழந்தைகளின் உடல் அப்படியானது அல்ல. இயற்கை தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு அனேக சாத்தியங்களை குழந்தைகள் உடல் பெற்றிருக்கின்றன. நான் சரியாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிற இடம் குழந்தையின் உடலும் இயற்கையும் வேறு வேறாக நாம் பார்த்துவிட முடியாது. மிக நெருக்கமாக என்பதே கூட குழந்தைகளின் உடலைப் பொறுத்தவரை அதிக இடைவெளி தான். குழந்தைகளின் உடலும் இயற்கையும் வேறு வேறு அல்ல.

மிகப் புனிதமாக சொல்லப்படுகிற மறை நூல்களும் ஞான மார்க்கங்களும் இயற்கைக்கு சில வரையறைகளை வைத்திருக்கின்றன. இயற்கையானது இத்தகைய புனிதங்களோடு இருக்கின்றன என்று சில கோட்பாடுகளை வைத்திருக்கின்றன. இயற்கையானது இத்தகைய செழுமையோடு இருக்கின்றது என வரையறைகளை வைத்திருக்கின்றன. இவை யாவும் குழந்தைகளுக்கு பொருந்தும். ஒரு மென்மையான கால்களை, ஒரு மென்மையான உள்ளங்கையை, ஒரு மென்மையான உச்சிக்குழியை, ஒரு மென்மையான இதயத்துடிப்பை வெறுமனே ஒரு காட்சிப் பொருள் போல், நாம் தடவி பார்த்தாலும் தொட்டுப் பார்த்தாலும் நுகர்ந்து பார்த்தாலும் கூட அந்த குழந்தையின் மேல் உங்கள் வாசனை அந்த குழந்தையின் வாசனை உங்களுக்குள் செல்கிற நிகழ்வு எல்லாமும் உயிர்த்துடிப்பு உள்ளதாக மாறுவதை குழந்தைகளை தூக்குகிற, குழந்தைகளை கொஞ்சுகிற, குழந்தையோடு விளையாடுகிற யார் ஒருவரும் உணர முடியும். அனுபவமாக பார்க்க முடியும் என்கிற தளத்திலிருந்து குழந்தையின் இயல்பை, இயற்கையை பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

                                                                                        ...தொடர்ந்து பேசுவோம்...

1 comment:

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...