Saturday, September 17, 2022

வாசிப்பின் நோக்கம் - பகுதி -2 - சிவ.கதிரவன்

                                    வாசிப்பின் நோக்கம்

www.swasthammadurai.com


ஒவ்வொரு வாரமும் இந்த உரையாடல் தொடர்ந்து நிகழவேண்டும். தொடர்ந்து நிகழ்வதின் வழியாக வெறுமனே கதையாடலும் உரையாடலும் ஒரு புத்தகத்தை விமர்சிக்கிற விமர்சனமும் இந்த உரையாடலுக்கு நோக்கமாக இருப்பது தாண்டி இதற்கான அழுத்தமான ஆழமான வேறு சில பகுதிகளை நாம் பேசவேண்டும் என்பதை நான் உங்களுக்கு இந்த வேளையிலே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஏனென்றால் எல்லா இலக்கியங்களும் எல்லா புத்தகங்களும் சமூகத்தில் இருக்கிற எதோ ஒன்றை பிரதிபலிக்கும் தன்மையோடு இருக்கிறது. சமூகத்தில் இருக்கிற ஒரு அதிர்வை, அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சிக்கலை மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்திலும் இலக்கியங்கள் படைக்கப்படுவதுண்டு. சமூகத்தில் நிலவுகிற நிகழ்வுகளை நிலையை வெளிப்படுத்துவதற்காகவும் இலக்கியங்கள் படைக்கப்படுவதுண்டு.

தீர்க்கதரிசனமாக எதிர்வரும் காலத்தை உணர்ந்து கற்பனையின் வாயிலாக, விருப்பத்தின் வாயிலாக பதிவுகளை வெளியிடுவதும் இலக்கியங்களில் நிகழ்வதுண்டு. இப்படி இலக்கியங்கள் பாடல்களாகவும் கவிதைகளாகவும் சிறுகதைகளாகவும் புதினங்களாக, இதிகாசங்களாக, கட்டுரைகளாக, விமர்சனங்களாக வெளி வந்து கொண்டே இருப்பதை நாம் பார்க்கிறோம்.

 இத்தனை வெளிப்பாடுகளும் அதற்கே உரிய சமூக அதிர்வை வெளிப்படுத்துகின்ற ஒன்றாக இருக்கிறது. சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற சிக்கலை மாற்ற வேண்டும் என்கிற தவிப்பில் வெளிவருகிற பதிவுகள் இருக்கின்றன.

எதிர்காலத்தில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இவையெல்லாம் கிடைக்க வேண்டும். சமூகத்திற்கு இவையெல்லாம் கிடைக்க வேண்டும். இந்த உலகம் இவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்கிற விருப்பத்தையும் கற்பனையையும் இந்த பதிவுகள் வெளிப்படுத்துகின்ற விதங்களையும் நாம் பார்க்க முடியும். எல்லா இலக்கியங்களும் எல்லா செய்யுள்களும் ஒரு வரி தகவல் கூட சமூகத்தின் அதிர்வை சமூகத்திற்குள் இருக்கிற பாத்திரத்தில் இருந்து வெளிப்படுகிற ஒன்றாகத்தான் இருக்கிறது என்பதை நாம் அடிப்படையில் வாசிப்பின் பாற்பட்டு புரிந்து கொள்ள வேண்டும். சமூக அதிர்வு இல்லாமல் சமூகத்தினுடைய எதிர் வினையாக இல்லாமல் தீர்க்க தரிசனமாக மேலிருந்து கீழாக ஒன்றை ஒரு படைப்பாளி இதுவரை படைத்ததில்லை நான் படித்த அளவில். எல்லா படைப்புகளும் இப்படியான தன்மையோடு இருக்கிறது புனித நூல்கள் உட்பட.

சமூக சிக்கலை தீர்ப்பதற்காக வேதநூல் நபிகள் நாயகத்திற்கு இறக்கப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு. நபிகள் நாயகம் சமூக சீர்கேடுகளை களைந்து இந்த மக்களுக்கு நல்ல வழியை காட்டவேண்டும். இறையின் பாற்பட்டு நல்ல செய்திகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவருக்கு ஆசி கிடைத்து அந்த ஆசியின் வழியாக அவருக்கு இறையின் பாற்பட்டு வழங்கப்பட்டதன் விளைவாக குரான் பிறந்தது என்று ஒரு சுருக்கமான வரலாறு இருக்கிறது.

 ஏசுகிறிஸ்துவினுடைய அற்புதங்களை புரிந்து கொள்ள வேண்டும். சமூக சிக்கலிலிருந்து விடுபடவேண்டும் என்று சாட்சிகளின் தொகுப்பு புத்தகமாக பைபிள் புதுவிவிலியம் இருக்கிறது. அதுவும் சமூகம் பாற்பட்ட சமூகத்தின் அதிர்விலிருந்து சமூகத்தின் எதிர்வினையாக சமூகத்திற்கு, மக்களுக்கு சிக்கல் தீர்ப்பதற்கான விடையாக சாட்சிகளும் வாழ்க்கை முறையும் இருந்ததாக திருவிவிலியம் பற்றிய குறிப்புகளில் நாம் படிக்க முடிகிறது, இறப்பு குறித்து இறப்பினுடைய நிகழ்வை நேரடியாகப் பார்த்த ஒரு சிறுவனின் அதிர்வு சமூகத்தில் அன்றாடம் இறப்பும் பிறப்பும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற அதிர்வு ஒரு சித்தார்த்தனை புத்தராக மாற்றிய கதைகளை நாம் புத்த இலக்கியங்களில் புத்த வரலாறில் கௌதமன்  புத்தராக மாறிய சமூக அதிர்வை நாம் பார்க்கிறோம்.

சமூகத்தில் இருக்கிற அறப்பிறழ்வு, நன்மையின் தேய்வு அறம் நிலைநாட்டப்பட வேண்டும். நன்மை வியாபிக்க வேண்டுமென்கிற பெரும் நோக்கத்தோடு கிருஷ்ண பரமாத்மா தன் விளையாட்டை செய்திருக்கிறார் என்று கிருஷ்ணனின் புராணங்களில் நாம் பார்க்க முடிகிறது. கிருஷ்ணன் கூறிய படைப்புகளை மகாபாரதம் உள்ளிட்ட எல்லாக் கிளைக் கதைகளையும் நாம் பார்க்கிறபோது சமூகத்தில் அறமும் தர்மமும் விலகிப் போகிறது. சமூகத்தை உடனடியாக அறத்தின் பாதையில் தர்மத்தின் பாதையில் மாற்றிவிட வேண்டும் என்று சமூக விளைவாக புராணங்களும் இதிகாசங்களும் கதைகளும் தோன்றுகின்றன.

இப்படி சமூக சாயல் இல்லாமல் ஒரு தனி மனிதனின் இயங்கு உலகம் இல்லாமல். கற்பனை இல்லாமல் இந்த இடமும் சமூகமும் வாழ்க்கை முறையும் நாளை நமக்கு ஒரு விடியலாக விடுதலையாக மாறி விடாதா என்கிற தாகம் இல்லாமல் ஒரு படைப்பு நான் வாசித்ததே இல்லை. எல்லா படைப்புக்குள்ளும் இது இருக்கிறது.

சிதறிக் கிடக்கிற இளைஞர்களை தன் நோக்கி சாக்ரடீசும் சமூகத்திலிருந்து தான் பார்த்த உலகத்திலிருந்து மாயைகளில் இருந்து விடுதலையாக்குவதற்கான சமூக எதிர் விளைவாகவே மனிதர்களை இளைஞர்களை தன் பாற்பட்டு ஈர்க்கிறார். ஈர்த்திருக்கிறார். அவரது சீடர், அவரது சீடர், அவரது சீடர் என்று மாவீரர் அலெக்சாண்டர் வரை ஒவ்வொருவரும் தன்னுடைய பதிவை, படைப்பை வரலாற்று நிகழ்வுகளை சமூக எதிர்விளைவாக சிக்கலின் மாற்றாக தீர்வாக முன்வைத்திருக்கிறார்கள். பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் ஒரு புத்தகத்தினுடைய தகவல், ஒரு செய்தியினுடைய ஒரு வரி தகவலின் பின்னால் இருக்கிற கரு நமக்கு என்னவென்று தெரிய வேண்டும் என்கிற கோணத்தில் நான் உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன். ஒருவரி செய்தியாக நீங்கள் எதைப் படித்தாலும் கூட அது தாங்கி இருக்கிற ஒரு சமூகத்தினுடைய எதிர்விளைவாக எதிர்விளைவின் நோக்கமாகவே ஒரு வரி செய்தியாக மாறி அச்சாகி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படித்தான் இருக்கிறது.

உலகம் முழுவதும் ஒருவிதமான பொருளாதார சுரண்டல், தனி மனித உழைப்பு, சீரழிவு என்கிற பெரும் சிக்கலை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் இருக்கிற இலக்கியங்களை படித்து உள்வாங்கிக் கொண்டு உலகம் முழுவதும் இருக்கிற உற்பத்தி முறைகளை பார்த்து படித்து கிரகித்து இன்று கண்முன் இருக்கிற மனிதர்களினுடைய உழைப்பையும் அதன் சிதைவையும் அந்த உழைப்பின் மீது நிகழ்த்தப்படுகிற ஏமாற்று கதைகளையும் மாற்றுவதற்கும் சீர்செய்வதற்கும் சமன்பாடுகளை உண்டாக்கிய பொருளாதார வார்த்தைகளுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது. காரல் மார்க்ஸினுடைய வெளிப்பாடு, பதிவு அது. இன்று உலகம் முழுவதும் பொருளாதாரத்திற்கு பொருளாதாரம் பற்றி பேசுவதற்கு அனைவரும் ஒரு வேத புத்தகம் போல, மறைநூல் போல பார்க்கப்படுகிற புத்தகம் காரல் மார்க்சின் படைப்பு மூலதனம். உழைக்கும் உற்பத்தி, உழைக்கும் மனிதன், அவனுக்கு பின்னால் இருக்கிற உழைப்பு, அவனுக்கு மூலதனமாக கிடைக்கிற மூலப்பொருட்கள், இயந்திரங்கள், இந்த மூலப் பொருட்களுக்கும் இயந்திரங்களுக்கும் தனது உழைப்பிற்கும் இடையே இருக்கிற பிணைப்பு, அது தருகிற லாபம், அந்த லாபத்தின் பாற்பட்டு விளைகிற நுகர்வு இவையெல்லாமும் சமூகத்தை என்ன செய்து கொண்டு இருக்கிறது. இது எவ்வாறு மாற்றப்படவேண்டும் என்ற சமூக எதிர்விளைவாக காரல் மார்க்ஸினுடைய  ஒரு உலகப் பெரும் படைப்பாக வெளிவந்திருக்கிறது. இன்றும் அதை நாம் காண்கிறோம்.  

கார்ல் மார்க்சிற்கு இணையாக சம காலத்தில் அவரோடு சேர்ந்து பயணித்த பேரறிஞர் ஏங்கல்ஸ். இயற்கையின் இயக்கத்தை, வரலாற்றுத் தன்மையோடு இயங்குவியல் தன்மையோடு இயற்கையின் இயக்க தன்மையோடு புரிந்து விவாதித்து கட்டுரைகள் ஆக்கி படைப்பாக்கி திருத்தி இயற்கையும் இந்த மனிதனும் மார்க்சும் எவ்வாறு ஒன்று படுகிறார்கள். நாம் செய்கிற நோக்கம் எதை நோக்கியது? சமூகத்தில் இருக்கிற சமூகத்தில் நிரம்பி வழிகிற சுரண்டலை சீர் செய்ய வேண்டும் என்கிற பெரும் விருப்பத்தோடு தனது புத்தகங்களை ஆவணப்படுத்துகிறார். பதிவுகளை ஆவணப்படுத்துகிறார். அவ்வளவும் புத்தகங்களாக, பதிவுகளாக, கட்டுரைகளாக வெளிவருகின்றன. இவை சமூகத்தினுடைய எதிர்விளைவு.

                                                                                     ...தொடர்ந்து வாசிப்போம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...