வாசிப்பின் நோக்கம்
அவரவர் தான் கண்ட சமூகத்தினுடைய எதிர்விளைவு. இந்திய சமூகத்தில் உண்டான, தோன்றிய பெரும் பக்தி மார்க்கமாக இருந்தாலும் அரசியல் சமூகமாக, சமூகப் பகுதியாக இருந்தாலும் ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு சாதகரும் தான் உதிர்த்த வார்த்தைகள் சமூகத்தின் எதிர்விளைவாக, சமூகத்தின் மாற்றத்திற்கான நோக்கத்தோடு வந்து விழுந்திருக்கின்றன என்கிற தன்மையில் நாம் ஒரு வாசிப்பிற்கான காரணத்தை பார்ப்பதற்கு முன் ஒரு புத்தக பதிவின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஒரு புத்தகமும் செய்தியும் நம் முன் விழுகிறது. நான் முன் இருக்கிறது என்றால் அதற்கு ஒரு ஆழமான நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் சமூகத்தின் அதிர்வு, சமூகம் ஏற்படுத்தி இருக்கிற எதிர்பார்ப்பு, சமூகம் கடந்து போக வேண்டும் என்று வைத்திருக்கிற கற்பனை, சமூகம் எட்டிப் பிடிக்க வேண்டும் என்று வைத்திருக்கிற விருப்பம் இதன் பாற்பட்ட காரணங்கள், இதன் பாற்பட்ட நோக்கங்களாலேயே ஒரு படைப்பு புத்தகமாக, செய்தி குறிப்பாக, கவிதையாக, செய்யுளாக மாறி நம்முன் வருகிறது என்ற புரிதலில் நாம் வாசிப்பை துவங்க வேண்டும்.
ஏனென்றால் இலக்கியங்களை பல்வேறு விதமாக இந்த சமூகம் வைத்திருக்கிறது. நவீன இலக்கியங்கள், பின் நவீன இலக்கியங்கள் இலக்கியங்களை சமூக காட்சிகளை எவ்வாறெல்லாம் பார்க்க வேண்டுமென்று பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கூட வாசிப்பு இலக்கியங்கள், வாசிப்பு இலக்கணங்கள் தொகுக்கப்பட்ட காலங்கள் உண்டு. ஒரு இலக்கியம் இவ்வாறு வாசிக்கப்பட வேண்டும். ஒரு நிகழ்வு இவ்வாறு பார்க்கப்படவேண்டும் என்று இலக்கியங்களை வரையறுத்த காலங்கள் உண்டு.
எல்லா படைப்பாளிகளும் எதற்காக இலக்கியத்தை படைக்க வேண்டுமென்று இலக்கணங்கள் சொல்லப்பட்ட காலங்கள் உண்டு. இலக்கியங்கள் ஒரு படைப்பு, படைப்பாளனின் நோக்கத்தில் படைக்கப்பட வேண்டும். படைப்பாளனின் நோக்கத்திலேயே படைக்கப்படுகிறது என்று வரையறுத்த வரையரைகள் உண்டு. இலக்கியங்கள் இலக்கியங்களுக்காக, இலக்கியங்கள் பக்திக்காக, இலக்கியங்கள் படைப்பாளிக்காக, இலக்கியங்கள் மக்களுக்காக, இலக்கியங்கள் சமூக மாற்றத்திற்காக என்று இலக்கியங்கள் எதற்காக என்று பெரிய விவாதத்தை இலக்கிய உலகம் நடத்தியிருக்கிறது. இன்றும்கூட நடத்திக் கொண்டே இருக்கிறது. எதற்காக ஒரு இலக்கியம் படைக்கப்பட வேண்டும். எதற்காக ஒரு நூல் வெளியிடப்பட வேண்டும். எதற்காக ஒரு செய்யுள் எழுதப்பட வேண்டும். எதற்காக ஒரு சிறுகதை சொல்லப்பட வேண்டும் என்றெல்லாம் கூட நோக்கங்கள் வரையறைகள் இருந்து கொண்டே இருக்கிற வேளையில் ஒன்றை பார்ப்பதற்கு ஒன்று எவ்வாறாக உருவாகிறது என்று தெரிந்து கொள்வது நமக்கு அவசியமாகிறது. இலக்கியங்களும் அதற்குப் பின்னால் இயங்குகிற இலக்கணங்களும் அவசியமானது.
தமிழ் சமூகத்தில் நீண்ட காலம் உயிர் வாழ்கிற இலக்கிய நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் பிறந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். ஒரு சமூகம் எவ்வாறு இருந்திருக்கிறது. எவ்வாறு இருக்க வேண்டும் என்று கடந்த காலத்தையும் தற்காலத்தையும் இணைத்து எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று வரையறுத்துக் கூறுகிற ஒரு இலக்கண நூல்.
ஒரு சமூகத்தில் நில அமைப்பை பேசுகிற நில அமைப்பை உள்வாங்கிக்கொண்டு நில அமைப்பிற்கு உரிய செய்திகளை பேசுகிற சங்கதிகள் தொல்காப்பியத்தில் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஒரு மனிதன் எவ்வாறு இருந்தால் அந்த நிலத்தில் அவரது வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது. அவர் வணங்குகிற வழிபாடு எவ்வாறு இருந்தது. இவற்றின் நன்மைகள் என்ன? அவர் பெற்றுக்கொண்டவைகள் என்ன? அவர் இன்னொருவரோடு எவ்வாறு உடன்படுகிறார்? எவ்வாறு முரண்படுகிறார்? இந்த காட்சிகளை பதிவு செய்த இலக்கணமாக தொல்காப்பியம் இருக்கிறது.
ஒவ்வொரு தமிழ் சமூகத்தினுடைய ஒவ்வொரு வாழ்க்கை முறையையும் தொல்காப்பியம் பதிவு செய்து வைத்திருக்கிறது. காலங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது. சிறுபொழுது பெரும்பொழுது என்று பிரித்து பதிவு செய்து வைத்திருக்கிறது. ஒரு மனிதனின் உளவியலை பதிவு செய்து வைத்திருக்கிறது. வழிபடுகிற, வணங்குகிற தெய்வங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது. ஒரு வாழ்க்கை முறையில் கிடைக்கிற உணவு பொருட்கள், உற்பத்தி முறைகள் எவ்வாறு இருந்திருக்கின்றன என்பதை பதிவு செய்து வைத்திருக்கிறது. இவை எல்லாமும் பதிவு செய்ததன் நோக்கம் ஒரு சமூகம் எவ்வாறு இருந்திருக்கிறது? எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற இரண்டையும் இணைத்து பார்க்கிற முயற்சியில் தொல்காப்பியம் இலக்கண நூலாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று நான் புரிந்து கொள்கிறேன்.
ஆக, சமூகத்தை வெளிப்படுத்துகிற நூலாக ஒரு நூல் இருக்கலாம். சமூகத்தை சீர்படுத்துகிற நூலாக ஒரு நூல் இருக்கலாம். படைப்பாளரின் படைப்புத்திறனாகவே ஒரு நூல் இருந்தாலும்கூட இவை சமூகத்தின் எதிர்வினையாக இருக்கிறது என்றெல்லாம் கூட இந்த வரையறைக்குள் இருந்து நாம் ஒன்றை கண்டுபிடித்து விட முடியும். இவையெல்லாம் இலக்கியங்களுக்கு இலக்கண நூல்களுக்கு இருக்கிற நோக்கம் சார்ந்தவை. அனைத்தும் சமூகம் சார்ந்தது. அனைத்தும் சமூகத்திலிருந்து பிறந்தது. சமூகத்தின் எதிர்வினையாக வெளிப்படுகிறது. இவை எல்லாமும் இருக்கிறது. இவையெல்லாவற்றிற்கும் நோக்கம் இருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது சமூக எதிர்வினைகள் தான். சமூக விருப்பங்கள் தான். சமூக கற்பனைகள் தான் என்பதை நாம் முதலில் வாசிப்பதற்கு முன்பு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எப்படி ஒரு பதிவை, ஒரு புத்தகத்தை, ஒரு செய்யுளை உங்கள் முன் கொண்டு வருவதற்கு இந்த சமூகத்திற்கு, ஒரு படைப்பாளனுக்கு
ஒரு நோக்கம் இருக்கிறதோ ஒரு அதிர்வின் எதிர்வினை இருக்கிறதோ, ஒரு நிகழ்வின் விடை இருக்கிறதோ, ஒரு தவிப்பின் விடுதலை இருக்கிறதோ இத்தனை முக்கியத்துவமான எல்லாமும் ஒரு படைப்பிற்கு பின்னால் இருப்பது போல என்னைப் பொருத்தவரை வாசிப்பிற்கு பின்னாலும் இவையெல்லாம் இருக்க வேண்டும் என்பதுதான் நாம் இந்த வாசிப்பு வட்டத்தை, வாசிப்பு நிகழ்வைத் தொடர்ந்து செய்வதற்கான குறிக்கோள்.
நீங்கள் வாசிப்பதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு நூலை எடுத்து வாசிக்கத் துவங்குகிற போது அந்த நூலில் இருக்கிற செய்தி நீங்கள் வாசிப்பது போலவே இன்னொருவருக்கு புலப்பட்டுவிடாது. இன்னும் அதிகம் வாசிக்கிற வாசிப்பு பழக்கம் இருக்கிற நண்பர்களோடு நீங்கள் பேசினீர்கள் என்று சொன்னால் ஒரே நூலே இன்னொருமுறை படிக்கும்போது இன்னொரு பொருளில் புரிவதாக அவர்களிடம் கேட்க முடியும். உரையாட முடியும்.
திருக்குறளை ஒருமுறை நீங்கள் படிக்கிறபோது ஒரு விளக்கமாகவும் மற்றொரு முறை படிக்கும் பொழுது மற்றொரு பொருள் விளக்கமாகவும் மூன்றாவது முறை படிக்கும் பொழுது மூன்றாவது முறை மூன்றாவது கோணத்தில் பொருள் விளக்கமாகவும் வெளிப்படுகிறது. வெளிப்பட்டு இருக்கிறது என்பதை திருக்குறள் பேசிய பலர் என்னோடு பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆக, ஒவ்வொரு முறையும் வாசிப்பு என்பது ஒன்றுபோலவே நிகழ்வது இல்லை. உங்கள் நோக்கத்தின் பாற்பட்டே நிகழ்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது வாசிப்பதற்கான மிக அடிப்படையான ஒன்று.
எல்லோரும் வாசிக்க வேண்டும் என்றவுடன் தினசரி பத்திரிகைகளையும் வாரப் பத்திரிகைகளையும் கையில் வைத்துக்கொண்டு சினிமா செய்திகளையும் துணுக்குகளையும் படித்து கடந்து போவது அல்ல வாசிப்பு என்பது. வாசிப்பு என்பது அப்படியான வாசிப்பாக இருக்கக்கூடாது என்பதில் நாம் தீர்க்கமாக உறுதியாக இருக்கிறேன். எப்படி ஒரு நூலுக்கு ஒரு செய்திக்கு பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறதோ சமூக எதிர்வினை இருக்கிறதோ அப்படியே நீங்கள் வாசிப்பதற்கு பின்னாலும் ஒரு நோக்கமும் சமூக எதிர்வினையும் இருக்க வேண்டும் என்பது எனது பரிந்துரை. நீங்கள் வாசிப்பதற்கு ஒரு தவிப்பு இருக்க வேண்டும். சமூகம் கொடுக்கிற நெருக்கடியும் சமூகத்தில் இருக்கிற சிக்கலும் அதை அவிழ்க்க வேண்டும் என்கிற தவிப்பும் இருக்கிற தன்மையோடு உங்களது வாசிப்பு அமையும் என்றால் நீங்கள் வாசிப்பதற்கு கிடைக்கிற ஒவ்வொன்றும் ஒவ்வொரு நூலும் ஒரு ஒற்றைப் புள்ளியில் சந்திப்பதை நீங்கள் உணர முடியும். இந்த ஒற்றை புள்ளியை நோக்கி ஒவ்வொரு மனிதரும் நகர வேண்டும் என்பதற்காகவே இந்த வாசிப்பு ஒருங்கிணைவை வாசிப்பு கூடுகையை ஸ்வஸ்தம் நிகழ்த்துகிறது.
சமூக எதிர்வினையில் படைக்கப்படுகிற படைப்பும் சமூக எதிர்வினையில் தேடுகிற வாசிப்பும் சந்திக்க வேண்டும் என்பதுதான் வாசிக்க வேண்டும் என்பதன் நோக்கம். அது ஒரு வானவில் போல மலர வேண்டும். வானவில் போல மலர வேண்டும் என்பதற்கான உதாரணத்தை நான் சொல்வதற்கான காரணம் வானவில்லை நீங்கள் ஒருமுறை பார்க்க வேண்டும். வானவில் எப்போது வரும் என்று கேட்டவுடன் நமக்குத் தெரியும். மழை பெய்கிற போது வரும். ஆம், மழை பெய்கிற போது வரும். ஆனால் பெருமழை காலத்தில் வானவில் தெரியுமா என்றால் தெரியாது. அப்படி என்றால் வானவில் எப்போது வரும். சிறிய தூறல் வருகிறபோது வானவில் தெரியும். அப்படி என்றால் இரவு நேரங்களில் சிறிய தூறலாக இருக்கிறபோது வானவில் தெரியுமா என்றால் தெரியாது. அப்படி எனில் என்ன பொருள். சிறிய தூறலாக இருக்கவேண்டும். பகல் நேரமாக இருக்க வேண்டும். அப்படி என்றால் சூரியன் இருக்க வேண்டும். சூரியன் இருக்கிற போது, சிறிய தூறல் இருக்கிற போது வானவில் தெரியும் என்றால் தெரியாது. சூரியனும் சிறிய தூறலும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சந்திக்கிற போது வானவில் ஒருமுனையில் மலரும் என்பது வானவில் குறித்தான வரையறை. வானவில் அப்படித்தான் இதுவரை வந்திருக்கிறது. எல்லா வானவில்களுக்குமான உருவாக்கம், பிறப்பு இப்படித்தான் இருக்கிறது. மழை பெய்யும். ஒரு மாலை நேரமாகவோ அல்லது காலை நேரமாகவோ சிறிய ஈரம் தாங்கிய மழை. காலை நேரத்து அல்லது மாலை நேரத்தில் சூரியன். இவை இரண்டும் குறிப்பிட்ட கோணத்தில் சந்திப்பது. இந்த மூன்றும் நிகழ்கிற போது மட்டும்தான் வானவில் மலருகிறது. வானவில் தெரிகிறது. இந்தக் கோணம் மாறிவிட்டால் இந்த கோணம் வேறு ஒன்றானால் சூரியனின் திசையும் மழையின் வேகமும் அதிகரித்தால் வானவில் மறைந்துவிடும். இந்த சேர்மானம் உங்கள் வாசிப்பில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
சமூக எதிர்வினையில் சமூகம் கொடுக்கிற சமூகம் முன்வைக்கிற விடுதலைக்கான சாவிகளை பெற்றுக்கொண்டு சரியான பூட்டுகளை திறக்க வேண்டும் என்கிற தவிப்பு வாசிப்பவருக்கு வேண்டும். சாவி போடும் வரை ஒருவர் செய்கிறார். அதை எடுத்து பொருத்துகிற வேலையை வாசிப்பவர் செய்ய வேண்டும் என்றால் அவர் எந்த நோக்கத்தில் சாவியை எறிந்தாரோ அதே நோக்கத்தோடு அவற்றைப் பெற்றுக் கொண்டு திறப்பதற்கான வேலையை செய்யவேண்டும் என்கிற தன்மையில் வாசிப்பு நிகழ வேண்டும். நவீன இலக்கியத்தில் எதை வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளலாம். வாசிப்பது வாசிக்கட்டும். அது ஒரு வேலை செய்யும் என்றெல்லாம் கூட நண்பர்கள் என்னோடு பேசியதை நான் நினைவு கூறுகிறேன். தொடர்ந்து நான் பங்கேற்கிற கூட்டங்களில் கதையாடல்களில் உரையாடல்களில் வாசிப்பதற்கு ஒரு நோக்கம் வேண்டும். கதை சொல்லும் நிகழ்ச்சிக்கு ஒரு நோக்கம் வேண்டுமென்று நான் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருப்பது உண்டு. அப்போது அந்த நிகழ்வில் பங்கேற்கிற நண்பர்கள் இல்லை,இல்லை கதைகள் இலக்கியங்கள் நாம் திறந்த புத்தகமாக வைத்து விடுவோம். படிப்பவர்கள் படிக்கட்டும். பின்னாளில் அது ஒரு வேலையை செய்து விடும் என்று அந்த நிகழ்வில் பங்கேற்ற நண்பர்கள் சொல்வதுண்டு. எனக்கு எப்போதும் அப்படி திறந்து வைப்பதும் அவர்கள் எப்போதும் போல் படித்துக் கொள்ளலாம் என்பதில் ஒரு தத்துவார்த்த முரண்பாடு உண்டு. எனக்கு அப்படி பொருந்திப் போக முடியாது.
வாசிப்பதற்கு எழுதுவதற்கு படைப்பை படைப்பதற்கு ஒரு எழுத்தாளன் ஒரு வழியை தேர்வு செய்கிறான். அவன் ஓவியத்தை தேர்வு செய்யலாம். அவன் செய்யுளை தேர்வு செய்யலாம். இன்னபிற ஏதோ ஒரு வடிவத்தை சமூக எதிர்வினையில் இருந்து வெளிப்படுத்தலாம். சமூக எதிர்வினையாகவே வெளிப்படுத்தலாம். அப்படி வெளிப்படுத்தப்பட்ட ஒன்றை சமூகத்தின் பொதுவில் வைக்கிற போது யார் வேண்டுமென்றாலும் வந்து பார்த்து சென்றுவிடலாம் என்பதை விடவும் வருபவர்களுக்கு ஒரு தவிப்பும் சமூக எதிர்வினையும் தேடலும் இருக்கவேண்டும் என்று நான் நினைப்பது நியாயமாகவே நான் பார்க்கிறேன். ஏனென்றால் அவஸ்தையான ஒன்றிலிருந்து ஒன்றை வெளித் தள்ளுகிறான். அவஸ்தையான ஒன்றாகவே தன் படைப்பை பதிவு செய்கிறான். அந்த படைப்பை பெற்றுக் கொள்பவர்களுக்கு அவரின் அவஸ்தையின் மஹிமையும் அந்த அவஸ்தையின் நெருக்கடியும் புரிந்தவராக இருக்கும் பட்சத்தில் அந்த படைப்பாளனின் தவிப்பு நிறைவை நோக்கி நகரும் என்பதில் எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு.
அந்த வகையில் வாசிப்பிற்கு பின்னால் எழுத்திற்கு பின்னால் எப்படி ஒரு நோக்கம் இருக்கிறதோ அதே அளவு நோக்கமும் தவிப்பும் தேடலும் வாசிப்பிற்கு பின்னாலும் இருக்க வேண்டும் என்பதாலேயே நான் வாசிப்பை வெறுமனே கடந்து போகிற வெறுமனே புத்தகம் வாசிக்கிற செய்தித்தாள் வாசிக்கிற வழக்கமான பாவனையில் இருக்கிற வாசிப்பாக நான் சொல்லவில்லை. வாசிப்பிற்கு பின்னால் நீங்கள் எந்த புத்தகத்தை எந்த செய்தித்தாளை எந்த வாரப் பத்திரிக்கையை, செய்யுளை, இலக்கணத்தை வாசிப்பீர்கள் என்று சொன்னாலும் கூட உங்கள் வாசிப்பிற்கு பின்னால் இந்த சமூகத்தினுடைய எதிர்வினையான ஒன்று. இந்த சமூகத்தின் சிக்கலின் மீது நின்று வாசிக்கிற, இந்த சமூகத்தின் மீது ஏறி நின்று வாசிப்பை நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். அதுதான் அந்த எழுத்தாளனின் அந்த பதிவின் அந்த தவிப்பின் அவஸ்தைக்கு நீங்கள் போடுகிற மருந்தாக இருக்கும். அந்தப் பதிவின் கற்பனைக்கு நீங்கள் செலுத்துகிற மரியாதையாக இருக்கும்.
அழுத்தம் அதிகமாக இருக்கிற போது நீங்கள் அதே அளவு அழுத்தத்தோடு பெற்றுக்கொள்ளும் வாகோடு பெற்றுக்கொள்வீர்கள் என்று சொன்னால் அந்த வாசிப்பும் அந்த படைப்பும் ஒற்றைப் புள்ளியில் சந்தித்து உங்களையும் அந்த படைப்பாளியையும் இன்னும் மேலாக இன்னும் மேலாக உயர்த்தும் என்பதில் எப்போதும் எனக்கு சந்தேகமில்லை. வாசிப்பை நோக்கத்தோடு செய்யுங்கள். ஏனென்றால் எழுத்துக்கள் எப்போதும் நோக்கத்தோடு இருந்திருக்கின்றன.
நன்றி.
No comments:
Post a Comment