Saturday, November 26, 2022

திருக்குறள் வாழ்வியலுக்கான உரையாடல் - அதிகாரம் 1 / குறள் 1 (அகர முதல்)

 

            அதிகாரம் 1 / குறள் 1 (அகர முதல்)

www.swasthammadurai.com


அன்பிற்குரியவர்களே!

கடவுள் என்பது என்ன? கடவுள் என்பது யார்? என்று ஒரு மனிதனின் தேடல் இன்றைய சூழலில் முதன்மையான பேசு பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது.   

விஞ்ஞானம் தனது வேகத்தை பல நூறு மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஒரு பழைய வாழ்க்கை முறையை, மனிதனின் துவக்க கால வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பார்க்கிறபோது மனிதன் கற்பனை செய்து பார்க்கிற எல்லையை கடந்து பலநூறு மாற்றங்களை நவீன விஞ்ஞானம் அடைந்திருக்கிறது. எட்டி இருக்கிறது.

மனிதன் கற்பனையில் வைத்திருக்கிற எல்லாவற்றையும் வெளிப்புறத்தில் விஞ்ஞானம் உண்டாக்குவதும் சாத்தியமாக்குவதுமான தொடர் நடவடிக்கைகளை இடைவிடாது செய்து கொண்டிருப்பதின் வழியாக விஞ்ஞானத்தை சார்ந்து கற்பனையை எட்டிய மனிதர்களுக்கு படைப்பு என்பது என்ன என்று ஒரு கேள்வியை சுமக்கிறவர்களாக மாறி இருக்கிறார்கள். கற்பனையில் பறக்க முடியும் என்று இதிகாசங்களையும் புராணங்களையும் பார்த்த மனிதர்களுக்கு விமானங்கள் சாத்தியமானது விஞ்ஞானத்தின் வழியாக.

நேரத்தை பகுத்துப் பார்ப்பதற்கு ஆசைப்பட்ட மனிதனை கடிகாரங்கள் வழியாக விஞ்ஞானம் பூர்த்தி செய்தது. ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறக்கும் பாய் இருக்கிறது என்று நம்பிய மனிதனுக்கு வேகமான வாகனங்களை கையில்  புகுத்தியது விஞ்ஞானத்தின் பெரும் பங்கு. காட்சிகளில், ஒலிகளில், ஒளிகளின் வழியாக மனிதன் தேடிய எல்லாவற்றையும் சாத்தியப்படுத்துகிற முயற்சியில் தொடர்ந்து விஞ்ஞானம் இயங்கிக் கொண்டிருக்கிற வேளையில் மனிதன் சிந்தனையில் உதிக்கிற எல்லா பொருட்களையும் உருவாக்கிவிட முடியும் என்று வாக்குறுதி தருகிற அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிற வேளையில் மனிதனுக்கு கடவுள் பற்றிய கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

மனிதன் கடவுளை எவ்வாறு பார்க்கிறான் என்பது மனிதன் கடவுளைத் தேடுகிற நோக்கத்தின் பார்பட்டது மட்டுமல்ல. மனிதன் விரும்புகிற ஒன்றை படைக்கிற வல்லமை உடைய மாதிரியை உருவாக்குகிற அறிவுடைய சமூகத்தை மனிதன் கடக்கிற போது, சமூகத்திற்குள் நிற்கிற போது படைப்பு என்பது அறிவின் வழியாக, கற்பனையை சாத்தியப்படுத்துகிற முயற்சியின் வழியாக பார்க்கவும் படைப்பை அனுபவமாக்கவும் தான் படைப்பாக பொருத்திக் கொள்ளவுமான சிந்தனைகள் கிளை விடுகின்றன.

படைப்பு கடவுளாக இருப்பதும் கடவுளே படைப்பாக, படைப்பவராக இருப்பதுமான கதைகளில் வாழ்ந்து பழகிய சமூகத்திற்கு கடவுள் பற்றி வருகிற எல்லா கேள்விகளும் மனிதன் எட்டி இருக்கிற கற்பனையை உடைத்து, எல்லை கடந்து அடைந்திருக்கிற படைப்பு சாத்தியத்தின் மீது எழுப்பப்படுகிற அடுத்த பக்கம் என்ன, அடுத்த நிலை என்ன என்கிற தன்மையிலான வினா.

எப்போதும் மனிதனுக்கு கடவுள் பற்றி கேள்வி கடவுளை அறிவது என்கிற தன்மையில் இருந்ததில்லை. கடவுளை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற தன்மையில் இருந்ததில்லை. மனிதனுக்கு கடவுளைப் பற்றிய கேள்வி தன்னை மீறி இருக்கிற பேராற்றலை, தனக்கு வெளியில் இருக்கிற அனுபவமின்மையை தான் கடப்பதற்கு காத்திருக்கிற அடுத்த வினாடியை எவ்வாறு சந்திப்பது என்கிற தயக்கத்திலிருந்து விடுதலை செய்வதற்கும் தயக்கத்தை உடைத்துக் கொள்வதற்குமான உருவகமாக கடவுள் தேவைப்படுகிறார். அப்படித்தான் கடவுள் தேவைப்பட்டும் இருக்கிறார்.

விளக்குகள் வந்த பிறகு கடவுளின் பரிணாமம் மாறி இருக்கிறது. இருள் விலகிய பின்பு கடவுளின் வேகம் மாறி இருக்கிறது. இசை கச்சேரிகள் வழியாக கடவுளை கொண்டாடிய சமூகம் காடுகளில் தீப்பந்தம் வைத்து கடவுளை கொண்டாடிய சமூகமாக இருந்திருக்கிறது கடவுளின் பார்வை என்பது, கடவுளின் வேகம் என்பது மனிதன் ஒரு காலத்தில் எவ்வாறு இருந்திருக்கிறானோ நாளைய பொழுதை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்று கற்பனை செய்து இருக்கிறானோ, அடுத்த வினாடியை எவ்வாறு கடப்பது என்று தயங்கி நிற்கிறானோ இவற்றுக்குள்ளேயே கடவுளை பற்றிய வினா ஒளிந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. மனிதனுக்கு கடவுளை அடைவது பற்றி, கடவுளை கொண்டாடுவது பற்றி, கடவுளை அனுபவமாக பார்ப்பது பற்றிய கேள்விகளை விடவும் மிகவும் முக்கியமான பகுதி கேள்வி என்பது கற்பனை செய்கிற எல்லாவற்றையும் கற்பனை செய்து வைத்திருக்கிற ஒவ்வொன்றையும் தன் கற்பனையை விடவும் நேர்த்தியாக, அழகாக, உருவாக்கிக் கொள்வதற்கான அறிவை தான் பெற்றிருக்கிறோம் என்கிற மனோபாவத்திலிருந்து படைப்பின் மீதான கேள்வியாக கடவுள் பற்றிய கேள்வி உருவாகிறது என்று நான் பார்க்கிறேன். அப்படித்தான் படைப்பின் மீதான கேள்விகள் உருவாகும்.

 மனித சமூகத்தில் படைப்பும் கடவுளும் மிக நெருக்கமான உவமைகளாக வழக்கத்தில் இருப்பதால் படைப்பின் மீதான நகர்வு, படைத்தலின் மீதான நகர்வு, கற்பனையில் இருந்து உருவாக்குவதன் மீதான நகர்வு, பழைய அனுபவத்திலிருந்து ஒன்றை செய்து பார்ப்பதற்கான நிகழ்வு, நகர்வு கடவுள் பற்றிய கேள்வியாக மாறிவிடுகிறது. மனிதன் எப்போதும் கடவுளை தேடுகிறவனாக இருந்ததில்லை.

 

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...