Friday, February 10, 2023

ஜான் ஹோல்ட் – எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் – முன்னுரை பகுதி – 2 / PART A

 

 எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

குழந்தை குறித்தான உரையாடல் பகுதியில் ஜான் ஹோல்டின் சில கருத்துக்களை முதன்மையாக வைத்து இந்த உரையாடலை செய்து பார்க்கிறோம். குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர் என்ற புத்தகத்தினுடைய முகப்பு வழியாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் எவ்வாறு பார்க்கின்றனர். பள்ளிக்கூடங்கள் எவ்வாறு பார்க்கிறது. குழந்தைகள் தங்களை எவ்வாறு பார்த்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் பல்வேறு தளங்களில் குழந்தை குறித்த உரையாடலை குழந்தைகளினுடைய மனம் குறித்தான பகுதிகளை உரையாடிப் பார்க்க வேண்டும் என்ற தன்மையில் இந்த உரையாடலை தொடர்ந்து நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

குழந்தைகள் கற்றல் குறித்து மூன்று வயதில் இருந்து ஐந்து வயதிற்குள் குழந்தைகள் கற்பதற்கான வயதாக ஒரு ஆய்வு சொல்கிறது என்று ஒரு புத்தகத்தை சுட்டிக்காட்டி ஜான் ஹோல்ட் அவர்கள் குழந்தை குறித்தான உரையாடலின் முகப்பை துவங்கி இருந்தார். 

குழந்தைகள் கற்பது என்பது குறித்து பேசுகிறபோது குழந்தைகள் ஒரு புறச் சூழலின் வழியாக அழுத்தத்தின் பாற்பட்டு கற்பதும் அதே நேரத்தில் தமக்குத் தேவையான செய்திகளை தாமாக முன்வந்து கற்பதும் என்ற இரு வகைகளில் கற்றல் நிகழ்வதாக நான் பார்க்கிறேன். இரு வேறு வகைகளில் நிகழ்கிற கற்றலுக்கும் குழந்தைகளினுடைய அகவுலகில் நடக்கிற மாற்றத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகவும் பார்க்கிறேன். 

ஒரு மூன்று வயதில் இருந்து ஐந்து வயதிற்குள் இருக்கிற குழந்தையினுடைய கற்றல் என்பது கற்றலுக்கான ஆயத்தம் என்பது சமூகத்தோடு தம்மை இணைத்துக் கொள்கிற கற்றலுக்குரிய தன்மையோடு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இந்த தன்மையில் இந்த ஆய்வின் அடிப்படையில் ஒரு குழந்தைக்கு கற்றலுக்கான வழிமுறைகளையும் செய்முறைகளையும் செய்கிற போது அந்த குழந்தை வெளியில் தரப்படுகிற வாய்ப்பிலிருந்து கற்கிறது.

வெளியில் தரப்படுகிற வாய்ப்பிலிருந்து கற்கிறது என்பதற்கான எளிய உதாரணங்களோடு நாம் அதை விளக்க முடியும்.

ஒரு குழந்தைக்கு ஒரு எழுத்தை அறிமுகம் செய்கிறோம் என்றால் அல்லது ஏதோ ஒரு வடிவத்தை அறிமுகம் செய்கிறோம் என்றால் அந்த குழந்தைக்கு பள்ளிக்கூடங்களில் தற்போது சில படங்களும் குச்சிகளுமாக இருக்கிற விளையாட்டு வழி கற்றல் முறை கையில் இருக்கின்றன.  அந்த எழுத்துக்களை அல்லது அந்த சொற்களை புதிதாக கற்றுக் கொள்கிற ஒரு வடிவத்தை பயன்படுத்தி குழந்தைகள் இரண்டையும் இணைத்து நினைவில் வைத்துக் கொள்கிற ஒரு நுட்பத்தை கையாளுகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அந்த வகையிலேயே சில செயல்பாடுகள் வழியாக கற்றுக்கொள்ள முடியும் என்று கற்றல் குறித்து குழந்தைகள் குறித்து ஆய்வாளர்கள், அக்கறையாளர்கள் சில முன்னெடுப்புகளை செய்கின்றனர். இது ஒரு வகையான கற்றலாக இருக்கிறது.  இந்தக் கற்றல் முழுக்க குழந்தைகளுடைய அக உலகில் என்னவாக இருக்க செய்கிறது. குழந்தைகளுடைய அக உலகில் அவர்களை எவ்வாறு இயங்கச் செய்கிறது என்று ஒருபுறம் பார்க்க வேண்டி இருக்கிறது.

அதே நேரத்தில் குழந்தைகள் தாமாக முன்வந்து கற்கிற கற்றல் முறை என்பது ஒன்று நிகழ்கிறது. இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்வதன் வழியாகவே ஒரு குழந்தை எவ்வாறு கற்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  இந்த இரண்டு வகையான கற்றலின் விளைவாக ஒரு குழந்தைக்கு இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு செய்தி பற்றி ஒரு புதிய புரிதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு வகையான கற்றல் வழியாக குழந்தைக்குள் இரண்டு நேர் எதிரான அகமாற்றம் விளைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நான் பார்க்கிறேன்.

ஒரு படங்களை எழுத்துக்களை கையில் கொடுத்து கற்றுக் கொள்வதன் வழியாக அந்த குழந்தை கற்றுக் கொள்கிறது. அந்த குழந்தை தானாக கற்றுக் கொள்வதன் வழியாகவும் அந்த குழந்தை கற்றுக் கொள்கிறது. இந்த இரண்டு தளங்களும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது. பள்ளிக்கூடங்களுக்குள் இருக்கிற கருவிகள் கொண்டு செயல்முறைகள் கொண்டு கற்றலை பார்ப்பது என்பது ஒருபுறம். இன்றும் குழந்தைகளுக்கு இணக்கமான பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்று பள்ளிக்கூடத் தாளாளர் அங்கு இருக்கிற ஆசிரியர்கள், அங்கு இருக்கிற நிர்வாகிகள் உள்ளிட்ட சிலரின் விருப்பத்தின் பாற்பட்டு பள்ளிக்கூடத்திற்குள் அரசு முன்வைக்கிற கல்வி முறையை சற்று இலகுவாக சொல்லித் தருகிற, அழுத்தம் இல்லாமல் சொல்லித் தருகிற கற்றல் முறை என்பதை நாம் பார்க்கிறோம்.  இந்த வகையான கற்றல் முறை இன்று பரவலாக முன்னேறிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். இந்த வகையில் கற்கிற குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு செய்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு ஏற்படுகிறது. அவர்கள் வெற்றி பெறுவதை நோக்கி நகர்கிறார்கள். பள்ளி பாடத்திட்டத்தை அவர்களால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. இத்தனை எதார்த்தங்களும் இந்த வகை கற்றலில் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இந்த வகை கற்றல் உள்ளுக்குள் என்ன மாற்றம் செய்கிறது. குழந்தையை என்னவாக பார்க்கிறது என்பது நாம் பேசிப் பார்க்க வேண்டிய பகுதி. இத்தகைய கற்றல் முறையை வெகுவாக பரிந்துரை செய்து நிறைய பரிசோதனைகள் செய்து பார்த்து நல்ல விகிதத்தில் இவை வெற்றி பெறக் கூடியவை என்று நிரூபித்த சமன்பாடுகளில் ஒன்று மாண்டிசோரி அம்மையாரின் சமன்பாடு.  இந்த சமன்பாடில் இருந்து வேறு கல்வியாளரின் சமன்பாடு சற்று வேறுபட்டது.

மாண்டிசோரி அம்மையாரின் சமன்பாடு உலகம் முழுவதும் மரியாதைக்குரிய சமன்பாடாக பார்க்கப்படுகிறது. இதன் நுட்பம் இப்படித்தான் இருக்கிறது. ஒரு குழந்தை அரசு தருகிற அல்லது இந்த சமூகம் தீர்மானித்து வைத்திருக்கிற ஒரு கல்விச்சாலைக்குள் பாடத்திட்டங்களுக்குள் தான் எவ்வாறு இருக்க வேண்டும். தான் எவ்வாறு வளர வேண்டும் என்பதை அங்கு இருக்கிற எளிமையான விளையாட்டுகள் வழியாக, எளிமையான செயல்பாடு வழியாக தன்னை இணைத்துக் கொள்வதன் மூலமாக வளர்ச்சி அடைகிற கற்றல் முறை.  அந்த குழந்தை விளையாட்டு வழியாக எல்லா வகையான உயிரெழுத்துக்களையும் கற்றுக் கொள்கிறது.  பிற மொழிகளை கற்றுக்கொள்கிறது. அறிவியல் சாதனகளைக் கொண்டு, வேதியியல் கூடங்களில் இருக்கிற வேதியல் நுட்பங்களை கற்றுக்கொள்கிறது. இயற்பியல் நுட்பங்களை கற்றுக்கொள்கிறது. உயிரியலை கற்றுக் கொள்கிறது. நேரடியாக தாவரங்களை பார்ப்பது, தாவர இலைகளை ஆய்வு செய்வது, தாவரங்களோடு தங்கி இருப்பது கற்றுக் கொள்ள முடிகிறது அந்த குழந்தையால்.

மரங்களில், காடுகளில், பார்க்கிற பறவைகள், இருக்கிற பூச்சிகள் இவற்றை எல்லாம் கூட அந்த குழந்தை செயல் வழியாக கற்றுக் கொள்கிறது. இன்னும் பெரு நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கே இருக்கிற பொறியாளர்களோடு நேரடியாக சந்திப்பதற்கான, உரையாடுவதற்கான வாய்ப்பை அந்தக் குழந்தைகளுக்கு அந்த பள்ளி நிர்வாகம் வழங்குகிறது. அந்த பொறியாளர்களோ, அங்க இருக்குற தொழில்நுட்ப கலைஞர்களோ அந்தப் பள்ளி வளாகங்களில் தங்களுக்கான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான மேடைகள் அமைத்து தரப்படுகின்றன. இந்த வழியாகவும் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றன. 

இன்னும் தமிழகத்தில் இருக்கக்கூடிய, இந்தியாவில் இருக்கக்கூடிய சில பள்ளிகள் கல்வி முறையை செம்மைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற பள்ளிகள், பள்ளிக்கூடங்களுக்குள் தமிழகத்தில் மதிக்கப்படுகிற இலக்கிய ஆளுமைகளை ஒரு குழுவாக இணைத்துக் கொண்டு பள்ளி இலக்கிய பேரவைகளை நடத்துகின்றன. அதன் வழியாக உலக இலக்கியங்களை அந்த குழந்தைகள் படிக்கிறார்கள், பேசுகிறார்கள். அதில் கட்டுரைகளும் கவிதைகளும் கதைகளும்  வரைகிறார்கள். இத்தகைய வழிகளில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு இலக்கிய சார்பு இலக்கிய மென்மை, இலக்கிய மேன்மை என்ற பல தளங்களில் குழந்தைகளுடைய அறிவு என்பது விரிவாக பயணம் செய்ய முடிகிறது. இத்தகைய கல்வி முறைகள் இத்தகைய கல்வி சார்ந்த செயல்பாடுகள் ஒரு புறம் குழந்தைகளை கற்க செய்து கொண்டே இருக்கின்றன. இந்த வகையான கல்வி செயல்பாடுகளும் இந்த வகையான கல்வி முறைகளும் குழந்தைகளை மற்ற அழுத்தம் நிறைந்த பள்ளிக்கூடங்களை ஒப்பிடும்போது அழுத்தம் குறைவான செய்முறைகளாக இருக்கின்றன என்று நான் பார்க்கிறேன்.

ஜான் ஹோல்ட் குறிப்பிடுகிற மூன்று முதல் ஐந்து வயது வரை இருக்கிற ஒரு குழந்தைக்கான கற்றல் துவக்கம் என்பது இந்த வகையான வழியில் படிப்பதற்கு ஏதுவானதா அல்லது வெற்றியை நோக்கி நகர்கிற பயணத்தில்  எந்த வழியிலும் படிப்பதற்கு ஏதுவானதா என்று ஒருபுறம் நாம் பேசி பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த இலகுவான கல்வி முறையில் கற்கிற குழந்தைகளுடைய அறிவு என்ன செய்கிறது, என்னவாக வெளிப்படுகிறது.

ஒரு பொறியாளர் தேர்வில், ஒரு மருத்துவர் தேர்வில் இலகு முறையில் பயணிக்கிற ஒரு பள்ளி மாணவர் அழுத்தப்படுகிற, நெருக்கடிக்குள் உள்ளாக்கப்படுகிற பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர்களோடு ஒப்பிடுகையில் இரண்டு மூன்று மதிப்பெண்கள் நான்கு ஐந்து சதமான மொத்த மதிப்பெண் கூட்டுத் தொகை என்கிற விகிதத்தில் முன்னே இருக்கிறான் அல்லது எளிமையாக படிப்பதன் வழியாக கூடுதல் பாடங்களை படித்துக் கொள்கிற ஆற்றலோடு இருக்கிறான். இந்த வேறுபாடு நாம் காண முடிகிறது. இந்த வேறுபாடு தான் கல்வியின் நோக்கமா என்று குறித்தும் நாம் பேசி பார்க்க வேண்டி இருக்கிறது. 

ஜான் ஹோல்ட் இத்தகைய கல்வி குறித்து பேசுவதாக அவர் புத்தகத்தில் நாம் பார்க்க முடியவில்லை. ஒரு கற்றல் என்பது என்னவாக நிகழ்கிறது என்று பார்க்கும்போது குழந்தைகளுடைய தேர்ச்சி விகிதத்தை நோக்கி நகர்வதாக இருக்கும் என்றால் அந்தக் கற்றலை ஜான் ஹோல்ட் எவ்வாறு பார்க்கிறார் என்பது குறித்து நாம் விரிவாக உரையாடி பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.

...தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...