Thursday, May 25, 2023

கடவுள் எது? - திருக்குறள் பொருள் உரையாடல் - சிவ.கதிரவன்/ பகுதி 2

                                                 கடவுள் எது?

    ஒரு சமையல் கட்டில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி ஒரு பெரும் போர்ச்சூழலில் தப்பி பிழைத்த குழந்தை போல திருக்குறள் தப்பித்து இருக்கிறது என்பதை வரலாற்றின் வழியாக நாம் பார்க்க முடிகிறது. அந்த சமையல்காரர் பற்றிய குறிப்பும் அவருக்கு மேலாக இருந்த அதிகாரிகள் பற்றிய குறிப்பும் இன்றும் நாம் ஆவணங்களின் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த திருக்குறளை பெற்றுக்கொண்டு படித்து பெருமை மிகுந்த நூலாகக் கருதி சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்த அந்த அதிகாரி எல்லீஸ் என்ற அதிகாரி. எல்லீஸ் என்கிற அதிகாரியின் பெயரில் இன்றும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகரில் ஒரு பகுதி இருக்கிறது. அவர் சென்னையில் பணியாற்றினார். இவர் இல்லாமல் பல அறிஞர்கள் இந்தியாவிற்கு மதம் பரப்புவதற்காக, இந்தியாவை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் பண்பாட்டை தெரிந்து கொள்வதற்காக இந்தியாவிற்குள் மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்து சென்ற பல அறிஞர்கள் திருக்குறளை தமது மொழிக்கு மொழிமாற்றம் செய்த பெரும் பங்கை ஆற்றியுள்ளனர். இவ்வளவு பெருமைமிக்க பகுதிகள் திருக்குறளில் இருக்கிறது என்கிற அறிவும் தேடலும் உலகம் முழுவதும்  தொடங்கிய பின்பும் கூட தமிழ்ச் சூழலில் திருக்குறள் பற்றி அறிந்து கொள்வதற்கு நம் தமிழ் தலைமுறைக்கு இருக்கிற ஒற்றை வாய்ப்பு 10, 15 ஆண்டுகளில் அவர்களால் 50 குறள்களை வாசித்து மதிப்பெண்ணிற்காக எழுதிப் பழக முடியும். இவ்வாறாக திருக்குறள் நம் தமிழ் சமூகத்தில்  சுருங்கி இருக்கிறது. இவ்வாறாக திருக்குறள் நம் தமிழ் சமூகத்திற்குள் குறுகலாகி இருக்கிறது. இந்த குறுகளாகி இருக்கிற தன்மை சமூகத்தினுடைய  அறியாமையிலிருந்து வருவதாகவே இருக்கிறதே ஒழிய  திருக்குறளினுடைய பேருண்மை பெரும் ஒளி அப்படியானது அல்ல.

உலகம் முழுவதும் அனைவராலும் போற்றப்படுகிற ஒரு தத்துவம் நிறைந்த நூலாக திருக்குறள் இருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும் பயன்படும்  நூலாக திருக்குறளை பதிப்பிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட எல்லீஸ் என்கிற அதிகாரி பதிவு செய்கிறார். இதில் உலகம் முழுவதும் கொண்டு செல்ல முடியும் என்று அவர் நம்பியதற்கு காரணம் எந்த குறிப்பிட்ட கடவுளையும் திருக்குறளில் பதிவு செய்து பார்க்க முடியவில்லை. எல்லா கடவுளுக்கும் பொருந்தும். எந்த குறிப்பிட்ட மொழியையும் திருக்குறளுக்குள் பார்க்க முடியவில்லை. எல்லா மொழிக்கும் பொருந்தும். எந்த பண்பாட்டையும் திருக்குறளுக்குள் பிரித்துப் பார்க்க முடியாது. எந்த பண்பாடை பின்பற்றுபவருக்கும் பொருந்தும்.

வாழ்க்கை முறை, இலக்கண இலக்கிய வரைவு, மொழி, இறை நம்பிக்கை இன்ன பிற மாண்பான எல்லா பகுதிகளையும் எல்லா வாழ்வியல் கூறுகளையும் இந்த உலக சமூகத்திற்கு, உலக மனித வாழ்க்கை முறைக்கு எந்த இடத்திலும் வேறுபாடு இல்லாத ஒரு முழுமை பொருந்திய நூலாக திருக்குறள் இருக்கிறது என்பதை வாழ்வியல் அறிந்த அறிஞர்களும் உலகம் முழுவதும் கொண்டு சென்ற பேரறிவாளர்களும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் என்கிற முக உரையோடு திருக்குறள் குறித்து தொடர் உரையாடலை நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

திருக்குறள் நிறைய முரண்பாடுகளை உள்ளடக்கிய நூல். நம்மைப் பொறுத்தவரை அல்லது என்னைப் பொறுத்தவரை முரண்பாடுகள் தத்துவத்திற்கு அழகாக இருப்பவை. தத்துவத்தின் பேரழகே அவற்றிற்குள் இருக்கிற முரண்பாடு தான் என்று நான் சொல்வேன். திருக்குறளுக்குள் அப்படியான பல முரண்பாடுகளை நாம் பார்க்க முடியும்.

கடவுள் வாழ்த்து என்று தொடங்குகிற திருக்குறள், திருவள்ளுவர் கடவுளை முதன்மையாக வைத்து தொடங்குகிறார் என்று நாம் சொல்கிற போது திருக்குறள் முழுவதும் படிக்கிறோம் என்று படிக்கிற போது முதன்மையானது கடவுள் என்று சொன்ன திருவள்ளுவர், வேறொரு இடத்தில்

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

 கண்ணென்ப வாழும் உயிருக்கு”

என்று கண்ணை முதன்மைப்படுத்துகிறார். கடவுள் வாழ்த்தில் கடவுளை சொல்வதற்கு எழுத்தை முதன்மைப்படுத்துகிறார். கடவுள் வாழ்த்து பகுதியில் முதல் குறளில் அகர முதல எழுத்தெல்லாம் என்று குறள் துவங்குகிறது. ஒரு பேரறிஞர் இதைப் பற்றிய ஒரு பெரும் குறிப்பை  தன் உரையில் பதிவு செய்கிறார் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்றை, யாரும் இதுவரை பார்க்காத ஒன்றை விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதற்கு உவமை சொல்வது வழக்கம். உங்களுக்கு இதுவரை அறிமுகம் இல்லாத ஒன்றை விளக்கிச் சொல்வதற்கு உதாரணங்கள் சொல்லுவது வழக்கம்.  இது ஒரு மரபு.

 நீங்கள் விமானத்தை பார்த்திராத போது விமானம் குறித்து உங்களுக்கு விளக்குவதற்கு உங்கள் ஊரில் உங்கள் கண் முன் பறக்கிற பறவையை உதாரணம் சொல்ல முடியும். தோற்றத்தில் விமானமும் பறவையும் ஒன்றைப் போல் இருப்பவை. உங்கள் வீட்டில் இருக்கிற பாத்திரத்தை உதாரணமாக சொல்லி, சான்றாக சொல்லி வேறொரு நாட்டில் பயன்படுத்துகிற ஒரு சேமிப்புக் கொள்கலனை உங்களுக்கு விளக்கிச் சொல்ல முடியும். நீங்கள் பயன்படுத்துகிற பாத்திரமும் வேறொரு நாட்டில் இருக்கிற கொள்கலனும் பயன்பாட்டளவில் ஒன்றைப் போல் இருப்பவை. உதாரணங்கள் வழியாக விளக்கிச் சொல்ல முடியும். நீங்கள் பார்க்காத ஒன்றை விளக்கிச் சொல்வதற்கு உதாரணம் சொல்வது என்பது மரபு என்கிற அடிப்படையில் எப்படி உதாரணம் சொல்வது. விமானத்திற்கு இணையாக பறக்கிற, விமானத்தைப் போன்று தோற்றம் அளிக்கிற, விமானத்தைப் போன்று உயரத்தில் இருக்கிற என்று பல்வேறு பண்புக் கூறுகளை உள்ளடக்கிய  உதாரணங்களை உங்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும். என்றால் மட்டுமே உங்களுக்கு ஒரு விமானத்தை பறவையின் வழியாக புரிந்து கொள்ள முடியும். அப்படிப் பார்க்கிறபோது கொள்கலனுக்கும் இதேதான். நீங்கள் பயன்படுத்துகிற சேமிப்புக்  கொள்கலன் பரும நிலையில் எவ்வாறு இருக்கிறது? திரவம் நிரம்பியுடன் எவ்வாறு இருக்கிறது? பயன்பாட்டிற்கு எவ்வாறு இருக்கிறது? பாதுகாப்பு அளவில் எவ்வாறு இருக்கிறது? என்று பொருத்திப் பார்த்து உதாரணத்தை உங்களுக்கு விளங்க வைக்க முடியும். இது உதாரணங்களுக்குள் விளங்க வைக்கிற முறை. இந்த உதாரணத்தின் வழியாக உவமைகளின் வழியாக விளங்க வைப்பதற்கு வள்ளுவரும்  முயற்சிக்கிறார். 

வள்ளுவருடைய முயற்சியில் இப்போது கடவுளை மனிதனுக்கு விளங்க வைக்க வேண்டும். கடவுள் யார் என்று, கடவுள் எது என்று, கடவுள் எப்படி என்று விளங்க வைக்க வேண்டும்.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

 எழுத்துக்களுக்கெல்லாம்  அகரம் முதன்மையாக இருப்பது போல, உலகில் உள்ள உயிருக்கு எல்லாம் கடவுள் முதன்மையாக இருக்கிறார் என்று உவமை சொல்கிறார். நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் அழுத்திச் சொல்கிறேன், வள்ளுவர் கடவுளுக்கு இணையாக மொழியை சொல்கிறார். உங்கள் மொழி கடவுளை போன்றது என்பது அதன் பொருள்.

பைபிளில் ஒரு வாசகம் எனக்கு நினைவிருக்கிறது. ‘ஆதியிலே வார்த்தை இருந்தது’. அந்த வாசகம் இப்படித்தான் துவங்கும். ‘ஆதியிலேயே வார்த்தை இருந்தது. அது தேவன் இடத்திலே இருந்தது. அது தேவனாகவே இருந்தது.’ ஆதியில் இருந்த வார்த்தை தேவனும் ஒன்று என்கிற ஒரு மேற்கத்திய மதக்குறிப்பை வார்த்தைக்கும் கடவுளுக்கும் இருக்கிற ஒற்றுமையை, உவமையை உள்ளடக்கிய பொருளை திருவள்ளுவர் பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பது மட்டுமல்ல நான் சொல்ல வருவது. கடவுளுக்கு இணையான ஒன்றை உங்களுக்கு விளங்கச் செய்ய வேண்டும் என்றால் கடவுளுக்கு இணையான ஒன்றை உங்களுக்கு புரிய வைக்கிற முயற்சியில் ஈடுபடுகிற போது, கடவுளை ஒன்றை வைத்து இணைத்து ஒன்றை வைத்து சொல்ல வேண்டும் என்று முயற்சி எடுக்கிற போது இந்த உலகில் இருக்கிற எந்த பொருளும் பொருத்தமானதாக இல்லை.

                    தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...