Sunday, June 11, 2023

குழந்தைகளை பின்பற்றுவோம் - சிவ.கதிரவன்

குழந்தைகளை பின்பற்றுவோம்

www.swasthammadurai.com


அன்பிற்குரியவர்களே,

          ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு குழந்தைகளை பின்பற்றுவோம் என்கிற தொடர் உரையாடலை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளை பின்பற்றுவோம் என்பது குழந்தைகளை எவ்வகையில் பின்பற்றுவது என்கிற ஒரு பெருத்த கேள்வியோடு நம்முன் நிற்கிறது. இந்த பெரிய கேள்விக்குள்ளாக இருக்கிற கேள்வியை எது உருவாக்குகிறது என்று பார்க்கிறபோது,  குழந்தைகள் பற்றி நமக்கு இருக்கிற, சமூகம் கொடுத்திருக்கிற பொதுவான புரிதல் - குழந்தைகள் எளியவர்கள். குழந்தைகள் அறியாதவர்கள். குழந்தைகள் அனுபவம் இல்லாதவர்கள் என்கிற பொதுவெளியில், சமூக அளவில் மீண்டும் மீண்டும் உரையாடப்படுகிற குழந்தைகள் பற்றிய பொதுப்பரப்பிலிருந்து குழந்தைகள் இவ்வாறு இருக்கிறார்கள், அவர்கள் பின்பற்றும் அளவிற்கு  முதன்மைப்படுத்துவதற்குரியவர்கள் அல்ல என்கிற விவாதங்களை வைத்து பார்க்கிறபோது குழந்தைகளை  பின்பற்றுவோம் என்பது ஒரு  சமூகப் பொருத்தம் இல்லாத உரையாடலை உருவாக்கத்தான் செய்கிறது.

ஆனாலும் குழந்தைகளை பின்பற்றுவோம் என்பதற்கு நாம் வைத்திருக்கிற காரணம் குழந்தைகள்  இயற்கைக்கு மிக நெருக்கமானவர்கள். இயற்கையில் இருந்து வேறுபடுத்த முடியாத அளவிற்கு நெருக்கம் அதிகம் கொண்டவர்கள். இயற்கையின் இயல்பான செயல்பாடுகளை தம் இயல்பான செயல்பாடுகளாக வெளிப்படுத்தக் கூடியவர்கள். அவர்கள் உரையாடுகிற போது, விளையாடுகிற போது, அழுகிற போது, சிரிக்கிற போது, எல்லா அம்சங்களிலும் பூரிப்பும் மெய்ப்பாடும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். அந்த வகையில் சமூகம் வைத்திருக்கிற குழந்தைகளின் அறியாமை என்கிற களத்தில் இருந்து, குழந்தைகளை பின்பற்றுவோம் என்பதற்கு நாம் வைத்திருக்கும் மிக முக்கியமான காரணம் குழந்தைகள் இயற்கைக்கு நெருக்கமானவர்கள். இயற்கையாகவே இருப்பவர்கள் என்கிற அடிப்படையில் தான்.

சமீபத்தில் குழந்தைகள் பற்றிய உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பலரை போல் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு தொடர் உரையாடல் நிகழ்வு. குழந்தைகள் குறித்த ஏதாவது ஒரு புத்தகத்தை வலைதள மேடையில், குழுவில் தொடர்ந்து உரையாடுவது என்பது அந்த குழந்தைகள் குறித்த உரையாடலின் செயல்முறை. யாரும் அதில் இணையலாம். குழந்தைகள் பற்றி அக்கறையுள்ள, குழந்தைகள் பற்றி ஆர்வமுள்ள, குழந்தைகளின் மெய்யான பகுதிகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று முனைப்புள்ள யாரும் அதில் இணையலாம். அப்படிப்பட்ட குழுவில் குழந்தைகள் குறித்த புத்தகங்களை அறிமுகம் செய்வதும் புத்தகங்கள், குழந்தைகள் குறித்து என்ன பேசிக் கொண்டிருக்கின்றன என்பதை  உரையாடலாக பேசி பார்ப்பதும் பின்பு குழந்தைகள் குறித்து உண்மையிலேயே அந்த மாதத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களும் புத்தகங்களும்  புத்தகத்திற்குள் இருக்கிற விவரங்களும் குழந்தைகளுக்கு நெருக்கமாக இருக்கின்றனவா என்கிற ஒரு இறுதி உரையாடலுமாக அந்த விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இருக்கும்.

நான் குறிப்பிடுகிற இந்த விவாதத்தில் குழந்தைகளுக்கும் தத்துவத்திற்கும் இடையே இருக்கிற நெருக்கம் குறித்து எங்கள் உரையாடல் திரும்பியது. அப்போது அந்த உரையாடலில் பங்கேற்ற ஒவ்வொருவரும் குழந்தைகள் பற்றி ஏதாவது ஒன்றை வாழ்வின் அனுபவத்தை குழந்தைகள் தத்துவத்திற்கு நெருக்கமாக இருக்கிற கதைகளை உரையாட வேண்டும் என்று முடிவு செய்து ஒவ்வொருவரும் உரையாடலை துவங்கியிருந்தார்கள். குழந்தைகள்க குறித்து ஒரு பெண் ஆசிரியர் தம் வாழ்வில் குழந்தைகளோடு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அந்த அனுபவத்தில் தன் குழந்தை ஒரு ஆற்றில் குளிப்பதற்கு அழைத்துச் செல்லப்படும் போது, குறைந்த அளவில் தண்ணீர் வரத்து இருக்கிற நேரம் அது. அப்போது குழந்தை ஆற்றில் விளையாடிக் கொண்டிருக்கிறது. தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. குளிப்பவர்கள்  மத்தியில் தண்ணீர் அளவு குறைந்து இருக்கிறது. இன்னும் கூடுதலாக தண்ணீர் வரத்து இருந்தால் குளிப்பதற்கு உற்சாகமாக இருக்கும் என்கிற ரீதியில் உரையாடல் துவங்குகிற போது அந்த குழந்தை சொல்லி இருக்கிறது, மக்கள் அதிகமாக வருவார்கள் என்றால் தண்ணீர் அளவு அதிகமாக உயரும் என்று கூறியிருக்கிறது. இந்த குறிப்பிட்ட உரையாடலை அந்த ஆசிரியர் அந்த குழந்தையின் உரை முடிந்தவுடன் மீண்டும் கேள்வியாக மாற்றி இருக்கிறார். எப்படி அந்த மாதிரி சொல்ற? குழந்தை சொல்லி இருக்கிறது “நிறைய பேர் குளிச்சா நிறைய தண்ணி வருமில்ல” என்று  அப்போது ஆசிரியர்  தன்  குழந்தையோடு நடந்து உரையாடலை இந்த பதிவில் நிறுத்திக் கொண்டார்.   இந்த உரையாடலுக்குள் குழந்தை தத்துவம் என்கிற நெருக்கமான பகுதிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

குழந்தை தண்ணீர் அதிகமாக வருவதற்கு காரணம் நிறைய பேர் குளிப்பார்கள் என்றால் நிறைய பேர் நிற்கிற போது தண்ணீரின் அளவு உயர்ந்து நிறைய அளவு தண்ணீர் கிடைக்கும் என்கிற ரீதியில் சொல்லி இருக்கிறது. சொல்லக்கூடும் என்ற அந்த உரையாடலுக்குள்  ஆசிரியரும் அந்த உரையாடலை கேட்ட பலரும் கூட நினைத்திருக்க கூடும்.  தத்துவமாக பார்க்கிற போது குழந்தைகளை எப்போதும் தத்துவமாகவே இருக்கிறார்கள் என்பதை  புரிந்து கொள்கிற போது இந்த உரையாடலினுடைய செயல்பாடு என்பது விரிவான தளத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன்.

ஒரு குழந்தை நீரில் குளிக்கிறது. நீருக்குள் நடக்கிறது. நகர்கிறது, விளையாடுகிறது என்பவற்றில் குழந்தை செயல்பாடாக துடுக்குத்தனமாக உற்சாகக் களிப்பாக எதையும் செய்து விடுவதில்லை.  கூடுதலாக அந்த குழந்தை தன் இருப்பு நிலையில் இருக்கிற ஒன்றை அசைத்து பார்க்கிற தன்மையோடு அந்த நிகழ்வை உணர்ந்து நகர்த்துகிறது என்று நான் பார்க்கிறேன். மற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருக்கிற பெருத்த வேறுபாடு அது ஒன்றுதான்.

குழந்தைகள் எப்போது உற்சாகமாக இருப்பதற்கு காரணம் அவர்கள் இயற்கையோடு இருக்கிறார்கள். இயற்கையாகவே இருக்கிறது. இயற்கைக்குள் தான் செல்வதற்கும் இயற்கை தமக்குள் வந்து செல்வதற்கும் வாய்ப்பு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். வாய்ப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவற்றை கற்பனையாக, அறிவாக நாம் தெரிந்து கொள்வதற்கு ஏராளமான சமூக காரணிகளும் புத்தகங்களும் ஆவணக் குறிப்புகளும் இருக்கின்றன. ஆனால் இவற்றை அனுபவமாக, உணர்வு குறிப்புகளாக மாற்றிக் கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் மெனக்கெட வேண்டியிருக்கிறது. இந்த குழந்தை குறிப்பிட்ட அளவு அதிகமாகிற போது எண்ணிக்கை அதிகமாகிற போது நீரில் விளையாடுபவர்களினுடைய அடர்த்தி அதிகமாகிற போது தண்ணீரின் அளவு அதிகமாகும் என்கிற தர்க்கத்திற்கு குழந்தை எப்போதும் விட்டு செல்வதில்லை. அந்த குழந்தை சொல்ல வருவது எதுவாக இருக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து கொள்கிறோம் என்று நான் பார்க்கிறேன். அந்த ஆசிரியர் அந்த பகுதியில் குறிப்பிட்டதும் அதுதான். குழந்தை தான் காக்கா கதையில் கேட்ட மண் பாத்திரத்திற்குள் தொடர்ந்து கற்களை இட்டு தண்ணீரை உயர்த்திக் கொண்டது போல அந்த குழந்தை நிறைய நபர்கள் உள்ளே இறங்குவதன் வழியாக நிறைய தண்ணீரை நாமெல்லாம் இணைந்து உயர்த்துக் கொள்ள முடியும் என்கிற ஒன்றோடு இணைத்து சொல்வதாகவும் இணைத்துப் பார்ப்பதாகவும் சமூக பார்வையில் அந்த உரையாடலை நாம் கேட்க முடிந்தது.

ஆனால் உண்மையிலேயே குழந்தை முதல் வரியில் தன் பார்வையை நிறுத்திக் கொள்கிறது. தன் வெளிப்பாடை நிறுத்திக் கொள்கிறது. எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நீர் அதிகமாக வரும் என்பதோடு அந்த குழந்தையின் உரையாடல் முடிவுக்கு வருகிறது. ஏனென்றால் நீர் வரத்து என்கிற கருத்தாக்கத்தை வைத்து நாம் ஒரு பூலோக ரீதியான ஆய்வை தத்துவ ரீதியில் அணுகினோம் என்றால் வேறொரு முடிவிற்கு நாம் செல்ல முடியும்.

நீர்வரத்து என்பது மழையின் வருகையினால் நிகழ்வது. இந்த சமூகத்தில், இந்த உலகத்தில், இந்த பிரபஞ்சத்தில் துவக்கமாக இருப்பது நீர். மழை. மழை எவ்வாறு வந்தது என்று அறிவியல் ரீதியான காரணங்களை, ஆவணங்களை தொகுத்து பார்த்தோம் என்றால் நிறைய அறிவியல் நுணுக்கங்களை மழை வருவதற்கான காரணங்களாக நாம் தொகுத்து வைத்திருக்கிறோம். நாம் அன்றாட பள்ளிகளில் பழகி இருக்கிற ஒன்று மழை வருவதற்கு மரங்கள் அவசியம். மழை வருவதற்கு வெப்பச் சலனம் அவசியம் என்பது மாதிரியான செய்திகளை நாம் தொகுத்து வைத்திருக்கிறோம். இது நமக்கு பழக்கமான செய்தி தொகுப்பு. ஆனால் உலகில் முதல் முதலில் மழை பெய்த போது மரங்களோ, செடி கொடிகளோ, வெப்ப சலனமோ எதுவும் கிடையாது. ஒரு பரந்தவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குளிர்ந்த சூழல் நிலவுகிற போது ஒரு பெரு வெடிப்பு ஏற்படுகிற போது இவற்றின் எச்சங்களாக பெருமழை பெய்கிறது என்பதை உலகம் தோன்றிய வரலாறை, இந்த பிரபஞ்சம் தோன்றிய வரலாறை பேசுகிற வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இந்த உலகம் துவங்குகிற போது மரம் ஏதும் இல்லாமல், வெப்பச் சலனம் ஏதுமில்லாமல் இன்று அறிவியல் குறிப்பிடுகிற எந்தவிதமான குறிப்புகள் அடிப்படையில் இயங்குகிற என்கிற எந்த சமன்பாடும் இல்லாமல் மழை பெய்திருக்கிறது என்பதை நாம் மறுப்பதற்கு இல்லை.

இந்த முதல் மழையை பெய்ய வைத்தது யார்? இந்த முதல் மழை எங்கிருந்து பெய்தது? இந்த முதல் மழை பெய்வதற்கான நோக்கம் என்ன, தேவை என்ன என்பதை தத்துவத்தின் வழியாக மட்டுமே திறக்க முடியும். அப்போதிருந்த சூழல் முதல் மழையை வரச் செய்தது. அப்போது இருந்த உயிர் குழுமமாக நகர்கிற நகர்வு முதல் மழையை வரச் செய்தது. இப்படி நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டு, நம் மௌனத்திற்கு அப்பாற்பட்டு, நம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிற ஒரு முடிச்சுக்குள் மழையின் மந்திரம், மழை வருவதற்கான சாத்திய கூறுகள்  உள்ளிட்ட எல்லா சமன்பாடுகளும் ஒளிந்து இருக்கின்றன. அப்படித்தான் குழந்தை ஒவ்வொன்றையும் பார்க்கிறது என்று நான் பார்க்கிறேன். ஒரு தத்துவம் போல் ஒரு செய்தியை குழந்தைகள் உதிர்க்கின்றார்கள். அதிக நபர்கள் வந்தால் அதிகம் பேர் பங்கேற்றால் அதிக நீர்  வரும் என்பது அவ்வளவுதான். அதிக  நீர் வர வேண்டும்  என்றால் அதிகம் பேர் பங்கேற்க வேண்டும். எப்படி என்பது நமது கேள்வி. அந்த குழந்தையோடு குளிப்பவர் கேள்வி. அந்த குழந்தையோடு உரையாடுபவரின் கேள்வி. எப்படி அதிக நபர் வந்தால் அதிக நீர் வரும் என்று நீ யூகிக்கிறாய் என்பது நமது கேள்வி. குழந்தைக்கு அதைப் பற்றி எந்த அக்கறையும் கவனமும் கிடையாது. குழந்தை நீர் வரவேண்டும் என்று விரும்பியவுடன் அதற்கான சாத்தியம் அதிக நபர்கள் பயன்படுவதாக அது மாற வேண்டும் என்று அந்த குழந்தை கருதுகிறது. அதிக நபர்கள் பங்கேற்க வேண்டும் என்று அந்த குழந்தைகள் கருதுகிறது. அதிக நீர் வேண்டுமென்றால் அதிக பங்கேற்பு இருக்க வேண்டும் என்று குழந்தை கருதுகிறது. அதை அவ்வாறே வெளிப்படுத்துகிறது. இயற்கையும் அப்படித்தான் இருந்திருக்கிறது. அப்படித்தான் இருக்கிறது. தேவையின் அடர்த்தி அதிகமாகிற போது, நிவர்த்தியின் துல்லியம் வெளிப்படுகிறது என்று தத்துவ ரீதியாக அவற்றை புரிந்து கொள்ள முடியும். குழந்தைகள் இயற்கையாக இருக்கிறார்கள். குழந்தைகள் தத்துவமாக இருக்கிறார்கள். குழந்தைகளின் தத்துவ ஒற்றை வரியை உடைத்து தர்க்கமாக மாற்றுவதன் வழியாக நாம் குழந்தைகளையும் தவற விடுகிறோம். தத்துவங்களையும் தவற விடுகிறோம்.

குழந்தைகளைப் பின்பற்றுவதன் வழியாக தத்துவ கோட்பாடுகளை பின்பற்ற முடியும் தத்துவ கோட்பாடுகளை துல்லியமாக காண வேண்டுமென்று நாம் விரும்பினால் குழந்தைகளைப் பின்பற்றுவது சிறந்த வழி.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...