Sunday, June 18, 2023

குழந்தைகள் அக உலகம் - உரையாடல் 2 // சிவ.கதிரவன்

                                                 குழந்தைகள் அக உலகம்

www.swasthammadurai.com


 குழந்தைகளுக்கு ஒரு கல்வியை சொல்லித் தர வேண்டும் என்று இன்றும் நாம் ஒரு விவாதத்தை துவங்கினால் குழந்தைகளுக்கு அறம் சொல்லித் தர வேண்டும் என்று பேசுவார்கள். குழந்தைகள் அறம் கற்றுக்கொள்ள வேண்டியவர்களா அல்லது அறமாக இருப்பவர்களா? இந்த கேள்விக்கு இந்த சமூகம் இதுவரை எனக்கு பதில் சொல்லியதே இல்லை. நான் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிற போது, குழந்தைகளை நேசிக்கிற நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிற போது, குழந்தைகளின் விளையாட்டுத்தனங்களை துடுக்குகளை தளர்வாக அணுகுகிற நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிற போது குழந்தைகள் அறமாக இருக்கிறார்கள் என்று அவர்கள் எனக்கு சொல்ல கேட்டியிருக்கிறேன். குழந்தைகள் எப்போதும் அறம் மீறுவதில்லை என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் குழந்தைகளை கல்வி என்று நாம் பிரித்துப் பார்க்கிறபோது சமூகத்தின் வேறொரு பகுதி அல்லது நண்பர்களுடைய அடுத்த வட்டத்தில் இருப்பவர்கள், குழந்தைகளுடைய கல்வி என்று வருகிற போது குழந்தைகளுக்கு அறம் சொல்லித் தரப்பட வேண்டும். அறக்கருத்துக்கள் சொல்லித் தரப்பட வேண்டும் என்று ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள்.

நமக்கு முன் இருக்கிற கேள்வி குழந்தைகள் அறமானவர்களா, இல்லையா? குழந்தைகளுக்கு இயற்கை வாழ்வியல் சொல்லித் தரப்பட வேண்டும் என்று ஒரு வாதத்தை குழந்தையின் கல்வியின் மீது பேசுகிறவர்கள்   சொல்வதுண்டு. குழந்தைகளுக்கு இயற்கை வாழ்வியல் தெரியுமா? தெரியாதா?. குழந்தைகள் இயற்கை வாழ்வியலை மேற்கொள்பவர்களா, இல்லையா? நவீனத்தில் குழந்தைகள் குறித்து நடைபெறுகிற எல்லா உரையாடல்களிலும் குழந்தைகளை இயற்கைக்கு மிக நெருக்கமான நபர்களாக சித்தரிக்கிற, முன்வைக்கிற உரையாடல்கள் நடந்து வருவதை பார்க்க முடிகிறது.

குழந்தைகள் இயற்கைக்கு நெருக்கமானவர்கள். அறிவியல் ரீதியாக குழந்தைகள் குறித்த விவாதங்களில் அறிவியல் ரீதியாக தர்கபூர்வமாக நடைபெறுகிற வாதங்களும் பிரதிவாதங்களும் ஒரு வகை. ஒரு பக்கம் அது நடந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படுகிற, குழந்தைகள் குறித்து நடத்தப்படுகிற குழந்தைகளின் அக உலகங்கள் குறித்து நடத்தப்படுகிற உரையாடல் வடிவம் என்பது முற்றிலும் வேறாக நாம் பார்க்க முடிகிறது. முற்றிலும் வேறாக என்று நான் பிரித்துச் சொல்ல்வதற்கு, அழுத்திச் சொல்வதற்கு மிக முக்கியமான காரணம் குழந்தைகள் ஒரு புறம் அதிக புத்திசாலித்தனம் உள்ளவர்கள் என்கிற பார்வையும் இன்னொரு புறம் குழந்தைகளுக்கு அதிக புத்திசாலித்தனம் தரப்பட வேண்டும் என்கிற கல்வி முறையும் மோதுகிற சமூக சூழலில் நாம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறோம். இத்தகைய புரிதல் எங்கிருந்து துவங்குவது என்று இப்போதும் எனக்கு கேள்வியாகவே இருக்கிறது. இப்போதும் அது குறித்து  தெளிவான உரையாடலை தெளிவான முடிவை நாம் எடுக்கவே முடிவதில்லை.

குழந்தைகளைப் பற்றி பேசுங்கள் என்றவுடன் ஒருபுறம் பேசுகிற நடை முழுவதும் பேச்சு நடை முழுவதும் உரைநடை முழுவதும் குழந்தைகள் பட்டாம்பூச்சி போலவும் குழந்தைகள் இயற்கைக்கு நெருக்கமாக இருப்பது போலவும் குழந்தைகள் இயற்கை வாழ்வியலை உற்சாகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வது போலவும் அதே குழு அப்படி  பறைசாற்றுகிற குழு குழந்தைகளுக்கு கல்வியை போதிக்க வேண்டும் என்று சொன்னவுடன் குழந்தைகளின் அக உளவியல் மாறாமல் அகத்தன்மை மாறாமல் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய செயல்பாடுகளை எங்கிருந்து துவங்குவது என்று அந்த குழு திட்டமிடும் என்று சொன்னால் உடனடியாக அதற்குள் இயற்கை வாழ்வியல் இருக்கிறது. அந்த குழந்தைக்கு பூக்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தை அந்த குழு சொல்கிறது. அந்த குழந்தையை வானம் பார்க்க அழைத்து செல்கிறது. பறவைகளோடு உரையாட வேண்டும் என்று கருதுகிறது. இவை எல்லாமும் செய்வதற்குரிய அடிப்படையான நோக்கம் என்ன என்று விவாதிக்கிற போது, உரையாடுகிற போது குழந்தைகளை இயற்கைக்கு நெருக்கமாக நாம் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் இயற்கைக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை நினைவூட்ட வேண்டும். குழந்தைகள் இயற்கையோடு இருக்கிறார்கள் என்று அவர்களோடு அதை வேறொரு தளத்திற்கு நகர்த்த வேண்டும் என்று காரணங்களை நாம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம் என்பதை நான் பார்க்கிறேன். இந்த பார்வையின் அடிப்படையில் வருகிற முடிவு குழந்தைகள் இயற்கைக்கு நெருக்கமானவர்களா, இல்லையா என்பது பற்றி நமது நிலைப்பாடு என்ன. குழந்தைகள் இயற்கைக்கு நெருக்கமாக இருப்பவர்கள் தான்.

ஒரு குழந்தையை சந்தித்தேன். நான் அந்த குழந்தையை சந்திக்கிற போது அந்த குழந்தைக்கு வயது நான்கு, ஐந்து வயது இருக்கலாம். நான் தலைக்கு எண்ணெய் வைப்பதில்லை என்று அந்த குழந்தைக்கு என் தலையை குறிப்பிட்டு சொன்னேன்.  அந்த குழந்தை என்னை பார்த்து என்னையும் என் தலையையும் ஒரு முறை பார்த்து அதனுடைய தலையை தொட்டுப் பார்த்தது. நானும் வைப்பதில்லை என்றது. நான் குளிப்பதில்லை என்றேன். குழந்தை மறுபடியும் என்னையும் அதனுடைய உடலையும் பார்த்துவிட்டு நானும் குளிப்பதில்லை என்றது. நான் விளையாடும் போது கூட, உடலெல்லாம் அழுக்கானாலும் கூட குளிப்பதில்லை என்றேன். அந்த குழந்தை மறுபடியும் நான் மண்ணில் பிரண்டால் கூட குளிப்பதில்லை என்றது. ஏனென்றால் என் உடலில் அழுக்கு ஒட்டாது. என் உடலில் வேர்வை துர்நாற்றம் எதுவும் வீசாது. என் தலை எப்போதும் சுத்தமாக இருக்கும். அதனால் நான் எப்போதும் குளிப்பதில்லை. நான் எதுவும் செய்து கொள்வதில்லை என்று அந்த குழந்தைக்கு சொன்ன போது அந்த குழந்தை உடனடியாக என்னை உடல் முழுவதும் மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு எனக்கு ஏன் குளிக்கவில்லை என்று தெரியவில்லை. நான் எப்போதும் குளித்தது போலவே இருக்கிறேன் என்று அந்த குழந்தை பதில் சொன்னது. இந்த பதில் இயற்கைக்கு முரணானதா, இயல்பானதா. நான் மீண்டும் மீண்டும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு குழந்தைக்கு தான் ஏன் குளிக்க வேண்டும் என்று தெரிகிற வரை குளிப்பதில்லை. ஆனால் குழந்தைகள் தண்ணீரை பார்த்தவுடன் கொக்கரித்துக் கொண்டு குதிப்பார்கள் என்று ஒரு வாதத்தை, ஒரு மனநிலையை வைத்திருக்கிறோம். அந்த குழந்தை அப்படி சொல்லவே இல்லை. அந்த குழந்தை சொன்னது முழுவதும் சத்தியம். அந்த குழந்தை சொன்னது முழுவதும் உண்மை. அந்த குழந்தையை என்னிடம் அழைத்து வந்ததற்கு காரணமே அந்த குழந்தை குளிப்பதில்லை என்பதுதான். அந்த பெற்றோர்  என்னை சந்திக்க வருகிற போது அந்த குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு இவன் குளிப்பதே இல்லை. ஒரு முறை நாங்கள் ட்ரவுசர் மாற்றி விட்டோம் என்று சொன்னால் அது முழுக்க ஒரு வாரம், பத்து நாள் ஆனா கூட அந்த ட்ரவுசர அவன் கழற்றது இல்ல. அதிலேயே தான் எல்லாமே. அதிலேயே தான் உருள்கிறான் என்கிற குற்றச்சாட்டுடன் தான் அந்த குழந்தையை என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள். ‘ஏன் குளிக்கணும், நல்லா தானே இருக்கேன். எப்போதும் சுத்தமா தான் இருக்கேன்’ என்று அந்த குழந்தை சொன்னது.

 குழந்தைகள் என்றவுடன் அவர்கள் தண்ணீரில் வேகமாக இறங்கி, குதித்து, கும்மாளம் இடுவார்கள் என்ற பார்வையை முழுவதுமாக உடைத்த ஒரு பெரிய வேலையை அந்த நான்கு வயது எனக்கு செய்தது. இந்த குழந்தை ஏன் குளிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை குளிக்க வேண்டும் அல்லது நம்மைப் பொருத்தவரை குளிப்பது குறித்து விதவிதமான பிம்பங்களை நமக்குள் வைத்திருக்கிறோம். நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு குழந்தை குளிக்க வேண்டும். குளித்தே ஆக வேண்டும் என்று சத்தியம் எடுத்துக் கொண்டு பெற்றோர்கள் எனக்கு தெரியும். தினமும் இருமுறை குளிக்க வேண்டும் என்று இருமுறை அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு கை கால்களை கட்டாத குறையாக தண்ணீர் தொட்டியில் அமுக்கி எடுக்கிற பெற்றோர்களை எனக்கு தெரியும். இரண்டு முறை பல் தேய்த்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்துகிற பெற்றோர்களை எனக்குத் தெரியும். அறிவில் சிறந்த, பேராசிரியர்களாக பணிபுரிகிற, அரசு நிறுவனங்களில் பணிபுரிகிற மிகச் சிறந்த பட்டங்களையும் பட்டத்தின் மிகச்சிறந்த மதிப்பெண்களையும் பெற்ற பெற்றோர்கள் கூட குழந்தைக்கு இப்படித்தான், அப்படித்தான் என்று சில வரையறைகளை வைத்திருக்கிறார்கள். அந்த வரையறைக்குள் பார்க்கிறபோது குழந்தை எத்தனை முறை குளிக்க வேண்டும். எத்தனை முறை பல் துலக்க வேண்டும். எத்தனை முறை உணவு உண்ண வேண்டும்.  இத்தனை முறை இவையெல்லாம் செய்வதன் வழியாகவே அந்த குழந்தை இயற்கைக்கு நெருக்கமாக, இயல்புக்கு நெருக்கமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையிலேயே அந்த பெற்றோர்கள் இவற்றை செய்ய வைக்கிறார்கள்.

ஏன் இரண்டு முறை குளிக்க வேண்டும் என்று ஒரு பெற்றோரிடம்  நான் கேட்டபோது அப்போதுதான் நேச்சுரலாக இருக்கும் என்றார் அவர். அப்போதுதான் இயல்பாக இருக்கும் என்றார்.  அப்போதுதான் உற்சாகமாக இருக்கும் என்றார்.  இவையெல்லாம் எனக்கு அதிர்ச்சியான பதில்கள். குழந்தைகள் எப்போதும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று நாம் கதைத்துக் கொண்டே இருக்கிறோம். குளித்தால் தான் உற்சாகமாக இருக்க முடியும் என்று ஒரு பெற்றோர் முன் வைக்கிறார். இந்த இரண்டு வாதத்தில் எது முதன்மையானது, எது உண்மையானது என்ற கேள்வியை யார் கையில் வைத்து விவாதிப்பது. எல்லாமும் குழந்தைகள் முன் வைக்க வேண்டி இருக்கிறது.

உற்சாகம் என்பது எங்கிருந்து புறப்படுகிறது? குளிப்பதன் வழியாக புறப்படுகிறது என்று ஒரு சமூகம் கருதுகிறது. உற்சாகம் எப்போதுமே குழந்தைங்களுக்குள் இருக்கிறது என்று இன்னொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இவை இரண்டில் எது நிஜமான உற்சாகம் அல்லது உண்மையிலேயே உற்சாகம் என்பதை குளியலும் இயல்புமே  தீர்மானித்து விடுகின்றனவா என்றெல்லாம் கூட பேசி பார்க்க வேண்டிய ஒரு குழந்தைகள் குறித்த உரையாடல் என்பது அவசியப்பட்டு கொண்டே இருக்கிறது.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...