குழந்தைகள் அக உலகம்
கல்வி குறித்த உரையாடல்களில், வகுப்பறை குறித்த
உரையாடல்களில் நான் பார்க்கிறபோது குழந்தையை வளர்க்க வேண்டும் என்று வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிற,
திட்டமிடப்படுகிற எல்லா அம்சங்களும் குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கின்றன என்று குழந்தைகளைப்
பற்றி பேசுபவர்கள் சொல்கிறார்கள். எந்த குழந்தையும் தனது இயல்பாக இவற்றையெல்லாம் நான்
மிகச் சிறந்த மேன்மையான, மிடுக்கான மனிதன் என்று எந்த குழந்தையும் சொல்வதில்லை. ஆனால்
குழந்தைகளைப் பற்றி பேசுபவர்கள் குழந்தைகள் மிடுக்கான மனிதர்கள் என்று சொல்வதை நான்
கேட்டிருக்கிறேன். குழந்தைகளைப் பற்றி பேசுபவர்கள் குழந்தைகள் அதிபுத்திசாலிகள் என்று
சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். குழந்தைகள் அதிபுத்திசாலிகள் என்று சொல்லப்படுகிற பெற்றோர்களின்
வாதம் குழந்தையை நேசிப்பவர்களின் வாதத்தை முன்வைத்து பார்க்கிறபோது சில நூறு ஆண்டுகளுக்கு
முன்பு, சில 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையறுக்கப்பட்ட கல்வி முறைகள் குழந்தைகளை மேன்மையான புத்திசாலித்தனமான ஒன்றை நோக்கி நகர்த்த வேண்டும்
என்கிற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இப்போதும் கூட கல்வி சாலைகள் உங்கள் குழந்தைகள் புத்திசாலித்தனமாக வளர வேண்டுமா, உங்கள்
குழந்தைகள் வெற்றி அடைவதற்குரிய சாத்தியத்தோடு வகைமையோடு உருவாக்கப்பட வேண்டுமா என்றால்
நாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கிற பாடசாலையில், பாடத்திட்டத்தின் கீழ் உங்கள் குழந்தையை
படிக்கச் செய்யுங்கள் என்று விளம்பரங்களை இன்று காலையில் கூட நான் செய்தித்தாளில் பார்த்தேன்.
உண்மையிலேயே குழந்தைகளுக்கு எல்லாவற்றையும்
பார்க்கிற புத்திசாலித்தனம் இருக்கிறதா இல்லையா என்பது சமூகம் முன், குழந்தைகள் முன்
நாம் வைக்க வேண்டிய கேள்வி. குறிப்பாக குழந்தைகளைப்
பற்றி பேசுபவர்கள் இதைப் பற்றி விவாதிக்க வேண்டி இருக்கிறது. இப்படியான ஒரு புத்திசாலித்தனத்தோடு
குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் பள்ளிக்கூடம் என்ன செய்யப் போகிறது. பள்ளிக்கூடம்
சொல்வது சரி என்றால் குழந்தைகள் உண்மையிலேயே புத்திசாலித்தனத்தை பள்ளிக்கூடத்தில் இருந்தே
பெற்றுக் கொள்கின்றன என்ற முடிவிற்கு நாம் வந்துவிடலாம். இப்படியான ஒரு முரண்பாடை இப்படியான
இரு வேறு தளங்களில் நடத்தப்படுகிற உரையாடலின் வழியாக குழந்தைகள் குறித்த கற்றலும் குழந்தைகள்
பற்றி பேசப்படுகிற உரையாடலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் நோக்கம்
குழந்தைகளை அறிந்து கொள்வது என்பதாக நான் மீண்டும் மீண்டும் கற்பிக்கப்படுகிறோம்.
ஒரு ஆய்வு குறிப்பை படித்து பார்க்கிற போது புள்ளி விபரங்கள், புள்ளிவிபரங்கள், புள்ளி விபரங்கள் என்று புள்ளி விவரங்கள் முழுவதும் அந்த ஆய்வு குறிப்பை நிரப்பி வைத்திருக்கின்றன. ஒரு குழந்தை எந்த வயதில் எவ்வாறு இருக்கிறது? எந்த வயதில் என்ன சாப்பிட வேண்டும், எந்த வயதில் என்ன சாப்பிட்டு இருக்கிறது. ஆயிரம் குழந்தைகளில் நன்றாக படிப்பவர் யார். ஆயிரம் குழந்தைகளில் நன்றாக எழுதுபவர் யார். ஆயிரம் குழந்தைகளில் நன்றாக ஓடுபவர் யார், விளையாடுபவர் யார்? என்று புள்ளி விவரங்களின் தொகுப்பாக அவை இருக்கின்றன.
ஒரு 14.5 சதவிகிதமான குழந்தைகள் அதிக ஓட்டத்திற்கு
வாய்ப்பு உள்ளவர்கள் என்று அந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் ஒரு கணக்கை எடுத்தோம்
என்றால் மீதம் இருக்கிற குழந்தைகள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லாதவர்களா? ஒரு நகைச்சுவையான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள
வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனக்கும் என் மகனுக்கும் நடந்த உரையாடல். எங்கள்
வீடு முதல் மாடியில் அமையப் பெற்று இருக்கிறோம்.
எங்கள் வீட்டின் முதல் மாடி நாங்கள் குடியிருக்கிற தளம். நான் கீழே இருந்து
மேல் என்று ஒரு 15 முறை என் மகன் ஓடி விளையாடிய காட்சியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அப்போது நான் என் வேலைகளை வெளியில் சென்று முடிப்பதற்காக மேலிருந்து கீழே இறங்கி என்
பையை வண்டியில் மாட்டி விட்டு வண்டியில் அமர்ந்து, ‘ஐயா ஹெல்மெட்டை எடுத்துட்டு வர மறந்துட்டேன். அதை எடுத்துட்டு
வாங்கய்யா’ அப்படின்னு நான் கேட்கிறேன். ஏகதேசம் 15 முறை கீழே இருந்து மேல், மேலே இருந்து
கீழாக ஓடி விளையாடிய என் குழந்தை ஒரு 15, 16 வது முறை ஓடும் முன் அவரை நிறுத்தி ‘என்
ஹெல்மெட்ட மேல வச்சுட்டு வந்துட்டே,எடுத்துட்டு வாங்க’ன்னு சொல்றேன். அதை கேட்டுட்டு
என் குழந்தை, ‘எனக்கு கால் எல்லாம் வலிக்குது’ன்னு சொன்னாரு. 15 முறை ஓடியதால் கால்
வலிச்சுதானு நான் கேட்டேன். என்னை ஒரு முறை பார்த்தார். அந்த பார்வை வேறு ஏதோ சொல்ல
போறாருன்னு தோணுக்சு.வழக்கமா அப்படி நடக்கும். நிஜமாவே அந்த பார்வையை நான் ஆன்மிக பார்வையோடு
ஒப்பிட்டு சொல்றேன். அப்படி ஒரு பார்வை. பார்த்தவுடனே நான் என்ன சொல்லப் போறீங்க’ன்னு
என்று கேட்டேன். ஹெல்மெட்ட எடுத்து வர முடியாது. எனக்கு கால் வலிக்குதுன்னு சொன்னாரு.
இவ்ளோ நேரம் ஓடுனீங்கல்ல. ஆமா, ஓடினே. இவ்ளோ முறை ஓடும் போது கால் வலிக்கலையா. அது
எனக்காக ஓடுனேன். குழந்தைகள் அவங்களுக்காக ஓடும் போது கால் வலிப்பதில்லை. இந்த ஓட்டத்தை
என்ன கணக்குல வைக்கிறது. இந்த ஓட்டத்தை என்ன கணக்கில் புள்ளி விவரங்களுக்குள் பட்டியல்
படுத்துவது. இப்படியான ஓட்டங்களோடு, இப்படியான பார்வைகளோடு குழந்தைகள் இருந்து கொண்டே
இருக்கிறார்கள்.
இந்த
புள்ளி விவரங்களுக்குள் அடைபடாத, இந்த புள்ளிவிவரங்களுக்குள் தொகுக்க முடியாத ஒரு உலகம்
குழந்தைகளுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. 20 முறை, 30 முறை ஓடி விளையாடுகிற ஒரு
குழந்தை தன் பாற்பட்டு, தன் அகம் பாற்பட்டு ஏற்படுகிற, எழுச்சியால் விருப்பத்தால் செய்கிற
ஒன்றை, ஒருமுறை குழந்தைக்கு நெருக்கமாக கருதுகிற இன்னொருவர் செய்ய சொல்கிற வேலையை கூட
செய்வதில்லை என்கிற சுதந்திரத்தோடு இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்தே ஆக வேண்டி
இருக்கிறது.
இப்படித்தான் குழந்தைகளுடைய அக உலகம் இருந்து
கொண்டே இருக்கிறது நண்பர்களே. இந்த வகையிலேயே குழந்தைகள் பற்றி உரையாடலை நாம் தொடர்ந்து
விரிவாக நேர்த்தியாக பார்க்க வேண்டியிருக்கிறது. குழந்தைகள் என்பவர்கள் யார் என்பதிலேயே
நமக்கு ஒரு தெளிந்த அடையாளம், தெளிந்த குறிப்பு தேவைப்படுகிறது. இப்படியான குறிப்புகளில்
அடங்கியவர்கள் குழந்தைகள் என்கிற பொருளில் நாம் இதை பேசுவதற்கில்லை. இப்படியான அம்சங்களின் கீழ் இருப்பவர்கள்
யாவரும் குழந்தைகள் என்று நாம் ஒரு பட்டியல் தயார் செய்யும் நோக்கத்தோடு பேசுவதற்கு
இல்லை. அப்படியான உரையாடலை நோக்கி நமது பேச்சு இருப்பதற்கு அவசியம் இல்லை. ஆனால் குழந்தைகள்
என்று நாம் பேசுகிற பேச்சு குழந்தைகள் குறித்து நாம் உரையாடுகிற உரையாடல் உண்மையிலேயே
குழந்தைகளின் அக உலகத்தை சுற்றியதாக இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
கல்வி குறித்தும் கல்விக்கு அப்பாற்பட்டும்
குழந்தைகளை உருவாக்குகிற உருவாக்க முறை மீது நடத்தப்படுகிற எல்லா விவாதங்களிலும் எல்லா
குறிப்புகளிலும் எல்லா ஆவணங்களிலும் தொகுத்து பார்க்கிறபோது குழந்தைகள் பற்றி குறிப்பிடுகிற
எல்லாமும் கல்வி சாலைகளை மையமாக வைத்து குறிப்பிடப்பட்டாலும் குழந்தைகளை குறித்து சொல்லப்படுகிற
எல்லாமும் இயல்பிலேயே குழந்தைகளுக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. இயல்பிலேயே குழந்தைகளுக்கு
வாய்க்கப்பட்டிருக்கிறது என்று ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு, ஒரு கருத்துருவை வைத்துக்கொண்டு
நாம் பேசினால் கல்விக்கூடங்களுக்குள் குழந்தைகளுக்கு
அப்படி ஒன்று தேவைப்படுவதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. இப்படி இரண்டு வேறு முரண் சமமாக
பயணத்து வருகிறது என்பதை நாம் பார்க்கத்தான் வேண்டி இருக்கிறது.
குழந்தைகளுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா, வேண்டாமா?
குழந்தைகளை எங்கிருந்து வளர்ப்பது? அல்லது குழந்தைகளை வளர்ப்பென்பதே சரிதானா என்றெல்லாம் கூட நம்முன் கேள்விகள் விரிகின்றன. குழந்தைகளை நாம்
வளர்க்க வேண்டாமா என்றால் குழந்தைகளை நாம் ஏன் வளர்க்க வேண்டும் என்று தத்துவார்த்த
கேள்வியாக அவற்றை நகர்த்தி செல்கிற புத்திசாலித்தனத்தை சாதுரியமாக இந்த சமூகம் செய்து
கொண்டே இருக்கிறது. குழந்தைகள் இயல்பிலேயே அவர்களுக்கே உரிய சில அம்சங்களோடு இருக்கிறார்கள்
என்பது மிக முக்கியமான ஏற்புடையது. நாம் அதற்கு மறுப்பதற்கே இல்லை. குழந்தைகளினுடைய
அக உலகம் என்பது ஒன்றாக இயங்கிக் கொண்டே இருக்கிறது.
ஜான் ஹோல்டினுடைய ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பில்
இரண்டு, மூன்று கட்டுரைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஜான் ஹோல்ட் என்பவர் மிக நுட்பமான வேலைகளை குழந்தைகளோடு
இருந்த காலங்களில் கற்றுக்கொண்டு ஆவணப்படுத்தி இருக்கிறார் என்று நான் மிகவும் மதிப்போடு
பார்க்கிறேன். அத்தகைய குறிப்புகளை உள்ளடக்கமாக வைத்திருக்கிற நிறைய கட்டுரைகளை எழுதி
இருக்கிறார். அப்படியான மொழிபெயர்ப்பு கட்டுரையின் இரண்டு பகுதிகளை எனக்கு படிப்பதற்கு
வாய்ப்பு கிடைத்தது. அதில் குழந்தைகள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று அவர் ஆய்வு செய்து
வகைப்படுத்திய ஒரு வகையில் குழந்தைகளினுடைய பொறுப்புணர்வு குறித்து ஜான் ஹோல்ட் பேசுகிறார்.
குழந்தைகளினுடைய பொறுப்புணர்வை நான் தூண்டும் விதத்திலேயே நம்மை வகைப்படுத்தி வைத்துக்
கொள்ள வேண்டும் என்று ஜான் ஹோல்ட் குறிப்பிடுகிறார். ஆனால் குழந்தைகள் உண்மையிலேயே
பொறுப்புணர்வோடு இருக்கிறார்கள் என்கிற பிம்பமும் நமக்கு இருக்கிறது. சில நேரங்களில்
குழந்தைகள் பொறுப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பது நிஜம். அதற்கு இணையான இன்னொரு பகுதியில்
குழந்தைகளுக்கு பொறுப்புணர்வு தேவைப்படுகிற போது அவர்கள் பொறுப்புணர்வை நோக்கி நகர்வதற்கு
வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் ஜான் ஹோல்டியினுடைய உரையாடல் விரிகிறது.
இது ஒரு ஆவணமாக பார்க்கிற நிலை தான்.
நாம் உளவியலாக குழந்தைகளோடு உரையாடுகிற போது
குழந்தைகளுடைய உரையாடல் மையத்திலிருந்து சில நேரங்களில் குழந்தைகளுடைய பொறுப்புணர்வு
குறித்த பல கேள்விகள் குழந்தைகள் பொறுப்பாக இருக்கிறார்களா என்றால் பொறுப்பு என்ற உடன்
சமூக பாத்திரம் உருவாகிவிடுகிறது. பொறுப்பு என்றவுடன் நாம் பொதுவான மனநிலையில் உரையாடுகிற
போது பொறுப்பு என்பதற்கு நம் முன்னே வருகிற விரிவான பகுதி சமூக நடைமுறை. சமூகத்தில்
தெரிகிற சமூக உரையாடல். பொறுப்பு என்பது இன்னொருவருடைய உறவாடலோடு துவங்குகிற ஒன்றாக
மாறி விடுகிறது. தனக்கு பொறுப்பாக இருக்கிறது என்று பொறுப்பை வகைப்படுத்தினால் அது
சுயநலமாக மாறிவிடுகிறது. சுயநலம் என்ற வரையறையை நாம் விரிவாக பேசினோம் என்றால் தனக்கு
தான் பொறுப்பாக இருப்பது என்பது சுயநலத்திற்குள் வகுக்கப்படுகிற வரையறைகளில் ஒன்று.
தனக்குத்தான் பொறுப்பாக இருக்கிறோம் என்று ஒரு பட்டியலை ஒரு வரையறையை தொடர்ந்து நீங்கள்
விரிவாக விவரித்து பேசிக் கொண்டே வருவீர்கள் என்றால் ஒவ்வொன்றிற்குள்ளும் பார்க்கிறபோது
சுயநலம் சார்ந்து வகைப்படுத்துகிற வகைப்பாடுகளில் தான் நலமாக இருக்க வேண்டும். தான்
கவனமாக இருக்க வேண்டும் என்கிற தளங்களில் பொறுப்பு என்பது இணைந்து கொள்ளும். தனக்கு
தான் பொறுப்பாக இருப்பது தன்னைத்தான் கவனமாக பார்த்துக் கொள்வது என்கிற அமைப்பில் அது
சுருங்கி போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகள் சுயநலமானவர்களா என்றால் அவர்கள்
வானத்தைப்போல விரிவான மனம் கொண்டவர்கள் என்ற வாதத்தை நாம் முன் வைக்கிறோம். இவ்வாறு குழந்தைகளுடைய தர்க்கமும் காரணமும் காரணமும் தர்க்கமுமான ஒரு உரையாடல் மோதல் இருந்து கொண்டே இருக்கிறது
என்பதிலிருந்து குழந்தைகளினுடைய உரையாடலை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment