Sunday, June 18, 2023

குழந்தைகள் அக உலகம் - உரையாடல் 4 // சிவ.கதிரவன்

                                                 குழந்தைகள் அக உலகம்

www.swasthammadurai.com


இலக்கிய சார்பில், இலக்கிய அமைப்பு முறைகளில் குழந்தைகளை  வகைப்படுத்துகிறோம் என்று சொன்னால் அது எல்லாவற்றிற்கும் பொருந்துகிற அம்சங்களோடு குழந்தைகளை பொருத்த முடியும். ஆனால் இந்த உலகம் தொடர்ந்து இயங்குவதற்கு இலக்கியம் மட்டும் போதுமானதா, இலக்கிய வகைமை மட்டும் போதுமானதா என்றால் மற்ற வெவ்வேறு ஆய்வுகள், வெவ்வேறு  வகைமைகள், காரண காரிய விவாதங்கள் அவசியமா? அவசியமாக இருந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புற எதார்த்தத்தில் இலக்கியம் போதுமானது என்று ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு இலக்கியம் போதுமானது என்று நாம் முடிவு செய்தோம் என்றால் இலக்கியம் தவிர்த்த பிற பகுதிகள் ஒன்றை புரிந்து கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆய்வு முறைகள் ஒன்றை புரிந்து கொள்வதற்காகவே  உருவாக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியம் ஒரு வகையான புரிந்துகொள்ளலுக்கான வாய்ப்பு. இலக்கியம் நிறைய அமைதியையும் நிறைய இடைவெளிகளையும்  வைத்திருக்கிறது என்ற காரணத்தினால் ஒவ்வொரு இலக்கிய பயணியும் இலக்கிய வழியாக பயணிக்கிற பயணியும் இலக்கியம் வழியாக பேசப்படுகிற உரையாடல்கள் யாவும் ஒன்றைப் புரிந்து கொள்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இருக்கிறது என்று இலக்கியம் பேசுபவர்கள் சொல்கிறார்கள். புரிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இலக்கியங்களில் இருக்கிறது. ஒன்றை அகமாக செய்வது பார்ப்பதற்கு இலக்கியங்களில் அதிக வாய்ப்பு இருக்கிறது. மறுப்பதற்கு இல்லை. ஆனால் ஒன்றை புரிந்து  கொள்வதற்கென்றே வெவ்வேறு வகைப்பட்ட ஆய்வு முறைகள் உருவாகின்றன. தத்துவ வியாக்யானங்கள் உருவாகியிருக்கின்றன. அவை இன்னும் தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் வெவ்வேறு வகைப்பட்ட ஆய்வு முறைகளை   பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். எதார்த்தத்தில் வெவ்வேறு வகைப்பட்ட தத்துவ விவாதத்தை விரும்புபவர்கள் இருக்கிறார்கள். தத்துவ விவாதத்தின் வழியாக ஒன்றை கண்டு கொள்வதற்குரிய முயற்சியாளர்கள் இருக்கிறார்கள். எல்லோருக்குமான உலகமாக இது இருந்து கொண்டே இருக்கிறது என்கிற எதார்த்தத்தில் இருந்து குழந்தைகளை நாம் அணுகுவது  ஒரு தத்துவார்த்த பார்வையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

தத்துவார்த்தமாக ஒரு குழந்தையை பார்ப்பது அல்லது முழுமையாக ஒரு குழந்தையை பார்ப்பதற்கு முயற்சி செய்வது என்பது எல்லா குழந்தைகளும்  இலக்கியத்தின் பாற்பட்டு புரிந்து  கொள்வதற்கு வாய்ப்புள்ளவர்களாக நாம் சுருக்கி விட முடியாது. குழந்தைகளை இலக்கியம் வழியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் குழந்தைகளை பொறுப்புணர்வு மிக்க தர்க்க வாதங்களுக்குள் உட்பட்ட அவசியமான  காலம் ஏற்படுகிற போது மறுப்பதற்கில்லாமல் நாம் உட்படுத்த வேண்டி இருக்கிறது. குழந்தைகளை சமூகம் சார்ந்து இயங்குவதற்குரிய இயக்கத்தின் பாற்பட்டு ஒரு விவாதத்தை துவங்குகிற போது நாம் இலக்கியம் கடந்து, உளவியல் கடந்து, தர்க்கம் தத்துவம் கடந்து, சமூகவியல் கோட்பாடுகள் உட்படுத்தி அவர்களைப் பேசிப் பார்ப்பதற்கான செயல்பாடுகளை செய்து பார்க்க வேண்டி இருக்கிறது.

ஒரு முழுமையான முயற்சி என்பது குழந்தை குறித்த கற்றலில், குழந்தை குறித்த உரையாடல்களில், குழந்தைகள் குறித்த புத்தகங்களில் பேசப்படும் பொருளாக முழுமையாக மாறவில்லை என்று நான் பார்க்கிறேன். ஒரு முழுமையான உரையாடலை நாம் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு முழுமையான உரையாடல் என்பது குழந்தைகள் இவ்வாறு இருக்கிறார்கள் என்று நாம் பார்ப்பதற்கு இல்லை. குழந்தைகள் எல்லாவுமாகவும் எல்லா வகைப்பட்டும் இருக்கிறார்கள். குழந்தைகள் இவ்வாறு இருக்கிறார்கள் என்று குழந்தை ஆய்வாளர், தமிழ் ஆய்வாளர் பே.தூரன் ஒரு பட்டியலை முன்வைக்கிறார்.

1940 - 50 காலங்களில் குழந்தைகள் உளவியல் குறித்து மிக பெரிய புத்தகங்களை ஆவணமாக தொகுத்தவர் தூரன், தமிழ் எழுத்தாளர். பின்னாளில் உலகம் முழுவதும் பேசப்படுகிற பேசு பொருள்களில், பேசப்படுகிற பேச்சு முறைகளில் இலக்கியங்களின் வழியாக  குழந்தைகள் பற்றிய உரையாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.   பெனி எனும் சிறுவன் என்கிற ஒரு மொழிபெயர்ப்பு பெருங்கதை இருக்கிறது. அதிலும் குழந்தைகள் குறித்த உரையாடல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது பே.துரனின் கட்டுரைகள் வழியாகவும் குழந்தைகளின் உரையாடல் நடத்தப்பட்டிருக்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அம்மையார் மரியம் மாண்டிசோரினுடைய ஆய்வு முறைகள், கல்வி முறைகள் வழியாக குழந்தைகளினுடைய உரையாடல் நடத்தப்பட்டிருக்கிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி  குழந்தைகள் பற்றி பேசுகிறார். ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவவியல் ஆய்வாளர். பே.தூரன் அரசியல் பின்புலம் கொண்டவர். மரியம் மாண்டிசோரி அம்மையார் கல்வி சார்ந்த வேலை செய்பவர். ஜான் ஹோல்டு கல்வி சார்ந்து ஆசிரியராக பணிபுரிந்தவர். இவ்வாறு இருக்கிற வெவ்வேறு தளத்தில் இருக்கிறவர்கள் குழந்தைகள் பற்றி உரையாடி இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் வாய்ப்பாக குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படித்தான் இவற்றை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. இது நேர்மையான மதிப்போடு இவற்றை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. குழந்தைகள் முழுக்க இலக்கியம் சார்ந்தவர்கள் என்றால் பெனி என்னும் சிறுவன் எழுதிய எழுத்தாளரே போதும். குழந்தைகளை கல்வி முறைக்குள் நிறுத்த வேண்டும் என்றால் மரியம்மாண்டிசோரியினுடைய அணுகு முறையே போதும். மரியம் மாண்டிசோரினுடைய கல்வி முறைகளில் இருந்து நகர்த்தி செல்வதற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியின் முயற்சி நியாயமாகப் படுகிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தியே போதுமானவர் என்றால் ஜான் ஹோல்டினுடைய வகுப்பறை விவாதங்கள் அவசியம் இல்லை. குழந்தைகள் எல்லா பரிமாணங்களிலும் வெளிப்படுகின்றனர். எல்லா பரிமாணங்களிலும் வெளிப்படுகிற எதார்த்தத்தில் இருந்து குழந்தைகள் பற்றிய ஒரு உரையாடலை நாம் நேர்மையோடு செய்து பார்க்க வேண்டி இருக்கிறது. ஒற்றைப்புள்ளியில் குழந்தைகளை நிறுத்தி பார்ப்பது நியாயம் இல்லை.

ஜே.கிருஷ்ணமூர்த்தியினுடைய தத்துவ அணுகுமுறை அவசியமாய் இருக்கிறது. மரியம் மாண்டிசோரியினுடைய வகுப்பறை அவசியமாக இருக்கிறது. ஜான் ஹோல்டினுடைய அனுபவம் அவசியமாய் இருக்கிறது. பே.தூரனின் உளவியல் அவசியமாய் இருக்கிறது. எல்லாமும் அவசியமாய் இருக்கிறது ஒரு குழந்தையை முழுமையாக புரிந்து கொள்வதற்கு. குழந்தைகளைப் பற்றிய புரிதல் என்பது பல்வேறு வகைப்பட்ட களங்களில், பல்வேறு வகைப்பட்ட தளங்களில், பல்வேறு வகைப்பட்ட தரங்களில் நாம் விரிவாக விசாலமாக பார்க்கிற நமது மனநிலையோடு சம்பந்தப்பட்டதாக நான் நினைக்கிறேன்.

குழந்தைகளை ஒற்றை புள்ளியில் நிறுத்தி, ஒற்றை புள்ளியில் விரித்து நாம் பேசி விடுவதற்கு இல்லை. அது குழந்தைகளுக்கு எதிரான அணுகுமுறையாக எனக்கு தோன்றுகிறது. குழந்தைகள் என்பவர்கள் எப்போதும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று முடிவு செய்வதற்கு இல்லை. ஆனால் குழந்தைகள் எப்போதும் கலவையாக இருப்பார்கள் என்றும் முடிவு செய்வதற்கில்லை. அது மிகமிக நுட்பமான ஒரு நகர்வாக குழந்தைகள் பற்றிய அகம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். படைத்த ஒன்றை போட்டு உடைப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விரிவான ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தன்னைச் சுருக்கிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளைப் பற்றி உளவியலாக பேசுகிற ஒரு மருத்துவம் - நான் விளையாட்டாக படித்துப் பார்க்கிறபோது குழந்தைகளின் உளவியல் என்று படித்துப் பார்க்கிறபோது சிக்மண்ட் ஃப்ராய்டினுடைய  உளவியலும் மருத்துவத்தில் ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கிற மருத்துவ  உளவியலும் வேறு வேறு திசைகளில் மிகுந்த ஆழத்தோடு பயணிக்க கூடியவை. சாமுவேல் ஹானிமேனினுடைய  மருத்துவமாக வரையறுக்கப்பட்ட உளவியல், ஒரு அக மனிதனினுடைய உளவியல் மனிதனுடைய மூன்று நான்கு மனவடிவங்களை தொகுத்து மூன்று கூறுகளாக ஒரு மனிதனினுடைய ஒட்டுமொத்த இயங்கும் முறையும் இம்மூன்று கூறுகளுக்குள் அடக்கி விட முடியும் என்று நிரூபணமாக காட்டிய சாமுவேல் ஹானிமேனினுடைய  உளவியலை படிக்கிற போது ஒரு குழந்தை இந்த வகைப்பட்ட குழந்தை, ஒரு சிங்கம் போல் தன்னை பாவித்து கொள்கிற குழந்தை தன்னை சிங்கமாகவே வெளிப்படுத்திக் கொள்கிறது. தனக்கு ஏற்பட்டிருக்கிற நோய்கள் எல்லாமும் சிங்கம் போலவே தன்னை நோயாளியாக உட்படுத்திக்கொள்கிறது என்று ஒரு வரையறையை சாமுவேல் ஹானிமேனை பின்பற்றுவர்களுடைய  கருத்துருவாக்கங்களில் பார்க்க முடிகிறது.

இந்த உளவியலும் இந்த உளவியல் வழியாக வெளிப்படுகிற நோய்க்குறிகளும் நிஜமாகவே இருக்கின்றன. அதற்குரிய மருந்துகளை அந்த மருத்துவத்தின் வகைப்பட்டு தருகிற போது அவர்கள் அந்த குழந்தையினுடைய உடல் நலம் அடைவதை பதிவு  செய்கிறார்கள்.

தொடர்ந்து பேசுவோம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...