படைப்பு – படைப்பாளி - வாசகர்
மிர்தாதின் புத்தகம் சிறந்த இலக்கியங்களில் ஒன்றாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். மிர்தாத் மிகச்சிறந்த வழிகாட்டி. மிர்தாதை படித்தவர்கள் மிர்தாதை நேசிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். மிர்தாதின் புத்தகம் குறித்து,
அந்த கதைக்குள் செல்வது குறித்து மைக்கேல் நைய்மியை நாம் தெரிந்து கொள்வதும் மைக்கேல் நைய்மினுடைய படைப்பை நாம் தெரிந்து கொள்வதும் பெரிய விவரங்களோடு மிர்தாத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. அவர் மிர்தாத் மட்டும் எழுதி இருக்கிறார் என்று குறிப்புகள் இருக்கின்றன. மிர்தாத் புத்தகம் மட்டும் எழுதி தன் படைக்கும் திறனை நிறுத்தி வைத்துக் கொண்டார் என்று குறிப்புகள் இருக்கின்றன.
மைக்கேல் நைய்மியின் வேறு சில புத்தகங்களும் வந்திருக்கின்றன என்றும் சில குறிப்புகளும் இருக்கின்றன. ஆனால் எப்படியாக இருந்தாலும் ஒன்று, இரண்டு
படைப்புகள் தவிர மைக்கேல் நைய்மி என்ற படைப்பாளி அனேக படைப்புகளை, நிறைய படைப்புகளை படைத்து விடவில்லை. மிக நுட்பமான படைப்பை மட்டும் படைத்த மைக்கேல் நைய்மி மிர்தாத்தை தன் வாழ்நாளின் படைப்பாக படைத்திருக்க வேண்டும் என்று நான் பார்க்கிறேன். மிர்தாத்தின் புத்தகம் அத்தகைய மேன்மை கொண்டது. ஒரு படைப்பாளி என்பவர் யார் என்கிற புரிதலோடு இந்த புத்தகத்தை, ஒரு இலக்கியத்தை வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பு ஓரு புத்தகம் என்பது என்ன? ஒரு படைப்பாளி என்பவர் யார்? என்பது குறித்த ஒரு அடிப்படையான புரிதல் நமக்கு அவசியமாகிறது.
எழுதப்படுவது எல்லாம் கவிதைகள் அல்ல. எழுதப்படுவதெல்லாம் இலக்கணங்களோ, இலக்கியங்களோ அல்ல. எழுதப்படுகிற எல்லாமும் படைப்புகளும் அல்ல. படைப்புகள் காலம் கடந்து நிற்பவை என்று புதிய விவரங்களும் இலக்கணங்களும் நெறிகளும் படைப்புகளை புனிதப்படுத்துகின்றன. புனிதப்படுத்தி வைத்திருக்கின்றன என்று நாம் பார்க்க முடிகிறது. என்றாலும் படைப்புகள் அதற்கே உரிய ஒரு மெய் உணர்வை உள்ளே வைத்திருந்தால் மட்டுமே அது சிறந்த படைப்பாக நாம் கருதுவது சரியானதாக இருக்கும்.
ஒரு படைப்பு என்பது இயற்கையில் ஒளிந்து இருக்கிற சாராம்சமான ஒன்றை பதிவு செய்வதாக இருக்க வேண்டும். அறிந்தவற்றில் இருந்து அறிய வேண்டிய ஒன்றை மனிதனுக்கு கற்பித்து தர வேண்டும். படைப்பு என்பது அப்படியானதாக இருந்தால் மட்டுமே அது சிறந்த படைப்பாக நாம் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். சிறந்த படைப்பு என்பது இயற்கையின் மொழியை, பெரும் பிரபஞ்சத்தின் ஒளியை ஒரு வாசிக்கிற வாசகனுக்கு அறிமுகப்படுத்துவதாக இருக்க வேண்டும். இயற்கையின் மெய் உணர்வு, மெய்யியல் தன்மை, இலக்கிய வடிவில் கதையாக மாறி வெளிப்படும் என்றால் அது நல்ல கதை.
இயற்கையின், பிரபஞ்ச இருத்தலின் இருத்தல் உணர்வு வார்த்தைகள் வழியாக வெளிப்படும் என்றால் அது நல்ல சொல். பிரபஞ்சத்தில் ஒளிந்து இருக்கிற பேரழகும் புதிர்களும் சொற்றொடர்கள் வழியாக பதிவு செய்யப்படும் என்றால் அது நல்ல கவிதைகள். எந்த படைப்பாக இருந்தாலும் எந்த குறிப்புகளாக இருந்தாலும் படைப்பு என்பது, குறிப்பு என்பது இயற்கையை மனிதனுக்கு, வாசிக்கிற வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிற, நெருக்கமாகச் செய்கிற ஒன்றாக இருப்பது என்பது படைப்பின் உடைய அடிப்படை இலக்கணம். இத்தகைய இலக்கணத்தை தவறிய படைப்புகள் வந்து விழுகின்றன. அனேக படைப்புகளில் படைப்பு என்பது தொடர்ந்து இயற்கையின், இருத்தலின், பிரபஞ்சத்தின் ஆழமான அமைதியை, இரைச்சலுக்குள் இருக்கிற நிதானத்தை கூட்டிணைவை நினைவுபடுத்துகிற, உள்ளே வைத்திருக்கிற ஒன்றாக படைப்புகள் இருக்க வேண்டும் என்பது படைப்பினுடைய இலக்கணம். அத்தகைய படைப்பாக சில படைப்புகள் படைக்கப்படுகின்றன.
இயற்கையை வாசிக்கிறவனுக்கு அறிமுகப்படுத்துகிற ஒரு வேலையை படைப்பு செய்ய வேண்டும். இறைவனை, ஆன்மீகத்தை, வாழ்வின் இலக்கணத்தை வாசிக்கிறவனுக்கு நினைவூட்டுகிற, வழிகாட்டுகிற அதை நோக்கி உந்தி தள்ளுகிற ஒரு வேலையை ஒரு படைப்பு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பார்த்துக் கொள்வதற்கு தேவையான ஒன்றை படைப்பு செய்ய வேண்டும். ஒரு மனிதன் தன்னை பார்ப்பதற்கு தயங்குகிறான் என்பதை, தயக்கத்தை உடைப்பதற்கும் தயங்குகிறான் என்பதை பார்ப்பதற்கும் உண்டான உதவியை படைப்பு செய்ய வேண்டும். அப்படியான தகுதிகளோடு இருக்கிற ஒன்றுதான் சிறந்த படைப்பாக இருக்க முடியும். அத்தகைய படைப்புகளை எல்லா படைப்பாளர்களும் படைத்து விடுவதில்லை. எல்லா படைப்புகளும் அப்படியான தன்மையோடு படைக்கப்படுவதும் இல்லை. அப்படியான தன்மையோடு படைக்கப்பட்ட சிறந்த நூலாக மிர்தாதின் புத்தகம் இருக்கிறது.
மிர்தாதின் புத்தகத்தின் வழியாக நீங்கள் அறிந்த வார்த்தைகளில் இருந்து அறியாத ஒன்றை கற்றுக் கொள்ள முடியும். தெரிந்த வழிமுறைகளில் இருந்து தெரியாத சூத்திரத்தை கற்றுக் கொள்ள முடியும். புத்தகம் முழுவதும் அப்படித்தான் இருக்கிறது. இத்தகைய படைப்பை படைப்பதற்குரிய படைப்பாளி மைக்கேல் நைய்மி. இந்த படைப்பை படைத்த படைப்பாளி மைக்கேல் நைய்மி. இது மைக்கேல் நைய்மியின் படைப்பாக நாம் கொண்டாடி விட முடியாது. மைக்கேல் நைய்மியின் வழியாக படைக்கப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தில் உள்ளே ஒளிந்து இருக்கிற இயற்கையின் இறைத்துவம், இந்த புத்தகத்தின் உள்ளே ஒளிந்திருக்கிற பிரபஞ்சத்தின் ஆன்ம நிலை வழியாக வெளியிடப்பட்டு இருக்கிறது. மைக்கேல் நைய்மி வழியாக படைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தன்மையோடு இந்த படைப்பினுடைய தரமும் மிடுக்கும் இருக்கிறது என்பதை நாம் பார்த்து அந்த புரிதலோடு நகர்வது தான் இந்த படைப்பிற்கு நாம் செய்கிற மரியாதை.
ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த மொழிபெயர்ப்பாளர் ஒரு குறிப்பை நமக்கு கொடுக்கிறார். இந்த புத்தகத்தை நீங்கள் வாசிப்பது ஆபத்தானது என்று. எந்த படைப்பாளியும் தன் படைப்பை வாசிப்பது ஆபத்தானது, வாசிக்காதீர்கள் என்று சொல்வதற்கு தயங்குவார்கள். வாசிப்பதற்கு அசாத்தியமான தைரியமும் வாசிப்பதற்கு அசாத்தியமான புத்திசாலித்தனமும் தேவை என்கிற குறிப்பாக இந்த புத்தகத்தை நீங்கள் வாசிப்பது பொருத்தமானதாக இருக்காது. எனவே நீங்கள் வாசிக்காதீர்கள் என்று ஒரு படைப்பாளி தனது படைப்பு பற்றி எச்சரிக்கையோடு ஆரம்பிக்கிற துவக்கம் இந்த புத்தகத்தில் நிகழ்ந்திருக்கிறது. இந்த புத்தகத்திற்குள் வாசிக்க வேண்டும் என்று யாராவது துவங்கினால் அவர்கள் எளிமையாக வாசித்து விட முடியாது என்பதற்கான எச்சரிக்கை அது. படைப்பாளியின் முன்னுரையிலேயே அந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த புத்தகம் உங்கள் கையில் கிடைத்தவுடன் முன்னுரையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அது எச்சரிக்கை என்றுதான் புத்தகம் துவங்குகிறது. எச்சரிக்கை தந்து கொண்டே புத்தகம் துவங்குகிறது. அந்த புத்தகத்திற்குள் சொல்லப்படுகிற செய்தி வார்த்தைகள் வழியாக நீங்கள் உங்களை காண்பதற்கு தயாராக இருந்தால் மட்டுமே இந்த புத்தகம் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியும். அப்படி காண வேண்டும் என்கிற அழுத்தத்தை இந்த புத்தகம் உங்களுக்கு தந்துவிடும். எனவே அத்தகைய தைரியமும் புத்திசாலித்தனமும் உள்ளவர்களாக நீங்கள் இருப்பீர்கள் என்றால் நீங்கள் இந்த புத்தகத்தை வாசிப்பதற்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் என்று முடிவு செய்து கொள்ளலாம். அப்படியான எச்சரிக்கை மைக்கேல் நைய்மி தருகிறார்.
யார் ஒருவருக்கு இப்படியான எச்சரிக்கை தருகிற தைரியம் இருக்கும். இன்றைக்கு படைப்புலகத்தில் இருக்கிற பல படைப்பாளிகள், படைப்பாளிகள் என்று கருதிக் கொள்கிறவர்கள் - நகைச்சுவயாக சமூகத்தில் ஒரு சொல்லாடல் உலவுவது உண்டு. இன்று வாக்காளர்களினுடைய எண்ணிக்கையை விட கவிஞர்களினுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்று. அத்தகைய சமூக செயல்பாட்டில், சமூக எழுத்துப் பரப்பில், சமூக படைப்பாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் குவிந்து கிடக்கிறார்கள்.
புத்தகங்களின் எண்ணிக்கைக்கு சமமாக படைப்பாளர்களினுடைய எண்ணிக்கை குவிந்து இருக்கிறது என்கிற எழுத்து பரப்பிலே இலக்கிய பரப்பில் ஒரு படைப்பாளி யாராக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான படைப்பாளிக்குரிய இலக்கணமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன். படைப்பை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். படைப்பாளி யாராக இருக்கிறார் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் புரிந்து கொண்டால் மட்டும் தான் மிர்தாத்தின் புத்தகத்தை நீங்கள் வாசிப்பதில் அதிகமான ஆர்வத்தோடு வாசிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்...
No comments:
Post a Comment