Tuesday, July 4, 2023

கல்வி – இலக்கும் இலக்கணமும் - உரையாடல் 1 - சிவ.கதிரவன்

                                         கல்வி – இலக்கும் இலக்கணமும்

www.swasthammadurai.com


வணக்கம்,

 கல்வி குறித்தான உரையாடல்கள் பல்வேறு தளங்களில், பல்வேறு குழுக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  கல்வி என்பது என்ன? என்ன செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது? கல்விக்கான இலக்கு என்ன? கல்விக்கான வழிப்போக்கு என்ன? கல்விக்கான வரையறை என்ன? கல்விக்குரிய திட்டங்கள் என்ன?  என்பது குறித்தான ஒரு ஆழமான உரையாடலை ஐயா சிவ.கதிரவன் அவர்கள் இந்த ஒலிப்பதிவில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கல்விக்கான இலக்கும் இலக்கணமும் என்கிற தலைப்பில் ஐயா சிவ.கதிரவன் அவர்களின் உரையில் தொடர்ந்து நாமும் அவருடன் பயணிப்போம் நன்றி.

 வணக்கம்,

    ஒரு கல்வி குறித்த உரையாடலில் சில புத்தகங்களை முன்வைத்து, சில கல்வியாளர்களையும் ஆவணக் குறிப்புகளையும் முன் வைத்து, ஆர்வமான பகுதிகளை முன் வைத்து ஒரு குழு பேசிக் கொண்டிருக்கிறது என்பது சமூகத்தில் மிகுந்த பொறுப்புள்ளதாகவும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நிலைப்பாடாகவும் பார்க்க முடிகிறது. அந்த குழுவில் நானும் இணைந்து கொண்டு பேசுவது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது.

கல்வி குறித்து ஒருவர் ஒன்றை உரையாடத் துவங்குகிறார் என்றால் எந்த வகைப்பட்டு கல்வி மீது பேச வேண்டும் என்று தீர்க்கமான ஒரு முடிவோடு, நோக்கத்தோடு நகர்ந்து செல்ல முடியும். அவரது உரையாடல் அப்படியான வகைகளில் கட்டி வைக்க முடியும். இன்றைய நவீன யுகத்தில் தகவல் சேகரிப்புகள் அதிகமாக நிகழ்வதற்கு வாய்ப்புள்ள சூழலில் கல்வி என்பது என்ன என்று நீங்கள் விசாரித்துப் பார்க்கிறபோது கல்வி குறித்த விவரங்களை ஏராளமாக பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்களை தகவல் தொழில்நுட்பம் உங்களுக்கு வழங்கி இருக்கிறது.

கல்வி என்றவுடன் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வழக்கத்தை, ஒரு சமூகத்தினுடைய வழிப்போக்கை கல்வி என்று விவரித்த வரையறைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்வி குறித்த வரையறையை நீங்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. தற்போது நிகழ்கிற கல்வி குறித்த வரையறைகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து கல்விமுறை எவ்வாறெல்லாம் பயணிக்கும், கல்விக்குள் இருக்கிற திட்டங்கள் என்ன என்று வரையறைகளையும் கற்பனைகளையும் விருப்பங்களையும் கூட கல்வி குறித்த வரையறைக்குள் நீங்கள் வைத்து பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

ஆக, கல்வி குறித்த உரையாடல் என்பது சேகரிக்கப்பட்ட, கிடைக்கப்பெற்ற வரையறைகளையும் விருப்பங்களையும் கற்பனைகளையும் வைத்து ஒரு முடிவுக்கு வருகிற தன்னையோடு விவாதிப்பது முழுமையான விவாதம் என்று என்னால் பார்க்க முடியவில்லை. கல்வி என்பது மிகுந்த நிதானத்தோடு நடைபெறுவதற்குறிய வாய்ப்பு உள்ள ஒரு கருத்தாக்கம். கல்வியை, குழந்தைகளை மையமாக வைத்து உரையாட முடியும். கல்வியை ஒரு சமூகம் செயல்படுத்துகிற செயல்பாடுகளை முன்வைத்து உரையாட முடியும். கல்வியை ஒரு அரசாங்கம் முன்னெடுக்கிற முன்னெடுப்புகளை வைத்து உரையாட முடியும். கல்வியை குழந்தைகளின் சமூகத்தின் நலம் மையப்பட்ட உரையாடலாக உரையாட முடியும். எவ்வாறு கல்வியை உரையாட விரும்புகிறோமோ அத்தகைய உரையாடல் வடிவத்தில் அனைத்திலும் வைத்து  உரையாடுவதற்கு வாய்ப்பு இருக்கிற கருத்தாக்கம் கல்வி. எனவே கல்வியை எல்லாவற்றிலும் வைத்து உரையாடுவது என்பது பேரழகாக இருந்தாலும் கூட அதற்குள் நிதானமாக உரையாடுகிற, சரியாக உரையாடுகிற, சமரசம் இல்லாமல் ஒரு புள்ளியில் நின்று உரையாடுகிற உரையாடல் விளையாட்டு தெரிந்தவர் தான் கல்வி குறித்து சரியான உரையாடலை நடத்தி முடிக்க முடியும். சரியான இடத்திற்கு வந்து சேர முடியும் என்று நான் கருதுகிறேன்.

கல்வி அப்படியான ஆபத்துக்களையும் அப்படியான அழகையும் சேர்ந்தே வைத்திருக்கிறது. கற்றல் என்று நாம் ஒரு விவாதத்தை தொடங்கியவுடன் கற்றல் என்று ஒரு வரையறையை நாம் வகுக்க முயற்சிக்கிற போது நம்முன் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதா? எவற்றை கற்றுக் கொள்வது என்று பிறழ்வான மன உணர்வுகள் வந்துவிடும். பிறழ்வான மன உணர்வு என்பது ஒரு மனிதனின் நடுநிலையை இரண்டாக மூன்றாக மாற்றுகிற மன உணர்வே பிறழ்வான மன உணர்வு. இரட்டிப்பான மன உணர்வு. இரண்டு வகைப்பட்ட மூன்று வகைப்பட்ட மன உணர்வு என்று குறிப்பிட விரும்புகிறேன். அத்தகைய விதவிதமான மன உணர்வுகளை கல்வி என்ற கருத்தாக்கம் தோற்றுவிப்பதற்குரிய சாத்தியங்களை இன்று சமூகம் நம் முன்னே ஊடகங்கள் வழியாக வழங்கிக் கொண்டே இருக்கிற சூழலில் கல்வி பற்றி உரையாடுவதற்கு மிக முக்கியமான வாய்ப்பும் வசதியும் என்ற தளத்திலிருந்து நகர்ந்து கல்வியை மிக நிதானத்தோடு ஒரு சீரிய அக்கறையோடு பேசிப் பாக்கிற கவனம் நமக்கு  அவசியமாக இருக்கிறது என்பது என்னுடைய தொடர்ந்த நினைவூட்டல். அப்படித்தான் கல்வியை நாம் உரையாட வேண்டும்.

ஏனென்றால் கல்வி என்றவுடன் மிக உயர்வாக பேசப்படுகிற வரையறைகள் இன்று இருக்கின்றன. புத்தரின் கல்வி முறை, ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்வி முறை, ஓஷோ முன்வைக்கிற குழந்தை வளர்ப்பு முறை, இன்னும் உலகில் இருக்கிற மேற்கத்திய உளவியல் ஆய்வாளர்களாக இருக்கிற தீபக் சோப்ரா போன்ற ஆய்வாளர்களின் கல்வி முறை, குழந்தைகளை அக்கறைப்பட்டுக் கொண்டு வளர்த்தெடுக்க வேண்டும் என்று முன்வைத்த அம்மையார் மாண்டிசோரியின் கல்வி முறை மிக உயர்ந்த தரத்திலும் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. 

முன்னொரு காலத்தில் கல்வி என்பது ஒரு மனிதனுடைய பிறப்பின் அடிப்படையில், ஒரு மனிதன் சார்ந்திருக்கிற சமூகத்தின் அடிப்படையில், ஒரு மனிதன் பிறந்திருக்கிற சாதியின் அடிப்படையில், அவன் பின்பற்றுகிற மதத்தின் அடிப்படையில், ஒரு சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு காத்திருக்கிற சமூக மாற்றத்தின் அல்லது அரசியலின் அடிப்படையில் கல்வி நிர்மாணிக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் நாம் பார்க்கிறோம்.

பிற்போக்கான, முற்போக்கான, மையப்பட்ட வேறுவேறு அரசியல் சத்தங்களின் வழியாக கல்வி விவாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கணக்கில் வைத்துக் கொண்டு கல்வி குறித்து ஒரு நிதானமான உரையாடலை செய்து பார்ப்பது மிகுந்த அவசியமான தேவையான காலத்தினுடைய நிர்ப்பந்தமான சூழலாகவே எனக்கு தோன்றுகிறது.

ஆக, கல்வி என்பது எப்படி துவங்குகிறது என்று நான் பார்க்க முற்படுகிற போது, நான் கண்டு கொண்ட ஒரு எளிய உண்மை இன்று போதிக்கப்படுகிற கல்வி ஒரு மனிதனுக்குள் இருக்கிற பதற்றத்தை, நிதானமின்மையை, அவசரத்தை நிவர்த்தி செய்கிற ஒன்றாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு குழந்தை பதற்றமான குழந்தையாக இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குழந்தை பிறப்பிலேயே இந்த புதிய உலகத்தை பார்ப்பதற்கு பதறுகிறது. ஒரு குழந்தை புதிய உலகத்தை கண்டவுடன் இந்த உலகத்தில் எவ்வாறு வாழப் போகிறோம். இந்த உலகத்தோடு எவ்வாறு உறவு பாராட்ட போகிறோம். இந்த உலகத்தில் நமக்கு இருக்கிற உரிமை என்ன? இந்த உலகத்தில் நமக்கு இருக்கிற கடமை என்ன? என்று பல்வேறு வகைப்பட்ட சத்தங்களுக்கு இடையிலான மௌனங்கள் வழியாகவும் மௌனங்களுக்கு இடையிலான சத்தங்களின் வழியாகவும் ஒரு மலைப்பை கண்டு கொள்கிற ஒரு அடிப்படை உளவியல் துவங்குகிறது. அந்த அடிப்படை உளவியலில் இருந்த அந்த குழந்தையின் மனதில் ஏற்படுகிற மன அதிர்வை மையமாகக் கொண்டு உருவாகிற ஒரு கட்டமைப்பு முறை கல்வி என்று நான் பார்க்கிறேன்.

அடிப்படையில் பிறந்த உடன் சில நிமிடங்களே, சில வினாடிகளே ஆன ஒரு குழந்தைக்கு கல்வி துவங்கி விடுகிறது. அந்த குழந்தை கற்றுக் கொள்கிற பாடங்கள் அந்த குழந்தையின் அக உணர்வில் இருக்கிற பதற்றத்தையும் மலைப்பையும் அந்த குழந்தை சந்திப்பதற்கு தயாராக இருக்கிற சந்திப்பு பலத்தையும் தயங்குகிற அந்த தயக்கத்தையும் வலு சேர்ப்பதாக அவற்றை புடம் போட்டு மெருகேற்றுவதாக இருக்கிற எல்லாமும் கல்வியாக அந்த குழந்தை முன் விரிகிறது. 

நான் உதாரணமாக பேசுகிற போது இன்று ஒருவருக்கு கல்வி என்று நாம் பேசுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். யார் கல்வி கற்கிறார்? கல்வியில் என்ன நிகழ்கிறது என்று ஒரு சான்று பகிர்வது போல் பேசுகிறபோது எனக்கு பயமாக இருக்கிறது. அடிப்படையில் நான் பயந்த சுபாவம் உள்ள நபராக இருக்கிறேன் என்றால் நான் உங்களிடம் கல்வி கற்க வருகிறபோது நீங்கள் செய்கிற, நீங்கள் நடத்துகிற, நீங்கள்  வரைந்து கொடுக்கிற எல்லா பாடங்களும் கணக்குகளும் வரைபடங்களும் என் பதட்டத்தை நீக்குகிற தன்மையோடு இருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.

                              தொடர்ந்து பயணிப்போம்...

No comments:

Post a Comment

எண்ணங்கள் பற்றி.... -சிவ.கதிரவன் / பகுதி 1

                                                         எண்ணங்கள் பற்றி... வணக்கம்,                  இன்றைக்கு மனம், எண்ணம், எதிர்மறை எண்...